நெடுநல் அத்தியாயம் -7

1
357
மழை மனசு

எடுத்து வந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்தெல்லாம் பிடித்த பத்திகளை, பிடித்த பாத்திரங்களை நோட்டு புத்தகத்தில் குறித்து வைக்கிற பழக்கம் யசோதைக்கு உண்டு. வாசித்த புத்தகத்தை பற்றி அவளுக்கு என்ன தோன்றுகிறதென்பதை எழுதுவது அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கானது. 

 கலகலப்பாக பேசி சிரித்து பொழுதாட எவருமற்றிருந்த  வீட்டில்அவள் தனக்கு  பிடித்தமாதிரி தனக்கேயான ஒரு உலகை நிர்மாணித்துக்கொண்டாள். அதில் புத்தகங்களில் வாசித்திருந்த பிடித்த கதாபாத்திரங்களுக்கு உருவங்கள் கொடுத்து உலவவிடுவாள். 

 இங்குள்ள நிஜமனிதர்களைக்காட்டிலும் அந்த கற்பனை மனிதர்களுக்கு மத்தியில்  உலவுவது நூறாயிறம் மடங்குகள் உத்தமம். 

வெவ்வேறு புத்தகங்களிலிருந்து வெளிவந்த பாத்திரங்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது போல் கற்பனையில் சித்தரித்து அதை கண்டு உவத்தல் அவ்வளவு பிடித்திருக்கிறது அவளுக்கு. 

இரவு படுக்கையில் விழுந்து கண்களை மூடியவள் மனக்கண்ணில் லைப்ரரி அங்கிளின் மூடியிருந்த நூலகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கற்பனையில் ஓட்டிப்பார்த்தாள். 

எண்ணிக்கையில் அடங்காத புத்தகங்கள் அவ்வளவிலிருந்தும் தலா ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதாபாத்திரம் உருப்பெற்று குதித்தாலுமே இடப்போதாமையில் அங்கிளின் கடைக்குள் ஒரு தள்ளுமுள்ளு போரே உருவாகிவிடும். நினைத்து சிரித்துக்கொண்டே உறங்கிப்போனாள். 

மறுநாள் அவள் அங்கே புத்தகம் எடுக்க போனபோது கடை திறந்திருந்தது. அங்கிளைக்காணோம். உள்ளே வீட்டிற்கு போயிருப்பாராயிருக்கும். 

‘பொறுப்பே இல்ல இந்த அங்கிளுக்கு. வரட்டும். கடையை இப்படி திறந்துபோட்டு தன் பாட்டிற்கு உள்ளே போனால்! புத்தகத்தின் அருமை தெரியாத யாரும் வந்து வீணாக்கிவிட்டால் என்னாவது!’ 

யோசனையூடே..அவள் இதுவரை  வாசித்திடாமல் எதும் எஞ்சி இருக்கிறதா என்று அடுக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள். 

“வணக்கங்க” குரல் வந்தது வெளியிலிருந்து இல்லை. உட்புற சுவரையொட்டி இருக்கும் உள்கதவினருகே அவன் நின்றிருந்தான். 

 இரு கைகளையும் குவித்த வண்ணம்  “வணக்கங்க” என்றான் மீண்டும். 

அவன் வெள்ளை வெளேர் என்ற வெண்மையில் முழுக்கை சட்டை உடுத்தியிருந்தான். மிகத்திருத்தமான வடிவோடு, ஒரு இருபத்தி ஐந்து வயதிற்குள் தான் இருக்கும். 

யார் இவன்! இவள் இங்கே வந்துபோகத்தொடங்கி இந்த ஆறுமாதங்களில் இப்படி ஒருவனை பார்ததே இல்லையே! 

உடுத்தியிருக்கும் வெண்மையையும், கைகளை குவித்து வணக்கம் வைத்தததையும் சேர்த்துபார்த்தால்! ஒட்டு வாங்க வரும் அரசியல்வாதிகளிடம்  மட்டுமே இவை இரண்டையும் சேர்த்துப்பார்த்திருக்கிறாள் யசோதை. 

ஆனால் உட்புற கதவருகே எப்படி! ஒரு வேளை அவள் கற்பனை செய்ததே நிஜமாகி எதும் புத்தகத்தில் இருந்து குதித்திருப்பானோ!!

இவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது அவனுக்கு எப்படியிருந்ததோ என்னவோ! 

சங்கோஜத்துடன் சிகையை கோதியபடி  பார்வையை திருப்பிக்கொண்டான். யசோதை மேலும் அதிசயித்துப்போனாள். முதன் முதலில் ஒரு ஆணின் வெட்கத்தை காண்கிறாள் அவள். 

