நெடுநல் அத்தியாயம் -36

1
459

யாத்வி குட்டி பிறந்து வருவதற்கு முன்னமே புதுவீட்டிற்குள் நுழைந்து விட்டாலும் இப்போது ஒவ்வொரு அறைகளாக இணைத்துகட்டி உள்படிக்கட்டுகளும் இட்டு முடித்தபின் சின்னதாக அதற்கான விழா எடுத்தார்கள். 

 அழைப்பை  யசோதையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்கள் தான். ஆனால் ஒருவேளை அழைப்பு குப்பைக்கு போயிருக்கக்கூடும். அவள் தந்தையின்  வரட்டுப்பிடிவாதம் என்றும் மாறாததாச்சே..

நான்கைந்து மாதங்களுக்கொரு முறையாவது நேரத்தை ஒதுக்கி, யசோதையையும் மகள்களையும் வித்யாதரன் திருச்சிக்கு அழைத்துப்போவான். 

இவளே இரு மகள்களைபெற்றுவிட்ட பிறகும் அம்மா இவளிடம் அதே ‘பத்ரம் பாப்பா’ வை விடவில்லை. 

மகளோடு சேர்ந்து இரு பேத்திகளையும்  அணைத்து கொஞ்சியென அந்த சந்திப்புத் தருணங்கள்  காயத்திரிக்கு  அகமகிழ்வு பொழுதுகள். 

அண்ணனுக்குத்  திருமணமாகிவிட்டிருந்தது. 

நடு அத்தையின் வீட்டு உறவில் பெண்ணெடுத்திருக்கிறான். 

திருமண வேலைகளில் அலைப்புற்று ஓய்ந்து சோர்ந்த தோற்றத்திலிருந்தாள் காயத்திரி.

“என்னம்மா இது இவ்வளவு இளைத்துப்போய் கண்ணெல்லாம் உள்ளபோய்! வீடு வீடுன்னு வீட்டையே பார்த்துக்கிட்டது போதும். இனியாவது  உங்களையும் பார்த்துக்கங்கம்மா.”

“என்னைப்பற்றி எனக்கு ஒன்னுமில்லைம்மா நான் ஆசைப்பட்ட எல்லா நல்லதுகளையும் கண்ணால பார்த்தாச்சு, இனி போய் சேர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனா வயதாக ஆக இன்னும் குழந்தைபோல் இருக்கும் உன் அப்பாவைத்  தனியா விட்டு போய்டுவோமேன்னு தான் வருத்தம்லாம்.” 

“இந்த மாதிரி பேசாதீங்கம்மா, நீங்க இரண்டுபேருமே ஒருத்தர்க்கொருத்தர் துணையா நூறுவருசத்துக்கு நல்லா இருப்பீங்க. நல்லா சாப்ட்டு உடம்பை பார்த்துக்கங்க. அடுத்த முறை நாங்க வந்து பார்க்கும் போது இப்படி இல்லாமல் நல்லா தேறியிருக்கணும் சொல்லிட்டேன்” என்று அன்புக் கட்டளை இட்டுவிட்டு வந்தாள். 

ஆனால் அந்த அடுத்தமுறை என்பதே வராமல் போய் அம்மா சொன்னபடி போய்சேர்ந்துவிட்டாள். 

உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருந்த நோய்மையை வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாளே! 

அம்மாவின் பத்ரம் பாப்பா தன்னிடம் கடைசியான விடைபெறுதலுக்கு சொன்னது போல யசோதைக்கு குமுறியது.

யாருக்காகவும் எதற்காகவும் நில்லாத காலம் காலில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓட்டத்திலிருக்க.. 

கால மாற்றங்களின் உராய்வுகளோடும் தேய்மானங்களோடும் மாறிக்கொண்டேயிருப்பது தானே மனித வாழ்க்கையும். 

மார்கெட்டின் மாற்றங்கள் வளர்ச்சிகள் தேவைகளுக்கு ஏற்ப தொழிலில் முனைந்து புதுப்புது முயற்சிகளைச் செய்து,

தொட்டதெல்லாம் நல்ல வண்ணம்  துலங்கிமுன்னேறி பலபல படிகளின் ஏற்றத்தோடு தொழிலை வளர்த்தியெடுத்துக்கொண்டிருந்தான் வித்யாதரன். 

கேசவப்பெருமாளுக்கு இரு மகள்கள். ஒருத்தி அமெரிக்காவிலும் ஒருத்தி பூனேயிலுமிருக்க, வயதாளியாக தனியே கிடந்து அல்லல்பட வேண்டாமென்று இருமகள்களும் அவரை கூட வந்து இருக்கும் படி அழைத்துக்கொண்டேதானிருந்தார்கள். 

