நெடுநல் அத்தியாயம் -34

0
324

இப்பொழுதெல்லாம் வித்யாதரன் ராஜஸ்தான் மும்பையென வெளி மாநில வியாபரத் தளங்களுக்கு அடிக்கடி போகிறவனாயிருக்கிறான். 

ஆனாலும் யசோதைக்கு டியூ டேட் கொடுக்கப்பட்டிருந்ததன் இருபது  நாட்களுக்கு முன்பிருந்தே அவன் எங்கும் போவதை தவிர்த்து கூடவே இருந்தான். 

கிளம்பி அலுவலுக்கு போனபின்பும் அரைமணிக்கொருதரம் போன் செய்தபடி. 

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியவைகளை எல்லாம் வாங்கி சேர்த்து பேக் செய்தும் வைத்தாயிற்று. 

டாக்டர் கொடுத்திருந்த டேட் கிட்டத்தட்ட நெருக்கத்திற்கு வந்து இரண்டு நாட்களிருக்கும் போது  வீட்டை விட்டு வெளியே போவதையும் நிறுத்திவிட்டான். வேலைளை வீட்டிலிருந்தே போனிலே முடித்துக்கொண்டு. 

இவ்வளவு டென்ஷனோடு வீட்டை சுற்றி வந்தவனைப்பார்த்து யசோதைக்கு சிரிப்புதான் வந்தது. 

அவளுக்கு ஏனோ துளி பயமில்லை. அலட்டிக்கொள்ளவுமில்லை. மகளோடு உட்கார்ந்து கார்டூன் படம் பார்த்தாள். இரவு உணவை முடித்து படுத்துமாயிற்று. 

லேசாக அவளிடம் அசைவு உணர்ந்தாலே “யசோ என்னம்மா”  என்று எழுந்து கொண்டிருந்தான். 

“ஒன்னுமே இல்ல வித்யா. வலிச்சா நானே சொல்றேன். தூங்குங்க” 

நேரம் பதினொன்று அவன் உறங்கிவிட்டிருந்தான். 

பத்து மணிக்கே ஊசியால் தீண்டுவதுபோல் சன்ன வலி உணர்ந்திருந்தாள். பொருட்படுத்திக்கொள்ளவில்லை. 

விடிவதற்குள் தாங்கொணாத  வலி வந்தால் அப்ப சொல்லிக்கலாம். கொஞ்சமாவது உறங்கட்டும்…அதன்பின் யசோதையுமே உறங்கிப்போனாள். 

விடிகிறவரை அவளால் தாங்கிக்கொள்ளமுடிந்தளவு வலி தான். அதனால் எழுப்பவில்லை. 

காலையில் பாலைக்காய்ச்சி காபி போட்டு யசோதைக்கும் தனக்குமாக  எடுத்துக்கொண்டு வந்தவன் 

குளித்துவிட்டு வந்திருந்தவளின் கண்களில் கோவைப்பழ சிவப்பை பார்த்ததும்

” என்ன யசோ முகம் ஏன் இப்படியிருக்கு.. வலி வந்ததா?”

இப்போதும் அவள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் காபியை குடித்தபடியே வலி வந்திருக்கு வித்யா. இப்போ இல்லை. பொறுமையா காபிய குடிங்க. 

அதன்பின் அவனெங்கே பொறுமையாக இருக்க! 

வலி நேர இடைவெளிகள் வேறு வெகு குறுகல். 

இன்னமும் விழித்திடாத மகளைத்  தூக்கி தோல்மேல் போட்டுக்கொண்டு எடுக்க வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டு கேட்டருகே  செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஹவ்ஸ் ஓனரிடம் சொல்லிவிட்டு யசோதையை அழைத்துக்கொண்டு முதலில் துளசி வீட்டுக்கு வண்டியை செலுத்தினான். 

“என்ன பொண்ணு நீ! இவ்வளவு வலி வருகிற வரை சொல்லாமலிருப்பதா!?” துளசி அண்ணியிடம்  திட்டையும் ஆசிகளை வாங்கிக்கொண்டு மகளை அங்கே அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இந்த தடவையும் மரகதம் அம்மாளை அழைத்துக்கொண்டு விரைந்து மருத்துவமனை போய் சேர்ந்தார்கள். 

