நெடுநல் அத்தியாயம் -4

1
527

அந்த வாரம் முழுவதும் தையல் வகுப்புகள் இல்லை என்பதை வீட்டிற்கு மறைத்தாயிற்று.

எப்பொழுதடா செவ்வாய் முடிந்து புதன் வருமென காத்திருந்து தையல் மையத்திற்கு போவது போல போக்கு காட்டி  லைப்ரரிக்கு போய் நின்றாள் யசோதா. 

அவளின் புத்தக வாசிப்பு பித்து பெரியவர் கேசவப்பெருமாளுக்கு புரிந்தது. 

அவருடைய மனைவி இப்படித்தானே இந்த வயதிலிருந்து தேடித்தேடி புத்தகங்களாக வாங்கிக்குவித்து மாய்ந்து மாய்ந்து வாசித்தவள்… மூட்டை மூட்டையாக அவளுடைய புத்தகங்களையும் ஞாபகங்களையும் விட்டுப்போனவள். இருப்பதில் பாதிக்குப்பாதி அவள் விட்டுச்சென்றவைகள் தான். 

பணி ஓய்வுக்கு பிறகு வீட்டின் முன் பகுதியை திட்டமிட்டு தடுத்து  நூலகம் வைத்து அதையே பிழைப்பாகவும் ஆக்கிக்கொண்டார். 

ஓய்வு காலத்தை உருப்படியாக கழித்த மாதிரியும் ஆயிற்று,கைசெலவுக்கு கூடுதல் பொருள் ஈட்டின மாதிரியும் ஆயிற்று.

ஒரு பிரம்பு மோடாவை கொண்டுவந்து அவளிடம் போட்டு “வேண்டிய புத்தகத்தை எடுத்து நிதானமா உட்கார்ந்து படிம்மா. நான் வீட்டிற்குள்ளே ஒரு பத்து நிமிசம் போய்ட்டு வரேன்.யாரும் வந்தால் இதோ இந்த கதவிற்கு பக்கத்திலிருக்கும் பெல்லை  தட்டும்மா.. வந்துவிடுவேன்.”

இடப்பக்கத்துச் சுவர்  புத்தக அடுக்கத்தை ஒட்டி சற்றே உள்ளடங்கினாற் போல இருந்த கதவை திறந்துகொண்டு போய்விட்டார்.  

இம்முறை இதுவா அதுவா என்றெல்லாம் குழப்பமில்லை யசோதைக்கு. முந்தினமுறை வாசித்துப்பார்த்தவைகளில் பிடித்ததொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தவள் வாசிப்பில் மூழ்கிப்போனாள்.

இடையிடையே கடிகாரம் பார்க்கவும் தவறவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் கூடிவிடக்கூடாதே..

வேகமாக வாசிப்பவள் என்பதால் கிட்டத்தட்ட பாதி புத்தகத்தை முடித்திருந்தாள். 

மீதியை வாசிக்க அவள் வெள்ளி வரை காத்திருக்கவேண்டுமே! திருப்பி வைக்க மனமில்லாமல் வைத்துக்கொண்டிருந்தவளிடம் 

“எடுத்துப்போம்மா, எடுத்துப்போய் முழுசா படிச்சிட்டே கொண்டுவா, பணம் தரத்தேவையில்லை” என்றார் பெரியவர். 

“இல்லைங்க அங்கிள் பணம் பிரச்சனையில்லை. ஆனால் பாடப்புத்தகங்கள் தவிர மற்றது வாசித்தால் வீட்டில் திட்டு விழும்.”

“என்னம்மா இது படிக்கிற பிள்ளைங்க நாலு விசயத்த சேர்த்து படிச்சாத்தான் உலகம் புரியும். இது புரியாமல் திட்டுவதா! நான் வேணும்ன்னா உங்க வீட்டில் வந்து பேசறேன்.”

“அய்யோ வேணாம் வேணாம் அங்கிள். அப்பா தொலைத்து கட்டிடுவார். “

“நீ எடுத்து போய் படி. வீட்ல எதும் சொன்னா அப்ப பார்த்துக்கலாம். ஒரு முதல் முயற்சியா இருக்கட்டும் எடுத்துக்கம்மா.” என்று ஊக்கினார். 

ஒரு குருட்டு தைரியத்தோடு அந்த புத்தகத்தை, தையல் வகுப்பிற்கு எடுத்துப்போகும் துணிச்சுருளுக்குள் சுற்றி வீட்டிற்கு எடுத்துவந்தாள் யசோதை. 

இரவு விளக்குகள் அணைந்து வீடடங்கியதும், தன் குளியலைறைக்குள் விளக்கை போட்டிருந்து கொஞ்சமும், மீதியை மறுநாள் மதியம் தாயின் ஓய்ந்த உறக்க நேரத்தில் மீதியுமாக வாசித்தே முடித்துவிட்டாள். 

திருட்டுத்தனமாகத்தான் என்றாலும் மனதிற்கு பிடித்தவொன்றை செய்துமுடித்தது அவளுக்கு ஏக திருப்தியும் நிறைவும். 

இந்த நிறைவுணர்வைப்பெற வீட்டிற்கு மறைத்துசெய்வதொன்றும் பிழையெனத்தோணவில்லை. 

வெள்ளியன்று போன பொழுது அவளாகவே துணிந்து இரு புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்தாள். 

அதே குளியலறை, அதே தாயின் மதிய உறக்க நேரங்கள் அவளின் புத்தக வாசிப்பு நேரங்கள். 

