கூழாங்கல்
முதலில் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
ஒரு சின்ன பட்ஜெட்டில் அறிமுகமற்ற மனித முகங்களை வைத்து மிக நேர்த்தியாக வார்த்தெடுத்தார்ப்போல்.. சொல்லவந்ததை எந்த அலட்டலுமில்லாத தொனிப்பில் சொல்லமுடிகிற.. தமிழில் ஒரு படம். நிச்சயம் ஆரோக்கியமான விசயம்.
படத்தில் வசனங்கள் மிக மிகக் குறைவு. கவனித்துப்பார்த்தால் தெரியும் அந்த குறைவான வசனங்களுமே மனிதனின் வெற்று ஈகோவைச்சொல்வதே.. ஈகோவைத்தவிர மற்றதெல்லாம் மெளனமொழியில் ஒளிப்பதிவாக்கியிருக்கிறார்கள். கலக்கல் ல்ல..
இப்படி பேசாமல் பேசும் மொழி எனக்கு பிடித்திருக்கிறது..
திரைப்படமாக இருக்கட்டும் வாசிப்பாக இருக்கட்டும்.. பல கோணங்களில் விரித்துப்பார்க்க முடிகிற படைப்புகளை நான் பெரிதும் விரும்புகிறவள்..
அப்படி இந்த படத்தில் நான் பார்த்த கோணத்தை எழுதுகிறேன். (படம் இதைத்தான் சொல்கிறதென ஆணியடிக்க விரும்பவில்லை. இந்த கோணத்தில் நான் பார்த்தேன் என்று சொல்கிறேன்..)
What is life? என்பதை விவரிக்கச்சொன்னால் பதிலானது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணத்தில் விரியும் இல்லையா..!!
கூழாங்கற்களை நீர்ப்படுகைகளில் காண்போம்தானே .. நீர் பசையோடான கூழாங்கல் என்பது பரவசம் என்றால் அப்படியில்லாத வரண்ட வெளியில் கிடக்க நேர்வது துயரத்தின் மொத்தம்..
இவற்றை இப்படி எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்..
*நீர்ப்பசையை கனாவில் கொண்ட கூழாங்கற்களை வற்றி வரண்ட தரிசல் நிலத்தில் காண்பிப்பது.. Dry Life. வாழ்வின் பாலை
*வாட்டியெடுக்கும் வறுமைக்கு இரையாகும் எலிகள்..
முடிந்தளவு தப்பிப்பிழைக்க முயன்றும் மாட்டிக்கொண்டு கால்கள் ஒடிக்கப்பட்டு இதோ தீயில் வாட்டப்படப்போகிறோமென்றான பிறகும் மிச்சமிருக்கும் நம்பிக்கையில் நகர்ந்துபோகிற Rat Life.( எலி வாழ்க்கை என்பது தீரா வறுமையென்பதாகும்)
*அவ்வளவு பஞ்சத்திலும் அந்தச்சின்னப்பெண் கங்கா குட்டிப்பையன் வேலுவை பார்த்ததும் சிந்துகிற சிநேகப்புன்னகை..
கையில் இருக்கிற எதோவொன்றை அவனோடு பகிர்ந்துகொள்ள கொடுக்கிற Love life
*அடுத்தவேளைக்கான உணவென்பது கேள்விக்குறிதான் என்கிற நிலையிலும் பொறுமையாக ஒவ்வொரு விசிறி விதைகளையும் பொறுக்கி எடுத்து மொத்தமாக ஆகாசத்தில் விட்டெறிந்து அவைகளெல்லாம் சுற்றிச்சுழன்று பறந்தலைவதை பார்த்து.. வெறும் வினாடி நேரமே என்றாலும் மகிழமுடிகிற குழந்தை மனம்.
Live at least 55 seconds.
*தளும்பிச்சிந்தினது போக மீதத்தை வீட்டிற்கு எடுத்துப்போய்விடச் சுமக்கிற..ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று குடங்களின் நம்பிக்கை. Hope Life
படத்தில் மனிதர்களைத்தவிரவும் சொல்லாத சொற்களோடான மற்ற சில பாத்திரங்களுமுண்டு
*உடைந்த கண்ணாடிச்சில் (எதில் படுகிறதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும்)
- இன்னமும் பூமி தொட்டறியாத பாதங்களின் கொலுசுகள். கொலுசொலிகள்.
