நெடுநல் அத்தியாயம் -18

0
300

வித்யாதரன் யசோதையை பார்த்த அந்த முதல் நாள். அந்த முதல் பார்வை

வாழ்க்கையிலேயே  முதன் முறை அவனின் கண்கள் ஒரு பெண்ணை காண்கிறதோ எனும் அளவு மனம் 

திக்கித்ததை அவன் வாழ்நாளில் என்றாவது மறந்துவிடமுடியுமா! 

பெண்களோடு பேசிப்பழகுவது தெரியாதே ஒழிய அவன் அதற்குமுன் பெண்களையே கண்டவனில்லை என்றில்லையே. ஆனால் லைப்ரரி அறையில் அரவம் கேட்டு புத்தகம் எடுக்க யாரோ வந்திருக்கிறார்களென கதவருகே வந்தவன் பார்த்தது..

அந்த புத்தகங்களுக்கு நடுவே அன்றில் மலர்ந்த மலர்களின் குவியல் போன்று நின்ற அவளை. 

பூர்வ ஜென்ம பந்தமென்ற கதைகட்டுகளிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் யசோதையோடு பேசிப்பழகுவது எதோ யுக யுகமாய் அவனுக்கு பழக்கம் என்பதைப்போல் தான் இருந்தது. இந்த  இருபத்து ஐந்து வருட வாழ்க்கையில் அவனுக்கு எந்த பெண்ணிடமும் இவ்வளவு தாக்கம் உண்டானதில்லை. 

அவளின் சிரிப்பு முறைப்பு எல்லாமே

அவனை அவ்வளவு பாதித்தது.  

கேசவன் சார் அவன் பொறுப்பில் கடையை விட்டுச்சென்றிருந்த அந்த பதினைந்து நாட்களுக்குள் வித்யாதரனுக்கு ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக விளங்கிவிட்டது.

அவன் மனம் அவனிடம் இல்லை. 

அவள் ஒவ்வொருமுறை புத்தகம் எடுக்கவரும் போதும் கொண்டுவந்து, திரும்ப கூடவே கொண்டு போய்விடுகிறாள் வித்யாதரனின் மனதை. 

கேசவன் சார் திரும்ப வந்துவிட்டபின்  அவளோடு நின்று பேசக்கூடிய வாய்ப்பு இல்லாமலாகிவிட்ட போதும் 

அவன் அவளை காணாத நாட்களென்பது வெறும் விரல் விட்டு எண்ணக்கூடியவைகளே. 

எங்காவது நின்று எப்படியாவது அவளை கண்களிலாவது கண்டுவிடுவது அவனின் அந்த நாளை முழுமையடையச்செய்யும். 

இல்லாதுபோனால் அதே நினைப்பில் முரண்டிக்கொண்டிருக்கும். 

மொத்தத்தில் வித்யாதரனின் கண்களுக்கு யசோதையை காண்பதென்பது தீரா போதை. 

அவனுக்கு வேலைகள் ஏதுமற்ற, வெளியூர் எதற்கும் செல்லவேண்டியிருக்காத நாட்களில், மதியப்பொழுதுகளில் யசோதையின் வீடிருக்கும் வீதிக்கு எதிர்புற வீதியில் புதிதாய் எழும்பிக்கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்றிலிருந்து வித்யாதரன் யசோதையை பார்த்துக்கொண்டிருப்பான். 

அவள் அந்த மதியங்களில் ஜன்னலின் அருகே அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டோ எழுதிக்கொண்டோ இருப்பாள். 

நேரம் காலம் மறந்து போய்ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே மிளிரும்  அவளின் மலர் முகத்தை பார்த்துக்கொண்டே நிற்பான் அவன்.

அதிர்ஷ்டவசமாக அந்த புதுகட்டிடத்தின் கட்டுமானப்பணியிலிருந்த காண்ட்ராக்டருடன்  நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட, வித்யாதரன் அவனின் தொழில் பேச்சுச்திறமையால் அவருக்கு மெட்டீரியல் சப்ளை ஏஜெண்ட்டாகும் வாய்ப்பும் கிடைத்திருந்ததால் அந்த கட்டுமானத்திலிருந்த கட்டிடத்துக்கு அவன் எந்நேரம் வந்து நின்றாலும் யாரும் கேள்வி கேட்பாரில்லை. 