ஃபார்ம் ஃபில் செய்து அட்மிஷன் போடுகிறவரை வித்யாதரனின் தோல் மேல் சாய்ந்து நின்றிருந்தாள் யசோதை. 

பிரசவ வார்டுக்குள் போகும்முன்பு மனக் கலக்கத்திலிருந்த வித்யாதரனை தேற்றி தைரியம் சொல்லிவிட்டு. இருவரும்  சாப்பிடாமல் இருக்க வேண்டாமென்றுவிட்டு உள்ளே போனாள்.  

அதே மருத்துவமனை. பரிட்சயம் இல்லாத முகங்கள். 

ஏழுக்கே உள்ளே போய்விட்டாலும் சின்னகுட்டி அம்மாவை வலி பின்னியெடுக்க விட்டு தாமதமாகத்தான் வருவாள் போல. 

“அம்மாவுக்கு வலி தாங்கல சின்ன குட்டி. சீக்கிரம் வெளியே வந்துவிடு ப்ளீஸ்” என வயிற்றுப்பிள்ளையோடு  பேச்சுவார்த்தை நடத்தியபடியே மெல்ல நடந்து கொண்டிருந்தாள். 

தொடைகளுக்கிடையே கனம் கூடி கால்களில் நடுக்கத்தை கண்டவுடன் கதவைப்பிடித்தபடி கால்களை அகட்டிவைத்து நின்று சிஸ்டர் டாக்டரக்கூப்பிடுங்க சீக்கிரம், அவசரம் பாப்பா தலை வெளியே வருதென்று கத்தினாள். 

ஓடிவந்து இவளை படுக்கவைத்து பரிசோதித்த டாக்டர் பதறியே போனாள். 

“ஓடுங்க எமர்ஜென்ஸி. ஸ்ட்ரெச்சர எடுத்துட்டுவாங்க லேபர் ரூம் கொண்டு போணும்.”

உள்ளே கொண்டுபோய் படுக்கவைத்து கால்கள் இரண்டையும் தொன்னூறு டிகிரிக்கு தூக்கிவைத்து நன்றாக முக்குங்கள் என்றார்களே அந்த மிகச்சரியான மூன்றே முக்கல்களில் பிரசவித்துவிட்டாள். 

சின்னக்குட்டி பிறந்த நேரம் ஒன்பது இருபதை தொடப்போகிற நேரம். 

டாக்டர் நர்ஸ்கள் ஆயாம்மா அத்தனைபேருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நீங்கவில்லை. ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள்.

” காட்  இப்படி பிரசவத்த நான் பார்த்ததே இல்லை.. ஐ அம் ஸ்டில் சர்ப்பரைஸ்ட்.  என்ன மாதிரியான பெண் நீங்கள். இந்தமாதிரி டெலிவரிய பார்க்க சொன்னால் நான் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து கூட பார்த்துடுவேன். இன்னமும் நம்ப முடில. 

சத்தியமா உங்களப்போல பார்த்ததில்லை.” யசோதை மெல்லிய நகையுடன் 

“என்ன குழந்தை டாக்டர். பெண் குழந்தை தானே!” என்றாள்

பெண் குழந்தையே தான் யசோதை தனக்கு வேண்டுமென்று நித்தமும் வேண்டிக்கொண்டாள். 

கருத்தரித்த நாளில் இருந்து அம்மாவிடமும் அதைத்தான் சொல்லுவாள். 

“உங்களுக்கு சின்ன பேத்தி வர துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வேண்டிக்கங்கம்மா.”

டாக்டர் இன்னமும் பதில் சொல்லவில்லை. 

“பொறுங்க உங்ககிட்ட கொண்டுவருவாங்க. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனால் உங்களுக்கு முன்னதும் பெண்தானே, அப்புறமும் ஏன் பெண் குழந்தை வேணும்ன்னு நினைச்சீங்க.” 