பார்க்க நன்றாகவே இருக்கிறது.

அவன் சுவற்றின் புத்தக அடுக்குகளைப்பார்த்தபடியே பேசினான். 

” நான் சார்க்கிட்ட இருந்து இந்த பக்கத்திலிருக்க கடையை வாடகைக்கு எடுத்துருக்கங்க. சின்னதா என்னோட ஆபீஸ போட்ருக்கேன். 

சார் இப்ப குடும்பத்தோட அவரோட கொள்ளு பேத்திக்கு காது குத்தி மொட்டைபோட்டு குலதெய்வம் கும்பிட ஊருக்கு போயிருக்காருங்க, வர பத்து பதினைந்து நாளாயிடுங்க. அதுவரைக்கும்  என்னோட ஆபீஸ்க்கும் இந்த கடைக்கும் நடுவில இருக்க இந்த கதவையும்  திறந்து வச்சு பர்த்துக்க சொல்லி கேட்ருக்காருங்க. 

ஒரேடியா அவ்வளவு நாள் அடைச்சுபோட்டா வாடிக்கையா வர்றவங்களுக்கு சிரமமா இருக்குங்குமில்லைங்க. அதனாலதாங்க.”

யசோதையின் இதழ்களில்  நகை முகிழ்ந்தது. 

” என்ன அதிசயம் உங்களுக்கு புக்ஸ்கூடல்லாம் பேசத்தெரிஞ்சிக்கே. அங்க பார்த்துக்கிட்டே பேசறீங்க! “

அவளின் கேலி புரிந்து அவன் சன்னமாக நகைத்தான்.

 யசோதைக்கு ஏனோ அவனோடு பேசுவது பிடித்திருந்தது. வீட்டின் முரட்டு ஆண்களையே பார்த்து பழக்கப்பட்டிருந்த அவளுக்கு, அவளை நேருக்கு நேர் பார்த்து பேசவே தயங்குகிற ஒருவனாக அவனிருந்தது பிடித்திருக்கிறது.

“இந்த கடைக்கும் உங்க ஆபீஸுக்கும்  நடுவில ஒரு கதவு தான் இருக்குன்னா, நீங்க எவ்வளவு லக்கி. எப்ப வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் வாசிச்சிட்டே இருக்க முடியும்ல” 

அவன் மறுத்தான். 

“இல்லைங்க பெயரளவிற்கு ஆபீஸ்ன்னு ஒன்னு போட்ருக்கேன்.

ஆனா  எனக்கு வெளி வேலை அலைச்சல்தாங்க அதிகமிருக்கும். அதோட எனக்கு இந்த புக்ஸ்லாம் படிச்சுதான் ஆகனும்ன்னு இல்லைங்க. நான் அடிப்படையிலையே அறிவாளிங்கிறதால தான் எங்கப்பா எனக்கு பெயரே வித்தியாதரன்னு வச்சிருக்காருங்க. “

“ஓஹோ அப்போ நான் அடிப்படையிலயே முட்டாள்ங்கிறதாலதான் இந்த புக்ஸ்லாம் எடுத்து படிக்க வரேன்னு சொல்றீங்க!’

“ஹய்யோ ஏங்க, என்னங்க நீங்க! நான் விளையாட்டுதனமா எதோ சொல்லவந்தா… “

“அப்போ என்னை  விளையாட்டு பேச்சுகூட  புரியாத அடிமட்ட முட்டாள்ன்னு சொல்ல வறீங்க  அதானே!! “

அவன் மீண்டும் கைகளை குவித்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டான்.

 “வேணாங்க, வேணாம்!கல்லு மண்ணு, கடப்பாரைன்னு எதை விற்றுக்கொடுப்பதற்கும் நான் செய்ற தொழிலில் எனக்கு பேச்சு வன்மைதான் முக்கியம்ங்க.

 ஆனா பெண்களிடம் அவங்கள புரிந்து  பேசுறது,  எனக்கு இன்னைக்குவரைக்கும் பெரும்பாடா தான் இருக்கு. அதை கத்துக்க இங்க எதும் புக் இருந்தா சொல்லுங்க அதை படிச்சு  தெரிஞ்சுக்கறேன். ஏன்னா பாருங்க அறிவாளிக்கும் அடிசறுக்குது”  என்றான் அவன். 

அவனின் பேச்சும் உடல்மொழியும் யசோதயை சிரிக்கச்செய்தது. 

