ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த கதைக்குள் பல ஆறாத ரணப்புண்களும் மறையாத வடுக்களும் இருக்கவே செய்யும்
என்பதற்கு மற்றுமொரு உதாரணம் மகுடியின் கதை.
மகுடியின் தந்தை ஒரு மொடாக் குடிகாரன். உழைப்பில்லை, வருமானமுமில்லை. குடிக்க காசுக்காக எதையும் செய்யக்கூடிய ஆள்.
மகுடியின் அம்மா சர்க்கஸ் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். மகுடியை பெற்றெடுத்த சில வருடங்களிலேயே குடிகார கணவனையும் மகளையும் விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
“அதுக்கு என்ன பெத்துக்காமலே ஓடியிருக்கலாம்லக்கா” என்றாள் மகுடி கதைசொல்லலுக்கு இடையே.
பொறுப்பற்ற தந்தையோ சின்னஞ்சிறுமி மகுடியை யாரோ தூரத்து உறவுக்காரன் வீட்டில் விட்டுவிட்டு போய்விட்டான்.
என்ன நடக்கிறதென்றே தெரியாமல் அந்த வயதிலிருந்து பாலியல் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறாள் மகுடி.
“அந்த பாவம் என்னப் பெத்ததுங்கள சும்மா விடாதுக்கா. நான் கேட்டனா என்னை பெத்துக்கசொல்லி….” என்பதோடு நாலைந்து கெட்டவார்த்தை சொல்லித் திட்டினாள்.
” போற நாய்ங்க கழுத்த நெரிச்சுபோட்டாவதும் போயிருக்கலாம்ல”
மகுடி அந்த உறவுக்காரன் வீட்டிலிருந்த வரை ஒரு அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்.
“ஆனா அதுகூட சத்துணவுக்காகத்தான். படிப்பெல்லாம் ஏற்லக்கா”
அந்த அப்பன்காரன் போனவன் மகுடியின் பதினொரு வயதில் திரும்ப வந்து அழைத்துக்கொண்டானாம்.
அழைத்துக்கொண்டு வந்து இந்த ஊரில், இந்த வீட்டிற்கு இரண்டு தெருக்கள் தள்ளியொரு வீட்டில் வீட்டு வேலைக்கு விட்டு போயிருக்கிறான்.
ஆனால் விட்டு போகவில்லை. மொத்தமா ஒரு தொகையை வாங்கிக்கொண்டு மகளை அடிமையாக விற்றுவிட்டு போயிருக்கிறான்.
முதுகு தாங்காத மூட்டையளவு வீட்டு வேலைகள் சுமத்தப்பட்டது மகுடியின் மேல். தோட்டம், தொழுவமென்று நாள் முழுக்க வேலை.
ஆனால் அந்த உறவுக்காரன் வீட்டில் பட்ட வேதனைக்கு, வீட்டுவேலை மாட்டு தொழுவத்து வேலைகள்
நூறுமடங்கு தேவலாம் என்று நினைத்திருக்கிறாள் மகுடி.
அதன் பிறகு சத்துணவிற்க்காகக்கூட பள்ளியின் பக்கம் ஒதுங்க அவளுக்கு வாய்க்கவில்லை.
அந்த வீட்டு பெண் பிள்ளை உடுத்தி பழசாய்ப்போன உடுப்புகள் மகுடிக்கு பஞ்சமில்லாமல் நிறைய உடுத்திக்கொள்ள கிடைத்தன.
பழசுபட்டையென்றாலும் வயிறுவாடாமல் உண்ணக்கிடைத்தது.
மாட்டுக்கொட்டகைக்கு அருகிலேயே மாடுகளோடு ஒரு மாட்டுச் ஜென்மமாக வாழப்பழகிவிட்டிருந்தாள்.
இந்த தெருவில் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பாலூற்ற வந்தவள்.
