நெடுநல் அத்தியாயம் -31

0
270

ஏணியும் பாம்புமான பரமபத ஆட்டம்காணும்  தொழில் வளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டாவது படிகளில் தான் ஏறியிருந்தான் வித்யாதரன். 

அதற்குள் மீண்டுமொரு பெருஞ்சறுக்கலோடு தலைக்குப்புற விழ நேர்ந்துவிட்டது. அதுவும் அவனின் தொழில் நாணயத்திற்கு விழுந்த அடியாக பெரும் கரும்புள்ளியோடு.

புறநகரில் ஒரு பெருநில விற்பனையை முடித்துக்கொடுத்திருந்தான். 

நல்ல கமிஷன் தொகையும் கிடைத்திருந்தது. 

விற்றுக்கொடுப்பதற்கு முன் எப்போதும் போல வில்லங்க விவகாரங்களை, பத்திர நகல்களை சரிபார்பதையெல்லாம் செய்துதானிருந்தான். 

ஆனால் விற்றவன் போலி ஆவணங்கள் தயாரித்து விற்று ஏய்த்திருக்கிறான். 

நம்பி ஏமாந்து போய் வாங்கினவனோ சும்மாவா இருப்பான்! அதுவும் பணபலமும் அரசியல் பின்புலமும் உள்ளவன் வாங்கியன். 

ஏமாற்றி விற்றவனோ உன்னால் ஆனதை பார்த்துக்கொள்ளென்று சொல்கிற பண பலமும், அந்த பணத்தை வைத்து வாங்கிய ஆள் பலமும் கொண்டவன். 

இடையே மாட்டிக்கொண்டவன் வித்யாதரனே. தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். நியூஸ் பேப்பரில் நில மோசடி விற்பனை விவாகரத்தில் இவன் பெயரும் போட்டோவோடு. 

சிறுகச் சிறுக நல்ல பெயரெடுத்து  ஒரு லெவலை எட்டியிருந்தயெல்லாம் ஒரு கைச் சொடுக்கல் கணத்தில் காணாமல் போக்கட்டித்தது. 

வீட்டில் நிறைசூலி யசோதை தனியாக.. 

கேசவ பெருமாள் மகுடியை அழைத்துவந்து யசோதையின் வீட்டில் விட்டுவிட்டு “பாரம்மா சோதனைகாலம் வரதான் செய்யும். ஒன்றுமில்லை. இதுவும் கடந்துபோகும்.

நீங்க இரண்டு பேருமே யாருக்கும் எந்த தீங்கும் நினைத்திடாதவர்கள். உங்களுக்கும் எந்த தீங்கும் நடக்காது. இந்த நேரத்தில் உனக்கு மன அமைதி முக்கியம். வித்யாதரன் சமாளித்து விடுவான். வீண் கவலை எதும் தேவையில்லை புரிந்ததா. 

இந்தா இந்த புத்தகங்களை படிச்சுக்கிட்டு அமைதியா ஒய்வெடும்மா.

எல்லா சிக்கலும் சரியாகி வித்யாதரன் திரும்பி வரட்டும்.  மகுடி உன் கூட இருந்து பார்த்துகட்டும். சொன்னது நினைவிருக்கட்டும். அமைதியாக இரும்மா. ” என்று விட்டுப்போனார்.

யசோதையும் அமைதியாகவே தான் இருந்தாள். குளிப்பது உண்பது உறங்குவது நடைபயிற்சி உடற்பயிற்சி எல்லாவற்றையுமே செய்துகொண்டிந்தாள். 

ஒரு கீ கொடுக்கப்பட்ட பொம்மையைப்போல மகுடி சொல்லச்சொல்ல செய்தவையே. மற்றபடி பெரும் அமைதியோடு சாவி முடுக்கப்படாத பொம்மையைப்போல் முடங்கிக்கிடந்தாள். 

வித்யாதரன் வீடு திரும்பியபோதும் அதே நிலைதான்.  அவளிடமிருந்த துள்ளல் ஆனந்தம் சிரிப்பு, பேச்சு எல்லாமும் காணாமல் போயிருந்தது.  

அவனைக்  கட்டியணைத்து கிடந்தாளேயொழிய அவனிடமும் எதுவும் பேசவோ கேட்கவோ இல்லை. அவனாக எதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னாள். 

மகிடியிடமும் அந்த பத்து நாட்களாக அப்படித்தான்.

