Why i love fiction என்றால்
கதை வாசிக்க பிடிக்குமென்பதற்காக மட்டுமல்ல கதையோடு கூடி ஒரு காலத்திற்குள் சூழலுக்குள் நிலத்தினுள் புகுந்து பார்க்க வாய்ப்பது..
வாசிக்க வாசிக்க என்னை உள்ளிழுத்துக்கொண்டதெல்லாம் இதில் நிலக்காட்சிகள்.
என்னைப்போன்ற ஊர்சுற்றி விரும்பிகளுக்கு, புதுப்புது இடங்களை, மண்ணை மனிதர்களை அறிந்துகொள்கிற தாகத்தோடு அலைபவர்களுக்கு த கிரேட் அலோன் அற்புதமான வாசிப்பனுபவத்தை தருமென்பது உறுதி.
தான் பார்த்துப் பார்த்து களியுற்று ரசித்து அனுபவித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு அழகான எழுத்து நடையில் அலாஸ்காவின் பொழிவூறலை அந்த மண்ணின் பண்பை காலநிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டோடும் மக்களின் வாழ்வியல் முறைமைகளை இப்புதினத்தில் விரவிக்காட்டியிருக்கிறார் கிரிஸ்டின் ஹன்னா
பதிமூன்றுவயதுச் சிறுமி லெனி இதில் கதை சொல்லி.
சிறுமி லெனி தன் தாய் தந்தையோடு ஊர் ஊராக இடம்மாற்றிக்கொண்டே இருக்கின்ற சூழல்வயப்பட்டவள்.
ஆனால் ஏன்! 430 பக்கங்களின் முதல் மூன்று பக்கங்களில் அதனைச் சொல்லிவிடுகிறார் ஹன்னா
கதையின் காலம் 1974ல் தொடங்குகின்றது. இந்தக் காலமானது
போர்வீரனுக்கு போர்காலத்திற்கு பின்னான Post traumatic Stress Disorderலிருந்து வெளிவரப்போதுமானளவு தெரபி கொடுக்கப்படாத காலமாகவும்
வீட்டு ஆண்களின் கையெழுத்தில்லாமல் பெண்கள் நிதி சுதந்திர வாய்ப்புப்பெறமுடியாத – வங்கிகள் க்ரெட் கார்ட் கூட கொடுத்திடாத கெடுபிடியுடனும்
பெண் கொடுமைப்படுத்த படுவதையும் சிறுமைப்படுத்தபடுவதையும் – டொமஸ்டிக் வயலன்ஸை என்னவென்று கேட்டிடாத சட்டமும், நீதி கிட்டாத காலம்.
தந்தையும் தாயும் ஓயாது சண்டையிட்டுக்கொண்டே இருக்கிற வீட்டில் முதிர்ச்சியோடு இருப்பவள் தான் மட்டும்தான் என்கிறாள் லெனி..
தந்தை போருக்கு போய்வந்தபின் தலைகீழ் மாற்றத்தில் கவிந்துகிடக்கிறது இவர்கள் வாழ்வு.
நிம்மதியையும் அமைதியையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கிற தந்தை தன் தேடலின் முடிவில் வசிக்கக் கண்டடைகிற இடம் அலாஸ்கா.
பிறந்து வளர்ந்த சூழலில் நகரவாழ்விற்கு பழக்கப்பட்டிருந்தவள் சிறுமி லெனி. தாய் கோராவும் தான்.. வசதி வாய்ப்புகளை துறந்து கணவன் சொல்கிற அத்துவான காட்டிற்கும் பின்னோடு போகிற அளவு காதலுற்றுக்கிடப்பவள் கோரா.
இனி இவர்கள் நிலத்தின் கடைக்கோடி எல்லையில்.. விரிந்த கடலும் அடர்ந்த வனமும் சூழ அதன் நடுவே.. முற்றிலும் தொடர்பு எல்லைக்கு வெளியே.. மின்சாரம் நீர் கழிவறைமாதிரியான அடிப்படை அத்தியாவசிய வசதிகளும்கூட அற்ற ஒரு இடத்தில் வசிக்கப் போகிறார்கள். இருந்தும் லெனி தன் பதிமூன்று வருட வாழ்வில் முதன்முதலாக இதைத்தான் வீடென்று உணர்கிறாள்.
இது என் வீடு என உணரச்செய்கிற ஓர் இடம் ஒவ்வொருக்கும் இருக்கும்தானே.. மனநிறைவை தரக்கூடியது.
அலாஸ்காவை ஹன்னா இவ்வாறெல்லாம் சுட்டுகிறார்.
☆ அலாஸ்கா பேரமைதியும் பெரும் திகிலையும் காட்டுகிற அபரிமிதமான அழகும் அதே அளவு ஆபத்துமானது.
☆ பிழைத்துக்கொள்வதற்கும் அதேசமயம் தொலைந்துபோவதற்கும் ஆயிரம் வழிகளைக்கொண்டது.
