நெடுநல் அத்தியாயம் -9

0
329
Bhuvanam's Art

லைப்ரரி அங்கிள் ஊரிலிருந்து திரும்பி வந்தபின் வாழ்க்கை முன்னைப்போல் நடப்பிற்கு திரும்பியிருந்தது. 

நூலக அறையின் பக்கக்கதவு சாத்தப்பட்டே இருந்தது. 

யசோதைக்கு வாசிக்க புதுப்புத்தகங்கள் கிடைத்தன.

மற்றபடி சொல்லிக்கொள்கிறமாதிரிஎதுவுமில்லை. வெறுமை சூழ்ந்திருந்தது. எதையோ இழந்து விட்ட உணர்வோடு சுரத்தே இல்லாமல் சுற்றிவந்தாள் யசோதை.  

வித்யாதரனுக்கும் அப்படித்தான் இருந்ததா தெரியாது ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள் 

 அவள் அங்கே போயிருக்கும் போது இரண்டு தடவைகள் அவன் அந்த சுவர் பக்க கதவை திறந்துகொண்டு வந்து லைப்ரரி அங்கிளிடம் எதோ பேசிவிட்டுப்போனான். 

அவளைக்கண்டதும் அவனது அதே ட்ரேட்மார்க் கைகுவிப்பு ‘வணங்கங்க’வும் லேசான புன்னகையும். எப்படியோ அவளால் கண்ணால் பார்க்கவாவது முடிந்ததே!! 

அதற்கும் அடுத்த மாதத்தில் அவன் அவள் கண்ணில் கூட படவில்லை. புத்தகங்களை எடுக்கிற வாகில் அந்த சுவரோரம் நின்று அந்த கதவுக்கு அப்பால் அவன் இருக்கிற அரவம் கேட்கிறதா இல்லையா என்றெல்லாம் யசோதை ஆராய்ந்தாலே ஒழிய 

மெயின்ரோடு பக்கம் போய் அவனின் அலுவலக முன்வாயில்புறம் போய் பார்த்து தெரிந்து கொள்வதற்கான மனோபலமெல்லாம் அவளுக்கில்லை. 

மொட்டைமாடியில் அமர்ந்து ஈரக்கூந்தலை கோதியபடியே எதையோ வாசிக்க கைகளில் எடுத்து வைத்தவளுக்கு வாசிப்பில் கூட மனம் ஒன்றவில்லை. 

கீழே இறங்கிவந்தவள் நினைப்பில் தட்டிப்போய் அப்படியே பாதி படிகளில் உட்கார்ந்துவிட்டாள். 

எவ்வளவு நேரமோ!! 

அம்மா வந்து ” என்ன பாப்பா, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க. வயிறு ரொம்ப வலிக்குதா, போய் கொஞ்ச நேரம் படுத்திரு. நான் மோர் கலந்து தருகிறேன்” என்றாள். 

ஆனால் மோர் குடித்தால் எப்படி சரியாகும்! இதென்னமாதிரியான நோவு என்று இவளுக்கே தெரியாதே.. 

காதல் கொண்ட மனம் தான் என்ன மாதிரியானதொரு மாயச்சுழல் சொல் செயல் சிந்தனைகள் உணர்வுகளென அத்தனையையும் ஆக்கிரமித்து உள்ளிழுத்துக்கொண்டு சுற்றிச்சுழற்றி அடிக்கிற சுழல் 

இப்படியே மேலும் இருமாதங்கள் ஓடிவிட்டபின் அதிர்ஷ்டவசமாக ஒருநாள் லைப்பரரி அறையின் சுவர் பக்கக்  கதவு திறந்திருக்க யசோதைக்கு விதயாதரனை கண்ணால் பார்க்க வாய்த்தது. 

அங்கிளும் கடைக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் முகத்தின் முழுவிகசிப்பை மறைத்து சாதாரணம் போல் காட்டிக்கொண்டு அவள் வித்யாதரனைப்பார்த்து 

முகிழ் நகை பூத்த முகத்தோடு, நலம் நலமறிய ஆவலென்பதையெல்லாம் கண்களில் நிரப்பி, கண்ணால் மட்டுமே பேசி விடைபெற்று வந்த போதினும் கூட அது போதுமாயிருந்தது அவளுக்கு. 

