நெடுநல் அத்தியாயம் -39

0
352

யசோதை படுக்கப்போகாமல் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். 

வித்யாதரன் வீடு திரும்பியதும் அமர்ந்து ஆறுதலாய் நாலுவார்த்தை பேசி அருகே இருந்து அவனை உண்ணச்செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தாள். 

தினமும் அகால நேரத்திற்கு வந்து வெறும் வயிற்றில் படுத்து விடிந்ததும் எழுந்தோடிக்கொண்டிருந்தான் அவன். இனி இப்படி விடக்கூடாது. 

பிடித்துவைத்தாவது நேரத்திற்குச் சாப்பிட உறங்க வைத்தேயாகவேண்டும். 

மணி ஒன்றை நெருங்குகிற நேரத்தில் வந்தவன் உறங்காத அவளை ஹாலில் கண்டதும் திடுக்குற்றான். 

இருந்தும் ” ஏன் தூங்காம இவ்வளவு நேரம் முழிச்சிருக்க! எனக்காக காத்திருக்கவேணாம்ன்னு சொல்லியிருக்கேன்ல” என்று வழக்கமாக சொல்கிற எதையும் அவன் சொல்லக்காணோம்.

எதையுமே கேளாமல் சொல்லாமல்  அவன் உள்ளறை நோக்கிச்செல்வதை பார்த்து அவளுக்குமே திகைப்பு. 

அதும் நடையில் ஒரு தள்ளாட்டம், தடுமாற்றம். 

“ஹைய்யோ வித்யா என் இவ்வளவு தடுமாறி நடக்கிறீங்க உடம்புக்கு என்ன!” ஓடோடி அவன் அருகில் போய் தோளைப்பற்றித்திருப்பி அவன் முகம் பார்க்க முயன்றாள். 

பதில் பேசாமல் அவள் புறம் திரும்பாமல் பற்றிய கையை விலக்கிவிட்டு, உள்ளே போய் கதவையும் சாத்திவிட்டான். 

யசோதையின் மனது  என்றாவது இதுபோல் வித்யாதரனால்  சுக்குநூறாக உடைந்து நொறுங்குமென்று அவள் நினைத்தாளா! 

வித்யாதரன் குடித்துவிட்டு வந்திருக்கிறான்! என்னதிது ஏன் இப்படியெல்லாம் ஆகிறது. அவனைத்  தெரியும் என்றாகி  இருபத்தியாறு வருடங்களைத் தொடப்போகிறது. 

எந்தவொரு சின்ன கெட்டப்பழக்கமும் இல்லாதவன் அவன். இப்போது இதென்ன! இதை எப்படி எதிர்கொள்வது! 

எதோவொரு இருண்ட பாதாளத்தில் தனித்து நிற்பதுபோல் என்ன செய்வது! ஏதென்று ஒன்றுமே புரியாமல்  மருண்டு மறுகியது  அவள் மனம். 

வித்யாதரனின் குடிப்பழக்கம் எதோ அந்த ஒரு நாளோடு என்று முடியாமல் தினமும் தொடர்கதையாகவும் எப்படி இதிலிருந்து இவனை வெளியே கொண்டுவருவதென்று யசோதைக்கு புரியவே இல்லை. 

திருமணமாகி இத்தனை வருடங்களில்  அவனோடு அவள் பேசாமல் பிணக்கு காட்டியதேயில்லை. 

இப்போது  அவனிடம் பேசாமல் கூட இருந்துபார்த்தாள். 

ஆனால் அவளின் காலடியில் வந்தமர்ந்து “நீ கூட என்னை புரிஞ்சுக்கலைன்னா எப்படி யசோ” என்றவனின் முகத்தைப்  பார்த்து அதற்குமேல் அவளுக்கு தாங்கவில்லை. 

யசோதை சின்னவயதிலிருந்து எவ்வளவுகெவ்வளவு அழத்தெரியாதவளாக இருந்தாளோ இப்போது தாங்கொணா  மனத்துயரங்கள் வற்றாது வடிந்த  கண்ணீராக  மடைகாணாது பெருக்கெடுத்தது. 

மடியில் கிடந்து அழுதுகொண்டிருந்தவளை  தலையில் வருடியபடியே அமர்ந்திருந்தாள் துளசி. 

பின் எழுப்பியமர்த்தி கண்ணீரைத்துடைத்து, 

“தலைவலியோடு இப்படி அழது அழுது உடம்பை கெடுத்துக்காதே யசோதா, இரு சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்.”

காபியோடு வற்புறுத்தி இரண்டு ஊத்தப்பமும் உண்ண வைத்தாள் துளசி. 

“உன் நலன் கெடுதுன்னு அந்த மனுசனும் அந்த மனுசனுக்கு கெட்டுப்போகுதுன்னு நீயும் மாத்தி மாத்தி இப்படி வருத்திக்கிறதனாலே யாருக்கு என்ன பிரயோஜனம் சொல்லு.”ஆம்பளைங்க பார்க்க தான் திடகாத்திரமா தெரிவாங்க யசோதா. நொடிஞ்சு போய்ட்டாங்கன்னா தாங்கிறதில்ல. உன் அண்ணனையே எடுத்துக்க போய்சேர்ற வயசா!! காசு பணத்த தொலைச்சிட்டாலும் கூழோ கஞ்சியோ போதும்ன்னு நாம நினைச்சிடுவோம். 

ஆனா வெளியே போற இந்த ஆம்பளைங்க காசு பணத்த தொலைச்சு நடுத்தெருவுக்கு வந்துட்டாண்டான்னு நஞ்சக்கொட்ற கொடுக்கு வார்த்தைகள தாங்கிறதில்ல. 

