நெடுநல் அத்தியாயம் -27

0
309

யசோதை மாதவிடாய் நாட்களில் எங்கும் வெளியே அலைவதில்லை. 

அவளுக்கு பூரண ஓய்வு தேவையாக இருக்கும். வலியோடு கூடவே உடலும் மனமும் சோர்ந்தே இருக்கும் நாட்கள் அவை. 

உதிரத்தை கண்ணால் பார்த்தால் தலை சுற்றுவது அவளுக்கு தான் நின்றபாடில்லையே. 

ஆனால் வயதாகிற காலம் வரை மாதம்தோறும் இந்த உதிரப்போக்கு நாட்களை வருடக்கணக்கில் அவள் சகித்து சமாளித்துதான் ஆகவேண்டும்.

அவளை எழுந்து எந்த வேலையையும் செய்யவிடாமல் தானே எல்லாவற்றையும் முடித்துவைத்து, மதியம் நேரத்திற்கு சாப்பிடச்சொல்லி மோர் உட்பட கலந்துவைத்துவிட்டுப்போயிருக்கிறான் வித்யாதரன். 

இந்நாட்களில் அதிக நேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு கடினம். கிராம்ப்ஸ் அதிகமிருக்கும். ஆனால் படுத்தே கிடப்பதும் நோய்மையை கிளர்த்திவிடுமென்பதால் ஜன்னல் திரைத்துணியில் பாதி முடித்து வைத்திருந்த எம்பிராய்டரி கைவேலையை தொடர எழுந்து வெளியே வந்து வீட்டுவாசலையொட்டிய கடப்பா திட்டின்மேல் அமர்ந்தாள். 

வானமும் மப்பும் மந்தாரமுமாக மழை மூட்டத்துடன் நன்றாக இருந்தது.  காம்பவுண்டிற்குள் இந்த புற மூன்று வீடுகளுக்கும் அந்த புற மூன்று வீடுகளுக்கும் நடுவே வரிசையாக தென்னமரங்களிருக்கும். நல்ல காற்றும் மூட்டமும் மனச்சோர்வை கொஞ்சம் நீக்கி விட்டிருந்தது. பாட்டுக்கேட்டுக்கொண்டே எம்பிட்ராய்டரி போட்டுக்கொண்டிருந்தாள். 

நான்காம் வீட்டுக்காரப்பெண் கேட்டருகே நின்று இடுப்பில் வைத்து பிள்ளைக்கு சோறூட்டிக்கொண்டிருந்தாள். 

வீட்டுக்காரம்மாவும் இன்னும் இரண்டு வீட்டு பெண்களும் தரையிலமர்ந்து தாயம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். 

இவள் கைவேலையை பார்த்து தனக்கும் ஒரு ப்ளவ்ஸில் எம்ப்ராய்டரி போட்டுத்தரமுடியுமா என விசாரித்துக்கொண்டு நின்றாள் மூன்றாம் வீட்டுப்பெண்.  

அப்பொழுதுதான் அது நடந்தது. 

மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் யசோதையின் அண்ணன். 

அவனைக்கண்டு திகைத்து மிரண்டு அவள் முழுவதுமாகக்கூட திட்டிலிருந்து எழுந்துமுடித்திருக்கவில்லை. 

வந்த வேகத்தில் அவளின் கூந்தலைப்பற்றி தரையில் தள்ளி ஆத்திரம் தீர நொறுக்கி எடுக்கத்தொடங்கினான். 

வீட்டில் அவன் அடித்தால் தடுக்க அம்மா இருப்பாள். இங்கே அவனுடைய அத்தனை அடிகளையும் உதைகளையும் யசோதை வாங்கிக்கொண்டிருந்தாள். தடுப்பார் எவருமில்லை. 

அத்தனை பெண்களும் செய்வதறியாது வேடிக்கை மட்டும் பார்த்தபடி நின்றனர். 

“அப்படி என்ன அரிப்புடி  உனக்கு, பார்த்து வச்ச மாப்பிள்ளையை விட்டுட்டு இந்த பிச்சைக்கார அனாதை நாயோடு   ஓடிவந்திருக்க. அவனைவிட இவன் என்னடி உனக்கு உசத்தி. மானம் மரியாதையெல்லாம் போச்சு. உன்னால அப்பாவுக்கும் எனக்கும் தலையை வெளில காட்டமுடியல. என்ன திணக்கமிருந்தா இப்படி பண்ணுவ. உன்னை கொன்னு போட்டாதான் என் ஆத்திரம் தீரும்” 

உண்மையிலேயே அவன் அடிக்கிற அடியில் யசோதை செத்துவிடுவாள் போல்தானிருந்தது. 

கேட்டுக்கு வெளியே இருந்தும் ஜனங்கள் கூடி என்ன நடக்கிறதென பார்க்க நிரம்பிவிட்டனர். 

அதில் யாரோ சிலர் தான் அவனைப்  பிடித்து இழுத்து யசோதை மீதான தாக்குதலை நிறுத்தினார்கள். 

மாட்டை அடிப்பதுப்போல் அவன் போட்டு அடித்த அடிகளுக்கு மற்ற வீட்டுப்பெண்கள் மிரண்டு போயிருந்தனர். ஆனால் அவ்வளவு அடிக்கும் யசோதை கத்திக்கதறவோ அழவோ காணோமே.. 

அவள் மயங்கி சுயநினைவை இழந்திருந்தாள். 

சமாதானப்படுத்த முயன்ற அந்த சிலர் ஏன் என்னவென்று அவனிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

தங்கை தரையில் மயங்கிக்கிடக்கிறாள் என்பதெல்லாம் உரைக்கிற ஜென்மம் அவனில்லையே.. 

