என் நறுநகை நாவலின் சில பாத்திரங்கள்

0
386

முதலாமவன் தானொரு தன்பால் ஈர்பாளனென்று வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத உளச்சிக்கலில் தன்னையே குறுக்கிக்கொள்பவன். தனக்கென ஒரு நட்பு வட்டத்தைக் கூட உருவாக்கிக்கொள்ள முடியாத தனியன்.

தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலைத்தவிர்க்க.. யாரும் இயல்பாக நெருங்கிவிடாதபடி தனக்கே ஒரு தீவட்டமாக தானொரு சிடுமூஞ்சி எரிந்துவிழுபவன் அகந்தையன் எனக்காட்டிக்கொள்கிறவன்.

ஆனால் அது உண்மையில்லை. அவனுக்கு நல்ல சிநேகிதர்கள் தேவைபடுகிறார்கள். மனம் திறந்து..சேர்ந்து சிரிக்க அழுக எந்த மறைப்பும் தேவைப்படாது தன்னை திறந்து முழுவதுமாக கொட்டிவிட ஆசைப்படுபவனே..

ஆனால் அவனுக்கு அந்த சுதந்திரம் மறுக்கப்பட்டதாகிறது. வீடு குடும்பம் சமூகம் மற்றும் அவனின் மருத்துவத் தொழில் துறையிலும் அவன் தன்னை வெளிபடுத்திக்கொள்வது இயலாததன் சிக்கலை நறுநகை பேசுகிறது.

“மருத்துவம் படிக்கிற பையன் நீயே இப்படி இருக்கலாமாடா!?” என அம்மா கேட்பார். இத்தனைக்கும் தாய் தந்தை இருவருமே நன்கு படித்தவர்கள்.

இவனின் விசயம் தெரிந்தபிறகு இவனோடு பேசுவதைக்கூட தாய் நிறுத்திக்கொள்கிறார். மகன் இப்படியென வெளியே தெரிந்தால் சம்பாதித்துவைத்திருக்கிற பெயர் கெட்டுவிடுமென்று மன நெருக்கடி தருகிற வீடும் குடும்பமும்.

இதுவும் இயற்கையென இயல்பாக ஏற்றுக்கொள்கிற சமூகம் நமதில்லை.

நம் நாட்டு மக்களின் ஜட்ஜ்மெண்டல் மைண்ட் செட்டானது தன்பால் ஈர்பாளனை எப்படி எள்ளல் நோக்கோடு பார்க்கும் என்பது அறிந்ததே.. போதாமைக்கு நம் தமிழ்சினிமாக்களில்..

எங்களுக்குள் அன்பும் காதலோடும்.. ஒரு உற்ற துணையை நாங்களும் தேடுவோம் என்பதையெல்லாம் காட்டாத சினிமா அவனா நீ என்கிற மகா மட்ட கேவலத்தொனிப்பில் எள்ளி நகையாடலையே தூக்கி நிறுத்திக்காட்டிக்கொண்டிருக்கிறது என்கிறான்.

தான் வாழ்கைத்துணையாக தேர்ந்தெடுக்கப்போவது ஒரு ஆணைத்தான் என தெரியவரும்போது வீடு குடும்பம் சுற்றம் சூழ்ந்த சமூகமும் தரப்போகிற மன நெருக்கடி எப்படியானதாக இருக்குமென்பதை சொல்கிறான்.

தினமும் மனிதர்களோடு நேரடியாக புழங்குகிற தொழில் மருத்துவம். ..நோயாளிகளை தொட்டு வைத்தியம் பார்க்கிற ஒருவன் தன்பால் ஈர்ப்பாளன் என தெரியும் போது தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் தன்னை ஒரு ஏலியனைப்போலதான் பார்க்கக்கூடும் என்கிறான்.

அடுத்து அபிரதி..

நறுநகை நாவலின் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் அபிரதி..