மிதக்கிற உணர்வோடுதான் திரிந்தாள். 

எல்லா கண்ணாமூச்சி ஆட்டத்திற்கும் யசோதையின் வீடு விரைவில் ஒரு முற்றுப்புள்ளியை இட்டது. 

யசோதைக்கு மாம்பிள்ளை முடிவாகியிருந்தது. 

மாப்பிள்ளை வீட்டிற்கு யசோதையை போட்டோவில் பார்த்தே பிடித்துவிட்டதாம். பத்தில் ஒன்பது பொருத்தங்களும் பொருந்தி வர, விரைவில் நேரில் பார்க்க வருகிறோம் அதுவுமே சம்பிரதாயத்திற்கென்றனர். 

வீடெல்லாம் யசோதையின் திருமணப்பேச்சே அதிர்ந்துகொண்டிருந்தது. அதிர்ஷ்டக்காரி அவளுக்கு முதல் மாப்பிள்ளையே அமைந்துவிட்டதென்று

சொந்த பந்த உறவுக்கூட்டங்களுக்கெல்லாம் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. 

வீடு அவளிடம் அவளின் திருமணம் குறித்த அபிப்ராயத்தை கேட்குமென்று எங்கிருந்து எதிர்பார்பது!!. 

மாப்பிள்ளையின் படமென யசோதைக்கு காட்டப்பட்ட படத்தை அவள் திருப்பி கூட பார்க்கவில்லை. அப்படியே பார்த்திருந்தாலும் நிச்சயம் பிடிக்கப்போவதுமில்லை. 

வித்யாதரனின் முகத்தை தவிர வேறொரு முகத்தை அவளுக்கு எங்கிருந்து பிடிக்கும்!. 

ஆனால் அவளுக்கு பிடித்திருப்பது போலவே வித்யாதரனின் விருப்பத்தையும் அவளுக்கு தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது.

தாமதித்தால் நிலைமை கைமீறீப்போய்விடும்.  

இப்பொழுதும் மெயின்ரோடு வழியில் முன்புறம் சென்று பார்க்க அவள் நினைக்கவில்லை. மாறாக 

“அங்கிள் நான் வித்யாதரனைப்பார்த்து இரண்டு நிமிசம் பேசிட்டு வரட்டுமா” என அனுமதி கேட்டு பக்க கதவை திறந்துகொண்டே போனாள். ஆனால் அவன் தான் அங்கில்லை. 

“கொஞ்சம் பேசவேண்டும், நாளை இதே நேரம். முடியுமா!” என்று துண்டுக்காகிதத்தில் எழுதி அவனின் மேஜை மீது வைத்து விட்டு வந்தாள். 

மறுநாள் அவள் போனபோது அவன் காத்திருந்தான். அவளுக்காக பருக எதோ பானம் கூட வாங்கிவைத்திருந்தான். 

அதை மறுத்து அவள் சொல்லவந்ததை சொல்லி முடித்தாள். 

சிலவினாடிகள் அவன் எதுவுமே பேசவில்லை. பின் ஒரு பெருமூச்செறிப்போடு 

“உங்கள் வீட்டைப்போல நல்ல வசதியான வீட்டு மாப்பிள்ளையை பார்த்திருப்பார்கள் இல்லையா! உங்களுக்கு அதுதான் சரி. வாழ்த்துகள் யசோதா, உங்கள் மனதிற்கேற்ற நல்ல மணவாழ்கை அமைந்து சிறக்கட்டும்” என்றெல்லாம் வாழ்த்தினான்.

“நான் உங்க வாழ்த்தை வாங்க இங்கே வரல வித்யாதரன். என் மனதிற்கேற்ற விருப்பமான மாப்பிளையா நான் யாரை நினைக்கிறேன்னு நானாகவே உடைத்து சொன்னால் ஒழிய உண்மையில் உங்களுக்கு புரியலையா!”