- பூமியைத்தொட்டபின்னான சுட்டெரிப்பில் மரத்துப்போகிற (விருப்பு வெறுப்பற்ற) வெற்றுப்பாதங்கள்..
*அகண்ட வாழ்வின் அச்சக்கிளறியாய் கடந்துபோகும் பாம்பு
*சுட்டுப்பொசுக்கும் உக்கிரத்தோடான வெயில் - அந்த வெயிலில் உதிரும் நிழற் பிம்பங்கள்.
இவைகளெல்லாவற்றோடும் ஒருவன் பயணிக்கிறான். அவனே
தீய்த்து எடுக்கும் உக்கிரத்தோடான வெயிலைவிடவும்
உக்கிரமான..பெரு உருவான மனித மன ஈகோ
எப்படியானவனென்றால்..
மான அவமானத்தை போட்டுக்கொண்டிருக்கிற சட்டையில் வைக்கிறான் ..
சண்டையில் தன் சட்டை கிழிந்துவிட்டதென்று வெளியே தெரிவதைக்காட்டிலும் சட்டையே போட்டுக்கொள்ளாத வெற்றுடலோடு திரிவதொன்றும் அவமானமில்லையாம் அவனுக்கு.
போதையில் ஊறி புகைத்துத்தள்ளி சுயநல வடிவாகத்திரிபவன்
யாரோ பசிக்கு சமைக்கப் பற்றவைத்த நெருப்பிலும் சிகரெட்டை பற்றவைத்துக்கொள்கிறான்.
சட்டியில் ஆக்கிவைத்த பாத்திரத்தின் சோற்றுக்கு அந்த வீட்டில் எத்தனை உயிர்கள் பசித்திருக்கின்றன என்பதெல்லாம் பொருட்டில்லை அவனுக்கு. வயிற்றை நிரப்பிக்கொள்கிறான்.
படத்தில் காட்டப்படும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்பதை மூன்றாகப்பிரித்தால்..
அந்த வரண்ட ஊரின் எல்லை மேட்டிலொரு இடிந்த மண்டபத்தில் மொத்தமும் ஆண்கள்.. அவர்களில் பாதிப்பேர் உறக்கத்தில்.. எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்கிற சோம்பலின் பகல் உறக்கம்..
விழித்திருக்கும் மீதிப்பேரும் உழைப்பிற்கு உடம்பு வளையாது..
திடீர் குபீர் அதிர்ஷ்டங்களை நம்புகிற
சூதாட்டத்தில் திளைக்கிற மட்டைச்சோம்பேறிகள்..
இவர்களுக்கெல்லாம் வாழ்க்கைப்பட்ட பெண்களோ வாழ்க்கை முச்சூடும் காத்திருந்தாலும்.. அள்ளி அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தாலும்.. நிரம்பவே நிரம்பாத போதும் ச்சீப்போவென விட்டெறிந்துவிட்டுப்போக முடியாத சுமையை சுமப்பவர்கள்.. ஆனால் ஏன்!!
ஏனென்றால்..
உற்று நோக்கினால் இந்த பெண்களின் கையில் ஒன்று குடமிருக்கிறது அல்லது குழந்தை இருக்கிறது..
நிரம்புமென்ற நம்பிக்கையில் குடங்களைப்போன்று.. பெற்ற குழந்தைகளுக்காக சகித்துக்கொண்டு வெற்று வாழ்க்கையைச் சுமப்பவர்கள் அப்பெண்கள். கடைசிக்காட்சியில் சிறுவன் வீடடைவதற்கு முன்பே அவனின் புத்தகப்பை வீடு வந்து சேர்ந்திருக்கும். அதையும் சுமந்து வந்தவள் அம்மாதான்.
எஞ்சியிருக்கிற குழந்தைகள் மட்டுமே வாழ்வின் பிடியை இறுக்கப்பற்றியவர்கள்..