☆ இங்கே வருபவர்களெல்லாம் எதையோ தேடியோ அல்லது எதிலிருந்தாவது தப்பிக்கவோ வருபவர்கள். ஒவ்வொருவருக்கும் இருகதைகளுண்டு. முன்பானதும் இப்போதையதும்..
☆ வரப்போகும் குளிர்காலத்தில் பிழைத்துக்கிடக்கவே ஏனைய காலநிலைகளில் முன் தயாரிப்புகளில் முனைப்பாக இருக்கிறார்கள் எனில் குளிர்காலம் எவ்வளவு கொடூரமானது! காண்பவர்களெல்லாம் குளிர்காலத்தை அச்சக்கண்களோடு புதியவர்களுக்கு எச்சரிக்கின்றனர்.
☆ கோடை நாட்களில் நாளில் பதினெட்டு மணிநேர சூரிய ஒளி குறையாததுபோலவே குளிர்காலமானது உறைபனி குளிரில் அடர்ந்த நீண்ட இரவுகளோடானது.
☆எதைசெய்யவேண்டும் எப்படிசெய்யவேண்டுமென்று சொல்வதற்கெல்லாம் யாரும் இருக்கமாட்டார்கள். அக்கம்பக்கம் இருக்கிற நாம் தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழப்பழகிக்கொள்ள வேண்டுமென்று தானாக முன்வந்து உதவிகளைச்செய்கிற சகமனிதர்கள்.
கதைக்குள் மக்கள். யாருமே கெட்டவர்கள் இல்லை. அவரவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.
☆ஒன்று இரைதேட கற்றுக்கொள்ளவேண்டும் அல்லது இரையாவதற்கு தயாராகிவிட வேண்டும்.
லெனி வேட்டையாட பயின்றுகொள்கிறாள்.
/she’d killed something. Fed her family for another night.
Killed something. Stopped a life. /
ஆழமானதாகவும் எளிதாகவும் சொல்லிவிடுகிற
மிக நேர்த்தியான சொற்களின் கட்டமைப்பு. கிரிஸ்டின் ஹன்னாவின் ரைட்டிங் ஸ்டைல் அசரடிக்கிறது.
/“It’s scary that people can just stop loving you, you know?“/
நாவலின் ஓர் இடத்தில் லெனியோடு கூடப்படிக்கும் சிறுவன் கேட்கிற இந்த கேள்வி.. – சொல்லப்போனால் மொத்த கட்டுத்தளமும் இதனைச்சுற்றிதான். Love காதல். அன்பு…
ஆனால் எது காதல். எது அன்பு செய்வது!?
மட்டுப்பட்டுவிடுமோ அல்லது இழந்துவிடுவோமோ எனும் அச்சத்தில் இறுக்கப்பற்றி பிடித்துவைப்பது இதை லெனியின் தந்தை செய்கிறார்.
முழுமையும் இழந்து அடங்கி அடிபட்டுக்கிடப்பது! இதைத்தான் காதலென்று ஏற்கிறாள் கோரா. லெனியின் தாய்.
மொத்தத்தில் தந்தையை தாய் விட மாட்டார். தாயை விட்டு லெனியால் போக முடியாது.. சிக்கியிருக்கிற இந்த வட்டத்திற்குள் அன்பென்பது தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் சூனியம் ஆகிறது..
அலாஸ்கா ஒருவரை உருவாக்குவதில்லை.வெளிப்படுத்துகிறது. தந்தையின் மென்மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்ற மூர்க்க குணத்தை வெளிப்படுத்திக்காட்டுகிறது..
தந்தை மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்குவதையும் தாய் அவரை மீண்டும் மீண்டும் மன்னித்து ஏற்பதையும் நிறுத்தவே போவதில்லை – லெனிக்கு போலவே நமக்கும் திரும்பத்திரும்ப இதே நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருப்பது வாசிப்பில் சுணக்கம் அயர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது..
மூன்று காலகட்டங்களில் விவரிக்கப்படும் நாவலில் Narrator ஒருவரே அத்தோடு கிளைக்கதைகளும் இல்லையெனும்போது.. ஒரே கோட்டில் நகரும் கதையை.. பின்பாதி மெதுநடையில், அதிகமும் ரிப்பீடட் வருவதையெல்லாம் தவிர்த்து சுருக்கி தந்திருக்கலாமென்றே தோன்றுகிறது.
அமெரிக்கப் பெண் எழுத்தாளர் கிரிஸ்டின் ஹன்னா சட்டம் பயின்றவரும் கூட. குடும்பத்தொழில் மூலம் அலாஸ்காவோடு ஹன்னாவிற்கு நேரடி தொடர்பும் இருக்கிறது. மிகவும் விரும்புகிற ஓரிடம் என்பதாலும்தான் இவ்வளவு துல்லியமான விவரணை அழகுற தரமுடிகிறதுபோல..
☆இலக்கு – இந்த வருடத்தில் ஹன்னாவின் மற்றுமொரு நாவலை வாசித்துவிடவேண்டும்.
☆Bhuvanam’s Book review
☆26.Jan.2024