“எதாச்சும் கேட்டாதான் அக்கா பதில் பேசுதுண்ணா” என்றாள்.  

மகுடியை பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துவிட்டு கேசவப்பெருமாளிடம்.  

“சார் கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்புறம் தொழிலை திறக்கிறேன். ஒரு இரண்டு மூனு மாதங்களுக்கு. அதுவரை பூட்டிக்கிடக்க வேண்டாம். நான் பொருட்களை வெளியே எடுக்கிறேன். நீங்க யாருக்காவது வாடகைக்கு தந்துடுங்க.”  

“நீ சொல்றமாதிரி இரண்டு மூனு மாசத்துக்கு கேப் எடுத்துக்கப்பா. நல்லதுதான். குழந்தை பிறக்கிற நேரம் கூட இருந்தா பொண்ணுக்கும் அனுசரணையா இருக்கும். ஆனா காலி செய்யத்தேவையில்லை. இது உன் இடம். பூட்டியே கிடக்கட்டும். ஒன்றுமில்லை. வாடகை பத்தியெல்லாம் யோசிக்க தேவையில்லை. போப்பா நீயும் ஓய்வெடுத்துக்க. சோர்ந்து தெரிகிறாய் பார்.”

வித்யாதரன் கொஞ்சமில்லை நிறையவே உடைந்துபோயிருந்தான். உளைச்சலோடுமிருந்தான். 

ஆனால் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. யசோதையின் முன் இயல்பாக எப்போதும் போல் கலகலப்பாக சிரித்துப்பேசவே முயன்றான். 

அவள் தான் பதிலுக்கு சிரிக்காத பொம்மையாகிவிட்டிருந்தாள். 

அவனை விட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டு கிடந்தாள். 

எந்த பிரச்சனையையும் சமாளித்து மீண்டு வந்துவிட முடியுமென்ற நம்பிக்கை வித்யாதரனுக்கு இருக்கிறது. சிறுவயதிலிருந்தே படாத அடிகளா! சந்திக்காத பிரச்சனைகளா! இத்தனை தூரம் வந்திருக்கிறானெனில் இனியுமே எழுந்து ஓடுவான். அதில் சந்தேகமில்லை. 

இப்போது தொழிலை பூட்டி வைத்தாலும் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது மூன்று ஜீவன்களுக்காகும் செலவையும் சமாளித்துவிட முடியுமென்கிறளவு சேமிப்பும் இருந்தது. பணப்பிரச்சனை இல்லை. 

ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட யசோதையின் அதீத மெளனம் அவனை மருட்டியது. 

பிரசவ காலம் நெருங்க நெருங்க அவனுக்கே உள்ளூர ஒரு சொல்வதற்கியலாத அச்சம் குமிழ்ந்திருக்கிறது எனும் போது யசோதைக்கு எப்படி இருக்கும். கூடவே இறுதி நேர உபாதைகளையும் சேர்த்து சுமக்கிறவள். 

“யசோ, என்னம்மா உனக்கு உள்ளுக்குள்ள எதாவதும் தொந்திரவா ஃபீலாகுதா!?”

“இல்லையே வித்யா”

“அம்மாவ பார்க்கனும்போல இருக்கா யசோ!?”

ஒரு கணம் யோசித்து இல்லையென்ன்று தலையாட்டினாள். 

இந்த நேரத்தில் அத்தையை இங்கே அழைத்துவர முடிந்தால் நன்றாயிருக்கும், பிரசவ நேரத்தில் தாய் உடனிருப்பதை எல்லா பெண்களுமே விரும்புவார்கள்.

ஆனால் அதற்கு யசோவின் தந்தை மனது வைக்க வேண்டும். 

யசோதையின் தாய் எங்காவது கோயிலுக்கு போகும்போது வெளியே இருந்து தான் மகளையும் மருமகனையும் அழைத்து பேசுவாள். அவளாக அழைத்தால் தான் உண்டு. 

இதுவரை யசோதையின் தந்தையிடம் நேரடியாக வித்யாதரன் பேசியதேயில்லை. பார்த்ததும் இல்லை. 

அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டவன் நிலையை எடுத்துச்சொன்னான். தாய் அருகிலிருந்தால் யசோதைக்கு ஆறுதலாக இருக்குமென்பதை தனிவாகவும் மரியாதை கலந்தும் பேசியிருந்தான். 