“எனக்கு பெண் குழந்தைகள் பிடிக்கும்” பெண்தான் இல்லையா!! இதோடு இப்படியே ஃபேமிலி ப்ளானிங் பண்ணிடுங்க டாக்டர்.”

டாக்டர் சிரிப்போடு  “அதையும் நீங்களே முடிவெடுத்துவிடுவீர்களாக்கும். இப்ப முடியாது. உங்கள் உடல் பலவீனத்திலிருக்கு. ஆறு மாசம் கழிச்சுதான் பண்ணுவாங்க. உடம்பை தேத்துங்க.”

“இதோ பாருங்க உங்க பொண்ணு” அவளிடம் தூக்கிப்பிடித்து காட்டிவிட்டு அவளின்  மேலே கிடத்தப்பட்ட பூப்போல் இருந்த  மகளை ஒற்றை கையால் வருடி சேர்த்துக்கொண்டாள். 

தாய் சேய் வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் மகளை அணைத்து பிடித்து முதல் பாலூட்டலை குழந்தையின் முகம் பார்த்தபடியே அந்த சின்ன மூக்கின் நுனியில் தொட்டு விளையாடிய படியே தந்தாள். 

கயாக்குட்டியை ஈன்றெடுத்தபோது அவள் இந்த முதல் பாலூட்டல் அனுபவத்தை கண்டிருக்கவில்லை. அல்லது நினைவிலிருக்கவில்லை. 

இப்போது இனி அப்படியாகாமல் சின்ன மகளின் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொழுதையும் ரசித்திருக்கப்போகிறாள். 

வித்யாதரன் அவ்வளவு டென்ஷனோடு எதை நினைத்து அஞ்சியிருந்தானோ நல்ல வேளை அப்படி எதும் நேரவில்லை.  நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தையோடு ஐந்தாம் நாள் வீடு வந்தாயிற்று. 

சின்ன மகள் பிறந்து வீடு நுழைந்ததே சொந்த வீட்டில் தான். 

அவர்கள் குடியிருந்த வீட்டின் சுவரை ஒட்டி அடுத்து இருந்த காலிமனையையே விலைக்கு வாங்கி இப்போதைக்கு அளவான அறைகள் மட்டும் எடுத்துக்  கட்டி சொந்த வீட்டில் நுழைந்திருந்தார்கள் வித்யாதரனும் யசோதையும். 

எல்லாம் சரியாகவே இருந்தது. 

ஒன்றே ஒன்றைத்தவிர. 

அது கயாதி குட்டி இந்த ஐந்து நாட்களோடு மேலும் இரண்டு நாட்கள் துளசி அண்ணியின் வீட்டில் இருந்துவிட்டு வந்த இந்த  இடைவெளியில் புதிய கெட்டப்பழக்கத்தை கற்றுவந்தாள். 

கயாதிக்கு துளசி அத்தை வீட்டிற்கு போவதென்றால் எப்போதும் ஏக குஷி இருக்கும். துள்ளிக்கொண்டு கிளம்புவாள். ஏனென்றால் அங்கே அண்ணன்கள் பார்க்கிற வீடியோ கேம் பார்கலாமேஎதையாவது அல்லது யாரையாவது பார்த்து அதே போல் இமிட்டேட் செய்யவதும், பழக்கங்களை காபி அடித்துக்கொள்வதும் தானே கயாதியிடம் பிரச்சனை. 

அதற்காக என்ன ஆளில்லாத தீவிலா மகளைப் பொத்தி வைத்து வளர்க்க முடியும்!!

துளசி அண்ணியின் மகன்கள் முரட்டுப்பிளைகள் இல்லை. சாஃப்ட் நேட்சரமும் இல்லை. அடிக்கடி அடித்துக்கொள்வான்கள். 

அதைப்பார்த்தோ அல்லது வீடியோ கேமில் பார்த்தோ வயலண்டாக அடிப்பதும் குத்துவதும் கையில் கிடைப்பதை தூக்கி போடவும் கயாதி கற்றுவந்திருக்கிறாள். 

இந்த புதுப்பழக்கத்தை இவளிடமிருந்து எடுக்க இன்னும் எத்தனை நாட்களாகுமோ! 

