தன் வயிறு ஏன் வளர்ந்துகொண்டே போகிறதென அறியக்கூட செய்யாத பதினான்கு வயது சிறுமி சீலி தன் குமுறல்களை கடிதமாக கடவுளுக்கு எழுதத்துவங்குகின்றாள். கடவுளிடமின்றி வேறெவரிடம் சொன்னாலும் உன் தாய் செத்துவிடுவாள் ஜாக்கிரதையென மிரட்டப்பட்டபின் அவளால் வேறென்னதான் செய்யமுடியும்!
கல்வியறிவு மறுக்கப்பட்ட சூழ்நிலையில் வளர்கிறவளின் உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்படுகின்ற அக்கடிதங்களின் சொற்கள் கடவுளுக்கு புரிந்தால் சரி.
சொந்த வீட்டில் தகப்பன் என்றிருக்கும் மனிதனால் வல்லுறவுக்கு உள்ளாகி அடுத்தடுத்து இருமுறை பிள்ளைகளை சுமந்து பெற்று இருமுறையும் தன் கையிலிருந்து குழந்தைகள் பறிக்கப்படுவதை இயலாமையோடு எழுதுகிறாள்.
வளர்ந்துபின்னும் அவளை விடாமல் துரத்தும் துயரங்கள்.தந்தை வயதுள்ள ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாக அவனின் பிள்ளைகளுக்கு மாற்றாந்தாயாக புகுந்த வீடு போகிறாள். வீடு மட்டுமே மாறுகிறது.
மொத்த வாழவிலும் ஒரே ஆறுதல் தங்கை நெட்டியே.. அவளும் பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டபின் அவளிடமிருந்து அதன்பிறகு அவள் உயிரருடன் இருக்கின்றாளா இல்லையா என்பதும் தெரியாமல் வருடங்கள் ஓட கடிதங்களும் நீள..
கணவனின் மகன் வளர்ந்து காதல் மணம்புரிந்து மருமகள் வருகிறாள் வீட்டிற்கு.சோபியா சீலியைப் போல் சொல்லுக்கு பணிந்து நடக்கிற அடக்கமான மனைவியாக இருக்க மறுக்கிறாள் என புகார் செய்கிறான் மகன். எனில் அவளை அடி எனத்தூண்டுகிறாள் சீலி. அடித்தால் திருப்பி அடிக்கிறவள் சோஃபியா. நன்கு வாங்கிக்கட்டிக்கொள்கிறான் அவன்.
பிறந்ததிலிருந்து ஒவ்வொருவரிடமும் போராடி போராடி களைத்துவிட்டேன். காதல் மணவாழ்விலும் போராடிக்கொண்டே இருப்பது வெறுப்பாக இருக்கிறது என்கிறாள் சோஃபியா. அவள் ஐந்து குழந்தைகளை பெற்றுவிட்ட பிறகும் மாறாத கணவனோடு மாரடித்தது போதுமென போடாப்போ நீ இல்லாமல் வாழமுடியாதா என்னவென விட்டெறிந்துவிட்டு ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போய்விடுகிறாள். சோஃபியாவின் இந்த தன்னம்பிக்கையும் துணிவும் தனக்கில்லையே எனும் சீலியின் மறுகலில் தொடர்கின்றன கடிதங்கள்.
வீடு அப்படியேதானிருக்கிறது. வீட்டிற்குள் கணவனின் காதலி ஷக் எவரி வரும்வரை.. அவளுக்காக உயிரையும் கொடுக்க தயாரெனும் அளவிற்கு உருகி உருகி பார்த்துக்கொள்கிறவன் சீலியின் கணவன். ஷக் அவனை பெயரிட்டு அழைக்கும்வரை சீலிக்கு கணவனின் பெயரும் தெரிந்திருக்காது.
அவளின் அசத்தும் அழகில் அதீத ரசனையில் தனித்திறமைகளில் பெருங்காதலில் ஷக் யாரையும் அசரடிப்பவள்.. பிரமிக்கச்செய்பவள்.
எவராலும் எதன்பொருட்டும் கட்டுறாத கட்டுப்படுத்த இயலாத காட்டாற்று வெள்ளம் ஷக்.
நீயாக நான் இல்லை என்பதால் தான் கொடுமைப்படுத்தபடுகிறேன் என்கிறாள் சீலி ஷக்கிடம்.
ஷக் சீலியிடையேயான அணுக்கம், அன்பு, காதல், புரிதல்.. அலாதியானவொன்று. களிமண்ணின் குழைவில் வனையக்கொடுத்து வடிவேகிற உறவு.
ஷக் சீலியின் வாழ்வில் வந்த பிறகு சீலியின் தன்னம்பிக்கையை தூண்டுகிறாள், மனம்திறந்து பேசச்செய்கிறாள், நடை உடை பாவனைகளை மாற்றுகிறாள். அவளை வீட்டிற்கு வெளியான உலகைக்காணாச்செய்கிறாள். சீலியின் பெண்மை திறந்து கொள்கிறது. காதலில் தோய்கிறது.. மொத்த வாழ்வின் முதற்புள்ளியையும் சீலிக்கு தன் மத்திய வயதில் தொட வாய்த்திருக்கிறது.
சீலிக்கு தங்கை நெட்டி எழுதிய கடிதங்களை அவளிடம் காட்டாது பலவருடங்களாக கணவன் மறைத்து வைத்திருந்தது ஷக் மூலம் வெளிபடுகிறது.
