பறவைக்கூட்டில் வாழும் மான்கள்-Modern Love Chennai

0
407
paravaokootil vazhum maangal

Literature & Media studies ஸ்டூடன்ஸ்கிட்ட  ஒரு புதினத்தை கொடுத்து /ஒரு திரைப்படத்தை தந்து

அதை அக்குவேறு ஆணிவேறா பிரித்து மேய்ந்து நுணுக்கங்களை ஆராய்ந்து தீஸிஸ் எழுதச்சொல்லுவாங்க. 

இதற்காக எடுத்துக்கொள்ளப்படுவது புனைவுக்கதைகளே. அதில் தான் ஒரே ஆக்கத்தை பல கோணங்களில் விரித்து பார்க்க முடியும். இது மிக நல்ல பயிற்சியும் கூட.

நிறைய புதுப்புது விசயங்களை தன் நோக்கில் அலசுவதற்கு கற்றுக்கொள்ள முடியும்.

பார்த்தவரையில் ஆறு படங்களில் அதிகமும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் விரிவதாக ஒரு படம்..

பறவைக்கூட்டில் வாழும் மான்கள் பாரதிராஜா படம் என்பதையும் தாண்டி இந்த பட உருவாக்கத்தின் பின் நுணுக்கி கட்டமைவு செய்ய   ஒரு பெரிய டீமே நிச்சயம்  இருந்திருக்கும். பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

படத்தோட டைட்டிலில் இருந்து எண்ட் கார்ட் வரை என் பார்வையில் விரியும் கோணம். 👇

முந்தைய பதிவில் சொன்னதைப்போல் டைட்டிலே ஒன் லைன் ஸ்டோரி போல்..

ஒரு கூட்டில் குடும்பமாக வாழ்கிற தன்மை பறவைகளுக்கு கிடையாது.

கூடென்பது பறவைக்கு  அடைகாத்து  குஞ்சுகள் பொரிக்கின்ற தேவைக்கு மட்டுமே..

பெண்பறவைகள் தான் கூட்டை உருவாக்கும்.

குஞ்சுகளுக்கு  பறக்கத்தெரிகிற வரை தான் கூட்டின் தேவை பறவைக்கு.

அதன்பின் கட்டிய கூட்டை கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் பறந்து போய்விடக்கூடியவை.

பறவைகள் சுதந்திர வானத்தில் பறப்பவைகளென்றால் மான்கள் சுதந்திர வனத்தில் துள்ளித்திரிபவை

இங்கே பேசப்படுவது பறவையின் கூடு மட்டுமே( பறவையல்ல)

தேவைக்கு அதிகமாக பறவையே வசிக்காத கூட்டில்.. தன்மைக்கு முரணாய் மான்கள் வாழ நேர்வது நிர்பந்தம் தானே!?

படத்தின் மையப்புள்ளி பாத்திரம் ரேவதி என்பதை சற்றே ஒதுக்கிவைத்து விட்டு ரவியை பார்ப்போம்.

1. நாம் வாசிக்கிற ஒரு புத்தகத்தில் கடைசி சில பக்கங்களை காணோமென்றால் அடுத்த நாளே தேடி ஓடி வாங்கிப்படிப்போம். அதுதான் இயல்பு.

நிதானமா ஒரு பஸ்ல.. பயணத்தில..

எதிர் சீட்டுப்பொண்ணு அதே புக்க கையில வச்சிருக்க சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்து பின்

என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கலைனா மண்டை வெடிச்சிடும் உங்க புக்  தரீங்களா படிச்சிட்டு தரேன்னு இரவல் வாங்கிப்படிக்கிற ஒருவன் எப்படிபட்டவனென்றால்..

தன் முனைப்போடு எதையும் செய்யவிரும்பாத, தனக்கு  தண்ணீர் தாகமெடுத்தால் கூட மற்றவர்கள் எடுத்து வந்து கையில் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிற கேட்டகரி.