அவளுமே வெறும் மூன்று வயது குழந்தை. அறிந்து செய்கிற வயதில்லை. ஆனால்  சின்னக்குட்டியை எதுவும் துன்புறுத்தி விடுவாளோவென்று அச்சம் எழுந்தது யசோதைக்கு. 

“ஷ்ஷ் இதுதான் கூடாது யசோ. எதற்காகவும் ஸ்ட்ரெஸ்ஸ வளர்த்துக்காதே மா, உனக்கும் நல்லதில்லை. தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைக்கும் நல்லதில்லை. பார்த்துக்கலாம் விடு” என்றான் வித்யாதரன்.

யசோதை சின்ன மகளுக்கு யாத்வி என்று பெயரிட்டாள். 

யாத்வி என்றால் ‘இறைவி’ என்று பொருள்.

துர்க்கையம்மனின் மற்றுமொரு பெயர் யாத்வி. 

இந்த பெயரை அவள் கருத்தரிப்பதற்கு முன்பே முடிவாக்கி வைத்திருந்தாள்.. 

மனதிற்கு மிக நெருக்கமான அவள் நித்தமும் அழைக்கும் கணவன் பெயர் வித்யாவை திருப்பிப்போட்டால் யாத்வி என்றாகும். 

தன்னை தானே உருவாக்கிக்கொள்ளும் இறைவியாக  இந்த பெயரோடு சின்ன மகள் வளரட்டும். 

சின்னவள் பிறந்துவந்ததும் பெரியவளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று முன்னமே திட்டமிட்டருந்ததால் அதை நடைமுறைப்படுத்த சிரமமேற்ப்படவில்லை. 

சின்னவளுக்கு எதை செய்தாலும் பெரியவளை ஒதுக்கி விடாமல் அவள் பங்கும் அதிலிருக்குமாரு பார்த்துக்கொண்டாள். 

“அம்மாக்கு ரைட் பக்கம் கயா குட்டி,லெப்ட் பக்கம் பேபி. இரண்டு பேருக்கும்  அம்மா கதை சொல்லுவேனாம். கேட்டுக்கிட்டே இரண்டு பேரும் தூங்கிடுவீங்களாம்”

கயாகுட்டி பேபி ஏன் அழறா, பசிக்குதான்னு கேளு, பசிச்சா அம்மா பால் கொடுப்பாங்கன்னு சொல்லு.”

குளிக்கவைக்கும் போது ஒரு சின்ன ப்ளாஸ்டிக் கப்பைக்கையில் கொடுத்து ஒரு குட்டி ஸ்டூலை அவளுக்கும் தந்து 

” கயா குட்டி பேபியோட கால் சைட் நீ குளிச்சு விடுவியாம், தலை சைட் நான் குளிச்சு விடுவேனாம்” 

அந்த சின்னக்கப்பில் நீரை எடுத்து பிஞ்சுக்கால்களை தொட்டு தேய்த்து நீரை ஊற்றுவதில் கயா குட்டிக்கு அத்தனை பரவசம். 

துவலையினால் துடைத்துவிடும் போது கயாவின் கையை யசோதை  தன் கையில் பிடித்து இரு கைகளாலும் சேர்த்து துடைத்துவிடவும் கயாகுட்டிக்கு பெருமை தாங்கவில்லை.

பழைய சிவாஜி படங்களில் மிருந்தங்கம் நாயனமெல்லாம் எதோ தானே நிஜமாகவே வாசிப்பதுபோல் ஒரு முகபாவனை காட்டுவாரே. அப்படியொரு முகபாவனையுடன் துடைத்துவிட்டாள். அதுவும் ஒழுங்கா காட்டு பேபி, அசையாதே, சும்மா சும்மா அழக்கூடாது, இதோ முடிஞ்ச்து எனறு பெரியமனுஷித்தனமாய் தங்கையை அதட்டிக்கொண்டே.. 

நானே  பேபியை குளிக்கவச்சேன். துடைச்சு விட்டேன். ட்ரஸ் போட்டுவிட்டேன். பேபி பசிச்சா எங்கிட்ட தான் சொல்லும். காண்பவரிடமெல்லாம் இதே பேச்சு. 