ஃப்ரெண்ட்ஸைக்கூட நம்ம சாதி ஆட்களா பார்த்து தேர்ந்தெடுத்து பழகு என சொல்லக்கூடிய பெற்றவர்கள் அபிரதிக்கு. பூசை புனஸ்கார சாங்கிய சம்பிரதாயப்பற்றுப்பிடிப்புகளைக்கொண்ட குடும்ப பின்னணி அபிரதிக்கு.

தானொரு ஏத்திஸ்ட், எந்த ஜாதி மத பற்றுப்பிடிப்புகளையும் சாராதவள், Non Gender(எந்த பாலினத்தையும் சாராத)வள். என்பதை பட்டவர்தனமாக சொல்லிக்கொள்ள தயங்காதவள் அபிரதி.

“நீங்க ஒரு சிஸ்டம் ரிலீஜியன் அது இதுன்னு எதையோ ஃபாலோ பண்ணிட்டுப்போங்க. நான் ஏன்னு கேக்கல.உங்களுக்கு தான்.. மகளா பிறங்கணுமா இல்லையாங்கிறது வேணா என்னோட சாய்ஸா இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் உங்களுக்கு மகளாக பிறந்துவிட்டதாலயே நீங்க ஃபாலோ பண்ற சிஸ்டம் ரிலீஜியன் இன்னபிற கட்டமைப்புகளை நானும் தூக்கிச்சுமந்தாகணும் என்கிற திணிப்பை என் மேல் செய்யாதீர்கள் என்கிறவள்.

நறுநகையில் மூன்றாமவன்..

திருமண பந்தம் என்கிற லீகலல் ப்ரஸுஜருக்குள் நுழைவது என்பது அதன்பிறகு இருவர் சம்பந்தபட்ட விசயமாக மட்டுமே இராது.

பிடிக்கிறதோ இல்லையோ.. அப்ளிக்கேஷன் ஃபார்மில் அடுத்து அடுத்தென இட்டு நிரப்பிக்கொண்டாக வேண்டிய கடமைச்சிக்கல்களை அதன் பின் அவ்விருவரும் சேர்ந்து வாழ்நாள் முழுக்க சுமக்கவேண்டியிருப்பது கட்டாயமாகிவிடும் என்று நினைப்பவன்.

“உனக்கு இந்த தாலி, திருமண பந்த செண்டிமெண்ட் எதுவும் இருக்கிறதா! இல்லாமல் நாம் இருவரும் சேர்ந்து வாழ்கிறோமென காட்டிக்கொள்வதில் உனக்கு எதும் மனத்தடை இருக்கிறதா..!” என தன் இணையிடம் கேட்பவன்.

நறுநகையின் நான்காவதாக இந்த ஒருத்தி..

“கல்யாணம் என்னோட கப் காபியில்லை. இருபத்தியிரண்டு வயதின் தொடக்கத்தில்தான் இருக்கிறேன். இப்போதே கல்யாணம் குழந்தை குட்டின்னு எல்லோரும் போற ட்ராக்ல நானும் ட்ராவல் பண்ண விருப்பமில்லை. மற்றவர்கள் போட்டு வைத்திருக்கும் பாதையில் ஈஸியா நடந்து போவது எனக்கு வேண்டாம்.எனக்கான பாதையை நானே உருவாக்கிக்கணும் அதுதான் எனக்கு நிறைவைத்தரும்.எனக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் நானே உருவாக்கிக்கொள்வதுதான் எனக்கு முக்கியம். அந்த இலக்கை நோக்கி போய்கிட்டு இருக்கேன். பாய்கிற குதிரைக்கு ஒரே நோக்கு..” என்கிறாள்.

தனக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை தேர்வு செய்துகொள்ளவேண்டியவள் தான்மட்டுமே என மிகத்தெளிவாக இருப்பவள்.

நறுநகை நாவலானது நமக்கும் அடுத்த தலைமுறையினரின் மனப்பக்குவத்தை நன்கு ஆய்ந்து எழுதப்பட்டது. நம் தலைமுறையினரால் வாசிக்கப்படும்போது

எந்தளவு எடுத்துக்கொள்ளப்படுமென்கிற யோசனையோடுதான் நூலை வெளியிட்டேன்.