2. அதே ப்ராண்ட் போன். அதே ரிங் டோன் அதனால் எடுத்துப்பேசினேன் என்கிறவன்…

ரேவதியோடு படித்துக்கொண்டிருக்கிற குடும்பப்புத்தகத்தில் மிஸ்ஸாகிற சில பக்கங்களை கிட்டதட்ட ரேவதியைப்போன்றே இருக்கும் ரோகிணியைக்கொண்டு வாசிச்சுக்க நினைத்தான் போலும். ரோகிணி அவனுக்கு சந்தர்பவசத்தால் கிடைத்த மாற்றுப்புத்தகம்.

3. நன்கு கவனித்துப்பார்த்தால் ஒவ்வொரு முறையும் ரோகிணிதான் அவன் இருக்கும் இடத்திற்கு வந்து அருகில் அமர்கிறாள். அவனாக தேடி அருகில் போகவேயில்லை.

ரவி கேட்டகிரி ஆட்கள்.. தான் யாரையாவது காதலிச்சிட்டே இருக்கணுங்கிறத விட தன்னை யாராவது காதலிச்சிட்டே இருக்கனும்ன்னுதானே எதிர்பார்ப்பாங்க.  

சட்டைப்பொத்தான் இல்லாததை கூட கவனித்து பின்னூசி எடுத்துத்தருகிற ரோகிணி தான் அவனுக்கு தேவை. 

4.  தனிப் பயணத்தில் கைகுட்டையை

முகத்தில் போட்டு உறங்கினான் ஓக்கே காதலி கிடைத்தபின்னும் அவள் அருகே அமர்ந்திருக்கும்போதும் அதே போன்று எனக்கென்னானு உறங்குகிற ஒருவனை அவள் தான் தட்டி எழுப்பி விடைபெற்று இறங்கவேண்டியதாயிருக்கிறது.  அவளுக்கான நேரத்தை தரவும் அவன் தயாரில்லை. 

காதலியையே இப்படி நடத்துக்கிறவன் வீட்டில் மனைவியை எப்படி நடத்துவான்!

ரோகிணியோடான அவனின் பொழுதுகளைதான் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதில் தெரியும் ரவியின் குணாதிசயங்களைக்கொண்டு அவன் வீட்டில் எப்படி நடந்துகொள்பவனாக இருப்பான் என்பதை ஊகிக்க முடிகிறது.

5. போலவே ரோகிணிக்கான முக்கியத்துவத்தை தரவும் அவன் தயாரில்லை.

கட்டுமானத்திலிருக்கும் கட்டிடத்தில் வைத்து இவ்வளவு சிகரெட் புகைப்பதை நிறுத்திவிடச்சொல்லி ரோகிணி கேட்கும் போது.. வத்திகுச்சி இல்லாமல் போனதால்தான் புகைக்காமல் இருக்கிறேன் உன் வார்த்தைக்காக அல்ல என காட்டும் அந்த சீனும் சொல்லும். ரேவதியிடம் அதே தானே

6. மெட்ரோ ஸ்டேசனில் சக பயணியுடன் சண்டையிடும் ரவியை  தூரத்திலிருந்து  ஒரு அயற்சியோடு பார்த்துக்கொண்டிருப்பாள் ரோகிணி.

வீட்டில் ரேவதியும் அப்படிதான்.

அவனின் கல்யாண குணங்களை பிள்ளைகளுக்கு தெரிந்துவிடாமல்  மறைக்க பாடுபட்டே அயற்சியுற்றவள்.

7. சிகரெட் புகைப்பது பிள்ளைகளுக்கு தெரிந்துவிட்டபின்பும், அவர்கள் அப்பாவை பின்பற்றி சாக்பீசினால் புகைப்பதுபோல செய்துபார்பது தெரிந்தும், அவர்கள் குணம்கெடுமென தெரிந்துமே தனக்கு ஆயிரம் சிகரெட்கள் புகைபதற்கு கிடைத்த சந்தர்பத்தை விட்டுவிடாத சுயநலவாதியாக இருப்பவன்.

ஆயிரத்திற்கு பின்பு விட்டுவிட முடியுமெனில் அவ்வளவு புகைக்காமலே பிள்ளைகளுக்காக முன்பே விட்டுவிட  ஏன் முடியாது!

பிள்ளைகளின் பொறுப்பு அவனுடையதும்தானே!

