விளக்குகள் அணைந்து வீடடங்கியாயிற்று. ஆனால் இன்னமும் அண்ணனின் போன் பேச்சுக்குரல் நின்றபாடில்லை.
அவன் பேசி முடித்து உறங்கக் காத்திருந்தால் விடிந்துவிடும்.
ஆனால் யசோதைக்கு செய்யவேண்டியவைகளை சடுதியில் செய்து முடித்துவைத்து, நன்கு உறங்கி எழுந்தால் தான் நாளை சோற்வுற்று சுணங்காமல் சுறுசுறுப்பாக மூளையும் உடலும் இயங்கும்.
வீட்டைவிட்டு ஓடிப்போவதொன்றும் சுலபமான காரியமில்லை. அதுவும் தன்னைப்போலான உலகம் தெரியாத பறவைக்கு.
மாலையே அப்பா வந்ததும் சின்ன அத்தை யசோதையை அங்காடித்தெருவிற்கு அழைத்துப்போக அனுமதி வாங்கிவிட்டாள்.
யசோதைக்கு உள்ளாடைகளும் வாங்கவேண்டுமென்று கேட்கப்பட்டதும் அப்பா சரியென்று விட்டார். ஆனால் எப்போதும் விதிக்கிற நிபந்தனைகளோடு.
எதைவாங்குவதானாலும் நல்ல பெரிய கடைகளில் வாங்கிவிட்டு வந்துவிட வேண்டும்.
ரோட்டோரக்கடைகளில் கம்மல் பொட்டு என வாங்கிக்கொண்டு நிற்ககூடாது.
பராக்கு பார்க்காத கவனம் இருக்கணும்.
வெயிலில் நெடுநேரம் சுற்றி அலையக்கூடாது.
ரோட்டோர சின்னக்கடைகளில் எதையும் வாங்கி உண்பதோ பருகுவதோ கூடாது.
சின்ன அத்தையின் கூடவேதான் இருக்கணும்.
சின்ன அத்தையின் கையைபிடித்து தான் ரோட் க்ராஸ் செய்ய வேண்டும், கூட்டம் மிகுந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது இத்யாதிகள்.
அறைக்கதவை தாளிட்டு,அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தால் அண்ணன் வந்து கேக்கவும் கூடுமென்பதால் விளக்கை அணைத்துவிட்டு மெலுகுவர்த்தியை ஏற்றிவைத்துக்கொண்டு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பைக்குள் அடைக்கலானாள்.
அவள் தையல் பயிற்சிக்கு வழக்கமாக எடுத்துச்செல்லும் பைதான். அளவில் சற்று பெரிதும் கூட. இருந்தும் பையில் துணிகளின் கனம் கூடித் தெரிந்தால் சின்ன அத்தை என்ன ஏதென்று கேட்கவும் கூடும் என்பதால் மாற்று உடுப்பாக இரண்டே செட்களை எடுத்து வைத்தாள். அது போக கையிலிருந்த பணமும், அவளின் சான்றிதழ்களும்.
யசோதை பணத்தை சேமிக்கும் பாங்கு அலாதியானது. அவள் சேமிக்கிற பணத்தை உண்டியலிலோ வேறு எதிலுமோ போட்டு வைக்கமாட்டாள்.
அவளின் கல்லூரி பாட புத்தகங்களில் பக்கத்துக்கு ஒரு பணத்தாள் என்று பக்கத்திற்கு பக்கம் அடுக்கி வைத்திருப்பாள். எத்தனை பக்கங்களுக்கு காசு சேர்ந்திருக்கிறதென பக்கக்கணக்கு பார்ப்பது அவளுக்கு பிடிக்கும்.
போலவே அநாவசிய செலவு செய்கிற பழக்கமும் இல்லையென்பதால் வீட்டில் கிடைக்கும் பாக்கெட் மணி, விருந்தாளிகள், உறவுகளிடமிருந்து கிடைக்கிற பண்டிகைப்பணம் என கணிசமானதொரு தொகை அவளிடம் சேர்ந்திருந்தது.
கிட்டதட்ட எட்டாயிறத்து சொச்ச ரூபாய்கள். பணத்தில் பாதியை படிப்பு சான்றிதழ்கள் கொண்ட ஃபைலுக்குள் வைத்து ஃபைலை சுடிதார் பேண்டிற்குள் வைத்துப்பொதித்து சுற்றிலும் பின்னூசிகளை குத்தி பத்திரப்படுத்தி எடுத்து பைக்குள் வைத்து முடித்தாள்.
மீதி பாதி பணத்தை இரண்டாகப்பிரித்து ஒருபாகத்தை மட்டும் செலவுக்கு எடுக்கக்கூடிய வகையில் பர்ஸில் வைத்து. அடுத்த பாகத்தை வேறொரு இடமாக பத்திரப்படுத்தினாள்.
இவ்வளவையும் வித்யாதரன் செய்வதுபோல் முன்பேயோசித்து திட்டமிட்டு முன்பே எழுதிவைத்திருந்தது ஒவ்வொன்றாக செய்துமுடித்ததும் டிக் அடித்துக்கொண்டே வந்தாள்.
