நெடுநல் அத்தியாயம் -32

0
357

யசோதை தன் அம்மா காயத்திரியின் பெயரைத்தொட்டு  மகளுக்கு கயாதி என்று பெயரிட்டாள். 

மகள் இந்த பெயரோடு தந்தையின் பெயரிலிருக்கும் ஞானத்தையும் தாயின் பெயரிலிருக்கும் வெற்றிக்கும் உரியவளாக தன் பெயரிலிருக்கும் புகழையும் சேர்த்து சுமப்பவளாக வளரட்டும். 

பெயர் சூட்டுவிழாவை அவர்களவில், யசோதையும் வித்யாதரனும் சம்பாதித்துக்கொண்ட உறவுகளான கேசவப்பெருமாள் அங்கிள், மகுடி, துளசி அண்ணி, சுவை அன்னம் கேட்டரிங்  மக்கள்,கீழே ஹவ்ஸ் ஓனர் வீட்டினர் என  எல்லோரோடும் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாடினார்கள். 

“இந்த பொடிக்குட்டி பிறந்து இன்றோடு ஐந்து மாதங்களாச்சே வித்யா! என்னால நம்பக்கூட முடியல. இதோ இப்பதான் ஹாஸ்பிடல் கிளம்பிப்போன மாதிரி இருக்கு. 

சரி நாம ஏன் ஐந்து மாதங்களாகிற வரை பொடிக்குட்டிக்கு பெயர் வைக்காம இருந்தோம்!? 

அப்போ இத்தனை நாள் இவளை என்னன்னு கூப்பிட்டோம் வித்யா!? 

எனக்கு ஏன் எவ்வளவு யோசிச்சும் எதுமே நினைவு வரமாட்டேங்குது!?  

அதெப்படி வித்யா. இடையே இத்தனை மாதங்கள் நாம என்ன செஞ்சோம்ன்னு எப்படி எனக்கு மறந்துபோச்சு!? 

பலவாறு பலதடவைகள் கேட்டுவிட்டாள். எத்தனை தடவைகள் கேட்டாலும் பதில் சரிவர கிடைத்தால் தானே!

திரும்பத்திரும்ப யோசித்தாலும் அவளின் நினைவில் தட்டுவதெல்லாம் ஹாஸ்பிடலில் லேபர் வார்டில் அவள் படுத்திருக்கிறாள். குழந்தையை பிரசவித்துவிட்டாள். அதன் அழுகுரல் அவளுக்கு கேட்கிறது.குழந்தை பிறந்த நேரம் ஏழு நாற்பது என்று யாரோ சொல்கிறார்கள். 

குழந்தையை அவள் பார்த்திருக்கவில்லை. அதற்குள் அவள் படுத்திருந்த கட்டிலின் தலைமாட்டுப்பக்கத்திற்கு குழந்தையை சுத்தம் செய்ய எடுத்துப்போய்விட்டார்கள். என்ன குழந்தை பிறந்திருக்கிறதென்றும் தெரியாது. 

குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க குழந்தை நல மருத்துவரை அந்த அறைக்குள் அழைத்திருந்தார்கள். 

அவளுக்கு பிரசவித்தபின் ஒரு பக்கம் தண்ணீருக்கு தவிப்பதுபோல் உலர்ந்தும் மறுபக்கம் ஜன்னி கண்டதும் போல் உடம்புத் தூக்கி தூக்கிப்போடுகிற நடுக்கத்திலிருந்தது. 

அவள் கால்களை ஆட்டிவிடாதபடி இரண்டு நர்ஸ்கள் பிடித்துக்கொண்டிருக்க. தொடைகளுக்கிடடையே சுத்தம் செய்து பெரிய நர்ஸ் அங்கே தையல் போட்டுக்கொண்டிருந்தது. 

அந்த பீடியாட்ரிஷியன் தலைமாட்டிலிருந்த குழந்தையின்பக்கம் போகாமல் யசோதைக்கு  தையல் போட்டுக்கொண்டிருந்ததை பார்த்தபடியே அந்த நர்ஸிடம் எதோ தேவையில்லாத பேச்சை பேசிக்கொண்டிருந்ததை பார்த்து யசோதைக்கு எரிச்சல் வந்தது. 

அவன் என்னதான் ஒரு டாக்டராக இருந்தாலுமே.. 

அந்த மருத்துவமனைக்குள் நுழைந்ததிலிருந்தே அவளது உடல் அவளது இல்லையென்பது போல தான்  யார் யாரோ தொட்டு எதேதோ செய்வது, பார்பது  எல்லாமே. அவளால் அதெதையும் தவிர்க்கமுடியாத இயலாமை.