பொறுப்பான கணவனாகவுமில்லை,

பொறுப்பான தகப்பனாகவுமில்லை.

குடும்பத்தை தாங்கித்தாங்கி பிடித்து சமாளித்து கொண்டுபோவது மொத்தமும் ரேவதியே

8. உன்னை நம்பி கல்யாணவாழ்கையில் கையை சுட்டுக்கொண்டவள் நான் தான். அந்த கை காயத்திற்கு ஒரு நல்ல பாண்டேஜ் வாங்கிவருவதில் கூட கவனம் வைக்காது அலட்சியம் காட்டுபவன்  நீ என்பதை ஒரு காட்சியில் பார்கலாம்

9.பிரச்சனைகளை நேருக்கு நேரா பேசி ஃபேஸ் பண்ற தைரியம் கூட இல்லாத ஒருவன். ஓடி ஓடி பால்கனியில் போய் நின்று கொள்வது

9.  ரவியின் தந்தை கேட்கும் கேள்வி.

“ரேவதிய தான் கல்யாணம் செய்வேன்னு பிடிவாதமா நின்ன. இப்ப இந்த பொண்ணு வேணும்ன்னு நிக்கிற நாளைக்கே வேற பொண்ணு வேணும்ன்னு தாவிக்கிட்டேதான இருப்ப!”

மகன் நிலைப்பு புத்தியில்லா தன்னலவாதி  என்பது தந்தைக்கு தெரிந்திருக்கிறது.

10. லிப்டில் வைத்து அந்த பக்கத்துவீட்டுக்காரர் சொல்வது “உங்களைப்போல நல்ல குடும்பம் கிடைத்தால் வீட்டை வாடகைக்கு விடுவேன்” எனும் போது ரவியின் முகத்தில் தெரியும் அதிர்வு

அந்த நல்ல குடும்பஸ்தன் எனும் பெயரை தக்கவச்சுக்கணுமே..

ரேவதி போய் ரோகிணி வந்த பின்பு அதே வீட்டில் வைத்து குடும்பம் நடுத்தக்கூடிய  தைரியம் அவனுக்கு ஏது! கூழுக்கும் ஆசை. மீசையிலும் ஒட்டக்கூடாது..  இமேஜ் போய்டுமே..

மூட்டை முடிச்சுகள் கட்டபட்டு.. வீட்டை காலிசெய்ய தயார்நிலையிலிருக்கும் காட்சி.

இப்படியான ஒருவன்

ஒரு குட்டிப்பயணத்தில் இரயில் ஸ்நேகிதம் போல பேச்சுத்துணைக்கு கொஞ்ச நேரம் கூட பயணிக்கிறவனாகத்தான் இருக்கமுடியும்.

காலம் முழுக்க கூடவே வைத்து குடும்பம் நடத்துவதெல்லாம் ரேவதிக்கென்றாலும் ரோகிணிக்கென்றாலும் சுமையேதான்.

அதனால்தான்  சுமைகளை தூக்கிக்கொண்டு வாடிய முகத்தோடு நடக்கும் தேவதியில் தொடங்கும் படம்

எல்லா சுமைகளையும் இறங்கிவைத்த தனியளின் சுதந்திரப்புன்னகையோடு முடிகிறது.

காதலித்தே மணந்துகொண்டாலும்

திருமண பந்தத்தில் நுழைந்த பிறகு காதல் தீர்ந்துபோவதன் காரணம் ஒன்று தான்.  பொறுப்புகளை சுமப்பது இருவருக்குமானது.

ஆனால் ஒருவர் பொறுப்பற்றவராகவும் தான்தோன்றி சுயநலவாதியாகவும் இருக்க,

மற்றொருவர் மட்டுமே 

மொத்த குடும்பச்சுமைகளையும் தூக்கி சுமப்பதென்பது

திருமண பந்தமெனும் நிர்பந்த கூட்டிற்குள்  சிக்குண்டு காலம் முழுக்க குடும்பத்தை அடைகாத்துக்கொண்டே வாழுவேண்டியதாகிவிடுகிற மானின் நிலையெனக்கொள்ளலாம்.

#பறவைக்கூட்டில்வாழும்மான்கள்

#modernlovechennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here