சென்ட்ரல் இரயில்வே ஸ்டேசனென்று கேட்டு ஏறியமர்ந்து அந்த தி நகர் ஏரியாவைத் தாண்டி ஆட்டோ பயணிக்கத்தொடங்கிய பிற்பாடுதான் படபடப்பு அடங்கி நிதானமாக முச்சுவிடவே முடிந்தது யசோதைக்கு.
ஆனால் இரயில் நிலையம் போகிறவரை தான் யசோதையால் திட்டமிட முடிந்திருந்தது.
எந்த ஊருக்கு போவது என்ன ஏது என்பதெதுவுமே புரிபடவில்லை. அவள் தான் எந்த ஊருக்கும் இதற்குமுந்தி போனதே இல்லையே!
அடுத்தது யாரையெல்லாம் தெரியும் என்று யோசித்தாலும் உள்ளூரிலேயே நாலைந்து பெயர்களை தாண்டாது. இதில் வெளியூர்களில் எங்கே!!
இங்கிருந்து கண்காணாமல் போய்விடவேண்டும். வீட்டினர் கண்ணுக்கு மாட்டாமல் அவ்வளவு தான் இப்போதைக்கு. மற்றது நடப்பதை கொண்டு படித்துக்கொள்ள வேண்டியதுதான்.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
எந்த திக்கையும் பர்த்ததே இல்லை எனும் போது எல்லா திக்கும் ஒன்றும் தான். எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்நேரம் சின்ன அத்தை அவள் தந்துவிட்டு வந்த கடிதத்தை படித்திருப்பாள். அதிர்ச்சியுற்றிருப்பாள்.
பாவம் அவள். பொய் சொல்லி ஏமாற்றி என்னமாதிரியானதொரு இக்கட்டில் அவளை மாட்டி வைத்துவிட்டு வந்திருக்கிறோம். மனம் இடித்துரைத்தது.
“சாரி சின்னத்த என்னை மன்னிச்சிடு. உன்னை சங்கடத்தில் மாட்டிவிடனும்ன்னு நான் நினைக்கல. ஆனா எனக்கு வேற வழியே தெரியல. இனியும் என்னால அந்த வீட்ல இருக்க முடியாது. வெளியே வர இப்படி செஞ்சிட்டேன் சின்னத்த மன்னிச்சிடு. இந்த கடிதத்தை அப்பாக்கிட்ட கொடு, உன்மேல தப்பே இல்ல. உனக்கு நான் இப்படி செய்வேன்னு தெரியாது தானே.
அப்பா எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் துளிகூட இல்லை. ஏன் விருப்பமில்லைனா நீங்க அம்மாவ அடிச்சு துன்புறுத்திறத பார்த்து பார்த்து பயமும் வெறுப்புமா இருக்கு கல்யாண வாழ்க்கையை நினைச்சா. அம்மா மாதிரி எனக்கு ஆக வேண்டாம். அம்மா பாவம். 32 வருசமா அவ்வளவு அடியையும் வாங்கிட்டு உங்களையும் வீட்டையும் தாங்கிட்டு இருக்காங்க. இனியாவதும் அம்மாவ புரிஞ்சுகிட்டு அன்பா இருங்க அப்பா. அதுதான் நான் வேண்டுவது. நான் என் வழியை நானே பார்த்துக்க விரும்பறேன். என்னை இப்படியே விட்ருங்க யாரும் தயவு செஞ்சு என்னை தேட வேண்டாம். ” என்று கடிதத்தை முடித்திருந்தாள் யசோதை.
கடிதம் வீட்டில் காட்டப்படும்போது மேலே என்ன நடக்குமோ!
ஆனால் என்ன நடந்தாலும் அது அவள் கையிலில்லாதபோது மேலே யோசிப்பது வீண்.
அடுத்ததாக செய்யவேண்டியதில் கவனம் வைப்போமென அழுத்தமாக நினைத்தாள்.
ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து இறங்கி சுற்றிலும் பார்த்தால் யசோதைக்கு பெரும் திணறலேற்பட்டது.
மொத்த ஜனத்திரளும் அங்கேதான் இருப்பதுபோல் இருந்தது. அவ்வளவு கூட்டம். இத்தனைபேருமா ஒரே நேரத்தில் புறப்பாடில் இருப்பார்கள்!.
ஆனால் இந்த எல்லோருக்கும் எங்கே, எதற்காக போகிறோமென்ற இலக்கு தெரிந்திருக்கும்.
இவர்களுக்கு மத்தியில் யசோதை ஒரு இலக்கிலி.
எவ்வளவு கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் ஏலாமல் ஒரு பயச்சுருள் மேலெழும்பிக்கொண்டிருந்தது.
