நெடுநல் அத்தியாயம் -37

0
308

யசோதைக்கு அளவிட்டு சொல்லமுடியாத அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தாள் மகள் கயாதி. 

“மாம்  ட்வெண்டி தவ்ஸண்ட் தானே கேக்கிறேன். எதோ சொத்தையே எழுதி கேக்கிறமாதிரி பண்றீங்க நீங்க. ப்ரெண்ட்ஸ் எல்லோரும் பார்டிக்கு  காசு போடும் போது நான் மட்டும் தரலைன்னா அவங்கமுன்னாடி எனக்கு எப்படி இருக்கும். சொல்லுங்க மாம். உங்களுக்கு அந்த நிலைமை வந்தாதான் தெரியும்.” 

“இருபதாயிரம் என்பது மரத்தில் காய்த்து கிடைப்பதில்லை. ஒரு மனுசன் இரவும் பகலும் இருப்பத்தினாலு மணி நேரமும் உழைத்துக்கொட்டி ஈட்டுகிற காசு. 

உனக்கு நம்ம வீடும் நாமும் எந்த நிலமையில் இருக்கோம்ன்னு கொஞ்சமாவது உரைக்குதா! கொஞ்ச கொஞ்சமா சரிஞ்சு கீழ போய்ட்டிருக்கோம். 

கழுத்துவரைக்கும் கடனில் மூழ்கிட்டு இருக்கோம். பாவம் உன் அப்பா அவர்மட்டும்தான் என்ன செய்வார் சொல்லு. உன் வயசுக்கு நீ சம்பாதிச்சு உன்னபார்த்துக்கணும் ஆனா இன்னமும் நீ பெத்தவங்களுக்கு இலட்சக்கணக்கில செலவு வச்சுக்கிட்டு இருக்க. குடும்ப கஷ்டம் தெரியாம..”

“எப்போ பார்த்தாலும் பார்ட்டி மேக்கப் ஐட்டம்ஸ் லொட்டு லொசுக்குன்னு. இந்த மாதமேமூணு தரம் பணம் வாங்கிட்ட கயா. 

இனி அடுத்தமாதம் வரை கேக்காதே” என்றதற்கு 

அடுத்தமாதக்  காசை இப்போதே கொடுங்களென்று வாக்குவாதத்தில் நிற்கிறாள். 

இவ்வளவு சொல்லியும் இவளுக்கு புத்தியில் ஏறக்காணோம். 

மொத்த சக்தியை வடியச்செய்து வாட்டியெடுக்கிறாள் இந்தப்பெண். 

சும்மாவே இப்போதெல்லாம் யசோதைக்கு நெஞ்சு  படபடப்பும், வியர்த்துக்கொட்டி பதட்டமாக வருகிறது. 

உடல்  நிலையில் வாட்டியெடுக்கும் மெனோபாஸ்   தொந்திரவுகள் ஒரு புறம் என்றால் மறுபுறம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அவதாரத்தில் பாரத்தை ஏற்றி வைத்து  டென்ஷனை ஏற்றிக்கொண்டிருக்கிறாள்அவள் பெற்ற ஆசை மகள்களில் மூத்தவள் கயாதி. 

 யசோதைக்கு யாரும் காணாத ஓரிடத்திலமர்ந்து ஓவென வாய்விட்டு கதறி அழுதுவிடவேண்டும்போல் இருந்தது. 

அவ்வளவு அழுத்தங்களை மேலுக்கு மேல் தனித்து சுமந்துகொண்டிருந்தாள். 

முன்பாவது எந்த பிரச்சனைகளையும் வித்யாதரனோடு கலந்து பேசி தீர்வை கண்டுவிட முடியும். அவளுக்கு பக்கபலமாக நின்று ஆறுதல் சொல்பவனான அவனே சமாளிக்கமுடியாத எண்ணற்ற தொழில் பிரச்சனைகளில் மாட்டி திணறலில் இருக்கிறான். 

உறவென்று தம்பியை தொழிலுக்குள் நம்பி உள்ளேவிட்டான் வித்யாதரன்.  அவனோ நம்பிக்கை துரோகியாகி.. வளர்த்துவிட்டவனின் முதுகில் குத்துகிறவனாக வித்யாதரனின் தொழிலில் இருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக்கொண்டு கவிழ்த்துவிட்டிருந்தான். 

