நெடுநல் அத்தியாயம் -26

0
245

வித்யாதரனின் தொழிலில் வருமான அளவென்பது நிரந்தரத்தன்மையற்றது. ஒரு மாதம் கூடுதலாக இருக்கும் அடுத்தமாதம் ஒன்றுமேயிறாது. 

இரண்டுநிலையையும் சமன்படுத்தி கட்டுச்சிட்டாக குடும்பம் நடத்த இருவருமே கற்றுக்கொண்டார்கள். 

இப்படி நிரந்தரமில்லாத வருமானத்தைக்கொண்டவர்கள் வருவதையெல்லாம் பாக்கெட்டில் போட்டு அப்பொழுதிற்கப்பொழுதே கொட்டித்தீர்த்துவிடக்கூடாது. 

குருவிகள் போல கிடைத்ததை பிரித்து எதிர்காலத்திற்கும் சேமிக்க வேண்டியது அவசியம்.நாளை என்பது எப்படியிருக்கும் என்றே கணிக்க இயலாதவொன்றென்பதால் இன்றைய  வருமானம் நாளைக்கும் சேர்த்துதான். 

கமிஷன் வருமான வரவு பெரும்பாலும்  பணமாகத்தான் கைக்கு வரும். ஆக 

தொழில் வளர்ச்சிக்கு ஒரு பங்கு 

தொழிலிடம்  மற்றும் வீட்டு செலவுகளுக்கு ஒரு பங்கு 

எதிர்கால சேமிப்பிற்கு ஒன்று

அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றென ஒவ்வொரு  பண வரவையும்  நான்காகப்பிரித்துதேவையானதை செலவிற்கு ஒதுக்கிக்கொண்டு மீதத்தை  போட இருவருக்கும் பொதுவான பேங்க்  அக்கவ்ண்ட் தொடங்கி அதில் போட்டு வைக்கத்தொடங்கினார்கள்.

அந்த மாதத்தின் இரு வரவுகளில் மீந்ததை பேங்கிற்கு போய்  அக்கவ்ண்டில் போட்டுவிட கிளம்பி  யசோதை வீட்டைப்பூட்டிக்கொண்டு இருக்கும்போது மூன்றாம் வீட்டவள் வந்து நின்றாள். 

“கிளம்பியாச்சுபோல, தினம் வெளியே போறியே!, அப்படி எங்க தான் போற. அம்மா வீடு பக்கத்திலிலேயே இருக்கோ!

யாசோதை ஆமென்றோ இல்லையென்றோ சொல்லாமல் “வரேங்க நேரமாச்சு” என கை கடிகாரத்தை பார்த்துக்கொண்டே சொல்லிக்கொண்டே நில்லாமல் நகர்ந்துவிட்டாள். 

 “ஹ்ம்ம் கொடுத்துவச்ச மகராசி. வாழ்ந்தா உன்னைப்போல வாழணும் ” பெருமூச்செரிந்தாள் அந்தப்பெண். 

‘நமக்கு பிடிச்சத போட்டுப்பார்த்து பிடிச்சமாதிரியெல்லாம் நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்துவிடமுடியாது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிப்பேசியே ஒருவழி பண்ணிவிடுவார்களென’ சின்ன அத்தை அடிக்கடி சொன்னதையெல்லாம் நேரடி அனுபவமாக இந்த காம்பவ்ண்ட் வீட்டில் வசிக்கத்தொடங்கிய நாளிருந்து யசோதைக்கும் நடக்கிறது. 

யாரையும் முகம் முறித்துப்பேச யசோதைக்கு வராது. நம்மை யாராவது மனம் நோகச்செய்தால் நமக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தானே அடுத்தவர்களுக்கும் இருக்குமென்று எப்பொழுதும் யாரையும் நோகப்பேசிவிட மாட்டாள். 

வித்யாதரனும் அப்படியே தான். மென்மையும் தனிவும் கனிவுமான பேச்சுக்காரன் அவன். 

ஆனால் இந்த பண்பை இளிச்சவாய்த்தனம் என்றெடுத்துக்கொள்கிறது சமூகம். 

இவர்கள் மீது அட்வாண்டேஜ் எடுப்பது ஈஸி என்ற நினைப்பில் தான் அணுகுவார்கள் போல.

குடிவந்த புதிதில் நட்பு பாராட்டி எல்லோரிடமும் இணக்கமாகப்பழகவே யசோதை விரும்பினாள். ஒவ்வொருவரும் வந்து பேச்சுக்கொடுக்கும்போது இன்முகத்தோடு தான் யசோதை பேசிக்கொண்டிருந்தாள். 

ஆனால் அவர்கள் அவளை அவர்களைப்போல ஒருத்தியாக ஆக்க முனைந்தார்கள். அதாவது அதே கப்பல் பறவையாக என்பதால் ஒதுங்கிக்கொண்டாள். 