கோதை வீட்டு வாசலில் இருக்கும் நாவல்பழ மரத்திலிருந்து நன்கு பழுத்து உதிர்ந்துகிடக்கும் பழங்களை பொறுக்கி உண்பது வழக்கம்
அப்போதெல்லாம் கோதை அவளிடம் பேச்சுக்கொடுப்பாள். இந்த வயதில் படிக்காமல் ஏன் வீட்டு வேலை செய்கிறாய் படிப்பு முக்கியமென்பாள் கோதை. எதையாவது எடுத்துவைத்திருந்து மகுடிக்கு உண்ணக்கொடுப்பாள்.
ஒரு நாள் மகுடி கன்றுக்குட்டியை பால்குடிக்க விட்டுவிட்டாளென்று அந்த வீட்டுக்காரம்மா மாட்டையடிக்கும் சாட்டைக் கயிறைச் சுறுட்டி மகுடியின் முதுகில் விலாசிவிட்டாள்.
உயிர்போகிற வலியோடு கத்தி அழுது கொண்டே வந்து கோதை வீட்டு கேட்டருகே சுருண்டுகிடந்தாள் மகுடி.
அன்றிலிருந்து கோதை வீட்டில் வசிக்கிறாள் மகுடி. அதன்பிறகுதான் மகுடிக்கு மனுச ஜென்மமாய் வாழ முடிந்தது.
கோதை மகுடியை படிக்கவைக்க அனுப்பினாள். ஆனால் மகுடிக்கு சுட்டுப்போடாலும் படிப்பு வரவில்லை. எதேதோ பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிப் பார்த்தாள்.
பலனில்லை. மகுடி எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றுவிட்டாள்.
“நான் என்னக்கா பண்ணுவேன். புஸ்தகத்த பிரிச்சு வச்சாலே தூக்கம்தான் வருது. ஒன்னும் மண்டைக்கு ஏறலையே.இப்பகூட எனக்கு ஏபிசிடி, மாசங்களோட பேரெல்லாம் வரிசையா முழுசா சொல்லவராது”
இது டிஸ்லெக்சியா எனும் லேர்னிங் டிசாபிலிடியென்று யசோதை படித்திருக்கிறாள்.
மகுடிக்கு நன்றாக வருவது உடல் உழைப்பு வேலைதான். சரிதான் உன் இஷ்டம் என்று விட்டுவிட்டாள் கோதை.
பேங்கில் சேமிப்பு கணக்கு தொடங்கிக் கொடுத்து சம்பளத்தை அதில் போட்டு சேமிக்க கற்றுக்கொடுத்திருக்கிறாள் கோதை.
படிப்பு ஏறியிருந்தா நல்லாதான் இருக்கும். ஆனா பரவாயில்ல. கை கால் நல்லார்க்க வரைக்கு உழைச்சு பொழைச்சுக்குவேன். எனக்கு இது போதும்க்கா. கோதையம்மா மாதிரி நானும் தனியா நிம்மதியா ஜாலியா சுத்திட்டு இருப்பேன்.
பத்தொன்பது வயது மகுடிக்குள் உளியால் அடிவாங்கி வாங்கி செதுக்கிக்கொண்ட பக்குவம்,தன்னம்பிக்கை, நிமிர்வு தெரிந்தது யசோதைக்கு.
தன்னுடைய பெரிய கோட்டிற்கு பக்கத்தில் அதைவிட இன்னும் பெரியதொரு மகுடியின் கோட்டை போட்டுப் பார்த்தால் யசோதைக்கு தான் சுமக்கிற பிரச்சனைகளையெல்லாம் வெறும் காற்றில் ஊதி பறக்கச்செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடமுடியுமென்ற ஆழமான நம்பிக்கை தோன்றிவிட்டது.
பற்றுக்கோடாய் அந்த நம்பிக்கையை பிடித்து தான் அவளின் ‘செய்து பழகுதலில்’ கூட்டமிகுந்த இடத்திற்கு போய்வருவதில் தொடர்ந்து சறுக்கிக்கொண்டே இருப்பினும் விடாமல் முயன்று கொண்டே இருக்கிறாள்.