பெற்றவர்களின் அணுகுமுறையில், சமூகத்தின் நோக்குமுறையில் மாற்றமும், மாற்றங்களை ஏற்கும் பக்குவ மனமும் இனியான எதிர்காலத்திற்கு அதி அவசயமாகிறது.

என் எழுத்தில் நான் சொல்லியிருப்பவை ஒரு கடுகளவாவது யாரையேனும் போய்ச்சேர்ந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியே..

Kaathal – The Core திரைப்படத்திற்கு வருவோம்.

படத்தில் காட்டியிருக்கிற இளைய தலைமுறையினரின் தெளிவும், மனப்பக்குவமும் சிறப்பு.

நம் தலைமுறைவரை காணாத ஒன்று அது. ஹய்யோ இப்படி செஞ்சு மாட்டிக்கிட்டோமே.. இப்படி நடக்காம இருந்திருந்தா நல்லார்ந்திருக்குமென… பிந்தி யோசித்தவர்கள் நாம்.

தலையைக்கொடுப்பதற்கு முந்தியே யோசிக்கிற தெளிவுத்தனத்தையாவது ஆதாரித்துப்பழகுவோம்.

ஓமனா தன் உடல் தேவைகள் இந்த மணவாழ்வில் திருப்திகரமானதாக இல்லையென்று விவாகரத்து கேட்பதை.. அப்படின்னா மணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்து செய்திருக்க வேண்டியதுதானே.. பிரிந்து போய் தனியாக வாழ்ந்திருப்பதுதானே.. இருபது வருடங்கள் காத்திருந்து விவாகரத்து கேட்பது செயற்கைத்தனமாக இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்களையும் காண முடிகிறது.

எந்த வயது வரை பாலுறவுத் தேவைகளைப்பத்தி யோசிக்கணுமென முடிவெடுக்க வேண்டியவள் ஓமனா மட்டுமே..

வளர்ந்துவிட்ட மகளிடமும் வயதான தாயிடமும் கலந்துபேசிவிட்டே அவள் சட்டத்தை அணுகுகிறாள். ஒரே காரணம் எவ்வளவு பேச முயன்றும் பிடிகொடுத்துப் பேசாமல் தனக்குள்ளேயே ஒளிந்துகொள்கிற மேத்யூவை உடைத்துத்திறக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

மணவாழ்விற்குள்

எவர் மீதும் செக்ஸ் திணிக்கப்படவும் கூடாது. மறுக்கப்படவும் கூடாது.

நறுநகையில் அடுத்து சுஜா..

என்னோடு படுக்கும்போது எவனை நினைத்துக்கொண்டிருக்கிறாயென குத்திக்குதறுகிற ஒருவன் சுஜாவின் கணவன்.

நம்மூரில் மணமான ஒருத்திக்கு படுக்கணுமா வேணாமான்னு. பிள்ளை பெத்துக்கணுமா வேண்டாமென முடிவெடுக்கிற உரிமையெல்லாம் ஒரு துளியும் இல்லை. மேரிட்டல் ரேப்பையெல்லாம் கேள்வி கேட்பார் எவருமில்லை என்கிறது சுஜாவின் வாழ்வு.

நறுநகையில் அடுத்து ஜெபராணி.

பத்துக்கு பத்து அளவே உடைய ஒரு சின்ன அறைதான் அவளின் மொத்தவீடும். அந்த வீட்டில் கணவனோடு மட்டுமேயல்லாது மாமியாரோடும் சேர்ந்தே வசிக்க வேண்டிய சூழல். மழை குளிர் காலங்களில் மாமியாரும் அந்த அறையில் தான் உறங்கவேண்டியிருக்கும். அல்லாத போது தெருவில் அந்த அறைக்கு வெளியே ஜன்னலையொட்டி கட்டிலைபோட்டு மாமியார் உறங்குவார் எனும் போது மணமாகி பத்துவருடங்களாகியும் ஒரு முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவித்து அறிந்திடாதவள் ஜெபராணி. அத்தோடு குழந்தை பெற்றுக்கொள்ளாதவளெனும் ஏச்சுபேச்சையும் வாங்கவேண்டியதாகிறது.

