பன்னிரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்த போதினும் கால் பாகம் கூட பார்த்துமுடிக்க முடியாத அளவு அழகில் விரிந்த தீவுகளைக்கொண்டது அந்தமான்.
அங்கே சுற்றிலும் நீர் சூழ்ந்த பெருவனத்திற்குள் திரியும் போது சிலசமயம் மெய்மறந்து போய் மனம் லயித்து அழகான கவிதைகளை கற்பனை செய்திருக்கிறது சில சமயம் திகிலூறிச் சிலிர்க்கச்செய்யும் கற்பனைகளைச் செய்திருக்கிறது.. அந்த அளவு அழகில் மயக்குகிற இயற்கை அதைவிட கூடுதலாய் மருட்டவும் செய்யும்.
விரிய விரிய தண்ணீர்.. வாழ்நாளில் அவ்வளவு தண்ணீரையும் அவ்வளவு தண்ணீரின் நடுவே பயணம் செய்கிற முதல் அனுபவத்தையும் அங்குதான் கண்டேன்/கொண்டேன்.
படகைச் செலுத்துகிறவரைத்தவிர பத்து பயணிகள் அளவே கொண்டதொரு சின்ன மோட்டார் படகில் அவ்வளவு தண்ணீருக்கு நடுவே போய்க்கொண்டிருக்கிறோம். நீரைச்சுற்றிலும் மாங்குரோவ் காடு. விர்ரென்று வேகமெடுத்து போய்க்கொண்டிருக்கிறது படகு. கண்ணில் பட்டுக்கொண்டிருந்த எங்களுடையதைப்போலவே பத்து பத்து பயணிகளைக்கொண்ட இரண்டு மூன்று படகுகள் வளைவுத்திருப்பங்களிலோ வேகத்தினாலோ அப்புறம் கண்ணில் படக்காணோம். திடுமென எந்த முன்னறிவுப்பின்றி சடசடத்துப்பெய்கிறது மழை.. மழையென்றால் மழை. ஒவ்வொரு துளியும் ராட்சச வீரியத்துடன் உடலில் விழுந்து ஊசிக் குத்தலாய் துளைத்தெடுக்கிறது.. வலியைக்கொடுக்கிறது. எதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் குடையைப்பிடித்துக்கொண்டு இருக்கும்போது நீரின் மேல விழும் மழையை கவிதையாய் ரசிக்கலாம் தான்.
ஆனால் ஓடவும் ஒதுங்கவும் முடியாத தண்ணீருக்குள் வனத்திற்குள் உடலைப்பொத்துக்கொள்ளச்செய்கிற வலியை இறக்குகிற மழையை எங்கிருந்து ரசிக்க.. அது ஒரு மறக்கமுடியாத திகிலனுபவம் கூடவே யாரையும் காணோம். மோட்டர் படகு இப்படியே நின்றுவிட்டால் பத்துபேரும் இந்த அடர்ந்த வனத்திற்குள் நீருக்கு நடுவே இப்படியே மாட்டிக்கொண்டுவிட்டால் என்கிற விபரீத கற்பனைகளையெல்லாம் செய்து மேலும் திகிலைக்கூட்டிக்கொண்டதை என்ன சொல்ல.. !!
Kaala Paani – Survival drama
நெட்ஃப்ளிக்ஸ்
7 episodes
நாமும் நம்மை சேர்ந்தவர்களும் இடுக்கண் எதிலும் மாட்டிக்கொள்ளாதவரைதான் அழகியல் உணர்வுகள், தன்மை நேர்மை சீர்மை குணாதிசயங்கலெல்லாம் என்பதையும்..
உயிரச்சமென்கிற ஒன்றிற்கு முன் மற்ற விதிப்புகளத்தனையும் பொட்டிப்படியாகிப்போக தப்பிப்பிழைப்பதொன்றே குறியாக மாறுமென்பதையும்,
உணவுச்சங்கிலியில் எந்தப் புள்ளியில் இரையெடுப்போம் எந்த புள்ளியில் இரையாக்கப்படுவோம் என்பதன் புதிரோட்டத்தையும் மிக மிக நேர்த்தியாக அந்தமான் தீவுப்பகுதிகளில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு, செதுக்கலான எடிட்டிங், அந்தமானின் அழகு விரியும் ஒளிப்பதிவு. டைட்டில் சீனாக காட்டப்படும் வாட்டர் பைப் லைனே மிரட்டலா இருக்கு.
தமிழில் டப் செய்தும் இருக்கு. ஆனால் நான் ஹிந்தியில் தான் பார்த்தேன். முதன்முதலாக fword பயன்படுத்தப்படாத இந்திய சீரீஸ்.