தொழில் தொடர்சரிவிலிருக்க இருபத்தி நான்கு மணி நேரங்கள் போதாதென்று ஓடிக்கொண்டிருக்கும், பாவம் சரியான ஊண் உறக்கம் கூட இல்லாது வித்யாதரன் படும் பாடு அவளை மற்றொருபுறம் அழுத்துகிறது.

கயாதி  பால்குடி குழந்தையாக இருந்தாளே. யசோதையை ஒரு நாள் இரவு கூட நிம்மதியாக  கண்களை மூடி பொட்டுத்தூக்கம் தூங்கவிடாது வாட்டியெடுத்திருந்தாளே.. அந்த வயதில் வளர்த்து விட்டது கூட இந்தளவு சிரமமாக இல்லை.. 

எப்போதுமே கயாதி தொட்டதற்கெல்லாம்  இடக்கு செய்பவள் தான் என்றாலும் ஓரளவு சொல்பேச்சை கேட்கவைத்துவிடமுடியும். 

படிப்பிலுமே சின்னவள் யாத்வி ஆவ்ரேஜ்தான். பாஸாகிற அளவுதான் படிப்பாள்.பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டாள். அப்படிப்பட்ட தங்கையை விட தான் பெஸ்ட் எனக்காட்டிக்கொள்ளவாவதும் சூப்பர்மார்க் வாங்கவேண்டுமென  படிப்பில் படு சுட்டியாக முனைந்து படித்து நன்றாகவே பெயர் எடுத்திருந்தாள் கயாதி.

நடனமென்றாலும்முதல் ஆளாகப்பெயரைக்கொடுப்பவள்.  

பத்துவரை  ஓரளவு நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. 

அப்புறம்தான் இடக்குத்தனம் கூடிக்கொண்டே போகிறது படிப்பிலும் தடுமாற்றம் தொடங்கியது..

மகள்கள் எந்நேரமும் படித்துக்கிடந்து அதிகம் மார்க் வாங்கவேண்டுமென்றெல்லாம் யசோதை வித்யாதரன் இருவருமே நினைப்பவர்களில்லை. இன்றைய படிப்போ எதிர்காலமோ எதுவாயினும் இரு மகள்களும் அவர்களாகவே சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும். வளர்ப்பில் எந்த திணிப்பும் இல்லை.    

ஆனால் எதிர்காலத்தை கட்டமைத்து கொள்கிற அளவிற்காவது படிப்பில் கவனம் வைப்பது வேண்டுமே போதாக்குறைக்கு கயாதி ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து, புகார்களை, வம்பை, வீண் சச்சரவுகளை வீட்டிற்கு எடுத்துவந்தாள். 

புதிதாக சேர்ந்துக் கொண்ட நட்பு வட்டம். காயதிதான் சுயபுத்தியோடு தானாகவே நல்லது கெட்டது யோசித்து எதையும்  செய்வதில்லையே…மற்றவர்களைப்பார்த்து அப்படியே காப்பியடித்து செய்யமுயல்பவள். 

அந்த ப்ரெண்ட்ஸ் கூட்டத்தில் தானும் ஒருத்தியாகி அவர்களைப்போலவே அப்பாவியான, பயந்த சுபாவி பிள்ளைகளை புல்லி செய்வதில் வந்து நின்றது. 

ஏகப்பட்ட காஸ்மெடிக்ஸ் மேக்கப் ஐட்டங்கெள தாறுமாறாக செலவு செய்வதிலும், பார்ட்டி, ப்ர்ண்ட்ஸ் மீட்டென ஊர்சுற்றுவதுமானது. 

ஒரு பையனை பெற்றவர்கள் தேடிவந்து என்ன வளர்த்துவைத்திருக்கிறீர்களென கேக்கும் அளவு ஆனது. 

வீட்டில் கண்டிப்புக் கூடி கேட்டபொருட்கள் கிடைக்காத போது பாய்ஸை மிரட்டி காசு எடுத்துவரச்சொல்லி தேவையானவைகளை வாங்கிக்கொள்வதும், செலவு செய்யவைப்பதையும் புல்லி கேங் செய்துகொண்டிருந்தது. 