” அதானே, என்னடா எதையாவது சொல்லி ஒட்டிக்கொள்ள இன்னும் வரக்காணோமேன்னு பார்த்திருந்தேன். இதோ வந்தாச்சில்ல. அப்பத்தானே இங்கிருந்து கறக்கமுடியும். புள்ள கையில் கழுத்தில போட்ருந்ததெல்லாம் எப்பவோ வித்து தின்னுருப்ப.”

“சார், நான் எழுதி கையெழுத்து  போட்டுத்தரேன். உங்களிடமிருந்து நானோ யசோதாவோ ஒத்தரூபாயைக்கூட எதிர்பார்கல, எதிர்பார்க்கவும் மாட்டோம். இது என் சத்தியமான வார்த்தை. பண உதவிக்காக இல்லை சார். நான் கேட்பது  யசோவின் மன அமைதிக்காக. அனாதரவானவர்களுக்கு  செய்யும் உதவியா நினைச்சுக்கங்க.” 

“உன் ஜாதி என்ன?”

“சார் நான் சொல்லவந்ததை..”

“நீ என்ன சாதியில் பிறந்தவன்னு கேட்டேன்!?”  

ஒரு கணம் கண்களை அழுந்தமூடி

” நான் எந்த ஜாதியையும் மதத்தையும்  சார்ந்து வாழ்பவனல்ல” என்றான் அழுத்ததுடன். 

அதைக்கேட்டு அவர் சிரித்தார். ஏளனச்சிரிப்பு

“ஊர்ல கொள்ளப்பேர் இப்படித்தான் சொல்லிட்டு திரியுறானுங்க. 

பிறந்த சாதிப்பேர சொல்றதுக்கு கூசுதுபோல.”

“நல்ல குடியில் பிறந்திருந்தா வெக்கம் மானம் ரோஷம் சூடு சுரணையெல்லாம் இருந்திருக்கும்.” 

தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். அத்தோடு  மொத்தமாகவே வீட்டின் தொலைபேசி இணைப்பையே  எடுத்துவிட்டார் மனிதர். 

அவமானங்களைப் படுவதும் வித்யாதரனுக்கு புதிதில்லை. 

அவனால் அவன் மனைவியை பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் பிரசவிக்கும் போது அருகே ஒரு பெண் துணையிருந்தால் நல்லது. 

மகுடியை அழைத்து வந்து கூட இருக்க வைக்கலாம். ஆனால் பாவம் சின்னப்பெண். அனுபவமிருக்க பெண் துணையென்றால்!!.

வித்யாதரன் அவனின் கூட பிறந்த தமக்கைக்கு கடிதம் எழுதினான். 

“ஏதேது துரைக்கு கூடபொறந்த பொறப்பா நானொருத்தி இருக்கேன்னு நினைப்பெல்லாம் இருக்குதாட்ருக்கு!?அப்பவே ஊக்காலிப்பயலா திரிஞ்சவன் தானே நீயிஊட்டுக்காரிவேற வந்தாச்சு.ஒட்டுக்கா மறந்துபோட்டியோன்னுபாத்தேன்  தேவைக்கு மட்டும் கூப்பிட்றியே. மெட்ராஸ்ல நல்லத்தானே இருக்க. நான் இங்கே நாதியத்து கிடக்கிறேனே. என்னன்னு பார்த்தியா! தம்பியா இருந்து அக்காளுக்கு என்ன செஞ்ச!? 

சின்னவனுக்கு மட்டும் மாசாமாசம் பணம் அனுப்பிவிட்றியாமா!! எனக்கு செய்ய ஆருருக்கா!!பொட்டப்புள்ளையா பொறந்து தொலைச்சேன்.  ஏன்ரா அக்காளுக்கும் சேர்த்து செஞ்சா ஆகாதாக்கும்!!.  அப்பனும் ஆத்தாளும் உசிரோட இருந்தா இப்படி அத்துவாணமா கிடந்து லோல்பட விட்ருபாகளா!? 

போச்சாது..

உன்ர மச்சான் சோலியத்த  வெட்டிப் பண்ணாட்டையா திரிஞ்சாலும்  வக்கணையா பேச்சுக்குக்கொன்னும் குறைச்சலில்ல. பேச்சுக்கு பேச்சுவக்கத்தவன் வீட்டுல பொண்ணெடுத்தேனே வெடுக்குனு எகத்தாளம் பேசி சடவு பிடிக்கதும்மாமியாக்காரி சாடை பேசறதுமா  இக்கிட்டுல கிடந்து  சீரழியறேன்.