அடுத்தடுத்த வாரங்களில் தையல் வகுப்புகள் முடிந்த கையோடு ஐந்தே நிமிடங்களில் ஓடி மாற்றுப்புத்தகத்தை எடுத்து, மறைத்து கொண்டு வந்து வாசிப்பது யசோதையின் வாழ்வில் பெரிதானதொரு சாகசம். 

கல்லூரிக்கு போன காலத்தில்  கைச்செலவிற்கென ஒரு நூறு ருபாய் தாளை யசோதைக்கு தருவார் தந்தை.  

தாயோ ” நாலு புள்ளைங்களோடு கேண்டின் பக்கம் போறப்ப நல்லதா எதும் சாப்பிடதோணுச்சுன்னா கையில காசு இருக்கனும். இத வச்சுக்க யார்க்கும் தெரிய வேண்டாம்”  சிறுவாடு காசு சேர்ததில் மாதம் முன்னூறுக்கு குறையாமல் யசோதைக்கு தருவாள். 

இப்போது தையல் வகுப்புகளுக்கு என்னென்ன தேவையென லிஸ்ட் எழுதிக்கொடுத்தால் அண்ணன் வாங்கிவந்துவிடுவான் என்பதால் அப்பாவின் நூறு நின்று போயிருந்தது.  அம்மா அவள் பங்கு முன்னூறை நிறுத்தவேயில்லை என்பதோடு இவளிடமும் சேமிப்புப்பணம் இருந்தது என்பதால் புத்தகங்களுக்கு செலவிட யசோதைக்கு பிரச்சனையிருக்கவில்லை. 

அம்மா இவளுக்கு வீட்டு வேலைகளை அள்ளிக்கொடுத்துவிட மாட்டாள். கிள்ளிக்கூட கொடுக்கமாட்டாள். 

 வீட்டு வேலைகளைச்செய்யும் போது கூடமாட இவளையும் வேலை செய்ய விடுவதில்லை.

” சும்மா நின்னு நான் செய்வதை பார்த்து தெரிஞ்சுக்க”. என்று விடுவாள். என்பதால் யசோதைக்கு எந்த வேலையும் செய்யத்தெரியாது என்றில்லை. கைப்பழக்கமாக எதையும் செய்து பார்க்கவில்லை என்றாகிப்போனது.

சமையல் நேரத்தில் யசோதை காய்கறி நறுக்கித்தரப்பார்த்தால் “இரு இரு நானே பார்த்துக்கிறேன். கையில கிய்யில பட்டுக்கப்போறே” என்று அம்மா அனுமதிக்க மாட்டாள். 

அடுக்களையில் கொதிக்கிற குழம்பை இறக்கி வைப்பதுவோ,எண்ணெயில் பொரித்தெடுக்கிற வேலைகளையோ யசோதை செய்ததே இல்லை. 

“சூதானம் பத்தாது. சூடாக இருப்பதை  மேல கொட்டிக்கிட்டா போச்சு. எனும் அச்சுறுத்தலோடு செய்யவிடமாட்டாள். 

யசோதைக்கு குடிக்க கையில் பால் கொடுத்தால் கூட “சூடா இருக்கு, பார்த்துப்பிடி பாப்பா  , மேல கொட்டிக்காதே” என பத்திரம் காட்டாமல் ஒருநாளும் டம்ளரை தந்ததில்லை. 

கோழை மனத்தோடானவளை மென்மேலும் கோழையாக்குவதில் அம்மா தன் பங்கை சிறப்பாகச்செய்து கொண்டிருந்தாள்.  

“போங்கம்மா இப்படியே ஒன்னும் செய்யாமல் சும்மா நிற்பது போர் அடிக்கிது, நான் போய் தையலுக்கு துணிகள் வெட்டிப்பழகப்போறேன்”

யசோதை இப்பொழுது நினைத்த நேரத்தில் புத்தகம் வாசிக்க புது யுக்தியை கற்றிருந்தாள். நோட்டு புத்தகத்தோடு ப்ரவுன் கவர் போடுவது போலவே லைப்ரரியிலிருந்து எடுத்து வரும் கதைப்புத்தகங்களுக்கும் அட்டை போட்டு அது என்ன புத்தகமென்று வெளியே தெரியாதபடி ஆக்கிவிடுவாள். 

இந்த மில்ஸ் & பூன்ஸ் புத்தகங்களுக்கெல்லாம் நல்ல அட்டைபடங்களைப்போட்டால் என்ன!! அவைகளை ஒளித்து மறைத்து படிப்பதிலிருந்த சிக்கல் தான் யசோதைக்கு ப்ரவுன் கவர் ஐடியாவை தந்திருந்தது. 

விடுமுறை நாட்கள் தவிர மற்ற பகல் பொழுதுகள் பெரும்பாலும் வீட்டில் தாயும் அவளும் தானே. தாயை ஏய்த்து வாசிப்பது  அவளுக்கு சுலபமாக இருந்தது. 

வாசிப்பதற்கோ எழுதுவதற்கோ அவளுக்கு பிடித்தமான இடம் அவளறையின் யன்னல்திட்டு. 

அதிலமர்ந்து  துணிகளை பரப்பி வைத்து அளவீடுகள், குறிப்புகள் எழுதுகிற நோட்டு புக்கையும் விரித்து வைத்து அவள் பாட்டிற்கு  கதை புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பாள். 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் தானே..!!

1 COMMENT

  1. வாசிப்பு பைத்தியம் பிடித்து விட்டால் தப்பிப்பது எளிதா என்ன ?!
    யசோதை எப்படி மாட்டிக் கொண்டாள் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here