பேபிய சூப்பரா பார்த்துக்கிறியே, வெரி குட் கேர்ள் என்ற மற்றவர்களின் பாரட்டில் குளிர்ந்து மகிழ்ச்சியோடு திரிந்தாள். 

முழு நேர சமையலுக்கும், மேல் வேலைகளுக்கும் இப்போது ஒரு பெண் வருகிறாள். 

யசோதை மகள்களோடு நேரம் செலவழிப்பது போக நன்றாக உண்டு உறங்கி ஓய்வும் எடுக்கிறாள். 

வித்யாதரன் அலுவல் முடிந்து வந்ததும் குளித்துவிட்டு சின்னவளை மடியில் வைத்து பெரியவளை அருகில் வைத்து விளையாட்டுக்  காட்டி அவர்களோடு நேரம் செலவிடுவான். 

அந்த நேரத்தை  யசோதை தனது உடற்பயிற்சி, நடை பயிற்சி நேரமாக்கிக்கொள்வாள். 

பெரியவளுக்கு தங்கையிடம் தானாக அட்டாச்மெண்ட் வர  ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்த போதிலும் கயா தன் குரங்கு சேட்டைகளை காட்டி அவ்வப்போது தங்கையை துன்புறுத்திவிடுகிறாள். 

யாருக்கும் தெரியாமல் நைசாக பேபியை கிள்ளிப்பார்பதில் அதனால் பேபி வீறிட்டு அழுவதை பார்பதிலொரு ஆனந்தம் கண்டிருக்கிறாள். 

பேபி எதுக்கோ அழுது, நான் ஒன்னும் பண்ணலையே, பூச்சி கடிச்சிடுச்சு என்றெல்லாம் சொல்லுகிற மகளை யசோதை கண்டித்து அதட்டி மிரட்டவெல்லாம் இல்லை. 

அது இன்னமும் தங்கையின் மீது வெறுப்புணர்வை கூட்டுமென்று யோசித்து யோசித்து ஒரு வழியை கண்டுபிடித்தாள். 

புத்தம் புது ஊசி சிரஞ்ச் வாங்கிவரச்செய்து மகளிடம் கொடுத்து பிரிக்கச்செய்தாள். 

கயாகுட்டிக்கு ஊசி என்றால் பயம். 

“பார் குட்டி, நேத்து ஒரு ஸ்டோரி சொன்னேன்ல. யார் என்ன தப்பு செஞ்சாலும் காட் மேல இருந்து பார்த்துட்டு இருக்கும். தப்பு செஞ்சா பனிஷ்மெண்ட் குடுக்கும்ல. 

நம்ம பேபிய இனி எந்த பூச்சி கடிச்சாலும் யாராவது பக்கத்தில வந்து கிள்ளி வச்சாலும் அடிச்சு வச்சாலும் காட் பார்த்துடும். 

அவங்களுக்கு நாம ஊசி போட்டு பனிஷ்மெண்ட் குடுத்திடலாம். இப்ப கொடு அம்மா பத்திரமா வச்சிருக்கேன். யாரவது தப்பு செஞ்சா பச்சக்குன்னு குத்திடலாம். “

கயா பயந்த விழிகளோடு சரியென்று தலையாட்டினாள். திருடன் கையில் கொடுக்கப்பட்ட சாவி. 

சின்னவளும் லேசுபட்டவளில்லை. அவளை யாரவது தொந்திரவு செய்வதுபோல் தொட்டால் பிஞ்சு கைகளை வைத்து தட்டிவிடவெல்லாம் முயன்றதைப்பார்த்து யசோதை வியந்துபோனாள். 

மடியில் எடுத்து வைத்து தாய்ப்பால் தரும் பொழுது மகளின் சின்னஞ்சிறு மூக்கு நுனியை விரலால் தொட்டு விளையாடப்  பிடிக்கும் யாசோதைக்கு. 

பால் குடிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே என்பது போல தட்டிவிடப்பார்க்கும் சின்னக்குட்டி. 