ஒருவழியாக அதற்கு இணங்கி, தன் வீட்டை வித்யாதரனிடம் விற்றுவிட்டு  கிளம்பிவிட்டார். 

அவரிடம் இருந்து விலைக்கு வாங்கிய பின் வித்யாதரன் அதை மூன்று தளங்களோடான அலுவலகக் கட்டிடமாக மாற்றிக்கட்டிக்கொண்டான்.

நூலகப் புத்தகங்களை அவர் யசோதைக்கே தந்துவிட்டார். 

வீட்டில் அழகிய, நிறைய சாளரங்கள் வைத்து,வெளிச்சம் மிகு.. நூலக அறையொன்றையும் யசோதைக்காக வித்யாதரன் கட்டிக்கொடுத்திருந்தான்.

கட்டுமானத்திற்கு தேவையான மெட்டீரியல்களை எந்தெந்தெந்த ஊர்களிலிருந்தோ வரவழைத்து அவர்களின் சொந்த வீட்டை யசோதையின் விருப்பங்களைக்  கேட்டு மிகுந்த ரசனையோடு பெரிய பெரிய சாளரங்களை வைத்து முழுக்க முழுக்க அவளுக்கு பிடித்த வண்ணத்தில் கட்டிக்கொடுத்தான்.

மகள்களோடு கம்ப்யூட்டர் க்ளாஸ், டான்ஸ் கிளாஸ், கராத்தே க்ளாஸ் போய் கராத்தேயென சேர்ந்து யசோதையும் ஓயாமல் எதையாவது புதிது புதிதாக படித்துக்கொண்டிருந்தாள். 

முன்னொருகாலத்தில் மெயின் ரோட்டிற்கு வரவே, ரோட் க்ராஸ் செய்யவே பயந்த யசோதை இப்போது காரைத்  தானே ஓட்டிக்கொண்டுபோய் மகள்களை பள்ளியில் விடுகிறாள். 

வித்யாதரனும்தான். 

தொழில் மாற்றங்கள், வளர்ச்சிக்கு வேண்டியவாறு தன்னை தயார்படுத்திக்கொள்ள புதுப்புது டெக்னாலஜிகளையும் படித்து தேறிக்கொண்டிருந்தான். 

மார்க்கெட்டில் சூடுபிடிக்கத்தொடங்கியிருந்த,  அத்தியாவசிய தேவையாக மாறிக்கொண்டிருந்த அசம்பிள்ட் பெர்சனல் கம்ப்யூட்டர், கணினி வன்பொருள் சாதனங்கள் தொழிலிலும் வித்யாதரன் உள்நுழைந்தான். 

அவனுடைய நன்கு வளர்ந்த ‘செயல் எண்டர்பிரைஸ்’ ‘செயல் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனங்கள் பலருக்கு வேலைவாய்ப்பினைக் கொடுத்தவண்ணம் பல ஊர்களுக்கு சப்ளை செய்கிற அளவு  விரிவுபட்டிருந்தது. 

யசோதை குழந்தை நலம் மற்றும் கல்வி பாடத்தில் முதுகலை படித்தாள்.  மாண்டசரி கோர்ஸ் ஒன்றை முடித்தாள்.

யசோதைக்கு சின்ன பிள்ளைகளுக்கு கதை சொல்லி வகுப்புகள் எடுப்பது பிடித்திருந்தது. மனதிற்கு பிடித்ததையே வேலையாகச் செய்தாள்.

தேவைக்கேற்ப பிஸ்னஸ்  தன்னைத் தானே வனைந்துகொண்டு புதுவடிவங்களை ஏகும் என்பது வித்யாதரனுக்கும் நடந்தது.

வித்யாதரனுக்கு தொழில் இப்போதுமே ஒரே நேர்க்கோட்டில் மேல் நோக்கி மட்டுமே  போய்க்கொண்டிருக்கவில்லை. அதே பரமபத ஆட்டம்தான். 

பத்துபடிகள் ஏறினால் குறைந்தது நான்கு படிகளாவது சரிவு இருக்கும். மீண்டும் அதே பத்துபடிகளை அடைவதற்குள் இரண்டு மூன்று சரிவுகளென்று ஏற்ற இறக்கங்கள் தான். 

என்றாலும் அவனை நம்பி வந்து நிற்பவர்களுக்கு அவனால் இயன்றதைச் செய்துகொண்டேதான் இருந்தான். 