ஆற்றாமையில் கண்களை இறுக்கமுடி ஒன்று இரண்டென எண்ணத்தொடங்கினாள். 

அவள் மீது குழந்தையைக் கொண்டுவந்து கிடத்தி பார்க்க சொன்னபோது கூட அவள் பார்க்கவில்லை. எண்ணிக்கொண்டேதானிருந்தாள். 

அப்படியே அவள் உறங்கியிருக்க வேண்டும். அல்லது மயங்கியிருக்க வேண்டும். 

“அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தான் நினைவு வரமாட்டேங்குதே வித்யா!? எப்போ அங்கிருந்து வீட்டுக்கு வந்தோம். இதோ குட்டியோட ரெக்காடில் போட்டிருக்க தடுப்பூசிக்கணக்கெல்லாம். 

இந்த தேதிக்கெல்லாம் நாம ஹாஸ்பிடல் போனதும் கூட நினைவில் வரவில்லையே.. “

“இந்த பொடிக்குட்டியை கண்டதும் நீ என்னைக்கூடத்தான் மறந்துபோனாய் யசோ நான் அதபத்தி குறைப்பட்டேனா சொல்லு. 

நீ இந்த குட்டிய விட்டு கண்ணைத்திருப்பி என்னை பார்த்தால்தானே! ஹலோ நாந்தான் வித்யாதரன். அன்னைக்கு லைபரரில வச்சு மீட் பண்ணோமேன்னு அடிக்கடி நானா வந்து சொல்லிக்க வேண்டியிருக்கு.”என்று சிரித்தான்.

யசோதை முறைத்தாள். 

“போங்க வித்யா, ஏன் மறந்துச்சுன்னு நீங்க சொல்லிட்டா அப்படியா சரின்னு கேட்டுக்கிட்டு நானும் அடுத்த வேலைய பார்த்துட்டு போய்ட்டே இருப்பேன். இல்லைங்கிறதாலதான் மனசு அதையே நினைச்சு குழம்பிக்குது.”

  அவளை பிடித்து அமர்த்தி 

“ஓக்கே கடைசியா இப்ப பேசி இதோட இதை விட்றலாம் “

யசோதை போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனுக்கு ஆளாகியிருந்தாள். 

யசோதையின் வளர்ந்த சூழல், முன்னர் சந்திந்த பாதிப்புகளினால் மிகவும் பூஞ்சை மனதுடையவளான அவளுக்கு பிரசவத்துக்கு பின்னாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உருவான மன அழுத்தம்.  

பேபி ப்ளு என்கிற அளவிற்கு சில நாட்களும் இருக்கலாம். அல்லது இயல்பு நிலைக்கு வர சில வாரங்கள் மாதங்களும் ஆகலாம். 

நல்ல ஓய்வு தூக்கம் சத்தான உணவும் அக்கறையான கவனிப்பும் அவசியம் என்றார் டாக்டர். 

யசோதைக்கு சில மாதங்கள் பிடித்துவிட்டது. 

தன்னிலை மறந்திருந்த அந்த நிலையை அவள் மூளை இப்போது மறந்தும்விட்டிருக்கிறது. 

இரேஸ் அன்வாண்டட் மெமரீஸ்ங்கிறத மூளையே செஞ்சுகிறது  நல்ல ஆரோக்கியமான சுழற்சி தான். 

மறக்க முடியாம  ஒவ்வொன்னையும் போட்டு அழுத்திவச்சுகிறது தான் மன அழுத்ததின் முதல் புள்ளி. 

ஆனால் சுயநினைவற்றுக்கிடந்த தன்னையும் இந்த பிஞ்சுக்குழந்தையையும் தனியே வைத்து பார்த்து சமாளித்து வித்யாதரன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான் என்றிருந்தது யசோதைக்கு. 

 “பாவம் இந்த தம்பி உன்னையும் பார்த்து இந்த பிஞ்சுக் கொழந்தையையும் வச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு கிடந்துச்சு.இப்படியெல்லாம் பொண்டாட்டிய வச்சுப் பார்க்கிறவங்கள ஊர் உலகத்தில எங்கிட்டும் பார்த்ததில்ல ஆயா. இனிமே தொட்டு கடவுள் புண்ணியத்தில நல்லாருங்க” மரகதம்மா இப்படி சொன்னபோது மேலே இவள் எதோ கேக்க நினைத்தும் வித்யாதரன் குறுக்கே புகுந்து பேச்சை இப்படித்தான் மாற்றிவிட்டிருந்தான் 

“நமக்கு டைம் அப்ப அப்படியிருந்தது யசோ. இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சே. திரும்ப நினைப்பானேன். அதைவிடுவேலைக்கு வந்து சேர்ந்து கொள்கிறாயா! இல்லையா அதைச்சொல்லு.” 