எல்லாமும் முடிந்தாயிற்று. பின் வீட்டிற்கு எழுத வேண்டிய கடிதத்தையும் எழுதி எடுத்துக்கொண்டபின் நோட்டுபுத்தகத்தையும் பேனாவையும் கூட பையில் திணித்து மூடியதும் அலமாரியின் அடித்தட்டில் வைத்துவிட்டு வந்து படுத்து கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.
சாமி இந்த வீட்டில் இது கடைசி இரவாக இருக்கட்டும்.
எந்த காரணத்தினாலும் முன் வைத்த காலை பின்னெடுக்கக்கூடாது.
வீட்டில் பிடிபட்டுவிடவும் கூடாது. இவளுடைய இந்த கல்யாணம் நின்று போவதால் அண்ணனுக்கு பேசிக்கொண்டிருக்கும் திருமண பேச்சும் நின்றுபோகும். அண்ணன் சொன்னதுபோலவே அவளை கொன்றுபோட்டுவிடுவான்.
விடிந்தபிறகு யசோதை அம்மாவின் அருகாமையிலேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.
அப்பா கிளம்புவதற்கு முன் சின்ன அத்தையை அழைத்து கைநிறைய பணத்தை தந்து
“அடுத்தடுத்த விஷேசத்திற்கு தேவைபடுவதையெல்லாம் புள்ளைக்கு இப்போதே வாங்கிவந்துவிடு என்றார். சும்மா கடைகண்ணிக்கு கூட்டிட்டு அலைவது சரியில்லை” என்றுவிட்டுப்போனார்.
அம்மா ஒரு பாட்டிலில் நீர்மோறும், மற்றொன்றில் பணங்கற்கண்டுகளிட்ட எழுமிச்சை சாறும் அடைத்துத்தந்தாள்.
பதினோரு மணி வாக்கில் ஆட்டோ வாசலில் வந்து நிற்க யசோதை
சின்ன அத்தையோடு கிளம்பினாள்.
அம்மா எப்போதும் போல் வாசல் வரை வந்து வழியனுப்பிய போதும் இன்று அது புதிதாய் மனதிற்கு இதமாய் இருந்தது.
ஆட்டோவிலிருந்து அம்மாவிற்கு கையசைத்த போது அவள் திருப்பி கையசைத்ததும் தான்.
ஆட்டோவில் செல்லும் போது சின்ன அத்தை வளவளத்து பேசிக்கொண்டேவந்த போதினும் யசோதையின் முழுகவனமும் சாலையில் தான் இருந்தது. எங்கே எப்படி எந்தெந்த சாலைக்கு எதை அடையாளமாக எடுத்துக்கொள்வதென்பதிலிருந்தது
“உள்ளாடைகளை வாங்கிற வேலையை முடித்துவிட்டு அப்புறம் ஒவ்வொன்றாக மற்றதை பார்ப்போம் சின்னத்த.”
மற்றவைகளுக்கான கடைகளும் நடைதூரத்தில் தான் என்பதால் அங்கேயே ஆட்டோவை கட் செய்து அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.
ப்ராஸியர் செக்ஷனுக்குள் நுழைந்ததும் என்னென்ன புதுமையான பேட்டர்ன்களில் அறிமுகமாகியிருக்கிறது என்று பார்பதில் ஆர்வமாய் மூழ்கிப்போனாள் சின்ன அத்தை.
ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டிக்கொண்டிருந்த கடைப்பெண்ணிடம் சும்மா பேச்சுக்கொடுத்துக்கொண்டு நின்றாள் யசோதை.
“இந்தா இதை இதையெல்லாம் ட்ரை பண்ணிப்பார் யசோ என்று சிலதை அவளுக்கு காட்டிவிட்டு தானும் ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் பக்கம் போனாள் சின்ன அத்தை.
இந்த தருணத்திற்காகத்தானே யசோதை காத்திருப்பது.
சின்ன அத்தை புதியதை போட்டுப்பார்க்க ஆகும் நிமிட நேரத்தை கணக்கிட்டு, பட்டென்று திறந்துகொண்டு வெளிவந்துவிடமுடியாத படி அவளின் மேலாடையை தளர்த்த ஆகும் நிமிடம் வரை பக்கத்து ட்ரையல் ரூமில் பொறுமைகாத்தாள் யசோதை.
பின் வெளியே வந்து எடுத்துக்கொடுத்த கடைபெண்ணிடம் முறுவல் செய்து “இதையெல்லாம் செலக்ட் பண்ணிருக்கேன்”
ட்ரையல் ரூம் பக்கம் கையை காட்டி “அவங்க வெளியே வந்ததும் இந்த லிஸ்ட கொடுத்திடுங்க, நான் பக்கத்து கடையில் இருப்பேன்னு சொல்லிடுங்க” மறுபடியும் ஒரு முறுவலோடு பதட்டமே இல்லாத மெது நடையில் வாசலுக்கு வந்தவள் அதன் பின் நிற்கவே இல்லை.
துப்பாட்டவை தலையை சுற்றி நன்றாக முக்காடிட்டு மறைத்தபடியே விடுவிடுவென நடக்கத்தொடங்கினாள்.
ஆட்டோவில் வரும் போது எங்கே ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறதென பார்த்து வைத்த திசை நோக்கி…