தானுண்டு தன்வேலைகள் உண்டு என, அதற்கே யசோதைக்கு நேரம் சரியாக இருக்கும். 

ஆனால் அடுத்த வீட்டுப்பெண்களை பொருத்தவரை அவள் வெட்டியாக ஊர் சுற்றுகிறவள். வீட்டு வேலைகளே இல்லாதவள். சும்மாவே கதவை சாத்தி வைத்து பொழுதாகிற வரை சோம்பிக்கிடக்கிறவள். 

ரோமில் ரோமானியனைப்போல் வாழ், ஊரோடு  ஒத்து வாழ் என்பதெல்லாம் யசோதைக்கு கொஞ்சமும் சாத்தியப்படவில்லை. 

வீட்டுக்காரம்மாள் உட்பட காம்பவ்ண்ட் வாசிப்பெண்கள் துணி துவைக்கிற சமைக்கிற நீர் சேந்துகிற வேலை நேரம் முதற்கொண்டு அடுத்தவர் வீட்டுக்கதைகளை நக்கலும் நய்யாண்டியுமாக பேசிப்பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.  

விடிவதிலிருந்து ஊரடங்கும் வரை நேரம் காலமே இல்லாமல் வீட்டிற்கு வெளியே கடப்பா திட்டுகளில் அமர்ந்தபடி ஒவ்வொருவருடைய வீட்டுப்படுக்கையில் நடப்பதைக்கூட விலாவரியாக பேசிக்களிப்பது இப்பெண்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு. 

கதவை சாத்தி வைத்தாலும், காதை பொத்திக்கொண்டாலுமே கூட இதெல்லாம் கேளாமல் இருக்காது யசோதைக்கு. 

அவள் நேர்முகத்தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் செய்து கொண்டிருப்பவள். 

பல நேர்முகத்தேர்வுகளுக்கு போய்வந்தும் கொண்டிருக்கிறாள். 

வேலை கிடைக்கிறதோ இல்லையோ! அதற்கான தகுதிச்சான்றிதழ்களை பெருக்கிக்கொள்வது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் நிறைய ஜாப் இண்டர்வியூஸ் அட்டெண்ட் செய்துகொண்டே இருப்பதும்  நல்லதொரு ஊக்கப் பயிற்சியே.. 

இண்டர்வியூவில் என்ன மாதிரி கேள்விகள் கேட்க்கப்படும், எதையெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பார்கள், பேச்சுத்தொனி, உடல்மொழி, உடையலங்காரமெல்லாம் எப்படி இருக்க வேண்டுமென்பதையெல்லாம் பல நேர்முகத்தேர்வுகளுக்கு போய்வந்தாலே இலவசமாகக்கற்றுக்கொள்ளலாம் என யசோதை கண்டுகொண்டாள். 

அதன்படி பேப்பரில் பார்க்கிற வேலைவாய்ப்பு கட்டத்திலிருந்து தோதானவைகளை தேர்ந்தெடுத்து நேர்முகத்தேர்வுகளுக்கு கண்களை உறுத்தாத நிறத்தில் அதே சமயம் ரொம்பவும் டல்லான அழுதுவடிகிற நிறத்திலும் இல்லாத உடைகளைப்போட்டுக்கொண்டு சென்றுவருவாள்.

அந்த ஒரு  கல்லில் மூன்று மாங்கனிகள். 

முதலாவது 

இன்னதை இந்திந்த வார்த்தைகளைக்கொண்டு அளந்து அதே சமயம் தெளிவாக பதிலளிக்கக்கூடிய மிடுக்கான பேச்சும் எடுப்பான தோரணையும் கைவரப்பெற்றுக்கொண்டிருந்தாள்.  

இண்டர்வியூ நடக்கிற வெவ்வேறு ஏரியாக்களுக்கு போய்வந்து கொண்டிருப்பதால் மெட்ராஸ் மாநகரத்தின் இண்டு இடுக்குகள் கூட யசோதைக்கு பரிச்சயம் ஆகிக்கொண்டிருந்தது. 

மூன்றாவது பேருந்துப்பயணம். 

பயம் பதட்டம் தயக்கங்கள் நீங்கி எந்த நேரத்திற்கு எந்த பஸ் எங்கே ஏறி எங்கே இறங்கவேண்டும் என்பதெல்லாம் பிடிபட்டது. 

கூட்டமான பஸ்களில் நெருக்கி அடைத்துக்கொண்டு போவதை தவிர்த்துவிடுவாள். அதற்கு பதிலாக வீட்டிலிருந்து முன்னமே கிளம்பி பஸ் ஸ்டாப்பில் ஏறாமல் எந்த பஸ்ஸில் ஏறவேண்டுமோ அந்த பஸ் ஸ்டாண்டுக்கே போய் முதலிரண்டு ஜன்னலோர சீட்டில் இடம்பிடித்து அமர்ந்துகொள்வாள். இறங்கவும் ஏதுவாக இருக்கும். 