மானம் அவமானம்ன்னு பார்த்து கூனிக்குறுகிப்போய்ட்றாங்க. 

உங்கண்ணன் அப்படித்தான் போய்சேர்ந்தார். உன் புருஷன் அந்த பிரஷர் தாங்காம குடிய கையிலெடுத்துக்காரு. நியாயம்ன்னு நான் சொல்லமாட்டேன். ஆனா ஒடிஞ்சு போயிருக்க மனுசன இப்படி பேசாம கிடந்து தண்டிக்கிறது சரியில்ல யசோதா. நீ தான் தாங்கிப்பிடிக்கணும்..

உன் பெரியவள நீ பெத்தப்ப கொஞ்ச நாள் சித்தபிரம்மை பிடிச்சுக்கிடந்தியே. அப்ப  அந்த பச்ச குழந்தையோட குழைந்தையா உன்னை குளிப்பாட்டி, நேரா நேரத்துக்கு சோறூட்டி, டாய்லெட்க்கு கொண்டுவிட்டு, சில நேரமெல்லாம் உனக்கு சொல்ல தெரியாம போட்ருக்க ட்ரஸ்ல போய்வச்சிருக்க. கொஞ்சம் கூட அசிங்கம் பார்க்காம சுத்தம் பண்ணிவிட்டு துவைச்சு போடுவார் அந்த மனுஷன்.  

மரகதம்மா கதைகதையா சொல்லும். உன் மக ஒரு பக்கம் ராத்தியெல்லாம் தூங்கவிடாம வீல் வீல்ன்னு கத்துமாம். குடிச்ச பாலையும் கதக்கிட்டு கிடக்கும் குழந்தைய ஒரு பக்கம் பார்த்து உன்னைய ஒரு பக்கம் பார்த்துன்னு அப்படி தாங்கிப்பிடிச்சு பார்த்துக்கிட்ட மனுஷன்..

என்னைய எடுத்துக்க. வீட்டையும் பார்த்து, பெத்ததுங்களையும் பார்த்து,  கேட்டரிங்  வேலையிலையும் கூடவே நின்னு பார்த்து ஓடாதேஞ்சிருக்கேன். ஆனா ஒரு தலைவலி காய்ச்சல்ன்னு படுத்தாக்கூட நானே தான் மாத்திரைய போட்டு தேத்திக்கிட்டு மறுபடியும் ஓடாத்தேயனும். 

உன் நிலைமைல்லாம் எனக்கு வந்திருந்துச்சுன்னு வை அவ்வளவுதான் இவ இனி வேலைக்காக மாட்டான்னு அந்தபக்கமா குப்பைவண்டி வந்துச்சுன்னா தூக்கி வீசியெறிஞ்சுட்டு போயிருக்கும் என் குடும்பம். அது தான நடந்திருக்கும். 

இப்படி உனக்கு கிடைச்ச மனுசன மாதிரி எனக்கு மட்டுமில்ல ஊருலகத்தில ஒருத்திக்கும் கிடைச்சிருக்காது. 

ஓடமும் ஒரு நாள் வண்டியில ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில ஏறும் விதியோட ஆட்டத்த யாரால மாத்தமுடியும் யசோதா!!

ஒன்னும்முடியாம நொந்து போயிருக்க மனுசனக்கு நீதான் அனுசரணையா இருந்து தாங்கிப்பிடிக்கணும் அத செய் முதல்ல. ஆகிறத பார்த்துக்கலாம்ன்னு தெம்பு வரட்டும் அந்த மனுசனுக்கு. எல்லாம் சரியாயிடும்…”

யசோதை துளசி அண்ணி  வீட்டிலிருந்து நேராக அலுவலகத்திற்கு போய் நின்றாள். 

“சார் எங்கே காண்டிபன்!?”

பதில் சொல்லத்தயங்கினான் அந்த காண்டிபன். 

“இல்லைங்க மேடம் சார் வீட்ல தெரிய வேணாம்ன்னு சொன்னார்.”

“எங்கேன்னு இப்ப எனக்கு தெரிஞ்சாகனும்.” யசோதை குரலில் அழுத்தமும் கண்டிப்புத்  தொனியும் இருந்தது. 

“மேடம் வந்து.. சார்க்கு திடிர்ன்னு பிரஷர் அதிகமாகி தலைசுற்றி விழுந்திட்டார்.  பக்கத்தில இருக்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்துவிட்ருக்கோம். பயப்பட ஒன்னுமில்ல மேடம் ரெஸ்ட் எடுத்தா போதும்ன்னு சொல்லிருக்காங்க” 

கண்களை மூடிக்கிடந்தவனின் கைமேல் யசோதையின் குளிர்ந்த கை பட்டதும் விழித்துப்பார்த்தான். 

யசோதை தன் சொல்லாத ஆயிரம் வார்த்தைகளையும் அந்த கை அழுத்தத்தில் வைத்துப் பொதித்திருந்தாள். 

மெல்ல அவனின் சிகையை கோதிவிட்டு மென்நகை செய்தாள்.

இருதினங்களாக மகள்  கயாதியை போனில் பிடிக்கமுயன்று முடியாமல் மெசேஜ்  அனுப்பிவைத்தாள். 

“இந்த வீக்கெண்ட் வீட்டிற்கு வந்துவிடு, அப்பாவும் நானும் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். யாத்வியை வர சொல்லியாயிற்று. நீயும் வந்து சேர்.” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here