எப்படி என்னசொல்லி திருத்தி வழிக்கு கொண்டுவருவதென அறியாமல் குழம்பி வருந்தினார்கள் பெற்றவர்கள். 

பத்தாவது முடித்தபின் 

என் ப்ரெண்ட்ஸெல்லாம் சயின்ஸ் குரூப்தான் எடுக்கிறார்கள். எனக்கும் அதுதான் வேண்டுமென்றவள் ஆறுமாதம் கூட ஆகியிருக்காது. பிடிக்கல வேற குரூப் மாத்திவிட்டாதான் படிப்பை தொடர்வேன் என்று அடம். 

பன்னிரண்டு  வகுப்புகளை அவள் முடித்து பாஸாவதற்க்குள் பெற்றவர்களின் பொறுமையை சோதித்தெடுத்தாள். சக்தியை வடியச்செய்தாள். ஒன்றா இரண்டா படுத்தல்களை வரிசைப்படுத்த என்றானது. 

அடுத்து கல்லூரிப்படிப்பிற்கும் அதே சுணக்கம், முரண்டுதல். 

மகள்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள நல்ல படிப்பு, நிறைய தகுதிகூட்டல்கள் அவசியம். 

அல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தில் போட்டியிட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ளமுடியாமல் திண்டாடிப்போவார்களே! 

அந்த காலம் மாதிரி படிப்பு வரலைன்னா மாடு மேய்த்து பிழைத்துக்கொள் என்றோ, கல்யாணம் கட்டி அடுப்படியில் அமிழ்ந்து போ என்றா விடமுடியும்..!

இது மூன்றாம் தலைமுறையின் வேக யுகம். படு வேகத்தோடு மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் நின்று போடியிட்டு ஜெயிக்க தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வது அவசியம்.  

ஆனால் இந்த பெண்ணுக்கு புரிந்தால்தானே!

ஃபேசன் டிசைனிங்கில் சேர்த்து விடுங்கள் என்று அடம்பிடித்து இலட்சங்களை கட்டி, சேர்ந்து சில மாதங்களுக்கு கூட நீடிக்கவில்லை. இது வேண்டாம் போர் அடிக்கிறது. 

என் ப்ரெண்ட்ஸ் சிலர் ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்திருக்கிறார்கள். எனக்கும் அதுதான் வேண்டுமென்று பிடிவாதம். 

புதிதாக தற்கொலை செய்து கொள்வேன் எனும் அச்சுறுத்தல் ஆயுதத்தை கையிலெடுத்து மிரட்டத்தொடங்கினாள். 

எப்படியோ எதையோ படித்துத்தொலை. பணம் வீணாகப்போனாலும் பரவாயில்லை. உருப்பட்டால் சரியென்று இங்கும் இலட்சங்களைக் கட்டி சேர்த்துவிட்டால் அதே சில மாதங்கள் தான் அந்த படிப்பிலும் நிலைத்தாள் பின் கேமராவிற்கு பின்னே இருந்து இயங்கும் டெக்னீஷியன் படிப்பு எனக்கு செட் ஆகாது. 

என் அழகுக்கு கேமராவிற்கு முன் நின்று நடிப்பதுதான் சிறப்பாயிருக்குமென்று ப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. ஆக்டிங் படிக்க போகப்போகிறேன் என்று நின்றாள்.

இதற்கு சம்மதியாதபோது தொலைந்து போய் பெற்றவர்களை தேடி அலையவைத்து  அதுவரை ஒரு ப்ரெண்ட் வீட்டில் பதுங்கியிருந்தென இல்லாத அட்டாகாசங்களுக்கு பிறகு மீண்டும் இலட்சங்களை கரைத்து அந்தப்படிப்பும் வேண்டாம் அதைவிட பெட்டர் மாடலிங் கோர்ஸ் என வந்து நிற்கிறது. 

பலன் சின்னவள் யாத்வி  இதோ படிப்பை முடிக்கவே போகிறாள். பெரியவள் கயாதி எதையும் உருப்படியாக படித்து தேறாமலே இருப்பத்தி மூன்று வயதை தொட்டுவிட்டாள். 