பெரியவள் பால்குடி குழந்தையாக இருந்த போது சரியாக பால்குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்ளாமல் கொஞ்சமாய் சப்பிவிட்டு குடிக்கமாட்டாள். சரிதானென்று தோளில்  போட்டு தட்டிக்கொடுத்து படுக்கவைத்தால் மீண்டும் பால் கேட்டு அழுவாள்.  மீண்டும் குடிக்காத அதே கதை. ஒவ்வொரு தரமும் எழுந்தமர்ந்து மடியில் கிடத்தி அரைகுறையாக குடித்து அடம்பிடிக்கிறவளை கவனிக்கவே இயலாமல் முதுகுவலியோடு சோர்ந்துவரும் அதுவும் இரவுகளிலெல்லாம் பொட்டுத் தூக்கம் தூங்கவிட்டிருக்கமாட்டாள் கயாதி. 

அதையெல்லாம் மனதில் வைத்து சின்னகுட்டிக்கு ஒவ்வொரு தடவையும் நன்கு பசிக்கவிட்டு தான் பால் கொடுப்பாள். 

பசி தாங்காமல் ஆனபின் கிடைக்கும் பாலை மகள் தவித்து தவித்து குடிப்பாள். அதுவரை யசோதைக்கு பால் நிரம்பி  கசிந்து வீணாகப்போனாலுமே சரி,  இரக்கமில்லாத இராட்சசி என்ற பெயரெடுத்தாலும் சரி. 

தன்னுடைய தேவை எவ்வளவோ அதை சரியாக பூர்த்தி செய்துகொள்ள வயிற்றை நிரப்பிக்கொள்ள, குழந்தை கற்றுக்கொண்டது.

போலவே பெரியவள் எவ்வளவு கற்றுக்கொடுத்தும், 

மூன்றுவயதை தொடும் வரையிலுமே கண்ட இடத்தில் யூரின் டாய்லெட் போய்வைக்கிற, “தெரியாம இங்கையே போய்ட்டேன்” காரணம் சொல்வதுமாக இருந்ததை மனதில் வைத்து சின்ன மகளுக்கு ஆரம்பம் முதலே ஒரு யுக்தியை கையாண்டாள். 

பிரசவிக்கும் போது செய்த அதே பாணிதான். கால்களிரண்டையும் தூக்கிப்பிடித்து 

சின்னகுட்டி பார் ஹ்க்க்ம்ம்… சொல்லு என்று திரும்ப திரும்ப சொல்லிச்சொல்லி  முக்குதலுக்கு பழக்கினாள்.  குழந்தை இவள் முகத்தை பார்க்கிறதோ இல்லையோ.  ஒவ்வொருதடவை ஹ்க்க்ம்..  ஒலியை எழுப்பும்போது புருவத்தைச்சுறுக்கி வைத்து முகபாவனை காட்டினாள். 

குழந்தை கழிக்கிற நேரத்தில் மட்டுமல்லாது நாளைக்கு பத்து முறைகளாவது இதே வேலையாக கால்களை தூக்கிப்பிடித்து அடியில் ஒரு துணியை விரித்து புருவம் சுறுக்கி, முக்கல் ஒலி எழுப்பி பழக்கப்படுத்திக்கொண்டே இருந்தாள். 

பலன் இருந்தது. அம்மா கால்களை தூக்கிப்பிடித்துக்கொண்டால் கழிக்கவேண்டுமென்று பிடிபட்டுவிட்டது குழந்தைக்கு. ஒரு சில மாதங்களிலேயே தானே கால்களை தூக்கிக்கொள்ளவும், புருவத்தை சுறுக்கி காட்டி ஊ சொல்லி  டாய்லெட் போகவேண்டுமென்ற தகவலை அம்மாவிற்கு சொல்லவும் கற்றுக்கொண்டாள். 

 தவழ்கிற பருவம் ஏய்ததும் ப்ளாஸ்டிக் டாய்லெட் கம்மோட் வாங்கி வைத்து அதே ப்ராக்டீஸ். 