கொஞ்சம் கூட போர் அடிக்காமல் ஏழு மணி நேரங்கள் முடிந்ததே தெரியாதளவு தரமா எடுத்திருக்காங்க.
போர்ட் ப்ளேரில் இருக்கும் செல்லுலார்/காலாபானி ஜெயிலில்
மாலைகளில் ஒரு மணி நேர லைட் & சவ்ண்ட் ஷோ நடக்கும். அதில் ஓம் பூரியின் குரலில் ( கனகம்பீரமான கனீர் அதேசமயம் சிறு நடுக்கமிருக்கும் கலவையான குரல் ஓம் பூரிக்கு) ஏன் காலாபானியென்ற பெயர் வந்ததென்று சொல்லப்பட்டது.
மிகக்கொடூரமான தண்டனைகள் தரப்பட்ட அந்த சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தங்கள் இளமைக்காலம் முழுதையும் அங்கேயே தொலைத்த, வாழாத வாழ்வின் துயரங்கள் கலந்த நீர் என்பதால் அந்த பெயராம்.
அந்தமானின் ஹெவ்லொக் தீவில் காலா பத்தர் பீச் இருக்கு. நீலக்கடலும் வெள்ளை வெளேர் மணலும் கொண்ட பீச். இதற்கு ஏன் காலா பத்தர் பெயர் வந்ததோ தெரியல.
அந்தமானில் பராட்டாங் தீவிற்கு போகிற வழியானது ஜராவா பழங்குடியினர் வசிக்கிற பகுதி. ஆயுதங்கள் ஏந்திய வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல மிகுந்த கெடுபிடி சட்டத்திட்டங்களுக்கு நடுவே தக்க பாதுகாப்பு வளையத்திற்குள் தான் அந்த சாலை பயணமிருந்தது. அப்போது கண்ணில் பட்ட சில ஜராவா ஆடவர்கள் வார்த்தெடுத்தார்ப்போல என்னவொரு கட்டுத்திட்டான உடல்வாகும் உயரமும் மினுமினுப்பும்.
நம்மாட்கள் ஜிம்மில் போய் கிடந்து வொர்கவ்ட் செய்து வேர்வை சிந்தி எடுக்கிற சிக்ஸ்பேக்லாம் அசால்டா ஆரோக்கியமா இயற்கையா அவங்களுக்கு இருக்கு.
இவர்களைப்பற்றி இன்னமும் கொஞ்சம் தெரிந்து கொள்ள அங்கிருந்து புத்தகம் ஒன்று வாங்கிவந்திருந்தேன். அதில் பெரிசா தகவல்கள் இல்லையென்றாலும் தெரிந்துகொண்டவரை
அவர்களின் தேவைகளெல்லாம் நம்மைப்போல லிஸ்ட் போட்டு லிஸ்ட் போட்டு நீண்டுகொண்டே போகிறவைகள் அல்ல.
உடைகளை பொருட்படுத்துவதில்லை.
உறைவிடமும் தேவை ஏற்பட்டால்தான் கூரை அல்லாது போனால் திறந்த காட்டில் வசிப்பவர்களே..
உணவு மட்டுமே. அதிலும் உணவில் உப்புகூட சேர்த்துக்கொள்ளமாட்டார்களாம். (ஆனால் நம்ம டூரிஸ்ட் ஆட்கள் சிப்ஸ் பிஸ்கட் பாக்கெட்களை விட்டெறிந்து உண்ணக்கொடுத்து கெடுத்துவைத்திருக்கிறார்கள். ஒருத்தனையும் நிம்மதியா வாழவிடுவதேது!) காலாபாணி தொடரில் இதையும் காட்டியிருக்கிறார்கள்.
அந்த புத்தகத்தில் வாசித்ததிலிருந்து..
மாமிச உணவை நீண்ட நாள் கெடாது பாதுகாக்கவும் வேட்டைக்குப்போக முடியாத காலத்திற்கான உணவைச்சேமிக்கவும் மாமிசத்தை எதோவொரு கொழுப்பைத்தடவி இலையில் பொதித்து நிலத்தடியில் புதைத்து அதன் மேல் நெருப்பை மூட்டிவிடுவார்களாம்.
காலாப்பாணி தொடரில் குறிப்பிட்ட ஒன்று ( இது தொடருக்காக புனையப்பட்ட செய்தியென்றாலும் கேட்க நல்லாருக்கு) தொல்குடிகள் இறந்தபின் இறந்தவர்களெல்லோரையும் ஒரே இடத்தில் புதைப்பார்கள். புதைத்த இடத்தில் செடியை நடுவார்கள். பின்னாட்களில் இவர்களின் இடுகாடென்பது வனத்தினூடே கலந்துவிடும்.
தொடர் எனக்கு பிடிச்சிருந்தது.