ஆதரவாக நீட்டி பற்றிப்பிடிக்க ஒரு கை வேண்டும்போல் இருந்தது. யசோதை தன் ஒருகையால் மற்றொரு கையை அழுந்தப்பற்றிக்கொண்டாள்.
இல்லை கூடாது பயப்படக்கூடாது. பயந்தால் செய்வன அறியாமல் போய்விடும்.
இதயத்துடிப்பின் வேகம் குறையும் மட்டும் நிலையத்தின் முகப்புப் படிகளையொட்டி சுவரோரம் சற்றே சாய்ந்து நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
ஓரளவு திடப்பட்டதும் அம்மா கொடுத்தனுப்பியிருந்த பானத்தில் இரண்டு மிடரு விழுங்கியதும் சுற்றியிருப்பதெல்லாம் ஓரளவு தெளிவாய் பிடிபட்டது.
கண்ணுக்கு தென்பட்ட இரயில்வே காவலரிடம் போய் நின்று டிக்கெட் எங்கே எடுப்பதென விசாரித்தாள்.
பிளாட்பார்ம் டிக்கெட்டா பயண டிக்கெட்டா என விசாரித்து வழியைக்காட்டினார் காவலர்.
ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு குரல், நிறைய கடைகள், போவதும் வருவதுமாக திரளாய் மக்கள் யார்மீதும் பட்டு விடாத கவனத்தோடு உள்ளே நடந்தாள். கைகால்கள் நடுங்கத்தொடங்கியிருந்தது.
பயணப் பெட்டிகளோடும் பைகளோடும் மக்கள் ஆங்காங்கே அப்படியே அந்த அழுக்குத் தரையில் கிடந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
யசோதைக்கு திக்கென்றது.
அவள் இது மாதிரி காட்சிகளை இதற்குமுன் கண்டதே இல்லாததனால் வந்த பெருந்திகைப்பு.
உள்ளங்கைகளிளும் பின்னங்கழுத்திலும் முன் நெற்றியிலும் வியர்வை பூத்து லேசான மூச்சுத் திணறல் உண்டாகிக்கொண்டிருந்தது அவளுக்கு.
கண்களுக்கு சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் இரண்டிரண்டாய் தெரியத்தொடங்கும்போதே மயங்கிவிடப்போகிறோம் என அவள் மூளைக்குள் மணியடித்தது.
சட்டென சுதாரித்து தானும் அந்த தரையிலேயே அமர்ந்துவிட்டாள். நடுங்கிய கைகளை நடுங்காதேயென்று அதட்டினாள்.
சொல்பேச்சு கேக்காத உடலை கட்டுறுத்தி ஒரு நிலைக்கு கொண்டுவரக்கூடிய விழிப்போடு அவளின் மூளை செயலியாய் இருப்பது அவளுக்கே ஆச்சர்யம்.
எங்கிருந்து வந்தது இந்த மனவுறுதி!!.
மீண்டும் இரண்டு மிடருகள் விழுங்கிய அந்த பழச்சாற்றின் இனிப்பு மேலும் நிதானப்படுத்தியது.
எக்காரணத்தைக்கொண்டும் மயங்கிவிடக்கூடாது. அப்படி ஆனால் பெரும் பலமாய் நினைத்து அவள் கையில் கொண்டுவந்திருக்கும் சான்றிதழ்களையும் செலவுக்குரிய பணத்தையும் இந்த கூட்டத்தில் அவள் தொலைக்க நேரிடும்.
தன்னிலை உணர்வோடும் விழிப்போடும் இருப்பதும் அவசியம் என்று தனக்குள் பலமுறை சொல்லி உருப்போட்டுக்கொண்டாள்.
பின் மெல்ல கைகளையூன்றி எழுந்துகொண்டபோது பல நூறு ஆயிரம் மனிதர்கள் நடந்திருந்த அந்த அழுக்குத்தரையில் அமர்ந்திருந்தோம், கையூன்றியிருக்கிறோம் என்பது அசூசை உணர்வை தந்தபோதும் இனி இதுபோல் எத்தனையெத்தனையோ அருவருக்கத்தக்க சுற்றுச்சுழலை சமாளிக்கவேண்டிவரலாம்.
இன்னும் சொல்லப்போனால் இவர்களைப்போல இந்த அழுக்கில் கிடந்து உறங்கவேண்டிய நிலை அவளுக்குமே வரக்கூடும்.
வீட்டில் பாதுகாப்பாக சொகுசாக வைத்திருந்த பிணைப்புச் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்தாயிற்று.
இனி இந்த உலகின் பெரு வெளி அவளுக்கு பல அசிங்கங்களையும் அவலங்களையும் தான் அதிகம் காட்டும். அவைகளையும் அவள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
யசோதை அவளுக்கே தெரியாமல் அவளுக்குள்ளிருந்து எழும் அச்சக்குமிழிகள் அத்தனையையும் ஒவ்வொன்றாக உடைத்துக்கொண்டிருந்தாள்.