சமூகத்தில் தொழிலில் ஒரு நல்ல இடத்தைப்  பிடித்து பணமும் சேரத் தொடங்கியதும் விட்ட சொந்தங்கள் எல்லாம் தொட்ட சொந்தங்களாகின.
வித்யாதரனும் யசோதையும் ஒருவரையும் விலக்கவில்லை. தேடி வந்த சொந்தங்களை எல்லாம் கதவுகளை விரியத் திறந்து அரவணைத்துக்கொண்டனர். அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு மாமா அத்தை சித்தி சித்தப்பா போன்ற ரத்த உறவுகளை எல்லாம் காலம் கொண்டுவந்து சேர்த்தது.

வித்யாதரனின் அக்காள் குடும்பமும் தம்பியும் சின்னம்மாவும் கூட சென்னைக்கே வந்துவிட்டிருந்தனர். அக்காள் குடும்பத்திற்கு வீடு கட்டித்தந்து கடை வைத்துக் கொடுத்து படிப்பை முடித்து நிற்கின்ற தம்பியை தன் தொழிலில்  சேர்த்துக்கொண்டு தொழில் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தான்.

எல்லா நல்லவைகளோடும் அல்லாதவைகளான மாற்றங்களும் கூடவே  நடந்துகொண்டேதானிருந்தன. 

சுவையும் தரமுமாக.. சுவை அன்னம் கேட்டரிங் தொழிலை நல்லபடி நடத்தி, நன்கு செழித்து வாழ்ந்து, பிறரையும் வாழவைத்த தம்பதியர் துளசி ரங்கநாதன். 

காலம் அவர்களை வாழ்ந்து நொந்தவர்களென மாற்றிவிட்டிருந்தது. 

ரங்கநாதனுக்கு உடல்நலக்குறைவு வந்து படுக்கையில் கிடத்திவிட்டது.  துளசிக்கு அவரைப்பார்பதா நொடிந்துகொண்டிருக்கும் தொழிலைப்பார்பதா என்றாகிவிட்டது. 

மகன்கள் இருவரும் அவரின் தொழிலை முன்னெடுக்கவில்லை. 

சுவை அன்னம் கேட்டரிங்கை 

என்னதான் ஆட்களை வைத்து தொடர்ந்து  நடத்த முயன்றாலும் முன்னிருந்த தரமும் திறமும் குறைந்து வாடிக்கைகளை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தால் வேறுவழியில்லாமல் மூடிவிட்டார்கள். 

யசோதையின் அண்ணனுக்கு திருமண முறிவு நடந்திருந்தது. பிள்ளைபெற போன பெண் திரும்ப அவனோடு வாழப்போக மாட்டேன் என்று மறுத்துவிட்டிருந்தாள். ஒரு ஆண் குழந்தையோடு அவள். 

இவனோ கூசாமல் மறுமணமும் செய்துகொண்டிருந்தான். 

திருமணத்திற்கு பின் பிறந்த வீட்டினருக்காக, பெற்ற பிள்ளைகளுக்காகவென சகித்து சகித்துப்போவது  அம்மா காலத்தோடு முடிந்துவிட்டதென்பதை அவன் உணர்ந்து மனைவிக்கு உரிய மதிப்பை தரப்பழகினால் இந்த திருமண பந்தமாவது நிலைக்கும். இல்லையென்றால் படவேண்டியதுதான்.

இந்த காலத்து பெண்கள் சிங்கிள் மதராக தன் வாழ்கைப்பாட்டை தானே பார்த்துக்கொண்டு சரிதான் போடாவென போய்க்கொண்டே இருக்கத்துணிந்துவிட்டவர்கள். 

மரணம் என்பது ஒருவரையும் கேளாமல் பழகிய மனிதர்களை.. உற்ற உறவுகளை வேர் பெயர்த்தெடுத்துக்கொண்டு துக்கங்களை விதைத்து போய்விடுகிறது. 

கேசவன் அங்கிளும், கோதை ஆன்ட்டியுமே இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

யசோதையின் அப்பா அந்த வயதிற்கும் தானே எடுத்துப்போட்டு உண்ணக்கூட பழகி வைத்திருக்கவில்லையே. மனைவியை இழந்து ஓரிரு ஆண்டுகள் கூட அவரால் தனித்து  வாழ்ந்திருக்கமுடியவில்லை. 

மகுடி கேசவன் அங்கிளின் மூத்த மகள் வீட்டிற்கு அமெரிக்கா போய்விட்டாள். 

இப்படியாக  அவரவர் கதைக்கு முற்றுமென்றோ தொடருமென்றோ போட்டுக்கொண்டே புள்ளிகளாகிறது காலம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here