இதனால் பயண நேரம் கொஞ்சம் அதிகப்படிதான். ஆனாலும் பராவயில்லை

பசி நேரத்துக்கு பஸ்ஸில்  பயணப்பட்டுக்கொண்டிருந்தாலும் பசியை அடக்காமல், சக பயணிகள் விநோதமாக பார்ப்பதைக்கூட பொருட்படுத்தாமல் எந்த வித தயக்கமுமின்றி, ஓடுகிற பஸ்ஸில் டிபன் பாக்ஸை திறந்துவைத்து ஸ்பூனைப்போட்டு உண்டு முடிப்பாள். 

வெளியே வெயிலில் சுற்றியலைந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக குளித்துவிடுவாள் யசோதை. காலையிலேயே வாளி நிறைய சேந்தி வைத்திருக்கும் நீரில்பெரும்பாலும் இந்த இரண்டாவது குளியலை  வீட்டிற்குள் பாத்திரங்கள் கழுவ  இருக்கும் அந்த சிறிய ததுரவடிவ சலதாரைக்கட்டுக்குள் வைத்தே குளித்துவிடுவாள். 

வாளியில் நீர் தீர்ந்துபோயிருந்ததால் கிணற்றிலிருந்து முகந்து கொண்டிருந்தாள்.  

அந்நேரத்தில் கடப்பாக்கல்திட்டு அமர்வு கூட்டத்திலிருந்த  பெண்களில் ஒருத்தி 

“என்னம்மா! உன் வீட்டுகாரர் தாங்கிப்பிடிக்க பக்கத்தில் இல்லாமலே தனியா நின்னுல்லாம் தண்ணி சேந்திற. அதிசயந்தாம்போ. அக்கா பார்த்துக்கங்க இன்னைக்கு மழதான் வரப்போகுது” நக்கலடித்தவளையும் அதற்கு சேர்ந்து சிரித்தவர்களுக்கும் பதிலாக அழகான புன்முறுவலைத்தந்து கடந்து போனாள் யசோதை. 

யசோதை வீட்டிற்குள் வந்து கதவை சாத்திக்கொண்டதும் கூட்டத்தொடரில் இவள் தான் பேசுபொருளாவாள்  என்பது தெரிந்தகதை தானே. 

“ஹாங் பாருங்கப்பா பாருங்க  ஒன்னும் தெரியாத பாப்பா போய் போட்டுகிட்டா  தாப்பா” என்றாள் ஒருத்தி 

“ஆனாலும் இவளுக்கு இந்த அதுப்பு ஆகாதுக்கா! என்றொருத்தியும்  

“இப்ப பாரேன். குளிச்சு மினுக்கிட்டு இப்ப நல்லவளாட்டம் வீட்டுக்காரனுக்கு காத்திருப்பா, இவ இப்படி ஊர் மேஞ்சிட்டு வர்றதெல்லாம் அந்த அப்பிராணிக்கு தெரியாமத்தான் செய்யறா போல. ராத்திரிக்கு இவன் பகலுக்கு எவனோ! “என்று அங்கலாய்த்தாள் மற்றொருத்தி. எதோ தானே விளக்குப்பிடித்து பார்த்ததுப்போல். 

ஆளாளுக்கு கெக்கலி கொட்டினர். 

வித்யாதரனும் அலைந்து திரிந்து அலுத்து களைத்து வந்தாலும் எந்நேரமென்றாலும் குளித்துவிடுவான். 

இரவு உணவை உண்டபடியே இருவருக்கும் அந்த நாள் எப்படி கழிந்ததென பேசித்தீர்ப்பார்கள். 

சடுதியில் உறங்கியும் விடுவார்கள். 

நடுநிசியில் எந்நேரத்திலோ  விழித்த வித்யாதரன் நீர் அருந்தவென  எழமுயன்றான். 

யாசோதையோ அவன் மீது கையை போட்டிருந்தாள். 

ஆழ்ந்த உறக்கத்தில் அவளையும் அறியாமல் கையை அவன் மீது போட்டிருப்பாள். மற்றபடி அவள் தான் அவனை தொட்டதே இல்லையே.. 

மெல்ல அவளின் கையை தன்மேல் இருந்து நகர்த்தினான் வித்யாதரன். யசோதை குழந்தை போல் சிணுங்கினாள். 

அவன் முகத்தில் நகை பூத்தது. அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும்போல் தானிருந்தது. 

ஆனால் உறக்கத்திலிருக்கும் அவளை அச்சுறுத்த விருப்பமில்லாமல் எப்போதும் போல் தன்னை கட்டுபடுத்திக்கொண்டவனாக நீர் அருந்தி விட்டு திரும்பப்படுத்தான். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here