நெடுநல் அத்தியாயம் -14

0
298

நான்காம் நாளே நிச்சயத்திற்கு பட்டெடுப்பு, அந்த விழாவிற்கான மண்டபம் பிடிப்பது இத்யாதி விசயங்களின் அடுத்தகட்ட நகர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு   மாப்பிள்ளையானவன் தாய் தந்தை சித்தப்பாவோடு யசோதையின் வீட்டிற்கு வந்தான். 

யசோதை ஓடோடிப்போய்  தாயோடு சேர்ந்து அடுக்களையில் நின்றாள். 

சேலை உடுத்தச்சொல்லி இந்த முறை வீடு  அவளை வற்புறுத்தவில்லை. 

வந்தவர்களை உபசரிக்க பலகாரங்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த தாய்க்கு உதவியபடி பக்கமே நின்றாள் யசோதை. 

அப்பா கூட அதிசயமாக அடுக்களைப்பக்கம் வந்தார்.

இவள் இரண்டுமூனு நாளாக காய்ச்சலில் உடம்பு சரியில்லாமல் கிடந்ததெல்லாம் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போனார். 

தாயையே நூல்பிடித்து அவளின் அருகேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டாள் யசோதை. 

உபசரிப்பிற்குப்பின் ஆண்கள் கூட்டமெல்லாம் ஒன்றாக பேசிக்கொண்டிருக்க,அம்மாவும் சின்ன அத்தையும் மாப்பிள்ளையின் அம்மாவும் இருந்த  இடத்தில் யசோதையும் இருந்தாள்.

 மாப்பிள்ளையானவன் இவளின் அண்ணனின் தோல்மேல் கைப்போட்டு பேசியபடி மாடிக்கு போவது கண்வட்டத்தில் பட்டது. 

யசோதைக்கு செய்து வாங்கிய புது நகைகளை சம்பந்தியாகப்போகிறவளுக்கு காட்டி கொண்டிருந்தாள் அம்மா. 

 டிசைன் மாடல்களை தேர்ந்தெடுத்தது மொத்தமும் சின்ன அத்தை தான். சின்ன அத்தைக்கு இந்த விசயங்கள் அத்துபடி. விரல் நுனியில் வைத்திருப்பாள். மார்கெட்டில் எது புதிதாக வந்தாலும் முதல் ஆளாக தெரிந்துவைத்துக்கொள்வாள்.

“நான் பெத்ததுங்க இரண்டும் பையனா போய்டுச்சு. இல்லைன்னா அதுங்களுக்கும்  இப்படி விதவிதமா மாட்டி அழகு பார்த்திருப்பேன்” குறைபட்டுக்கொண்டாள் சின்ன அத்தை.

“அதனால என்ன நான் பெற்றது இரண்டும் கூட பசங்கதான். பெற்றதுங்களுக்கு போட்டுத்தான் அழகு பார்க்கனும்ன்னு என்ன இருக்கு. நமக்கு பிடிச்சா நாமே போட்டு அழகு பார்த்துக்க வேண்டிதான்” என்றாள் மாப்பிள்ளையின் அம்மா  

“எங்கே! ஆசப்பட்டு நிறைய சதங்கை வைத்து மாங்காய், அரும்பு டிசைனில் கால் கொலுசு வாங்கி ஆசையாசையாய் கால்ல மாட்டினேன். என் வீட்டுக்கார் கூட நல்லர்க்குன்னு சொன்னார். ஆனா அக்கம்பக்கத்து ஆளுங்க பேசிதீர்த்திட்டாங்க இந்த வயசிலயும் மினுக்கிட்டு திரியுது பாருங்கிற பேச்சு கேக்கவேண்டியிருக்கு. 

சொந்த காச போட்டு நகைய வாங்கி போடக்கூட அக்கம்பக்கத்து ஆளுங்க பேச்சுக்கு பயந்துக்க வேண்டியிருக்கு” என்றாள் சின்ன அத்தை 

யசோதையின் அண்ணன் அங்கே வந்தான். யசோதையின் காதோரம் கிசுகிசுப்பான குரலில் “மாப்பிள்ளை உங்கிட்ட பேச  வெயிட் பண்றார். அனுப்பறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் போ”  என்றுவிட்டுப்போனான்.

யசோதை அதனை துளியும் கண்டுகொள்ளவில்லை. மாறாக  கழுத்தணி ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டி மூவருக்கும் அழகு காட்டிக்கொண்டிருந்தாள். 

சற்று நேரத்தில் மீண்டும் வந்தவன்

“காதில விழுகல, உன்னை போன்னு சொன்னேன்” என்றான் மிரட்டல் தொனியில். இரகசியமாகத்தான். 