மாமியார் இறந்தபின் சூழல் மாறுகிறது. கணவனோடு ஜெபராணிக்கு தனிமை வாய்க்கிறது. ஆனால் காதல் வாழ்வில் உப்பும் உறைப்பும் கூட்டி ருசிகரமாக்கிட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. யாரிடமாவது கேட்டுத்தெரிந்துகொள்ள நினைக்கிறாள். ஆனால் இந்த வயதிற்கு பின் உனக்கு இது தேவையாவென கேள்வி எழுப்பிவிடுவார்களோவெனும் தயக்கமும் இருக்கிறது. நம்மாட்கள் தான் பாலுறவுத் தேவைகளுக்கு வயது வரம்பு பார்பவர்களாயிற்றே..!

ஒருவழியாக தெரிந்துகொண்டபின். முழுமை கண்டபின்… அதுவரை இருள்கப்பி பொலிவற்ற முகமாகவே உலவிக்கொண்டிருந்தவளின் முகம் பூவாக விகசித்து பொன் மஞ்சள் மினுக்கத்தோடு மிளிர்கிறது..

முழுமையுறல் என்பது எத்தனை அவசியம்..!!

அது சுஜாவோ ஜெபராணியோ ஓமனாவோ மேத்யூவோ தங்கமோ..

எந்த பாலினத்திற்கும் அவரவரின் காதலைக்கொண்டாடவும் இணையோடு இணைந்து முழுமையுறவும் முழு உரிமையும் உண்டு. இடையில் புகுந்து எள்ளி நகைப்பவர்களுக்கு என்ன வேலை.. !

மாமனார் ஓமனாவிடம் பேசுகிற காட்சி, மேத்யூ தந்தையிடம் வந்து பேசுகிற.. இருவரும் அவரவர் சுமக்கிற குற்றவுணர்வை அங்கே உடைத்தெரிகிற காட்சி, கடைசியில் மேத்யூ மனைவியிடம் வந்து மனம் திறந்து மன்னிப்புக்கேட்கிற காட்சி..

மிக அழகானவை.

அதுவரை அந்த வீடு மனக்குமைவுகளையும் குற்றவுணர்வு அழுத்தங்களையும் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டிருப்பதாயிருந்தது.. ஒருவருக்கு ஒருவர் உடைத்து பேசிவிட முடிந்தாலே போதும். வீட்டில் குடும்பத்தில் உறவுகளுக்கு மத்தியில் புரிதல் இருந்திட்டாலே போதும். தானாகவே சமூக எள்ளல்கள் உள்ளே நுழைய வாய்பற்றுப்போய்விடும்.

Marriage story எனக்கு மிகப்பிடித்த படம். உங்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டை சச்சரவும் வருத்தமும் இல்லாத போது எதற்கு மணமுறிவு என்கிற கேள்விக்கு .. இருவருக்குமிடையில் மாறாத அன்பும் காதலும் நட்பும் அப்படியேதானிருக்கிறது.. இந்த லீகல் கட்டுக்குள் அடைபட்டுக்கிடப்பது தான் மூச்சுத்திணற செய்கிறது என சம்பந்தப்பட்ட இருவர் முடிவெடுத்தால்.. இணைவது போல பிரிவதும் பிழையில்லை தானே…

Kaathal – The Core சமூகத்தில் உடைத்துப்பேசப்படவேண்டிய முக்கியமான விசயத்தை மிகச்சிறப்பாக மம்முட்டி மாதிரியானதொரு தலை நடிகரை வைத்து கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. நம்ம சினிமா கலாச்சாரத்தில் இத்தகைய மாற்றங்கள் அதி அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here