உள்ளே புதையல்
வெளியே தேவைகள்
இடையே
விசைகள் இறுகி
திறவுகோலுக்கு திமிறி
திறக்க மறுக்கும் தாழ்
ரசவாதம் மக்கிப்போன படிமக்கலம்
பிரதிபலிக்காத பிம்பங்களின் ஈண்டு
வேரும் மரமும்
ஒத்திசையாத கோணங்களின் செருக்கில்
ஒன்றிலிருந்து ஒன்று பெயர்ந்து விலக
சாய்ந்த கிளைகள்
சருகுகளின் உதிர்வோடு
விளங்கா பொருள் பூண்ட வினாவுக்கும்
விளக்கம் நுகரா விடைக்குமான
குறியெழுத்து
வரவேட்டில் வரிது கிட்டாது பதிவித்த
அனாமத்து கணக்கு அடைப்புக்குறிக்குள்
இடுங்கிப்போன சால்
இடக்கரையில் தாய் குறுக்குக்கோடாய்
வடக்கரையில் தந்தை நெடுங்கோடாய்
இடைவழி நீரில்
நீந்தவும் பழகா
மூழ்கவும் விரும்பா முரண் பயணத்தின்
வினைப்போக்கில்
விதிர்ந்துழந்த பிள்ளைகள் நாங்கள்
தலைக்கை தருதல் வேண்டி