“ஹ்ம்ம் சம்பளம் கட்டிவருதா இல்லையான்னு பார்த்துட்டுதான் சொல்ல முடியும். எவ்வளவு தருவீங்க அதை சொல்லுங்க” 

“எல்லாமே உங்களுதுதாங்க அம்மிணி. எவ்வளவு வேணுமோ எடுத்துக்கிட்டு நீங்களா பார்த்து மிச்சம் வையிங்க போதும்” 

வித்யாதரன் தொழிலில் ஒரு புது முயற்சியில் இறங்கியிருந்தான். 

அவனுக்கு தொழில் தொடர்பில் வாடிக்கையாளர், நல்ல பழக்கத்தில் இருந்த கட்டுமான காண்ட்ராக்டர் ஒருவர் தேடி வந்து நின்றார். 

“என்னங்க வித்யாதரன் இப்படி நீங்க தொழிலை மூடிவச்சுட்டு போய்ட்டா எங்கள மாதிரி ஆளுங்க எப்படி தொழில் நடத்தி பொழப்ப ஓட்றது.”

“எங்கிட்ட ஒரு  காண்ட்ராக்ட்  டீல் இருக்கு. இதுவரைக்கும் நான் மத்தவங்களுக்கு கட்டிடம் கட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கேன். 

இப்போ முதல் முறையா நானே ஒரு அபார்ட்மென்ட் பில்டிங் சொந்த ரிஸ்க்ல எடுத்துக் கட்டி வித்துப்பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன். அதுக்கு இசைவா ஒருத்தர் அவரோட லேண்டத் தர ரெடியா இருக்காரு. 

அந்த நிலத்த நான் காசு கொடுத்து வாங்கவேண்டியதில்லை. அதுக்கு ஈடா அபார்ட்மெண்ட் கட்டினதும் அவருக்கு அதில் பங்கு கொடுதிடனும்ன்னு பேச்சு. கட்டிடத்த முழுக்க எடுத்து கட்றதுக்கு  எங்கிட்ட இன்வெஸ்ட்மெண்ட் இல்ல வித்யாதரன் .யாராவது இன்வெஸ்டர பிடிக்கலாம்ன்னா யாரும் சரியா செட் ஆகல. 

உங்களை மாதிரி தொழில் தரமான ஆள கூட சேர்த்துக்கிட்டா முதல் சொந்த ப்ராஜெக்ட சிக்கலில்லாம ப்ண்லாம்ன்னு தோணுது. 

அதனால நிலம் அவருது

கட்டுமான வேலைகள், லேபர் கூலி சமாச்சாரம்  மொத்தமும் என்னுது 

தேவையான மெட்டீரியல் சப்ளை முழுக்க நீங்க எடுத்துக்க முடியும்ன்னா சொல்லுங்க. 

பத்து ஃப்ளாட் வீடு கட்றோம்னா அதில் மூனு லேண்ட் ஓன்ர்க்கு

மூனு என் பங்குக்கு 

மூனு உங்க பங்கு 

மீதி ஒன்னு கவர்மெண்ட்க்கு செலவு பண்ற காசு கணக்குக்குன்னு வச்சு சேர்ந்து அக்ரிமென்ட் போட்டு கட்டி வித்துப்பார்ப்போம் என்ன சொல்றீங்க!” 

லேண்ட் கோடம்பாக்கத்தில நல்ல மெயினான இடத்தில இருக்கு. உடனே நல்ல விலைபோகும். இப்ப ரியல் எஸ்டேட் மார்கெட் ஓரளவு நல்லா சூடு பிடிச்சு மேல வருது. சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கலாம். யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க..” 

 இவனின் தொழில் நேர்மையை மதிப்பவர் செல்வம்.தேடி வந்து இதை சொல்லிவிட்டுப்போனார் 

இவர்  இந்த செல்வமும் ஒரு மிடிஸ் கிளாஸ் லெவலில் இவனைப்போன்று தன்முனைப்பில் தொழில் நடத்திக்கொண்டிருப்பவர் தான். நம்பிக்கையான மனிதரும் கூட. 

