நெடுநல் அத்தியாயம் -23

0
286

வித்யாதரனுக்கு கடிதத்தை அனுப்பிவிட்டு உலைக்களத்தில் நிற்பது போன்றதொரு தவிப்புடன் அந்த வாரநாட்களை அரும்பாடோடு கடத்திக்கொண்டு காத்திருந்தாள் யசோதை.  

வழக்கமாக அவன்  வரும் வாரநாள் வந்ததும்  வழிமேல் விழிவைத்து நின்றவளை..

“கொஞ்சம் தான் உட்காரேங்க்கா. இப்படி கால்கடுக்க கேட்டுக்கிட்டேயே நின்னா மட்டும் அண்ணன் கண்ணுமுன்னாடி வந்து குதிக்கவா போறார். வந்தா தெரிஞ்சிடும். வா உள்ளக்க”. மகுடி  வலுக்கட்டாயப்படுத்தித்தான் அவளை உள்ளே அழைத்துவந்தாள். 

அதிக நேரம் காத்திருக்கவைக்காமல் வித்யாதரன் வந்தே விட்டான். 

அதுவரை ராக்கெட் வேகத்தில் ஏதேதோ  நினைத்திருந்த, வருந்திய மனதை அதட்டி,சமாதானப்படுத்தி, தேற்றியென உள்ளுக்குள் உழன்றுகொண்டிருந்தவள்

அதெதையுமே கிஞ்சித்தும் வெளிக்காட்டி கொள்ளாமல் அவன் முன் நின்றாள். 

 அவனிடமோ, அவன் பேச்சிலோ கூட எந்த வேறுபாடும் காணோம். 

 தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வாடகைக்கு வீடெடுக்கும்போது முக்கியமாக பார்க்க வேண்டியிருப்பது குடிக்க புழங்க தண்ணீர் கிடைக்கிறதா என்பதைத்தான்” என்று அவனின் வீடு தேடும் படலத்தை விவரித்துக்கொண்டிருந்தான். 

” நமக்குத் தோதான மாதிரி வாடகைக்கு வீடு கிடைப்பதில் அதிலும் தண்ணீர் வசதியோடு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பா இருக்கு யசோ. வீடு நல்லா இருந்தா தண்ணீர் இல்லை. தண்ணீர் வசதியோடு 

 தேடிக் கடைசியா ஒன்று அமைந்திருக்கு ஆனால் அது காம்பவுண்டிற்குள் ஆறேழு வீடுகளுக்கு சேர்த்து இரண்டென காமன் டாய்லட், பாத்ரூம் தான். அது உனக்கு கம்பர்டஃபிளா இருக்குமாங்கிற யோசனையில் தான் முடிவாக்காமல் வைத்திருக்கேன்.” என்றவனிடம் 

“வித்யா நான் போஸ்டில்  அனுப்பின கடிதம் கிடைத்ததா!” என்றாள் யசோதை குழப்பத்துடன்.   

“பதிலுக்கு நானும் உனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அப்புறம் நிதானமாக படித்துக்கொள்” என்று அவளிடம் காகிதத்தை நீட்டினான். 

கூடவே ஒரு பையையும். 

“இது என் அத்தை, உன் அம்மா கொண்டுவந்து தந்தார்கள் யசோ” என்று அவன் சொன்னது தான் மாயம் யசோதை துள்ளி குதித்தாள். 

பையில்.. கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி அவள் எப்போதும் கூடவே வைத்துக்கொண்டே சுற்றுகிற அவளின் சோனி டேப் ரெக்கார்டரோடு சேர்ந்த  ரேடியோ செட் இருந்தது. 

அகமும் முகமும் பூப்போல மலர்ந்து “வித்யா நீங்க  அம்மாவ பார்தீங்களா.. அம்மா. அம்மாவை…” ஆனந்தத்தில் யசோதைக்கு பேச்சே வரவில்லை. 

அவளின் துள்ளல் முகத்தை ரசித்து பார்த்திருந்தவன்.

“அத்தையை சந்தித்து நம்ம கேசவன் சார் நம்ம விஷயத்தை இரண்டு மூணு வாரங்களுக்கு முந்தியே சொல்லியிருக்கிறார் யசோ.  

உன் வீட்டில் ஆரவாரமெல்லாம் கொஞ்சம் அடங்கினாற்போல தெரியுது. 

அத்தை என்னை பார்க்க வந்தார்கள். “உங்கள் மகள் எனக்கு என் உயிரைவிட முக்கியமானவள் அத்தை.. அவளை என் உயிர் உள்ளவரை கண்ணுக்குள் வைத்து காப்பேன்” என்று அவன் சொன்னதையும், யசோதை எழுதின கடிதத்தையும் அதற்கு பதிலாக வித்யாதரன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் யசோதையின் தாயிடம் கொடுத்து “படித்துக்கொண்டிருங்கள். இதோ பக்கத்தில் போய் வருகிறேன்” என்று அவன் வெளியே போனதையும் ஒவ்வொன்றாக விவரித்து சொன்னான். 