ஒலிப்பெருக்கி அறிவிப்புகளை கூர்ந்து கவனித்துக்கேட்டாள்.
எந்த இரயில் எந்த ப்ளாட்பார்மிலிருந்து எந்த ஊரை நோக்கி கிளம்புகிறதென்று ஒளிர்ந்து கொண்டிருந்த மின் அறிவிக்கை திரைக்கு அருகே சென்று நின்று பார்த்தாள்.
ஓரளவிற்கு பிடிபட்டது.
பைக்குள்ளிருந்து நோட்டுபுத்தகத்தை எடுத்துஇரயிலின் பெயரையும் அது போய் சேரும் ஊரின் பெயர், கிளம்பும் நேரம் இத்யாதி தகவல்களை குறித்துக்கொண்டாள்.
எங்காவது அமர இடம் கிடைத்தால் அமர்ந்து நிதானமாக யோசித்து தேர்ந்தெடுத்த பின் டிக்கெட்டை வாங்க போகலாமென்று நினைத்தபடியே நோட்டை திரும்ப பைக்குள் வைத்தவளின் இடது கை மூட்டின் மேல் யாரோ தடவியதும் தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு திரும்பினாள்.
ஒருவன்.
சற்றுமுன் தொலைந்த மானின் மருண்ட விழிகளோடு அவள் தரையில் அமர்ந்துகிடந்த போது பார்த்த பல கண்களில் அந்த ஒருவனுடைய கண்களும் இருந்தது.
ரப்பர்பேண்ட் இட்ட ஃபங்க் தலைமுடியும் தாடியும் மீசையும் போதைச் சிவப்பில் கண்களும் பான் பராக் மெல்லுகிற வாயும்.
யசோதைக்கு குமட்டத்தொடங்கியது.
பருகியிருந்த பழச்சாறு மேலெழும்பி தொண்டைக்கு வந்துவிட வாயைப்பொத்திக்கொண்டு ஓடினாள்.
நல்லவேளையாக அந்த ஓட்டத்தின் உடல் அசைவு அவளின் குமட்டல் உணர்வை மட்டுப்படுத்தியது.
ஆனால் அவளின் மூன்றாவது கண்ணான எச்சரிக்கை உணர்வு அவன் இன்னும் அவளின் பின்னே வந்துகொண்டிருக்கிறான் என்றது.
திரும்பிப்பார்த்தால் உண்மை.
யசோதை ப்ளாட்ஃபார்ம்ங்களுக்கு ஊடே புதுந்து ஓடத்தொடங்கினாள். மூச்சிரைத்தது.
இவ்வளவு கூட்டத்துக்கு நடுவே அவனால் என்ன செய்து விட முடியுமென்று அஞ்சி ஓடவேண்டும்!!. தேவையே இல்லை.
பின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு நின்றுபின்னால் வந்தவனை நன்றாகவே முறைத்துப்பார்த்தாள்.
அவன் நின்றுவிட்டான். பின் என்ன நினைத்தானோ காணாமல் போய்விட்டான்.
பயந்து ஓடுகிறவரை துரத்தி,நின்று கல்விட்டு எறியத்துணிந்தால் பின்வாங்குகிற நாய்புத்தி
எதையெல்லாம் அவள் தாங்கமாட்டளென்று அவளின் வீடு கட்டுக்குள் வைத்து பாத்திரப்படுத்தி பாதுகாப்பு செய்ததோ அதையெல்லாம் அவள் தாங்கிப் பிடிக்கிற அனுபவங்களை அந்த சில மணி நேரங்களில் கண்டுவிட்டிருந்தாள்.
அவள் நின்றிருந்த இடத்திலிருந்த ப்ளாட்பார்மில் இரயில் ஒன்று வந்து நின்றது. இரயிலின் அருகே சென்று பார்க்கலாமென அவள் நகர நினைத்தபோது பின்னிலிருந்து குரல். ஆண்குரல். அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்தது.
யசோதைக்கு இதயமே இப்போது தொண்டைகுழிக்கு வந்துவிடும்போல் இருந்தது. வீட்டிற்கு தெரிந்த..அண்ணனுக்கு தெரிந்த யாரோவாக இருந்தால்!.
யசோதை திரும்பிக்கூட பார்க்கவில்லை. மீண்டும் ஓடத்தொடங்கினாள்.
அவனுமே அவள் பின்னால் ஓடிவந்தவன்
“யசோதா நில் ஓடவேண்டாம் யசோதா நான் வித்யாதரன்.”
மொத்த உயிரையும் கண்களில் நிரப்பி திரும்பினாள் அவள்.
அவளே இதுவரை அறிந்திருக்காத நீர்பசை கூட அவள் கண்களை நிறைந்தது.