அத்தனைக் கடிதங்களையும் மொத்தமாக சேர்த்துவைத்து வாசிக்கிறாள் சீலி. ஜார்ஜியாவின் ஒரு ஒடுங்கிய கிராமத்தில் வீட்டிற்குள் இருந்தபடியே தங்கையின் கடிதங்களின் வாயிலாக உலகின் மறுமூலையில் நடப்பதையெல்லாம் அறிந்துகொள்கிறாள் சீலி. துளித் துளியாய் தான் பார்த்த, அனுபவித்த அத்தனையையும் கொட்டி எழுதியிருப்பாள் தங்கை.
தானே தன் கண்கள் கொண்டு பார்பது போலிருக்கும் சீலிக்கு. சீலி பெற்ற இரு குழந்தைகளும் உயிரோடு நல்லபடி வளர்வதையும் கடிதத்தில் சொல்லியிருப்பாள் நெட்டி..
சீலியின் உலகம் திறந்துகொள்கிற இந்த கதையில்
கதைக்கு ஊடே கறுப்பினத்தவரின் மீதான வெள்ளையர்களின் வன்ம அரசியல் ஒடுக்கி நசுக்கப்படுதல்,
ஆப்ரிக்க மக்களின் மனப்போக்கு, விடாமல் பிடித்துவைத்திருக்கிற மூடமைகள், கொத்தடிமைத்தனம் பெண்ணடிமைத்தனம் இன்னபிற மண் மக்கள் கலாச்சார முறைமைகளையெல்லாம் விரவி எழுதபட்ட புதினம்.
தங்கையின் கடிதத்தில் சொன்னவைகளிலும் சோஃபியாவிற்கு நடக்கிற அநீதியையும் கண்டு நொந்துபோய் சொல்வாள் சீலி…”இனி நான் கடவுளுக்கு கடிதம் எழுதமாட்டேன். தங்கைக்கு எழுதப்போகிறேன். கடவுள் ஒரு ஆண் எனத்தெரியாது.. அதுவும் வெள்ளையினத்து ஆண் என்பது. தெரிந்திருந்தால் நான் கடவுளுக்கு கடிதம் எழுதியிருக்கவே மாட்டேன். கறுப்பின நம் கூப்பாடுகளையெல்லாம் அவர் எங்கிருந்து செவிமடுத்து புரிந்துகொண்டிருக்கப்போகிறார்!”
“எனில் இவ்வளவு நாள் நீ யாரை கடவுளாக நினைத்திருந்தாய்?”
“இப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்ததில்லை. இதுவரை யாரும் என்னிடம் கேட்டதுமில்லை. கடவுள் யாரென்று யோசித்ததுமில்லை. கோயிலுக்கு போகிறவர்கள் தங்கள் மனப்புழுக்கங்களை சொல்லவும் கேட்கவுமே போகிறார்கள். கடவுள் யார் என்று ஆராயப் போவதில்லை”
“எனில் கடவுள் என்பது உன் மனம் உருவாக்கிக்கொண்டதுதான். உனக்குள் இருப்பதுதான் கடவுள்”
ஷக்கிற்கும் சீலிக்குமான இந்த உரையாடல் எனக்கு பிடித்த பகுதி..
நீயும் உன் ஐந்து குழந்தைகளும் எப்படி இருக்கீறீர்கள் எனும் கேள்விக்கு “ஐந்தில்லை இப்போது ஆறு. வீட்டைவிட்டு போய்விடுவதால் ஒன்றும் வாழ்வே முடிந்திடாது.” சோஃபியாவின் இந்த கெத்து…
கடவுளுக்கு மாறாக தங்கைக்கு சீலியால் எழுதப்படும் கடிதங்கள்.. வயதும் அனுபவங்களும் சீலிக்கு பெற்றுத்தரும் மாற்றங்களை கடிதங்களின் எழுத்து நடை மாறுவதைக்கொண்டே துள்ளியமாக காட்டியிருக்கிறார் ஆலிஸ் வாக்கர்.
திறந்துகொண்ட பின் வாழ்வு சீலிக்கு என்னவெல்லாம் வைத்திருக்கிறதென்பது மீதி…
சிறந்ததொரு வாசிப்பனுபத்தை தரக்கூடியது The colour purple by Alice walker. (1982)
இப்புதினம் தமிழில் ஷஹிதாவின் மொழிபெயர்ப்பில் அன்புள்ள ஏவாளுக்கு எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.(2019). The colour purple போலவே அன்புள்ள ஏவாளுக்கு அழகான பொருள் பொதிந்த தலைப்பு.
சஹிதாவின் அழகான மொழிநடையிலும் வாசித்துபார்க்கணுமென நினைத்திருக்கிறேன்.
The colour purple இதே தலைப்பில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது..(1985) காட்சிவடிவில் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் வாசிப்பின் ஆழத்தில் கிடைக்கிற ஏதோவொன்று மட்டுபட்டிருக்கிறது. நாவலை வாசித்துவிட்டு சினிமாவில் பார்த்தால் அப்படித்தான் தோணும்போல
வாசிப்பில் முழு நூலும் கடிதங்களின் வாயிலாகவே விரியும்.. சீலியின் மனதிற்குள் புகுந்து பார்த்துவிட முடிகிறது.. ஷக் மற்றும் சோஃபியாவின் பாத்திரங்கள் படத்தில் தெளித்துவிட்டார்போல் ஜஸ்ட் காட்டியிருப்பதாகபட்டது.
இதே படம் இதே தலைப்போடு மீண்டும் மியூஸிக்கல் மூவியாகவும் இந்த மாதத்தில் வெளியாகும். போய்பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.
- Bhuvanam’s Book Review
- 11 Jan 2024.