கயாதி வீட்டைவிட்டு வெளியேறி ஆறுமாதங்களாக வெளியே வசிக்கிறாள்.

அவளாக போகவில்லை. வீட்டைவிட்டு அனுப்பியது யசோதை தான். 

நண்பர்கள் கூட்டமாக  பார்ட்டி என்கிற பெயரில் கடற்கரை சாலையில் தண்ணி போட்டு கூத்தடித்து, ராஷ் ட்ரைவிங் செய்தார்களென பிடிபட்டு  நடுராத்தியில் போலீஸ் ஸ்டேஷன் போய் அழைத்து வந்த மறுநாளே உறுதியாக சொல்லிவிட்டாள் யசோதை. 

“ வீட்டோடு அடைத்துவைத்து சுதந்திரமாக சுவாசிக்கக்கூட அனுமதித்திடாத கூண்டு வாழ்கையில் வளர்ந்தவள் நான். 

உங்களையெல்லாம் சுதந்திரமா பறக்க கத்துக்கொடுத்து தன்போக்குக்கு வளர்த்துவிட்டிருக்கிறோம். ஆனாலும் கப்பல் பறவையாய் நகராமல் கிடந்து பெத்தவங்களோட உழைப்பை சுரண்டி வாழ்றது மட்டுமில்லாம எங்க நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு நீ கூட இருக்கவேண்டாம்” என்று அனுப்பிவிட்டிருந்தாள். 

வெளியுலகில் போய் தனியே சமாளித்துப்பார்த்தால் தானே புத்திவரும் என்றுதான் நினைத்தது. 

ஆனால் எங்கே! அப்பார்ட்மெண்ட் வாடகையிலிருந்து சகலத்திற்கும் பெற்றவர்களைத்தான் இன்னமும் சார்ந்திருக்கிறாள். 

தராவிட்டாலும்.. துரத்தியடித்துவிட்டு, இப்படி என்னை அனாதை  போல அலையவிட்டிருக்கீங்க. சாப்பாட்டு செலவுக்கு கூட திண்டாட்டிட்டு இருக்கேன்னு அழுது புலம்புவது.

இவ்வளவு தலைச்சிக்கல்கள், மன உளைச்சல்களுக்கும் நடுவே யசோதையின் ஒரே ஆறுதல் சின்னமகள் யாத்வி. 

 யாத்வி பத்தாவது  படிக்கும் போதே தனக்கு வரைவதில்  தான் ஆர்வம் என்பதை கண்டுகொண்டாள். அதைத்தான் எதிர்காலத்திற்கான படிப்பாகவும் படிக்க போவதாக முடிவெடுத்தும் விட்டாள். 

அதில் உறுதியாகவும் இருந்தாள். அவளுடைய வெகு நெருங்கிய நண்பர்கள் சயின்ஸ் குரூப் எடுத்தபோதும் அவள் மட்டும் தனக்கு தேவையான ஆர்ட்ஸ் குரூப் எடுத்துப்  படித்து, பட்டபடிப்பிற்கும் டிசைனிங் கோர்ஸை எடுத்து 

அவள் பாட்டை அவளே பார்த்துக்கொள்கிறாள். 

“ம்மா நானும் என் ப்ரெண்ட்ஸ் பரத், ஸ்ரவந்தியும் சேர்ந்து இப்பவே சொந்தமா குட்டி குட்டி ப்ராஜெக்ட்ஸ் எடுத்து செஞ்சு, வருவத  மூணா பிரிச்சு வச்சுப்போம். படிச்சு முடிச்ச உடனே எனக்கும் அப்பா போல சொந்த பிஸ்னஸ் பண்ணனும்ன்னு தான் ஆசை இலட்சியம். 

ம்மா அப்பாவைப்போல உங்களைப்போல எல்லாத்தையும் விடாமுயற்சியோட  உறுதியா நின்னு ட்ரை பண்ணி வின் பண்ணனும்.” 

அவளுடைய படிப்பிற்காகும் செலவுகளை மட்டும் பெற்றோர் செய்தால் போதுமென்று சொந்த செலவுகளை தன் சொந்த சம்பாதியத்தைக்கொண்டு பார்த்துக்கொள்கிற நிமிர்வு யாத்வியிடம் தானாகவே வந்துவிட்டிருந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here