யாரோ அவள் முகத்தில் தண்ணீர் அடித்து தெளிவித்த போதும், இருவர் அவனை பிடித்து நிறுத்த முயன்றபோதும் திமிறிக்கொண்டு அவளருகே போனவன் 

“நான் சொல்றது  நடக்குதா இல்லையான்னு பாரு, ஆசை தீர்ந்ததும் உன்னை குப்பை மாதிரி கசக்கி தெருவில் எறியப்போறான். அப்புறம் நடுத்தெருவில் நின்னு பிச்சையெடுக்கப்போற அப்ப தெரியும்டி உனக்கு” என்று சபித்தபடி வயிற்றில் ஒரு எத்து எத்திவிட்டுப்போனான். 

அவளை யார் வீட்டினுள் கிடத்தியது என்பதெல்லாம் யசோதைக்கு தெளிவாக புரியவில்லை. எதோ பருகக்கூட கொடுத்தார்கள். அவள் கண்களை மூடி அப்படியே சுருண்டுபடுத்துக்கிடந்தாள். 

அவள் வீட்டுக்கதவு திறந்தேதான் இருந்தது. வெளியே இருந்து வந்தவர்களெல்லாம் போன பிற்பாடு வீட்டுக்காரம்மா போய் கேட்டை பூட்டிக்கொண்டு வந்தாள். 

திரும்ப அந்த அண்ணன்காரன்  வந்துவிடப்போகிறானோ என்கிற அச்சத்தில். 

சமாளிக்க இந்நேரத்தில் வீட்டு ஆண்கள் யாருமே குடியிருப்பில் இல்லையே. 

இப்பொழுது யசோதையின் கதை அவளின் அண்ணன் பேச்சிலிருந்து மற்றவர்களுக்கு தெரியவந்தது. ஆனால் கதையானது காதிற்கு காது சில பல மாற்றங்களோடு சொல்லப்பட்டு 

கண் காது மூக்கெல்லாம் வைத்த இறுதிவடிவக்கதை இப்படி இருந்தது. 

யாசோதை நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வசதியான வீட்டுப்பெண். நல்ல இடத்தில் மணம் முடித்தும் கொடுத்திருந்தார்கள். ஆனால் கட்டினவனை விட  இவள் இந்த வித்யாதரனை பெரிய மன்மதன் என்று  இவனோடு ஓடி வந்த ஓடுகாலிப்பெண். 

கட்டியவனை விட்டு அடுத்த ஆம்பளையோடு வந்து கூசாமல் குடும்பம் நடத்திக்கொண்டிருப்பவள். 

“பெத்து வளர்த்தவர்களை தலைகுனியச்செய்கிற இவளெல்லாம் பெண் தானா!” 

“ஹ்ம்ம் அப்புறம் அவ அண்ணன்காரன் போட்டு அடிக்காம என்ன செய்வான்.”

“மனசாட்சி உறுத்துது போல. அதான் அண்ணன்காரன் போட்டு அந்த அடி அடிக்கிறான். பேசாம வாங்கிக்கிட்டாளே” 

“ப்பா இப்படி  பொண்ண பார்த்ததேயில்ல. இதுங்களால தான் நல்ல குடும்பத்து பொண்ணுங்களுக்கும் சேர்ந்து கெட்டபேராகுது.”

“நான் அன்னைக்கே சொல்லலை, இதெல்லாம் ஒருத்தன் கூட மட்டும் அடங்கி குடும்பம் நடத்திறதில்ல. பலபட்டறை கேசுன்னு.”

இன்னும் இன்னும் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசப்பட்டது.

அரைமயக்க நிலையில் கிடந்தாலும்  யசோதையின் காதுகளில் இதெல்லாம் விழவே செய்தது. 

 சின்ன அத்தை சொன்ன ‘ ஊர் வாய்  நரம்பில்லாத நாக்கோடு எப்படியும் வளைத்து நெளித்து  கண்டபடி பேசும்’ என்பது.. 

உடல்மேல் பட்ட அடியைவிட அவள் செய்யாத ஒன்றை செய்ததாக எழுந்த பேச்செல்லாம் உள்ளுக்குள் வலித்து வருந்தத்தான் செய்தது. 

பேசுகிற ஒவ்வொருவரிடமுமா போய் நின்று இல்லை நான் அப்படியானவள் இல்லை என்று நிரூபித்துக்காட்ட தன்னிலை விளக்கம் சொல்லவா முடியும்!! சொன்னால்மட்டும் !!

யசோதை கண்களோடு காதுகளையுமே இறுக்கப்பொத்தி சுருண்டு கிடந்தாள். 

விஷயம் எப்படி வித்யாதரனை எட்டியதோ அரக்கப்பரக்க வந்தான்.

யசோதையை அள்ளி எடுத்து மடியில் கிடத்தி  வெந்நீரில் நனைத்து ஒத்தடம் கொடுத்தும், முதுகில் வருடி ஆறுதல் படுத்திக்கொண்டிமிருந்தவனிடம் 

“இதப்பாரு தம்பி, நீ குடிவரும் போதே சொன்னேன்.  காம்பவ்ண்டிற்குள் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. குழந்தை குட்டிகளோடு குடும்பமா குடியிருக்க இடம். இன்னைக்கு இவ அண்ணன்காரன்னு ஒருத்தன் வந்தமாதிரி நாளைக்கு எவன் வந்து பிரச்சனை பண்ணுவானோன்னு நெருப்ப கட்டிட்டு நிக்க முடியாது. 

வேற இடம் பார்த்துக்க. இங்க தோதுபடாது. உடனே வீட்ட காலி பண்ணிக்க”  என்றுவிட்டுப்போனாள் வீட்டுக்காரம்மா. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here