நாய்குட்டி பூனைக்குட்டிக்கெல்லாம் ஓரிடத்தை பழக்கிவிட்டால் அது மாறாது பிடித்துக்கொள்ளும். மனிதக்குட்டியும் அப்படிதான். 

தொடர்ந்து பழக்கி பழக்கி தானே சொல்லக்கற்றுக்கொடுத்துவிட்டாள். பெரியவளை பழக்க அப்போது போதிய அனுபவ அறிவின்மையால் தவற விட்டதை சின்னவளுக்கு பழக்கியே விட்டாள். 

‘பேபி வா…  கயா பிடி கயா பிடி’ என ஓடிப்பிடித்து தங்கைக்கு ஆட்டம்காட்ட, பேபியும்  அவள் போகுமிடமெல்லாம் முட்டிக்கால் போட்டு  பிடிக்கத்துரத்துவது போல நன்கு வேகவேகமாக தவழ்வதும் கிண்கிணி சிரிப்போசையோடு அக்காளும் தங்கையும் ஆடிக்கிடப்பார்கள். 

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் ஒரு கண் மகள்களின் மேலிருக்கும் யசோதைக்கு. முறுவலோடு ரசித்துப்பார்த்துக்கொண்டிருப்பாள். 

அவ்வளவு கவனமாக இருந்தபோதும்.. செஃல்பில் இருந்த எதோ பொம்மையை எடுக்க முயன்ற கயாதி உயரம் கைக்கு எட்டாமல் ஒரு குட்டி ஸ்டூலை  போட்டு ஏறுவது போல்  சுவரோரமாக அவளருகே தவழ்ந்து வந்து விட்ட தங்கையின் மீதொரு தலையணையை கொண்டுவந்து போட்டு  உயரத்தைக்கூட்டி செல்ஃபிலிருந்து எட்டி எடுக்கலாமென்று ஒரு காலை வைத்தும் விட்டாள்.

கண்ணில் பட்ட காட்சியில் ஒரு கணம் யசோதையின் இதயத்துடிப்பே நின்றுவிட, 

பதறி ஓடி கயாதியை பிடித்து இழுத்துவிட்டவள் நிதானம் இழந்து அடித்தும் விட்டிருக்கிறாள். 

அம்மாவிடம் முதன்முதலாக அடிவாங்கின திகைப்பும் அதிர்ச்சியும் வலியும் கூடவே என்ன தப்பு செய்தோம் ஏன் அம்மா அடித்தாளென்று புரியாத, மீண்டும் அடித்துவிடுவளோ என்ற பயந்த நடுக்கத்தோடு மூலையில் ஒட்டிக்கொண்டு அழுகிற மகளை ஹய்ய்யோ என்ற கேவலுடன் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் யசோதை.

கண நேர நிதனாமிழப்பில் மகளை அடித்தேவிட்டிருக்கிறாளென்பதை அடித்தபின்புதான் உணர்ந்திருந்தாள். 

மகளை அணைத்து முத்தங்களை தந்து அவளை பயத்திலிருந்து வெளியே கொண்டுவர முயன்றாள்.  என்ன காரியம் செய்தோமென்ற மனக்குத்தல் அவளைக்கூர் அறுத்தது. 

எப்படி யசோதை இப்படிச் செய்யலாம்! எப்படி! யாரும் யாரையும் அடிப்பது தவறென்று நினைத்திருப்பவளாயிற்றே! 

தான் அடிவாங்கி அடிவாங்கி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தபடி மகள்கள் ஒரு போதும் ஆகிவிடக்கூடதென்று நினைத்தவள். தானே அடித்துவிட்டாள். எப்படி செய்தாள் இதை!

அம்மாவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு அணைப்பில் புதைந்து “ம்மா அடிக்க வேணாம்மா அடிக்கவேணாம்மா”  என்று புலம்பி அழுதாள் கயாதி.   

அடிக்கமாட்டேன் தங்கம் அம்மா அடிக்கவே மாட்டேன் என தானுமே கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் யசோதை. 

அம்மா அழுவதை பார்த்ததும் மற்றதை மறந்து தேம்பலுடன் இவளது கண்ணீரை துடைத்துவிடத்தொடங்கினாள் மகள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here