அவளுக்கே இது ஆச்சர்யம். முன் பின் அறிந்திடாத, இதோ கொஞ்சம் முன்னால் தான் அறிமுகமான ஒரு அந்நிய ஆடவனிடம் இவ்வளவு இலகுவாக மடைதிறந்தார்ப்போல் சிரித்து சரளமாக பேச முடிகிற யசோதையை அவளே இப்போதுதான் முதன்முதலில் காண்கிறாள்.  

மனம் தான் என்னமாதிரியானதொரு ‘மாயக்கண்ணாடி’! 

 நம் சொந்த முகத்தையே வேறொரு வடிவத்தோடு  பார்க்க வாய்க்கிற கண்ணாடி. 

“உங்க தொழில் என்ன! கல்லு மண்ணு விக்கிறீங்களா! “

இல்லைங்க இந்திந்த பொருட்கள்தான்னு இல்ல, சின்ன குண்டூசியிலிருந்து காரோ நிலமோ எதுன்னாலும் வாங்கவும்,  விற்கவும் தேவையிருப்பவர்களை இனம் கண்டு, இடைநிலையில் நின்னு இரண்டுபேருக்குமான டீலிங்க முடிச்சுக்கொடுக்கிற ஏஜெண்ட் நான். 

முதலீடே தேவைப்படாத தொழில் இது, அதுமட்டுமில்ல உலகம் அழியாத வரை, அழிக்கமுடியாத தொழில் இது. வாங்குபவர்களும் விற்பவர்களும் குறையவே மாட்டார்கள். டிமாண்ட் இருந்திட்டே இருக்கும். கொஞ்சம் நூல்பிடிச்சு கத்துக்கிட்டா அப்புறம் கயிறே திரிச்சிடாலாம்.” 

அவன் சொன்னதுபோலவே அவனிடம் பேச்சு வன்மை நிறையவே தெரிந்து. அதிலும் தொழிலைப்பற்றி பேசுவதென்றால் மணிக்கணக்காய் பேசப்பிடிக்கும் போல

யசோதைக்கும் அந்த பேச்சை கேட்டுக்கொண்டே நிற்கவேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் நேரமாகிறதே… 

அவள் கைகடிகாரத்தை பார்பதை கவனித்தவன். 

“சாரிங்க. நான் என் அறையில் இருக்கேன். நீங்க வேண்டிய புத்தகத்தை எடுத்துகிட்டு கிளம்பும் போது சொல்லுங்க” 

நூலக அறையிலிருந்து அங்கிளுடைய வீட்டிற்கு போகத்தான் இந்த பக்க கதவு என்று இதுவரை  நினைத்திருந்தாள் யசோதை. ஆனால் அந்தபுறம் இருந்ததோ இன்னொரு குட்டியறை. 

 மெயின் ரோட்டை பார்த்தமாதிரி அந்த அறையும் கிளை ரோட்டை பார்த்தமாதிரி இருக்கும் இந்த லைப்ரரி அறையையும் பிரிக்க தான் இடையில் இந்த கதவு. இவ்விரு அறைகளுக்கும்  இடையே அங்கிளின் வீட்டிற்குள் போக தடம்.

லைபரரி அங்கிள் பிழைக்கத்தெரிந்தவர். மாடிப்படிகட்டிகளின் கீழோடிய சின்ன பகுதியைக்கூட வீனாக்காமல் யோசித்து கண்ணாடிகதவுகளை வைத்து அதை இந்த வித்யாதரனுக்கு ஆபீஸாக உபயோக்கிக்க வாடகைக்கு தந்திருந்தார். 

ஒரு டேபிளும் இவன் அமர ஒரு சுழல் இருக்கை எதிரே இரு நாற்காலிகளும், தலைக்கு மேலே மின்விசிறியும் மேஜைமேல் போனும். மொத்தமே இவ்வளவிற்கிருந்தது வித்யாதரனின் அலுவலக அறை.

“இதோ இந்த புக் எடுத்திருக்கேன். காசு இங்கே மேஜை மேல் வச்சிருக்கேன்”   

“சரிங்க, ஏங்க ஒரு நிமிசம் உங்க பேரென்னன்னு சொல்லவேயில்லையே!” 

“என் பேரா! நான் வெள்ளை சட்டை போட்ருக்கவங்களுக்கெல்லாம் என் பேரை சொல்றதில்லை” 

யசோதை புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினாள். வீடு சேர்ந்த பின்பும் அந்த புன்னகை கூடவேயிருந்தது.. 

1 COMMENT

  1. Simple words describing the life of a simple girl with extraordinary thoughts. A good read so far.
    Waiting for next chapter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here