யசோதை ஒரு இஞ்ச் கூட அந்த இடத்தை விட்டு நகராததை பார்த்து ஆத்திரத்துடன் மற்ற பெண்கள் அறியாதவண்ணம் யசோதையின் கையில் வலிக்கிற மாதிரி நறுக்கென்று கிள்ளிவிட்டுப்போனான். 

இன்றைக்கு நேற்றா! யசோதைக்கு  நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவளை அடித்து கிள்ளி தலையில் கொட்டியென துன்புறுத்தி வலிக்கச்செய்கிற வக்கிரம் கொண்டவன்  அண்ணன். 

சின்னவயதிலிருந்தே அம்மாவை அப்பா அடிப்பதை, அம்மா அழுது கதறுவதை பார்த்து பார்த்து வளர்ந்த பிள்ளைகள். 

அதை பார்த்து யசோதை பயந்து நடுக்கத்தை வளர்த்துக்கொண்டாள் என்றால்அண்ணனோ பெண்களை அடித்து அடித்தே  வழிக்கு கொண்டுவரலாம்.தப்பில்லை.  சொல் பேச்சு கேட்டு அடங்கியிருக்க வைக்கலாம் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொண்டான். 

அப்பா அடித்தால் அம்மா வலி தாங்காமல் அழுவாள். ஆனால் யசோதையோ அண்ணன்காரன் எவ்வளவு அடித்தாலும்  கண்ணீர் விட்டு அழுததோ, வலி வேதனையின் துடிப்பை வெளிப்படுத்தியதோ இல்லை. 

அவளுக்கும் அடிபட்டால் எல்லோரையும் போல வலிக்கும் தான். யசோதை வெளி காட்டும் ஒரே உணர்ச்சி பய நடுக்கம் தான். அவளுக்குதான் கண்ணீர் என்பதும் அழுகையென்பதும் தெரியாதே! 

அவள் அழாமல் சகிப்பது அவனுடைய ஆணவத்திற்கு  விழும் அடியாக  தெரியும்போல அவனுக்கு.  இன்னமும் அதிக ஆத்திரம்தான் கொள்வான். 

இவளை என்றாவது ஒருநாள் அழவைத்தே தீர கருவிக்கொண்டு திரிந்தான். 

மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பிப்போனதும் தீராத ஆத்திரத்துடன் அவளிடம் வந்தான் அண்ணன். 

“உன் மனசில என்னடி நினைச்சிட்டு இருக்கே, பெரிய மயிரா நீ! மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டு வந்த எனக்கென்ன மரியாதை. அவர் முன்னாடி அவமான பட்டு நிக்க வச்சிருக்க” என்றபடி அவளின் தலைமுடியை பிடித்து இணுங்கி, முதுகில் அடிபோட  கையை ஓங்கினான்.  

அம்மா குறுக்கே வந்து தடுத்தாள். 

“என்னடா உனக்கு எத்தனைதரம் சொன்னாலும் புரியாது! போடா இங்கிருந்து..”

அவன் ஆத்திரத்துடன் அம்மாவிடம் கத்தினான் 

“ஆமா நல்லா செல்லம் கொடுத்து இவளை இன்னும் குட்டிசுவர் ஆக்குங்க. உங்க பொண்ணுக்கு ஒரு காலத்தில பைத்தியம் பிடிச்சிருந்ததுன்னு தெரிஞ்சா எவன் கட்ட வருவான். எதோ புண்ணியத்தில் நல்ல இடமா அமைஞ்சா அதை இவளே கெடுத்துக்குவா போல” அம்மாவையும் தாண்டிக்கொண்டு இவளிடம் பாய்ந்தான். 

அம்மா அவனை நெட்டித்தள்ளினாள். 

“உன் வேலையை பார்த்துக்கிட்டு போய்டு, இனி ஒருதரம் என் புள்ள மேல கையோங்கினேன்னா கையை ஒடிச்சு அடுப்பில வச்சு கருக்கிடுவேன்”

அம்மாவிடம் இந்த உக்கிரத்தை யசோதை இதற்குமுன் பார்த்ததே இல்லை. அண்ணனுமே தான் என்பது  அவன் திகைத்து நிற்பதில் தெரிந்தது. பின் சமாளித்துக்கொண்டான்

“இவளால் கல்யாணம் நடப்பதில் எதும் பிரச்சனை ஆச்சு. இவள நானே கொன்னு பொதைச்சிடுவேன் சொல்லிட்டேன்” என்றபடி அங்கிருந்து  விலகி போனான். 

அம்மா மட்டும் இல்லையென்றால் யசோதை இந்த வீட்டில் என்றோ செத்து புதைந்துதான் போயிருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here