உயிர்ப்பின் நிறங்கள்

0
162

இதை சொல்லியே ஆகவேண்டும்

பேருந்திற்காக மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நேரத்தில் சுற்றிலும் நோட்டமிட்டதில் பூனை குட்டிகளுக்கு பால் புகட்டிக்கொண்டிருந்த  இந்த அம்மாவை கண்டேன்.

அந்த பஸ்ஸ்டாண்ட் தான் வசிப்பிடம் போல…  இவரைப்போலவே ஆதரவு இல்லாத முதியவர்கள் பத்து பன்னிரெண்டு பேர்கள் இருக்கலாம் அங்கே தங்கியிருந்தவர்கள்.

ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்மணி கைகளிரண்டிலும் கட்டைபைகளோடு இவர்களை நெருங்கி ஆளுக்கொரு உணவு பொட்டலத்தையும் அப்பளம் ஒன்றும் தண்ணீர் பாக்கெட் ஒன்றுமாக  தந்துவிட்டு ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கூரையோ உடைகளோ இல்லாத அதிலும் அடுத்த வேளை உணவிற்கும் உறுதி இல்லாத நிலையிலிருந்தும் பூனைக்குட்டிகளின் பசியை போக்குகிற இந்த அம்மா.
இந்த அம்மாவை போன்றவர்களின்  பசி நேரத்திற்கு உணவை தேடிக்கொண்டுவந்து தந்த அந்த ஸ்கூட்டர் பெண்மணி ..

நிற்க..
மலைக்கோவில்களுக்கு போக ரொம்பவே பிடிக்கும் எனக்கு.. போன வாரத்தில்  நண்பி ஒருத்தி அழைக்கவே  கிளம்பியாச்சு சோளிங்கர் மலைக்கோவிலுக்கு.
புது இடத்திற்கு பயணம். இரயில் மற்றும் பேருந்தில் அதிகாலையில் டிசம்பர் சிலுசிலுப்பிலென எல்லாமே நன்றாகவே இருந்தது. ஆனால் சோளிங்கர் போய் இறங்கினால் அப்படியொரு கூட்ட நெரிசல்… கார்திகை மாதம் அந்த சாமிக்கு விசேசமாம்.

அங்கே ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு அன்னதான கூடம். கொடுத்துக்கொண்டே இருப்பவர்களும் வாங்கிக்கொண்டே இருந்தவர்களும் குறைவில்லாத. அதில் குறையொன்றுமில்லைதான்.
ஆனால் அரைகுறையாக உண்டு பாதி உணவோடு இலையை வீசிவிட்டு அடுத்த கூடத்திலும் போய் உணவை வாங்குகிற..
சாலை முழுதும் வீணாக இரைந்து கிடந்த விரயமாக்கபட்ட உணவு..

வாங்குபவர்களுக்கு தேவையே இருக்காத போதும் சும்மா இலவசமாக கிடைப்பதை ஏன் விடுவானே எனும் மனப்போக்கு போல..

கொடுப்பவர்களும் கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களுக்கு அன்னதானம் தந்தால் தான் புண்ணியமென நினைப்பது என்ன லாஜிக்கோ தெரியல.

முன்னே அப்பா ஒன்று சொல்லுவார். அறிந்தவர் தெரிந்தவர்களை சம்பிரதாயமாக நல்லார்க்கீங்களான்னு   கேட்பதைப்போல சாப்ட்டீங்களான்ன்னு கேட்ப்போம்.
அவர் போயிருந்த நாட்டில் யாரும் யாரையும் விசாரிக்க ‘பசியாறீட்டீங்களான்னு’ கேட்பாங்களாம்.

வெவ்வேறு வார்த்தைகளில் சொல்வது
பொத்தம் பொதுவாக  ‘உண்பதைத்தான்’ என்றாலும் ‘சாப்பிடுவது’ வேறு பசியாறுவது வேறுதான்..

பசியாற்றுதலைப்போற்றுவோம்.. கடவுளர்களை கோவில்களில் மட்டுமாக தேட வேண்டியதில்லை என்பதைத் தாண்டி என்ன சொல்ல!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here