இவருடைய கட்டுமான வேலைக்கு வித்யாதரன் இதற்குமுன் மெட்டீரியல்கள் சப்ளை எடுத்துச்செய்திருக்கிறான். 

ஆனால் அது வேறு. வித்யாதரனுக்கு  சொந்தக் காசை போட வேண்டிய அவசியமிருந்திருக்கவில்லை. 

யாருக்கு கட்டுமானம் நடக்கிறதோ அந்த க்ளையிண்டிடம் பணத்தை வாங்கி எழுபது சதவீதத்தை முன்தொகையாக செல்வம் கொடுத்துவிடுவார். 

பத்து சதவீதம் கழிவு கமிஷன் இவனுக்கே வெண்டர்களிடமிருந்து கிடைத்துவிடும். 

மிதி இருபது சதவீதத்திற்கு இவன் வெண்டர்களிடம்  பின் தேதியிட்ட காசோலை கொடுத்தால்போதுமானது. 

அந்த தொகையும் மெட்ட்ரீயல் சப்ளை செய்ததுமே இவன் கைக்கு வந்துவிடும். வெண்டர்களுக்கும் போய் சேர்ந்துவிடும். 

இப்படி  கைகாசு போடாத ஸ்மூத்தான வழியில் இலாபம் பார்த்துக்கொண்டிருந்தான். 

ஆனால் இவர் கொண்டுவந்திருக்க டீலிங்கில் மெட்டீரியல் சப்ளையில் வரும் பத்து சதவீதம் இலாபம் மட்டுமில்லாது மூன்று ஃப்ளாட் அளவு அவனுக்கு சொந்தமாக்கி விற்று பெரும் இலாபமே எடுக்க முடியும் 

அவனவளவிற்கு இது உறுமீன் தான். 

இதில்  கிளிக் ஆகிவிட்டால் தொழிற்படிக்கட்டில்  சரசரவென பல படிகள் ஏறிவிடுவான் தான்.  

ஆனால்  முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ரிஸ்க் எடுத்து மொத்த தொண்ணூறு சதம்  கை காசை போட்டுதான் மெட்டீரியல்களை எடுக்கமுடியும். 

சும்மா கட்டி இழுத்துப்பார்ப்போம் வந்தால் மலை போனால் மயிரளவென்று ஈஸியா காசப்போட்டு பார்க்க வித்யாதரன் பணக்காரன் அல்லவே. 

எதிர்கால தொழில் வளர்ச்சிக்கான  சேமிப்பாக சேர்த்த பணம் இருபது சதவீதமிருக்கும். 

மீதி எழுபது!? 

“இதோ இதெல்லாம் எதுக்கு இருக்காம். மலையைகட்டி இழுக்க பயன்படுத்துவோம் வித்யா. காசு வந்ததும் திரும்ப வாங்கிக்கலாம்.”

யசோதை அணிந்திருக்கும் நகைகளை காட்டினாள். இன்னமும் அவளிடம் அம்மா கொடுத்த நகைகளும் சேர்த்து அறுபது எழுபது சவரன்களைத்தொடும். 

மறுப்பாக தலையசைத்தான். வித்யாதரனுக்கு யசோதையின் தந்தை சொன்னது நினைவிற்கு வந்தது. 

ஆனால் யசோதை விடவில்லை. 

முக்கால்வாசி அம்மா கொடுத்தது. தாத்தன் வழியிலிருந்து எனக்கு கிடைத்தது. 

தங்க நகைகள் அத்தியாவசியம் ஏற்படும் போது வைத்து பணமாக்கிக்கத்  தான் இருக்கு வித்யா. வீட்ல இருக்கும் போது தங்கத்த தவிர வேற எதையும் போடவிட்டத்தில. காரணம் சோசியல் ஸ்டேட்டஸ். ஆனா அதில எனக்கு ஒரு போதும் விருப்பமிருந்ததில்ல. ட்ரஸ்க்கு மேட்சா கலர்கலரா போட்டுக்கிட்டா என் அழகு குறைஞ்சிடுமாக்கும். இல்லைதானே!! 

இந்த ஒருதடவைக்கு தானே வித்யா நாம இருக்கிறத வச்சு பணம் திரட்றோம். அடுத்தடுத்து செய்ய நம்மக்கிட்டதான் பணம் வந்துடுமே. 

உங்களுக்கு உடன் பாடில்லைன்னா வேணும்ன்னா என்னை இன்வெஸ்டிங் பார்ட்னரா நினைச்சுக்கங்க. அவ்வளவுதான்.” 