இல்லாமல் போனால் தினம் அவனால் யசோதையை பார்க்க முடிவதேது!. 

எட்டா தூரத்திலிருந்தே பார்த்தபடி மாதங்கள் போய்க்கொண்டிருக்க.. ஓரிரு முறை 

கேசவன் சாரின் லைப்ரரிக்குள் ஓரிரு நிமிடங்களே என்றாலும் அருகில் அவள் முகம் காணக்கிடைத்தது. 

அந்த நேரத்தில் தொழிலில் ஒரு சின்ன சறுக்கல். பெருத்த பொருளாதார அடி. 

அதை ஈடுகட்ட அலைச்சல் என அவனின் நாட்களின் மேல் பெருஞ்சுமை ஏறிப்போயிருந்த மாதம் அது. 

அப்படியொரு நாளில் 

அவனின் முழு நாளும் ஓய்வற்ற உலைச்சலோடு சுற்றியலைந்து விட்டு , மிகுந்து சோற்வுற்று அலுவலகம் திரும்பியவன் கண்டது. 

யசோதையின் முத்து முத்தான கையெழுத்தில் அவனுக்காக எழுதி வைத்திருந்த இருவரி துண்டுக்காகிதம். அவள் அவனைப்பார்க்க வந்திருக்கிறாள். 

அதைக்கண்டதும் வித்யாதரன் எப்படி உணர்ந்தான் என்பதை வெறும் வார்த்தைகளிட்டு சொல்லிவிடவே முடியாது. 

மொத்தத்தில் சோர்வு வருத்தம் சுமை இன்னும் என்னனென்ன அவனைப்போட்டு அமிழ்த்திக்கொண்டிருந்ததோ அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போக.. வானத்தில் மிதப்பது போல் இருந்தது அவனுக்கு. 

அந்த இருவரி துண்டுக்காகிதத்தை அந்த இரவு முடிவதற்குள் எத்தனை ஆயிரம் தடவை கையிலெடுத்து படித்துபார்த்திருப்பானென்று அவனுக்கே தெரியாது. 

அப்படியே மேஜைக்குள் பத்திரப்படுத்தியும் வைத்தான். 

காகித குறிப்பில் யசோதை சொல்லியிருந்த நேரம் வரும் வரை. யசோதை அவன் முன் வந்து அமரும் அந்த நொடிவரை அவனால் ஒரு நிலைப்பில் இருக்க முடியவில்லை. 

காதல் படுத்துகிற பாடிருக்கே..

அத்தோடு அவனைப்போலவே அவளும் அவனைத்தான் உயிருக்குள் வைத்து நினைத்திருக்கிறாள். விரும்புகிறாள் என்பதும் தெரிய வரும்போது அவனுக்கு எப்படி இருந்திருக்கவேண்டும். 

ஆனால் அவனின் நிலை!! 

பொருளாதரப்படியில் அவன் முதல் படியைக்கூட இன்னும் தொட்டிருவில்லை.  யசோதையின் பிறந்த வளர்ந்த வீட்டுச் சூழலோ நேர்மாறானது. 

யசோதையை அதே அளவு வசதி வாய்ப்புகளோடு வாழவைக்க அவனுக்கு மிகுந்த ஆசையும், முடியுமென்ற தன்னம்பிக்கையும், 

விடாமுயற்சியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை செயல்படுத்தி பொருளாதாரத்தை சம்பாதித்துக்கொள்ள அவனுக்கு நேரம் பிடிக்கும். வருடங்கள் ஆகும். 

ஆனால் யசோதைக்கோ காத்திருக்க நேரம் வாய்த்திருக்கவில்லை. மணம் முடிக்க வீட்டில் பார்த்தும் விட்டிருந்தனர்.  இந்த நிலையில் அவன் என்ன முடிவெடுப்பான்!. 

அவன் அவ்வளவு சுயநலவாதியல்ல. 