கெரகம் புடிச்சதுககிட்ட பொறந்தவன் கூப்பிட்றான்னு கேக்கவா முடியும்!!. தாட்டிவுட்டுப்போட்டுத்தான் மத்த சோலிய பாக்குங்களாக்கும்!. பத்தாக்குறைக்கு பெத்ததுங்க இரண்டோடவும் நோக்காடும் சீக்குமா முச்சூடும்  ஓரியாட்டம். அக்கபோரு தீரல. “

வருவதற்கில்லை  என்று எழுதிவிட்டாள். 

ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலை 

கருவுற்றிருக்கும் போது மன அழுத்தத்தை வளரவிடக்கூடாது. அது வயிற்றிலிருக்கும்  குழந்தையையும் பாதிக்கும். இதற்கு மாத்திரை மருந்தும் தரமுடியாது. அதுவும் குழந்தையை பாதிக்கும் என்றுவிட்டார் டாக்டர். 

அவனாலான எல்லா முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறான். 

யசோதையை இயல்புக்கு கொண்டுவர முடியவில்லை. 

“யசோ ஏன்ம்மா, என்ன செய்யுது. ஏன் உட்காந்திருக்க.” 

யசோதைக்கு உடல் முழுதும் மின்னல்வெட்டைப்போல வலி காண்கிறது. வியர்த்து, சுவாசித்தலும் சிரமாயிருக்க எழுந்தமர்ந்திருந்தாள். 

முதுகில், இடுப்பில், வயிற்றில் எங்கேங்கே வலிக்கிறதென இனம்காணவியலவில்லை அவளால். 

வித்யாதரன் எழுந்து போய் சீரகமிட்டு காய்ச்சிய நீரை மிதச்சூட்டில் எடுத்து வந்து பருகச்செய்தான். 

மெல்ல முதுகில் வருடிக்கொடுத்தபடி “இன்னமும் வலிக்கிறதா யசோ” என வினவினான். 

இல்லை என்று தலையாடினாள். 

போய் நடந்துவிட்டு வரலாமா என வினவினாள். 

நடுநிசி மணி ஒன்று. இந்நேரத்தில் இந்த ஏரியாவில் கதவை திறந்து வெளியே போவது பாதுகாப்பற்றது.

வீட்டுக்குள்ளயே குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டே இருந்தாள்.பசிக்கிறது என்றாள்.  

வித்யாதரன் கொஞ்சம் கஞ்சி பதமாக காய்ச்சி உப்பிட்டு உண்ணக்கொடுத்தான். 

மீண்டும் மின்னலாய் வலி தாக்கத்தொடங்கியது. யசோதை வித்யாதரனின் கைகளைப்பற்றிக்கொண்டு 

“பயமா இருக்கு வித்யா” என்றாள். 

“பயப்படவேண்டாம் யசோ ஒன்னுமில்லை. சில நேரம் இப்படி பொய்வலி வரும் சரியாயிடும்ன்னு அன்னைக்கு வந்தப்ப துளசி சொன்னாங்கல்ல. நான் நீவித் தரேன். சரியாகும். சரியாகலைன்னா ஹாஸ்பிடல் போவோம்.”

சரியானதுபோல் தான் இருந்தது. 

யசோதை படுத்துக்கொள்ள விரும்பவில்லை. மீண்டும் நடக்கத்தொடங்கினாள். 

வலி விட்டு விட்டு மீண்டும் தொடங்கியது. யசோதை இடுப்பை பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றுவிட்டாள். 

என்னென்ன செய்யவேண்டுமென துளசியிடம் முன்பே கேட்டு எழுதிவைத்திருந்தான் வித்யாதரன். 

விட்டு விட்டு வலிக்கிறதெனில் பொய்வலி கிடையாது. 

டாக்டர் கொடுத்திருந்த டேட்டுக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்க யசோதைக்கு வந்திருப்பது பிரசவ வலிதான். 

மெல்ல அவளை கட்டிலில் அமர்த்திவிட்டு வலி காண்கிற நேரம் கையை பற்றியபடி முதுகை வருடி அருகேயிருந்தான். மூச்சுப்பயிற்சி செய்யச்சொன்னான். மெல்ல வலி குறையவும் 

எழுந்து போய் ஹாஸ்பிடலுக்கு எடுத்துப்போகவென எழுதிவைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அதிவிரைவில் பேக் செய்து. 

