நெடுநல் அத்தியாயம் -25

0
309
yavi house

வித்யாதரனோடு இந்த ஒற்றையறைக்கூட்டிற்குள் சேர்ந்து வசிப்பது, ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களோடு  அவ்வளவு பிடித்தது யசோதைக்கு.

மகன்றில் பறவைகளைப்போல மனமொன்றி இணைபிரிந்திடாத,காதல் ததும்பத் ததும்ப பரவசங்களோடு  நகர்ந்தன நாட்கள் ஒவ்வொன்றும். 

இதுவரை உடல்கள் உரசிக்கொண்டதில்லையே ஒழிய இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவருக்கு குறைவேயில்லாத அணுக்கமும் ஆதுரமும் கூடிக்கொண்டே  போவதுபோல்தான் இருந்தது. 

வீடும்  அளவில் சிறிதென்பது ஒரு குறையே இல்லை. 

இருவருக்கும் ஒருவர்கண் ஒருவர்மீதிருக்க பார்த்துக்கொண்டேயிருக்கும்படி இருக்கிறதே.. அத்தோடு நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும்.எல்லாம்சரிதான். 

ஆனால் தனக்கு மாமியார்  இல்லாத குறையை வீட்டுக்காரம்மா தீர்த்து வைப்பதுபோல் பட்டது யசோதைக்கு. 

கதவை சாத்தி வைத்தாலும் தட்டி திறக்கச்செய்து அனுமதியின்றி உள்ளே வருவாள் அந்தம்மா. 

“ஏன் எப்பபாரு சாத்தியேவச்சிருக்க. புருஷன்காரன் வீட்ல இருக்கும்போது சரி. சின்னஞ்சிறுசுகன்னு பார்க்கலாம், தனியா இருக்கும்போது கதவசாத்தி வச்சு உள்ள  என்னத்த அடக்காக்கிற!. 

வெளியே நாங்கல்லாம் உட்கார்ந்து பேசறோமே, நீயும் வந்து உட்கார்றது!. 

அப்போதானே நாலு விசயத்த கத்துக்க முடியும். உங்க வீட்ல உனக்கு எதையும் சொல்லிக்கொடுத்து வளர்த்த மாதிரி தெரியலையே. பொம்மைக்கு கல்யாணம் பண்ணிவிட்டமாதிரி பண்ணிவிட்ருக்காங்க. எத்தனை நாளைக்குதான் புருசன் வீடு வேலைகளையும் செஞ்சு கொடுத்துட்டு வேலைக்குப்போவான் பாவம். பொம்பளைக்கு வீட்டுவேலையக்கூட  செய்யமுடியாட்டி எப்படி! 

போ வெளில இருக்க கடப்பாக்கல் மேல கோலமாவ வச்சு கோலத்த போட்டுப் போட்டு பழகு. நாளையில இருந்து ஒரு வாரத்துக்கு தெருவாசலக் கூட்டி தண்ணி தெளிச்சு நல்ல கோலமா போட்டுவிட்ரு”

மறுநாள் விடியலில் அவள் வாசல் தெளிக்க.. கொடு நான் போடுகிறேன் கோலத்தையென வித்யாதரன் வாங்கி நீர் மேல் மிதக்கின்ற தாமரைகளை வெகு அழகாக வரைந்தான். கூடவே கீழே நல்வரவு என முத்தான எழுத்திலும். 

யசோதை கைகளைத்தட்டி அவனை பாரட்டினாள். 

காம்பவுண்ட் வாசிகள் மட்டுமல்ல அந்த தெருவில் அந்நேரத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் அத்தனை பேர் கண்களும் இவ்விருவர் மீதுதான். 

வீட்டிற்குள் போனதும் 

“என் அம்மா எனக்கு அடிக்கடி சுற்றிப்போடுவார்கள் வித்யா. இப்ப நான் உங்களுக்கு சுற்றிப்போடுகிறேன். ஊர் கண்ண விடுங்க. என் கண்ணே பட்ரும்போல” கைகளால் காற்றில் தொட்டு நெட்டிமுறித்தாள் யசோதை.