அப்பொழுதும் அவன் எதுவும் பேசவில்லை. மேஜை மீதிருந்த எதையோ தீவிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். 

யசோதை காத்திருந்தாள். அவனாக பேசட்டும்.  

அவன் பேசினான்.

“யார் மனதில் யார் இருந்த்தாலும் யாரை விரும்பியிருந்தாலும். அதெல்லாம் நடைமுறை வாழ்கைன்னு வரும் போது நடக்கமுடியாதது யசோதா. 

நீங்க எடுத்துட்டு போய் படிக்கிற கதை புத்தகங்களில் மட்டுமே சொடுக்கு போட்ற வினாடிக்குள் எல்லாமும்  கைக்குகிடைத்து கைகூடிவிடும். நிஜ வாழ்கை அப்படியில்லை. 

நமக்கு பிடித்த வாழ்கையை நாம வாழமுடியறது  அவ்வளவு சுலபமா எல்லோருக்கும் அமைஞ்சிடாது. அதுவும் என்னைப்போல் ஒன்றுமில்லாதவனுக்கெல்லாம். 

ஊர்க்குருவி உயரப்பறக்க நினைக்கூடாதுன்னெல்லாம் சொல்லுவாங்க. ஆனால் நான் உயர பறக்க நினைப்பவன் தான். 

அதுக்கான தகுதியை கொஞ்சம் கொஞ்சமா வளர்தெடுத்திட்டு இருக்கேன். 

இந்த சொந்த தொழில் தான் வேணும்ன்னு பிடிவாதமா பிடிச்சிட்டு நிக்காம இந்நேரம் வேறெங்காவது வேலைக்கு போயிருந்தா இதை விட அதிகமாவே சம்பாரிக்க முடியும் தான். மாதம் தவறாம ஒரு நிரந்தர வருமானம்ன்னு ஒன்னு இருந்திருக்கும்.  

ஆனால் எனக்கு சொந்த தொழில் தான் வேணும் யசோதா.  இதில் எவ்வளவு சிக்கல்களை, சோதனைகளை சந்திச்சாலும் தோத்துக்கிட்டே இருந்தாலும் ஒரு நாள் இல்லைனா ஒருநாள் கண்டிப்பா ஜெயித்துப்பார்க்கனும். 

நான் சொந்த ஊரை விட்டு இங்கே கிளம்பிவரும் போது எங்கிட்ட இரண்டு மாற்றுடைகளும், சில ரூபாய் நோட்டுகளும் மட்டும் தான் இருந்தது. மற்றபடி எனக்கு இங்கே யாரையும் தெரியாது. தங்க ஒரு இடமோ அடுத்த வேளைக்கு உணவோ எதுவும் நிரந்தரமில்லாமல் தான் திரிந்தேன். 

இப்பவும் எனக்காக ஒரு இடத்தை பிடிச்சு நிக்கறேன்னாலும் அது வெறும் முதல் படிநிலை தான் யசோதா. 

பரம்பரை அடையாளம், பாட்டன் சொத்து, அப்பா சம்பாதிச்சதுன்னு எதுவும் இல்லாமல்..மெட்ராஸ் மாதிரி ஒரு சிட்டில கையில் ஒன்னுமில்லாம, நம்பிக்கையை மட்டுமே மூலதனமா வச்சு, சொல்லிக்கிற மாதிரி எந்த பேக்ரவ்ண்டும் இல்லாதவனாய், யாருடைய ரெக்கமண்டேசனும் இல்லாமல், யாரையும் காலைபிடிச்சு தொங்காம, பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, தொழிலில் ஜெயித்து பொருளாதாரத்தில் மேலேறி சமூகத்தில் ஒரு இடத்தை பிடிக்கனும்ன்னா மெதுவா சிலபல வருடங்கள் ஆகும்ன்னு தெரியும். அதுவரை சமாளிச்சு விடாமல் போராடிதான் ஆகனும்.  