அடுத்த வலி வந்து தணிந்ததும் வெந்நீர் வைத்து யசோதையை குளிக்கச்செய்து. அடுத்த ஈடு சுடுநீரை அவளுக்கு இடுப்பில் படும்படி எடுத்து ஊற்றிக்கொண்டே இருந்தான். 

அவதி கொஞ்சம் நிதானப்பட்டதுபோல் இருந்தது யசோதைக்கு. 

நல்ல தளர்வான உடை உடுத்தி படுத்துக்கொள்ளச்செய்தான். 

ஒரு மணியிலிருந்து மணி மூன்றரைக்குள் எத்தனை முறை வலி வந்தது. எத்தனை நிமிடங்களின் இடைவெளியில் என்பதை குறித்துக்கொண்டே தான் இருந்தான். 

வலி வந்ததும் எந்நேரம் என்றாலும் யோசிக்காமல் வந்து டெலிபோனை உபயோகித்துக்கொள்ள சொல்லியிருந்தார்கள்  ஹவ்ஸ் ஓனர் வீட்டில். 

எந்நேரமென்றாலும் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண வண்டியோடு வருகிறோமென்றிருந்தார் துளசி. 

அவர்கள் வீட்டோடு தங்கி வேலைபார்க்கும் மரகதம் அம்மாளை பிரசவ நேரத்திற்கு துணைக்கு வைப்பதாகவும் சொல்லிவிட்டு சென்றார். 

முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை என்று தொடங்கியிருந்த வலி..

முப்பதிலிருந்து இருபதில் தொடரும்போது வித்யாதரன் ஹவ்ஸ் ஓனர் வீட்டினரை  எழுப்பி மன்னிப்புக்கேட்டுக்கொண்டு அவர்கள் வீட்டு தொலைபேசியிலிருந்து துளசிக்கு பேசினான். 

அடுத்த இருபத்தியைந்து நிமிடங்களில் துளசி ரங்கநாதன் தம்பதி மரகதம் அம்மாளையும் அழைத்துக்கொண்டு வந்தேவிட்டார்கள். 

ஹெல்த் செண்டரில் ஃபார்ம் ஃபில் செய்து அட்மிஷன் போடுகிறவரை கூடவே இருந்து, பின்னும் தேவைப்படும்போது உடனே அழைக்கும்படி சொல்லிச்சென்றார்கள். 

பிரசவ வார்ட் தனி ப்ளாக்காக இருந்தது. கட்டிடத்தின் உள்ளே கூட யாரையும் அனுமதிக்கவில்லை. 

வித்யாதரனையும் மரகதம் அம்மாளையும் வாசலோடு நிறுத்திவிட்டு யசோதையை மட்டும் சக்கர நாற்காலியில் அமர்த்தி உள்ளே அழைத்துச்செல்ல முயன்றார்கள். 

யசோதை வித்யாதரனின் கையைப்பற்றிக்கொண்டு விடவேயில்லை. உள்ளே தனியே போகமாட்டேனென்று பிடிவாதம் பிடித்தாள். 

அவளுக்கு எப்போதுமே ஹாஸ்பிடல் என்றால் அலர்ஜி. ஒவ்வொருமுறை செக்கப்க்கு வரும்போது கூட வியர்த்து விருவிருத்துப்போவாள். 

வித்யாதரனின் கைகளை இருக்கமாக பற்றிக்கொண்டுமிருப்பாள். 

இப்பொழுதோ!! 

“ப்ளீஸ் சிஸ்டர் ஒரு ஐந்து நிமிஷமாவது கூட உள்ளே வந்து விடும்வரை  அனுமதியுங்கள்.” 

புரிஞ்சுக்கோங்க சார் உள்ளே ஒன்லி ப்ரெக்னெண்ட் லேடீஸ் மட்டும் தான் அனுமதி. அவங்கவங்க வீட்டாளுங்கலெல்லாம் பாருங்க இந்த மரத்தடியில் நிறைய பெஞ்சஸ் போட்ருக்காங்க. இங்க தான் வெயிட் பண்ணுவாங்க. 