வித்யாதரன் சிரித்தான். “கண்படுவதற்கெல்லாம் சுற்றிப்போடனும்னா நான் உனக்கு நாள் பூரா சுற்றிப்போட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்”

“இதென்ன வீடான வீட்ல ஒரு சாமி படத்தை வச்சு விளக்கேத்திறதில்ல!? மூளி வீடா போட்டுவச்சிருந்தா லட்சுமி எப்படி உள்ள வரும்.” வீட்டுக்காரம்மாவுடைய அடுத்த உத்தரவு. 

வித்யாதரனோ தன்னை மட்டுமே நம்பக்கூடிய, கடவுள் நம்பிக்கையற்றவன்.

“அவங்க சொல்றாங்கங்கிற கட்டாயத்திற்கு நாம செய்யவேண்டியதில்லை யசோ ஆனால் எனக்காகவும் பார்க்கத்தேவையில்லை உனக்கு விருப்பமான சாமிப்படத்தை நம்ம வீட்டில் வைப்போம்” என்றான் வித்யாதரன். 

யசோதை சின்னதாக தனக்குப்பிடித்த காளிதுர்க்கை படத்தை செஃல்பில் வைத்தாள். 

“ஆஹ்! சாமி படம் வைன்னு சொன்னேன். அதுக்காக இதென்ன மந்திரவாதி வீடா! காளி படத்த வாங்கிட்டு வந்து வச்சிருக்க. குடும்பம் நடத்திற வீட்ல காளி படம்லாம் வச்சு கும்பிடக்கூடாது. கொண்டுபோய் எதாச்சும் கோயில் மரத்தில சாய்ச்சு வச்சிட்டு. நல்ல சாந்தமான சாமிபடமா வாங்கிமாட்டு. ” 

“என்ன பொண்ணோ..” தனக்குள் முனகியபடி தலையிலடித்துக்கொண்டே போனாள் வீட்டுக்காரம்மாள். 

வாடகைக்கே என்றாலும் இது இவர்களுடைய வீடு. 

இவர்களுகளுடைய வீட்டிற்குள் சாமி படம் வைக்கவேண்டுமா! இல்லையா! அப்படி விரும்பி வைத்தாலுமே  எந்த  சாமியை வணங்கவேண்டுமென சொல்வதற்கு இந்தம்மாவிற்கு என்ன அதிகாரமிருக்கிறது! 

அந்தம்மாவிடம்  யசோதை முகம் முறித்து பேசவில்லை தான் ஆனால் படத்தையும் மாற்றவில்லை. 

வித்யாதரனும் மாற்றத்தேவையில்லை என்றுவிட்டான். 

 “இன்றைக்கு குடுமி வை என்பார்கள், அதற்கு இணங்கி வைத்தால் நாளைக்கு மொத்தமாக சிரைத்துக்கொள் என்பார்கள். அடுத்தவர்களை திருப்திபடுத்துவதற்காக நாம ஒன்னு செய்யப்போனா அது அந்த ஒன்றோடு நின்றுவிடாது.. ஒன்னு மாத்தி ஒன்னுன்னு தொடர்கதையா நீண்டுக்கிட்டேதான் போகும். கடைசில நம்ம ஒர்ஜினாலிட்டிதான் காணாமப்போகுமேயொழிய அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள் ” என்று வித்யாதரன் சொன்னதுதான் யசோதையின் கருத்தும். 

இவர்களிருவரும் இவர்களுக்கான சொந்த வாழ்கையை சேர்ந்து வாழ வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் விருப்பு வெறுப்புகளை தூக்கி சுமப்பதற்காக அல்ல. 

விதயாதரன் யசோதையின் அன்றாடமென்பது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லதண்ணி பிடித்துவைக்க விடிவதற்கு முன்பே எழுவதில் தொடங்கி துவைப்பது குளிப்பது வீட்டை சுத்தம் செய்வது பாத்திரங்கள் கழுவுதல் சமைப்பதென எல்லாவற்றையும் சேர்ந்தே செய்து ஏழு ஏழரை  மணிக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிடுவார்கள். 