இதற்கு அவன் ஓரளவிற்கு இசைந்தான். 

முதலீட்டை திரட்டிவிடமுடியும் என்பதில் முதற்கட்டம் ஓக்கே. 

ஆனால் காலை விடுவதற்கு முந்தி ஆழத்தின் அளவை பார்த்துவிட வேண்டியது இரண்டாவது கட்டம்.

ஏனென்றால் செல்வத்திற்குமே இது புதிய முயற்சி. நல்ல சுத்தமான தொழில் நேர்த்தியுள்ள மனிதரேயொழிய அவருக்குமே இப்படி எடுத்து செய்து அனுபவமில்லை.

வித்யாதரன் தீர ஆராயாமல் எதையுமே செய்பவனல்லவே..

அந்த வகையில் முதலாவதாக அந்த நிலத்தை ஆராய்வுக்கு எடுத்துக்கொண்டான். 

முற்றிலும் லேண்ட் ஓனர்க்கு மட்டும் சொந்தமானதா.!

இல்லை பின்நாளில் பங்காளி பகுத்தாளி பங்கு கேட்டு சண்டைக்கு வர வாய்பிருக்ருக்கிறதா! 

நிலம் எங்கும் அடமானத்தில் இருக்கிறதா! 

சரியாக அளக்கப்பட்டிருக்கிறதா! 

நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு.!

நிலத்தின் தாங்குசக்தி எவ்வளவு! 

 கட்டிடம் கட்டினால் நீர் ஊறி சேதாரத்தை ஏற்படுத்துமா! 

இவ்வளவும் பார்த்தாயிற்று.

அடுத்து பார்டனர்ஷிப். 

மூவருக்குமான அக்ரிமென்ட் போடுவதில் சாதக பாதகங்கள் என்னென்ன, என்னமாதிரியான நிபந்தனைகள், விதிகள் அக்ரிமெண்டில் சேர்க்கப்படவேண்டும். 

என்னென்ன சட்டச் சிக்கல்கள், நடைமுறை சிக்கல்களுக்கு சான்ஸ் இருக்கிறதென்பதையெல்லாம் கேசவப்பெருமாளுக்குத் தெரிந்த வக்கீல் ஒருவரைக்கொண்டு ஆராய்ந்தான். 

மூன்றாவது நிலத்தைச் சுற்றிலுமிருக்கும் புழக்கவசதி.

நடுத்தர பட்ஜெட்டில் கட்டப்படுகிற வீடுகளை வாங்கி வசிக்கப்போவது நடுத்தரவாசிகளே. 

ஃப்ளாட்டை வாங்க நினைப்பவர்கள்எங்கோ ஒரு சொந்தவீடு என்கிறளவு யோசிக்கிறவர்களாக நிச்சயம் இருக்கமாட்டார்கள்.  

அந்த ஏரியாவில் சுற்றிலும் கிடைக்க்கூடிய வசதிகளை மையமாகக்கொண்டே வீடுகள் விலைபோகும்.  கட்டிவைத்துவிட்டு வாங்க ஆளில்லாத நிலைக்கு போய் நின்றுவிடக்கூடாதே.. 

ஆக அபார்ட்மென்ட் கட்டப்போகிற லேண்டைச்சுற்றி போக்குவரத்து வசதி, தண்ணீர் வசதி, பள்ளிகள், ஹாஸ்பிடல்,  கடைகண்ணி வசதிகள் இருக்கிறதா என பார்த்தாயிற்று. 

அடுத்தது விற்பனையாகுமா! 

டிமாண்ட் இருக்குமா!  

வாங்க விரும்புவார்களா,

என்பதையெல்லாம் அறிவதும் அவசியம். 

வித்யாதரன் ஒரு பெட்டியோடு வந்திறங்கியபோதிருந்த  மெட்ராஸ் அதேபோல் இப்போதில்லை.  சென்னையென்றாகிவிட்ட மாற்றங்களோடு, ஹைசொசைட்டி அளவில் பெரிய பில்டர்கள் அப்பார்ட்மெண்ட் கட்டிடங்களை எழுப்பிக்கொண்டுதானிருக்கிறார்கள். 

அதை வாங்கி வசிக்கிற மக்களின் லெவல் வேறு. 

அதைக்கொண்டு சின்ன அளவு பட்ஜெட்டிற்கான மார்கெட் நிலவரத்தைக்கணித்து விட முடியாது. 