என்னோட போராட்டம் கடினமானது யசோதா. சரியான பாதைகூட இல்லை. இனிதான் போட்டுக்கனும். இப்போதைக்கு வெறும் குண்டும் குழியுமா போய்ட்டிருக்கு வண்டி. 

ஒரு மாதம் நல்லா தொழில் நடந்தா அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒரு டீல் கூட முடியாமல் முடக்கத்திலிருக்கும். பரமபத விளையாட்டு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறி மொத்தமா சறுக்கிட்டு இருக்கேன். 

போன மாதத்தில் ஒரு தடவை வெளியூரில் ஒரு டீல் முடிச்சுதர போயிருந்தேன். வேலைக்காகவில்லை. அந்த வேலையை முடிக்கனும்ன்னா  தொடர்ந்து நாலைந்து நாள் அங்கேயே தங்க வேண்டியிருந்தது. எங்கே தூங்கினேன் தெரியுமா! பஸ்டாண்டில்.  கையிருப்பை வச்சு சமாளிக்க உண்பதை கூட ஒன்றிரண்டு வேளைகளுக்கு மட்டும்ன்னு எல்லாம் பட்டினிக்கி பழக்கியிருந்தேன். 

 இந்த ஆஃபீஸ் வாடகை, பைக்கிற்கு தவணை, பெட்ரோல் செலவு, தங்கியிருக்க ரூமிற்கு வாடகையை கூட கடனில் சமாளித்து வருமானம் கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக்கொடுத்திட்டு இருக்கேன். 

இப்படி இந்த நிலைமையில இருக்க ஒருத்தன் நான் எனக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கிறதெல்லாம் இப்போதைக்கு  யோசிச்சுகூட பார்க்க முடியாது யசோதா.

உங்களைப்போல ஒரு பெண்ணை மனதால் நினைத்துப்பார்க்க கூட இன்னும் நான் தகுதியை வளர்த்துக்காதவன். பொக்கிஷம் மாதிரி பெண் நீங்கள். எங்கோ உங்க தகுதிக்கேற்ற இடத்தில் ஜம்முன்னு ராணியை போல் வாழவேண்டிய பெண்ணை வந்து என்னோடு குழிக்குள் விழச்சொல்கிற, கஷ்டபடுத்த நினைக்கிற கொடூரன் நானில்லை”.

வித்யாதரன் பேச்சை நிறுத்திவிட்டான். 

யசோதை மனதிற்குள் பேசிக்கொண்டாள். 

இவன் இடத்தில் இருந்து யோசித்து பார்த்தால் நூறு சதவீதம் சரியே. 

வித்யாதரன் இலட்சியக் கனவினை நிஜமாக்க துரத்திப்பிடித்துக்கொண்டுருப்பவன்அவனுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி நிலைத்து நிற்பது அவனுக்கு முக்கியம். இப்படிப்பட்ட ஒருவனை அவளுக்கு பிடித்திருக்கிறதென்ற காரணத்திற்காக இழுத்துப்  போட்டு குடும்ப வாழ்க்கையில் சிக்கவைப்பது நியாயமற்றது. 

அத்தோடு காதல் என்பது இருவருக்குள்ளும் ஒன்றுபோலான உணர்வில் ஆவது. அவளுடையது மட்டுமான விருப்பத்தை அவன் மீது திணிப்பது காதலாகாது, இறைஞ்சி கேட்டுப்பெறுவதும் இழுத்துப்பிடித்து வைத்துக்கொள்ள நினைப்பதுவும் சரியான உறவாகாது. 

யசோதை எழுந்துவிட்டாள். 

“நான் அன்னைக்கு சொன்னதைத்தான் திரும்பவும் சொல்றேன் வித்யாதரன். நிச்சயம் உங்க எண்ணம் ஈடேரி சமூகத்தில் பெரிய இடத்தை பிடிப்பீங்க நீங்க. 

நான் முழுமனசோட உங்கள வாழ்த்தறேன். ஆல் த பெஸ்ட் வித்யாதரன்.

எனக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதுப்படி நடக்கட்டும், கிளம்பறேன் குட்பை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here