மகுடியோடு சந்தைக்கு போகிற ஒவ்வொரு முறையும் வியர்த்து தலைசுற்றி முச்சுத்திணறி இரவிலும் உடம்பு தூக்கி தூக்கிப் போடுகிற உபாதைகள் அவளை விட்டு நீங்கினபாடில்லை.
ஓய்ந்து அமர்ந்திருந்தவளிடம்
“உனக்கு தான் கூட்டத்தில போன ஆகமாட்டேங்குதில்லக்கா அப்புறமும் எதுக்குதான் இப்படி அவஸ்தைபட்டுக்கிட்டே செய்றியோ” என்றபடி தண்ணீரை பருகத்தந்தாள் மகுடி.
பருகி முடித்தபின் அப்படியே தரையில் சுருண்டு படுத்தாள் யசோதை.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். தன்னம்பிக்கையோடு திரும்ப திரும்ப விடாப்பிடியாக செய்துகொண்டே இருந்தால் பழக்கமாகி ஒரு நாள் நிச்சயம் கைக்குள் கட்டுறச் செய்துவிடமுடியும்.
அடுத்த முயற்சியாக மாடி அறையின் சமையல் தடுப்பில் அடுப்புப் பற்றவைத்து கொதிக்க வைத்த தண்ணீரை கீழே இறக்கி வைக்கும் முயற்சியில் இறங்கினாள். இதுவும் தோல்வியே..
கீழே தவற விட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் பாத்திரத்தை தொடும் முன்னரே கைகள் நடுங்கத்தொடங்கிவிட்டன.
முதலில் கைநடுக்கம் நின்றால் தானே சுடுபாத்திரத்தை துணியைக்கொண்டு தொடவே துணிய முடியும்.
தினம் நாலைந்து முறை இதை அவள் ஒரு யாகம் போல் முயன்றுகொண்டே தான் இருந்தாள்.
காய்கறிகள் நறுக்குவதுமே தான்.
கத்தியை கையில் பிடித்தாலே அச்சம் மேலெழுந்து நடுக்கத்தை கிளர்த்திவிட்டுவிடுகிறது.
இருந்தும் விடாமல் கேரட் வெண்டை பீன்ஸ் போன்ற நீளமான காய்களை முனையில் பிடித்து முதலில் இரண்டு துண்டங்கள், அதிலிருந்து முன்னேறி நான்கு துண்டங்கள் பின் மெல்ல முன்னேறி ஆறு என வெட்டியெடுக்கப் பழகிக்கொண்டிருக்கிறாள். எவ்வளவு கவனமாக இருந்தபோதும்
விரலில் பட்டு குபுக்கென குருதி.
கண்டதும் கத்தியும் நழுவி கீழே விழுந்தது. அவளும் தான். மயங்கி விழுந்திருந்தாள்.
“செய்து பழக்கமில்லாததால் வரும் அச்சம் ஆண்டி. செய்யச் செய்ய பழகிவிடும். நான் பழகிக்கொள்வேன். கவலைபட ஒன்றுமில்லை.” என்றாள் கோதையிடம்.
“நீ சொல்றது சரிதான்ம்மா. தனியே இதெல்லாம் சமாளிக்க படிச்சுக்க வேண்டியது அவசியம். இல்லைன்னா காலம்பூரா டிபெண்ட் பண்ணியிருக்க மாதிரி ஆயிடும்.
இந்தா இதில் ஒன்றை உன் பர்ஸில் வைச்சுக்க, இன்னொன்றை படுக்கையில் தலையணைக்கு பக்கத்தில வச்சுக்க. பகவான் கிருஷ்ணர் உனக்கு எப்பவும் துணை இருப்பார்.” என்று
கீதாச்சாரம் எழுதப்பட்ட இரு கிருஷ்ணர் படங்களை யசோதைக்குத் தந்தாள் கோதை.
யசோதைக்கு பெண் தெய்வங்களை மட்டுமே வணங்கப்பிடிக்கும்.
ஆனால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை. மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.