உமி நீக்கி தவிடெடுத்த
பச்சரிசி வெள்ளந்தியா
பல் அழகு
சொல்லழகி
ஊறவச்ச உளுந்து ஒருபடிக்கு
ஒசந்ததை போல்
கரிசனம் காட்டும்
அன்பழகி
வெந்தைய கசப்பா கவலை கண்டாலும்
வெளிக்காட்டாத
வீம்பழகி
பதமாய் சேர்த்து அரைச்சு எடுத்த மாவ
சட்டியிலே பொத்தி வச்சு
மக்காநாள் திறந்ததிலே
பொங்கி பூத்த
சிரிப்பழகி
பத்த வச்ச அடுப்புக்குள்ளே
முட்டி நிக்கும் நெருப்பு போல
ஊறு கண்டா கோவம் கொட்டி
மத்த நேரம் பாசம் கொட்டும்
கண்ணழகி
தண்ணியில விட்ட எண்ணை துளியா
தனிச்சு மிளிரும்
தன்மையழகி
சூடான ஆப்ப கல்லில்
சொக்கி உறைந்த மாவு கணக்கா
தக்கவைக்கும்
நட்பழகி
பஞ்சு பஞ்சாய் சுட்டு போட்ட ஆப்பம் போல
பரிவு காட்டும் வாஞ்சைமிகு
வஞ்சியழகி
தெளிவெடுத்த தேங்காய் பால்
மனசழகி
இனிப்பான தெவிட்டாத
தேன்சுவையாய் தீம்பாவை
குண அழகி
கொள்ளையழகே கூடை தூக்கி
ஆப்பம் விக்கும் முத்தழகி..