அதன் பிறகு காஃபி காலைவுணவோடு கூடி வித்யாதரன் நாளேடுகளில் தொழிலுக்கு தேவையான தகவல்களை திரட்டிக் குறித்து வைத்துக்கொள்வான். 

யசோதை வேலைவாய்ப்புச் செய்திகளை, என்னென்ன வேலைகளுக்கு தேவைகள் அதிகமிருக்கிறது, என்னென்ன தகுதிகள் எதிர்ப்பார்க்கபடுகிறதென்ற தகவல்களை குறித்துவைத்துக்கொள்வாள். 

கேட்கப்படும் தகுதிகளை கணக்கிலெடுத்துக்கொண்டால் அவளிடம் விழுந்து விழுந்து படித்து வாங்கிய பட்டப்படிப்பு தவிர கூடுதல் தகுதிகள் எதுவுமே இல்லை என்பதால் முதற்கட்டவேலையாக அருகே ஒரு டைப்ரைட்டிங் செண்டரைத்தேடி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியில் சேர்ந்துவிட்டாள் யசோதை. 

ஆஃபீஸ் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ கோர்ஸ் ஒன்றிற்கும் செண்டர் பார்த்தாகிவிட்டது. ஆனால் அருகேயில்லை. அவர்கள் வசிக்கும் வடபழனி ஏரியாவிலிருந்து  மவுண்ட் ரோடு வரை போகவேண்டியிருக்கிறது. 

அதற்குமுன் இவள் பேருந்திலேறி போய்வருவதை பழகிக்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக எந்நேரமும் நில்லாமல் வாகனங்கள் வந்து போய்க்கொண்டேயிருக்கிற இந்த வடபழனி  நூறடி ரோட்டை பதட்டமில்லாமல் பயமில்லாமல்  நிதானமாக க்ராஸ் செய்துவிட கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தாள் யசோதை. 

அதனால் எட்டரை ஒன்பது மணிக்கு வித்யாதரன் வெளியே கிளம்பினதுமே  தனக்கும் உண்பதற்கு குடிப்பதற்கென்றெல்லாம் எடுத்துக்கொண்டு அவளும் கிளம்பிவிடுவாள். 

டைப்ரைட்டிங் செண்டரிலிருந்து நேரே போய் அந்த பெரிய நூறடிச்சாலையில் தான் நிற்பாள்.

பயப்படாமல் இலகுவாக ரோடு க்ராஸ் செய்து பழகுவதற்கான பயிற்சியில் முதல் சில நாட்கள் உண்மையிலேயே திணறலாகத்தான் இருந்தது. 

சிறுவயதிலிருந்தே யாருடைய கையையாவது பற்றியே ரோடு க்ராஸ் செய்து கொண்டிருந்தவளுக்கு 

இராணிப்பேட்டையில் இருந்த போது, அங்கிருந்த மெயின் ரோடு அளவில் சிறிதுதான் அதைத் தனியே கடக்கவே முதலில் திணறினவள் தானே. 

எதையும் விடாமுயற்சியோடு பத்து தடவைக்கு மேல் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிற தாரகமந்திரத்தை தான் இப்பொழுது அவள் எல்லாவகை பயிற்சிகளுக்கும் உட்பொதித்து செய்வது. அந்த ‘டென் டைம்ஸ் மேஜிக்’ அவளுக்கு நன்றாகவே பலனளிக்கிறது. 

ஆனால் இந்த ரோட்டில் நின்றுகொண்டு இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கமும் பின் அங்கிருந்து இந்தப்புறமுமென மாற்றிமாற்றி  நாளுக்கு பத்துதடவைகள் அவள் செய்யும் ரோடு க்ராஸ் பயிற்சியை எவரேனும் பார்க்க நேர்ந்தால் இந்த பெண் என்ன கிறுக்கா என்று தான் நினைப்பார்கள் நிச்சயம். நினைத்துவிட்டு போகட்டும். 

அவளுக்கு எது அதிமுக்கியமோ அதை செய்யமுடிவதொன்றே குறிக்கோள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here