கூட அட்டெண்டர் கூட அனுமதி கிடையாது. பிரசவம் முடிஞ்சு தாய் சேய் வார்டுக்கு மாத்தினப்புறம் தான் கூட யார்னா இருக்க அனுமதிப்பாங்க.இங்கேயே உட்கார்ந்திருங்க எதுனாலும் நாங்க வந்து சொல்லுவோம். நீங்களே இப்படி டென்ஷன் ஆனா எப்படி. தைரியம் சொல்லி அனுப்புங்க. ப்ரசீஜர்ஸ் பண்ணனும் நேரமாச்சு. ” என்றாள் நர்ஸ். 

அவனுக்கு யசோதையை தெரிந்த நாளிலிருந்து இதுவரை கண்டிருக்காத, ஒரு சொலொண்ணாத  பரிதவிப்பைக்காட்டியது அவள் முகம்

வித்யாதரன் யசோதையின் முகத்தை கையிலேந்தினான். 

“யசோ இங்கே என்னைப்பார். உள்ளே ஒரு ஆண் வந்தா மற்ற பெண்களுக்கு சங்கடமாய் இருக்கும்ல. நான் இங்கேயே நின்றாலும் உன் கூடவே தான் இருப்பேன். கூட இருக்கிறதா நினைச்சுக்கோ யசோ. தைரியமா உள்ள போம்மா. எல்லாம் சரியா இருக்கும். நம்புமா ப்ளீஸ்” 

யசோதை சரியென்று தலையாட்டினாள். அவன் கலக்கத்தை மறைத்துக்கொண்டு தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தான். 

 யசோதைக்கு கருப்பை வாய் திறப்பு. பிபி அளவு, குழந்தையின் இதயத்துடிப்பினளவு பரிசோதனைகள் முடிந்ததும்   ஹாஸ்பிடல் கவுனை உடுத்திக்கொள்ளச் செய்தார்கள். 

வேறொரு அறைக்கு அழைத்துப்போய் பிறப்புறுப்பு பகுதியில் ஷேவ் செய்கிறோமென்றதும் யசோதை தேவையில்லை முன்னமே  செய்தாயிற்று  என்ற போதும் இல்ல சிஸ்டர் எனிமா கொடுக்கும் முந்தி இதுவும் ஒரு ப்ரசிஜர்.இதுக்கு அப்புறம் எனிமா கொடுப்போம் ஒத்துழையுங்கள் என்றாள் நர்ஸ். 

யசோதைக்கு இது எதுவும் சுத்தமாக பிடிக்கவில்லை. பல்லைக்கடித்து சகித்தாள். இனியொருதரம் ஜென்மத்திற்கு கருத்தரித்துவிடக்கூடதென்று அவள் 

மனம் நொந்துகொண்டது. 

 மெல்ல இந்த வரண்டாவில் நடந்து கொண்டிருங்கள். இதோ இந்த பக்கம் டாய்லெட் அறைகள். குறைந்தது மூன்றுமறையாவது போக வேண்டியிருக்கும். ரொம்பவும் வரண்டுபோனால் மட்டும் தொண்டையை நனைக்கிற அளவிற்கு தண்ணீர் குடியுங்க. அதிகம் வேண்டாம்.  என்றுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போய்விட்டாள் நர்ஸ். 

இருபுறமும் அறைகளும் டியூப்லைட் வெளிச்சத்தோடுமிருந்த அந்த நீள வரண்டாவில் நடப்பது வெளியேற முடியாத எதற்குள்ளோ அடைபட்டதுபோன்றதொரு திகில் உணர்வை கிளம்பிவிட்டது. 

வெளியே பகலா இரவா என்பதைக்கூட அறியமுடியாத, நாலாப்புறமிருந்தும்  வலி அலறல்களும் அழுகுரல்களும் கேட்டுக்கொண்டே தனியே விடப்பட்டு நடந்துகொண்டிருந்தது ஒரு அச்சக்கிளரி அனுபவம். 

அத்தோடு சம்மட்டி இடிகளாய் வலி வேறு. யசோதை போட்டிருந்த கவுன் உடையை இறுக்கிபிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்று  மூச்சில் கவனத்தை வைத்து மனதிற்குள் ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே  வலியோடு போரட்டம் நடத்திக்கொண்டிருந்தாள். 

அந்த பக்கமாக கடந்த இரு பயிற்சி நர்ஸ் பெண்கள். 

“ஏன் இப்படி நிக்கிறீங்க.  வலிக்குதா!”

“என்ன முதல் வலி ராத்திரி ஒரு மணிக்கு வந்ததா! இப்போ மணி ஏழு. இன்னமும் இப்படி நின்னு டாலரெட் பண்ண முடிகிற அளவுக்கு குறைவாகத்தான் வலிக்கிறதா!?”