“மறுநாளே அத்தை மீண்டும் வந்தார்கள் யசோ. உன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலையும் கொஞ்சம் பணம் நகைகளையும் தரவந்திருந்தார்கள். 

“நான் ஃபைலை மட்டும் வாங்கிக்கொண்டேன். உங்க ஆசிர்வாதமும் வாழ்த்துகளும் எங்களுக்கு போதும் அத்தை. அதைக்கொண்டே நாங்க இரண்டு பேரும் சந்தோசமா வாழ்வோம். யசோவும் இதைத்தான் சொல்லுவாள் அத்தை. யசோவை பற்றி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம்.  நிம்மதியா  இருங்க அத்தை” என்று சொல்லியனுப்பியதை சொன்னான்.

வார்த்தைக்கு வார்த்தை அம்மாவை அவன் அத்தையென்று அழைத்தது..

மென்மேலும் மகிழ்ச்சிக்கடலில் மிதந்தாள்  யசோதை. அவன் எழுதிக்கொண்டு வந்த கடிதத்தில் என்ன இருக்கிறதென்பது படித்துப்பார்க்காமலே யசோதைக்கு தெரிந்துவிட்டதே. அவனின் அன்பும் காதலும் அன்றி வேறென்ன…!

“நாம குடிபுக அந்த வீட்டையே பார்த்து முடித்துவிடுங்கள் வித்யா” 

“ஆகட்டும் யசோ. அதிலிருந்தபடியே வேற நல்ல  வீட்டை பிறகு பார்த்துக்கலாம். நான் போய் அட்வான்ஸ் கொடுத்து உறுதிப்படுத்திக்கிட்டு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்த்ததும் ஒன்றிரண்டு வாரத்தில் குடி போய்விடலாம்.” 

அடுத்த இருவாரங்கள் யசோதையின் வாழ்வில் நல்ல மசகிட்டுப்பூட்டிய வண்டிச்சக்கரம் போல இலகுவாக மேடு பள்ளங்களைக்கூட நெகிழ்மை குழைமையோடு கடந்துவிடக்கூடிய உறுதியோடு கழிந்தது. 

மன உறுதியென்பது வெளியே இருந்து வருவதில்லை. நாமே நினைத்தால் தான் நமக்குள் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால் அந்த மன உறுதியை உருவாக்கிக்கொள்ள அச்சாணியாய் இருப்பது விழுந்துவிடமாட்டோமென்ற தன்னம்பிக்கையும் விழாமல் தாங்கிட  நமக்கென்று தோள்கொடுக்க, கைகொடுக்க ஜீவன்கள் இருக்கிறதென்ற தெம்பும் தான். 

வித்யாதரனின் காதலும், தாயின் அன்பும் ஆதரவும் யசோதைக்குள் 

மசகெண்ணெயாக, அச்சாணியாக இருந்து இயக்கிக்கொண்டிருந்ததோ என்னவோ! 

யசோதை தூரச் சாலைகளுக்கும்  தனியே போய்வந்தாள். 

மகுடியோடு சந்தைக்கும் கடைவீதிகளுக்கும் தடுமாறாமல் போய் வந்தாள். 

கூட்டமான கடைகளுக்குள்ளும் புகுந்து தனக்கும் மகுடிக்கும் உடுப்புகளை வாங்கினாள். 

ரோட்டோர கடைகளில் நின்று ஸ்டிக்கர் பொட்டு, கலர்கலர் கண்ணாடி வளையல்களென வாங்கி கை நிறைய அடுக்கிக்கொண்டாள். 

பற்றவைத்து அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து நீறை கை நடுங்காமல் இறக்கி வைக்க கற்றுவிட்டாள். 

கத்தியை பிடிக்கவும் காய்களை நறுக்கவும் கூட எந்த தடுமாற்றமும் இல்லாமல் கற்றுவிட்டாள். 

சந்தைக்கு தானே போய் காய்களை வாங்கிவந்தாள் யசோதா. சின்னஞ்சிறு துண்டங்களாக வெட்டி. தானே வாழ்நாளில் முதன்முதலாக சமைத்த கிச்சடியோடும், மகுடி  செய்து மேலே கொண்டு வந்த ஆப்பங்கள் குருமா தேங்காய் சட்டினியோடும் யசோதையும் மகுடியும் நிலவொளிக்கீற்றலில்  மொட்டைமாடியில் வைத்து  

உண்ட அந்த நாளின் இரவுணவு வாழ்நாளின் முழுமைக்கும் மறக்கமுடியாததொரு தேவாமிர்த அனுபவம். 

அன்றிரவு ஊரே அடங்கின பிற்பாடு, 

அறையின் கதவு ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு சோனி செட்டில் பாட்டுப்போட்டு கொண்டு யசோதையும் மகுடியும்  ஆட்டாமாய்  ஆடித்தீர்தார்கள். இருவர் கால்களும் போதும் வலிக்கிறது நிறுத்துங்க ஆட்டத்தையென்று கெஞ்சுகிற வரை முச்சுவாங்க ஒரே  ஆனந்தக் களி கூத்துதான். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here