தீர்ந்துவிடாது மிச்சமிருக்கும் நாளையின் வாழ்விற்காக காத்திருப்பவர்கள் இந்த பிள்ளைகள்..
வெக்கைக் காட்டில் அந்த தகப்பனும் மகனும் நடப்பது ஒரே பாதையில் தான்.. ஒரே பயணம் தான்.. ஆனால் அதில் தந்தையின் பார்வையில் படுவதெல்லாம் என்ன! மகனின் பார்வையில் படுவதெல்லாம் என்ன! முற்றிலும் வேறானது.
தண்ணீரே இல்லாத நசுங்கிப்போன வெறும் காலி பாட்டிலையும் மூடியைத் திறந்து பார்த்துவிட வெகு முயற்சி செய்கிறதொரு நாய்க்குட்டி..
இன்றில்லாவிடினும் நாளைக்கு எவரிடமிருந்தோ ஒரு துளி அன்பு கிடைத்துவிடுமென்கிற நம்பிக்கையில் பின்னோடு போகிற நாய்க்குட்டியும்..
அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு, வலியையும் பொறுத்துக்கொண்டு, கொஞ்சமும் விரும்பமுடியாத, அடிமனதிலிருந்து வெறுக்கின்ற போதும்.. அந்தத் தகப்பனின் பின்னால் சளைப்பற்று நடக்கும் அந்த சிறுவனும் அதே துளிக்காக காத்திருப்பவனே..
நாய்க்குட்டி முதலில் அப்பனுக்கு பின்னால் தான் போகிறது.. கண்டுகொள்ளப்படவில்லை.
மகன் அதை அணைத்துக்கொள்கிறான்.
நாய்க்குட்டிக்காயிருக்கட்டும் சிறுவனுக்காயிருக்கட்டும்…
life begins tomorrow
What is life? பதில் கொண்டுவரலாம்..
வாழ்வின் வரட்டுப்பாலையிலும், தீராத வறுமையின் பிடியிலும், உக்கிரமாக வாட்டியெடுக்கும் வதைப்புகளுக்கு நடுவேயும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த புன்னகையையும் ரசனையையும் அன்பையும் மலர்ச்சியையும் கருணையையும் பாசத்தையும் நேசத்தையும் நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் விட்டுவிடாமல்
வாழ்வின் மிச்சம் நாளைக்கும் வேண்டுமென பத்திரப்படுத்தி வைப்பதான கூழாங்கற்களே..
காட்சிகளில் பாருங்கள்.. அந்த கூறுகெட்ட தகப்பனுக்குப் பின்னால் போகிற சிறுவனுக்கு இதெல்லாமே ஒவ்வொன்றாகக் கிடைத்திருக்கும்… அவைகளை அவன் கடைவாயில் ஒதுக்கிக்கொண்டாந்து பத்திரமாகச்சேர்க்கிறான்..
கூழாங்கல் – இட்டு நிரப்பிக்கொள்ளத் தெரிந்தவனுக்கானது
கூழாங்கல்லை மட்டுமல்ல ட்ரவுசர் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த ஒவ்வொன்றையும் அது அதை அதற்குரிய இடத்தில் பத்திரப்படுத்துகிறான்.. அப்பனைப்போல ஏனோதானோ போக்கிலானவன் அவனில்லை..
தனக்கானது
தன்னை சார்ந்தது.. இதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நிச்சயம் திருப்பி அடிக்காதென்ற ஈகோ – அப்பா/ காலிக்குடம்
முற்றிலுமாக சுயத்தை தொலைத்த, தனக்குன்னு ஒரு லைஃப் இல்லைன்னு நினைக்கிற, எல்லாம் பிள்ளைகளுக்காவென வளைந்து போகிற தியாகத்தில் – அம்மா/நிரம்பாத குடம்
இரண்டாலும் வளர்க்கப்பட்டாலும் இரண்டு மாதிரிகளையும் சாராது தனக்கானது எதுவென்பதில் தெளிவாக உறுதியாக இருக்கும் மகன்
குடம் நிறையும்.
புவனம்