வாய்விட்டு கத்திக்கதறினால் தான் இவர்கள் இவளுக்கு  கடப்பாரைக்குத்தல்களாக கொடூரவலி தாக்குவதையே ஒத்துக்கொள்வார்கள் போல… 

கழிவறைக்குப்போனால் அங்கே எந்த அறையும் சுத்தமாகவே இல்லை. தரையெல்லாம் சொத சொதத்த ஈரமும் உதிரமும்.  ஒரு கணம் மிகுந்த அசூசை உணர்வெழுந்தது. ஆனால் அது ஒரு கணம் தான். உடனே அவள் மனம் கனிந்து பச்சாதாபப்பட்டது. 

அந்த வார்ட் கழிவறைகளைப் பயன்படுத்துவது  முழுதும் தாய்சிகள். அவளைப்போலவே நிர்பந்தச் சூழலில் சிக்குண்டவர்கள்.

பாவம். இநேரத்தில் இவளைப்போலவே அத்தனைபேரும் கடைசிக்கட்ட வலி மிகுதியில்..வேதனையில் தனியே கிடந்து துடிப்பவர்கள். எனிமா கொடுக்கப்பட்ட அவசரப்போக்கில் வந்து போகிறவர்களுக்கு சுத்தம் செய்துவிட்டு போக பலம் இருக்கணுமே!  

குனிந்து தண்ணீரைப் பிடித்து எடுத்து சுத்தப்படுத்திவிட்டு போக முடியாத நிலையைக்  குத்தம் சொல்வதற்கில்லை. 

முடிந்தளவு சுத்தப்படுத்திவிட்டு கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் சுத்தப்படுத்தி நிமிர்ந்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. முன்னைக்காட்டிலும் பத்து இருபது மடங்கு கூடிக்கொண்டிருக்கிறது வலி. 

சாமி எப்போது தீரும் இந்த வேதனை.!! 

அதே கழிவறை சுவரில் சாய்ந்து, கண்களை மூடி எண்ணத் தொடங்கினாள். வலியின் அதீதம் இதோ இங்கேயே  செத்துவிடுவோமோ என்கிற அளவில் கொடூரக் குத்தல்களாக இருந்தது. 

கழிவறையிலிருந்து வெளிவந்தபோது அவளிடமிருந்த மொத்த சக்தியும் வடிந்தாற்போலிருந்தது. வலியில் இழந்தது பாதி மீதி எனிமா தாக்கத்தின் போக்கினால்.. 

கண்கள் சிவந்து போய், நடக்கவும் சக்தியற்று சுவரைத்தாங்கி மெல்ல மெல்ல நடந்தாள். 

அங்கே வரண்டாவில் ஒரு பெஞ்சில் பிரசவிக்கிற நேர நெருக்கத்தில் வலி மிகுதியில் தாளாமல் சாய்ந்து கிடந்த ஒரு பெண் கதறிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். அவளின் அழுகைக்குரல் யசோதையை என்னவோ செய்தது. 

மெல்ல முயன்று நகர்ந்து அவளருகே போய் அமர்ந்து.. 

வித்யாதரன் இவளுக்கு செய்வதுபோல ஒரு கையால் ஆதரவாக அணைத்து மறுகரத்தால் இடுப்பில் இதமாக நீவித்தந்தாள். 

“பயப்படாதீங்க. நீங்க இப்படி பயந்து அழுதால் உள்ளருக்க பாப்பாவும் பயப்படுமில்ல. மூச்சை நல்லா இழுத்து விட்டு ஒன்னு இரண்டு மூணுன்னு  எண்ணுங்க.. வலியை கவனிக்காதீங்க. சரியாயிடும்.” 

அந்தபக்கம் நடந்துகொண்டிருந்தவர்கள் எல்லோருடைய கண்களும் அதிசயமாய்    இவர்களைத்தான் பார்த்தன 

இதோ சில நிமிடங்களில் பிரசவிக்கப்போகிற ஒரு பெண் மற்றுமொரு பிரசவிக்கப்போகிற பெண்ணை ஆற்றித்தேற்றுகிற இதுபோல் அதிசயக்காட்சியை மருத்துவமனை அனுபவத்தில் அவர்கள் யாருமே இதுவரை கண்டதில்லை  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here