காதல் என்கிற பெயரில் மனசாட்சியே இல்லாமல் அவளை கொண்டுவந்து அவனோடு குழியில் விழச்செய்கிற, வறுமைக்குள் வாழவைத்து துன்பத்தை கொடுக்கிற ஒன்றை செய்ய  அவனால் நிச்சயம் முடியாது. 

மனதை கல்லாக சமைத்து கடினப்படுத்திக்கொண்டே வித்யாதரன் யசோதையிடம் பேசி அனுப்பியது. 

அவள் அங்கிருந்து வெளியேறியபின் தலையைப்பிடித்துக்கொண்டு ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தவனிடம் 

கேசவப்பெருமாள் வந்தார். 

” தம்பி நீயும் இப்படி உடைஞ்சுபோய் உட்கார்ந்திருக்க, அந்த பொண்ணு முகத்தையும் கண்கொண்டு பார்க்க முடியல பாவம். 

நான் வேணும்ன்னா உன் சார்பா அவங்க அப்பாக்கிட்ட போய் பேசவாப்பா, இரண்டு பேரும் மனசுக்குள்ளயே வச்சிருந்தா எப்படி! போய் கேட்டுப்பார்த்தாதானே அவங்க பொண்ணக்   குடுப்பாங்களா! மாட்டாங்களான்னே தெரியும்! ஏம்பா என்ன சொல்ற!?,”

வித்யாதரன் தலையசைத்து மறுத்தான்.  இப்போதிருக்கும் நிலைமையில் அவர்களிருவரும் வாழ்வில் ஒன்றுசேரமுடியாத பொருளாதார நெருக்கடியில் இருப்பதை, யசோதையிடம் சொன்னதை கேசவன் சாரிடம் சொன்னான். 

“நல்ல வசதி வாய்ப்புகளோடு இருக்கிற இடத்தில் மகிழ்ச்சியாய் இருக்கட்டும் சார். அதுபோதும் எனக்கு” என்றுவிட்டான். 

பின் கொஞ்ச நாட்கள் அவளைப் பார்க்காமல் இருக்க பெருமுயற்சி செய்து செய்து தோற்றுக்கொண்டிருந்தான் வித்யாதரன். 

மீண்டும் அந்த புதுகட்டிடத்தில் நின்று நேரெதிரே யசோதையின் வீட்டு ஜன்னலில் தெரிகிற அவளை அவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். 

இதுசரியில்லை.

 வேண்டாம் என்று ஒதுங்கியது அவனே. 

வேறிடத்தில் மணம்முடிக்கப்போகிற பெண் அவள். 

இப்படி பார்த்துக்கொண்டிருப்பது தவறென மனது இடித்துரைத்தாலும் 

எட்டாத தூரத்தில் தெரிகிற வெண்ணிலவை கண்டு ரசிப்பதில்லையா!.. அப்படித்தான் யசோதையைப் பார்பதென்று அவனே சமாதானக்காரணமும் சொல்லிக்கொண்டான். 

 கைக்கு கிடைக்கும் நெருக்கத்தில் தான் அவனுக்கு வாய்க்கவில்லை. கண் பார்க்கும் தூரத்தில் வைத்தாவது பார்போமே என்றிருந்தது அவனுக்கு. 

அவளை கண்ணால் பார்க்க முடிவதே மனதிற்கு இதமாய், ஆறுதலாய், ஊக்கசக்தியாய் இருந்தது அவனுக்கு. 

இப்படி பார்த்துக்கொண்டிருக்கிற வாய்ப்பு கூட இன்னும் எத்தனை நாட்களுக்கு! என்பதால் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் அவன் தவற விடுவதில்லை. 

வெகு சில சமயங்கள் வீட்டினரோடு கடைத்தெருவுகளுக்கு யசோதை போகும் போது வித்யாதரன் அக்கம்பக்கத்தில் எங்காவது நின்றும் அவளை பார்ப்பதுண்டு. 

அப்படியொரு வாய்ப்பு இன்றும் அவனுக்கு கிடைத்திருந்தது. 