இன்னமும் நடுத்தரமக்களிடையே ஃப்ளாட் வீடுகள் பெரிதாக பரிச்சயம் இல்லாத ஒன்று. தனிவீட்டு விரும்பிகளுக்கான மனநிலையில் இருப்பவர்களெனில் அப்பார்ட்மெண்ட்  கட்டிடம் தங்கிப்போய்விடும். 

அப்படியே வாங்க விரும்புவார்கள் எனில் எதாவது பேங்கில் ஹவ்ஸ் லோன் ஏற்பாடு செய்து உதவவேண்டியதும் விற்பனைப்பிரிவு வேலையின் ஒரு அங்கம். 

இதற்கு வாங்கு சக்தி, சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் என்னென்ன மாதிரி தேவைகளை மனதிற்கொண்டிருப்பார்கள், என்ன மாதிரியான கனவு இல்லத்தை சொந்தமாக்கிகொள்வது  அவர்களின் விருப்பம் என்றெல்லாம் தெரிவதற்கு நடுத்தர சுற்றுவட்டாரத்தில்  ஒரு சர்வே எடுத்துப்பார்த்துவிடுவதென்று கணவனும் மனைவியும் முடிவெடுத்திருந்தார்கள். 

அந்த வேலையை இறங்கிச் செய்யவும் தொடங்கினார்கள். 

கனவு இல்லம் சர்வே எடுக்க கேள்விப்  பட்டியல்களை தயாரித்து சுற்றுவட்டாரங்களுக்குத்  தனித்தனியே போய் பதில்களை திரட்டினார்கள். 

“ஏம்மா பேத்திய இங்க விட்டுப்போம்மா. இப்படி தூக்கி சுமந்துகிட்டு அலையற”  லைபரரி அங்கிள் சொன்னாலும் யசோதை அதை செய்வதில்லை. 

வயதின் தளர்ச்சியில் பாவம் ஓய்வாக இருக்கவேண்டியவர். 

முளைத்து மூணு இலைவிட்டிருக்காத  கயாதி குட்டிக்கு இப்போதே மிகுந்த அடம், பிடிவாதம் கத்தி அழுது ஊரைக்கூட்டினாளென்றால் நிறுத்துவதே இல்லை.

கங்காருக்குட்டியைப்போல் துப்பட்டாவில் சேர்த்துகட்டி மகளை அழைத்துக்கொண்டுதான் அவள் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினாள். 

அவர்கள் பார்த்துக் கேட்ட வரை ஒன்றுமட்டும் நன்றாக தெரிந்தது. 

நடுத்தரவாசிகள் ஒவ்வொருவருக்குமே கண்களில் மிதக்கும் பெருங்கனவு தங்களுக்கென ஒரு சொந்த வீடு என்பது. 

அதை ஒரு வாழ்நாள் இலட்சியமாகவே பலர் கொண்டிருக்கிறார்கள். அதற்காகச்   சேர்த்துவைக்கவும் செய்கிறார்கள். 

ஒவ்வொரு வீட்டிலும் கேள்விகளுக்கு பதில் தருகிறவர்கள் கயாதி குட்டியின் மொட்டுக்கண்களிலும், பொக்கை பூஞ்சிரிப்பிலும், துறுதுறுப்பிலும் மயங்கி கொஞ்சாதவர்களே இல்லை.

கயாதி குட்டிக்கு  இப்படி அம்மா தூக்கிச்சுமக்க, சொகுசாக நகர்வலம் வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பது ஆனந்தம். 

வீட்டிலோ அலுவலகத்திலோ சும்மா ஓரிடத்தில் இருத்திவைத்தால் போயிற்று அழுகைக்  கூப்பாடுதான். 

அம்மா தூக்கிக்கொள்ள வேண்டும் அதுவும் அம்மா மட்டும்தான். அப்பாவிடம் போவதேயில்லை. 

காண்ட்ராக்டர் செல்வத்தோடு சேர்ந்து கட்டுமானத்தை தொடங்கிவிட்டிருந்தார்கள். 

தொழிலில் தொடக்க முயற்சியின் முதல் சில அடிகள் தான் மெல்ல பார்த்து பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.  நடை பழகிவிட்டால் நில்லாமல் போய்க்கொண்டே இருக்கலாம். 

செல்லமகள் தத்தித்தத்தி  நடைபழகத்தொடங்கினாள். அவளோடு அவர்களின் தொழில் முயற்சியும் கனஜோராக வேக நடைக்கு பழகிக்கொண்டிருந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here