காலையிலேயே நன்முகமாய் ஒரு டீலிங் முடிந்து பத்திரப்பதிவும் முடிந்திருந்த கையோடு அவனுக்கு இருதரப்பிலிருந்தும் பணம் கைக்கு வந்தது. 

அதன் பின் வந்து அலுவலகத்தை திறந்தால் அடுத்தொரு கிளையன்ட் பேச்சுவார்த்தை முடிந்த கையோடு அட்வான்ஸ் தொகையைக்   கூட கையில் கொடுத்துவிட்டுப்போனார். 

அகம் மகிழ்ந்திருந்த அந்த நிமிடமே அவனுக்கு யசோதையின் முகத்தை பார்க்கவேண்டும் போல் இருந்தது. 

அடுத்த சில நிமிடங்களில் அவன் அந்த புதுகட்டிடத்தில் இருந்தான்.

பதினோரு மணியளவே ஆகியிருக்க  ஜன்னல் பக்கம் யசோதையை காணமுடியவில்லை. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவளை வாசல் பக்கம் வைத்து பார்த்துவிட முடிந்தது. எங்கோ புறப்படத்  தயாரான நிலையில்..தெளித்துவிட்டாற்போல் சின்ன சின்ன மஞ்சள் பூக்கள் கொண்ட நீல நிற ஷிபான் உடையில் தேவதையென அவள் வாசலில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தாள்.

யசோதை அந்த உறவினர் பெண்ணோடு வெளியே கிளம்புகிறாள். 

வினாடியில் பாய்ந்து படிகளில் இறங்கி வந்து அவன் வண்டியை எடுத்தான். வெளியே என்றால் இன்னும் கூடுதல் நேரம் அவளைப்பார்த்துக்கொண்டிருக்க  வாய்ப்பிருக்கும்.

ஆனால் அவர்கள் போனதோ பெண்களின் உள்ளாடைகளுக்கென்றே பிரத்யேகமான ஷோரூம். 

அவன் எங்கிருந்து உள்ளே போவது. 

வெளியே நின்றபடியே ஒரு குளிர்பானத்தை பருகியபடியே காத்திருந்தவன் 

உள்ளிருந்து யசோதை மட்டுமே வெளிவந்து, தலையில் முக்காடிட்டு, அதிவேக நடையுடன் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி போகவும் துணுக்குற்றான். 

மின்னல் வேகத்தில் பைக்கை முடுக்கி அந்த ஆட்டோவைப்  பின் தொடர்ந்தான். 

இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோவிற்கு பணம் கொடுக்கும் போதே அவன் யசோதையை நெருங்கி விட்டிருப்பான் தான்.   

ஆனால் அங்கே வண்டியை நிறுத்தக்கூடாது ஸ்டாண்டில் கொண்டு போடவும் என்று பிடித்துக்கொண்டார்கள். 

பைக் ஸ்டாண்டிற்கோ.. அவன் சுற்றிக்கொண்டு தான் பின்புறம் போகவேண்டும். 

ஸ்டேசன் உள்ளே செல்லுகிற யசோதையை ஒரு கண் பார்த்துக்கொண்டே அவன் வண்டியைக்கிளப்பினான். 

எங்கே! ஏன்! அதுவும் தனியாக போகிறாளென்று குழப்பம் வேறு. 

ஸ்டாண்டில் வண்டியை போட்டுவிட்டு அவதியவதியாக ஸ்டேசனுக்குள் ஓடிவந்த போதும் அந்த கூட்டத்தில் யசோதையை கண்டுபிடிக்க முடியவில்லை. 

மஞ்சள் பூக்களிட்ட நீல உடையை அவன் கண்கள் ஜல்லடையிட்டுத்தேடியது

ஒரு இண்டு இடுக்குக்  கூட விடாமல் கண்களால் அலைபுற்றுத்தேடி சுற்றிக்கொண்டே இருந்தான். 

இறுதியில் கண்டான் யசோதையை. 

அவன் இதயம் நின்று துடித்தது. 

அவன் மட்டும் இன்று எதாவது வேலையில் மாட்டியிருந்தாலோ, நேரம் பிந்தி வந்திருந்தாலோயசோதையை மொத்தமாக தொலைத்திருப்பான். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here