யசோதையின் பாட்டி இறந்து ஆண்டு ஒன்றானதையொட்டி வீட்டில் மூன்று நாட்களாக தடபுடல் சமையல், படையல் சாப்பாடு, உறவினர் கூட்டமென்று அல்லோகலப்பட்டது.
வீட்டு விருந்தாளிகள் போன பின்பும் நான்காவது நாளான இன்றும் தடபுடல் சமையல் தான்.
பாட்டிக்கு பிடித்தவைகளை தொடர்ந்து ஒருவாரம் சமைத்து படையலிடச்சொல்லி அப்பா பணித்திருந்தார்.
அம்மா அடுப்படியில் வெந்து கொண்டிருந்தாள்.
தொடர்ந்து நாட்கணக்கில் ஓயாமல் நின்று வேலைசெய்வதன் சோர்வும்முதுகு வலி, மூட்டு வலியென அம்மாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளையும் கிஞ்சித்தும் காட்டிக்கொள்ளாமல் வியர்த்து விருவிருத்து சேலையெல்லாம் நனைந்திருந்த போதினும் அடுப்பில் ஏற்றி இறக்குவதில் மும்முரமாக இருந்தாள் அம்மா.
மேல் வேலைக்கு வரும் சந்திராவும், யசோதையும் அம்மாவோடு கூடவே நின்று உதவிகளை செய்ய.. மதிய உணவு தயார் ஆக,பரிமாறுவதற்கென உணவு மேஜைக்கு ஒவ்வொன்றாக எடுத்துசென்று வைத்தாள் யசோதை.
அப்பாவிற்கும் அண்ணனுக்கும் யசோதைக்கும் இலைகளிட்ட தாயை “நான் அப்புறம் சாப்ட்டுக்கிறேன்ம்மா உங்க கூட பரிமாற உதவுறேன் இப்போ..”
இலையில் எதை எதை முதலில் வைத்து பரிமாற வேண்டும் என்று காயத்திரி மகளுக்கு சொல்லிக்கொடுத்தாள்.
அப்பாவுக்கு சூடு பறக்க உணவு இருக்க வேண்டும். பாத்திரத்தை திறந்து வைத்து ஆறிப்போனால் பிடிக்காது அத்தோடு எல்லாமே டேபிளில் இருந்தாலும் தானே எடுத்து போட்டு உண்ண மாட்டார்.
அதனால் சாம்பாருக்கு ஒரு கரண்டியளவு சோறு பரிமாறி அதை அவர் உண்டதும் சூடான மறுகரண்டி சாதம் வைத்து அதில் ரசம் இடுவதென பார்த்துப்பார்த்து அப்பாவிற்கு பறிமாறுவதை எப்பொழுதும் அம்மாதான் செய்வாள்.
களைத்திருக்கும் அம்மாவிற்கு உதவியாக தன்னால் முடிந்ததை செய்வோமென பறிமாற களமிறங்கியிருக்கும் யாசோதை மிகுந்த கவனத்துடன் தான் இருந்தாள்..
பருப்புபொடியும் துவையலும் நெய்யுமிட்ட முதல் கரண்டி சாதத்திற்கு பிறகு, அடுத்த கரண்டி சாதத்தை இலையில் வைத்து அதில் சாம்பாரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றினாள்.
அவர் போதுமென்று சொல்லும் வரை ஊற்றவேண்டுமென்று இவளுக்கு தான் தெரியுமே.. மூன்றாவது கரண்டி சாம்பாரை ஊற்ற நீட்டியபோது போதுமென்று வாயால் சொல்லாமல் அப்பா கையால் தடுத்துவிட்டார்.
அதில் தடுமாறி யசோதை சாம்பாரை டேபிளில் சிந்திவிட்டாள்.
உண்டுகொண்டிருந்த எச்சில் கையால் அப்பா ஓங்கி அறைந்தார்… யசோதையை இல்லை.
அருகே நின்றிருந்த அம்மாவின் கன்னத்தில்..
“இதுதான் நீ புள்ளைய வளர்க்கிற இலட்சனமாடி! ஒரு கரண்டி சாம்பாரை கொட்டாமல் அவளுக்கு பறிமாறத்தெரியவில்லை. நாளைக்கு போகிற இடத்தில் புள்ளைய வளர்த்து வச்சிருக்க லட்சனமயிறப்பாருன்னு அவன்
காரித்துப்ப போறான். நாள் முழுக்க வீட்டில் ‘சும்மா தண்டத்திற்கு தான இருக்க’, இதை கூட ஒழுங்காக புள்ளைக்கு சொல்லித்தராம என்னத்தடி புடுங்கிற” அடுத்த அடி போட மீண்டும் கையை அவர் ஓங்க…
“அப்பா சாரிப்பா, தெரியாம தப்பு பண்ணிட்டேன். இனிமே கவனமா இருக்கேன்பா மன்னிச்சிடுங்கப்பா”
யசோதா கெஞ்சினாள்.
அதன் பிறகு அம்மாவே பரிமாறினாள். உண்டு முடித்தானதும் அடுக்களைக்கு போன யசோதை பார்த்தது. சேலை முந்தானையால் முகத்தை பொத்தி அம்மா அழுதுகொண்டிருந்ததை..
மகள் வந்த சுவடைக்கண்டதும் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு
“பாப்பா இந்த வடை பாயசமெல்லாம் இந்த டப்பாக்களில் ஊற்றி வைக்கிறாயா! சந்திராவுக்கு கொடுத்தனுப்புவோம். பாவம் அவ புள்ளைதாய்ச்சிக்காரி. இவ்வளவு நேரம் நின்னு வேலைசெஞ்சிருக்கா” அம்மா அடுத்த பெண்ணுக்காக அனுதாபப்பட்டாள்.
கால்செருப்பளவுகூட மதிக்காத, காலில் போட்டு மிதிக்கிற இந்த வீட்டை இந்த அம்மா ஏன் இந்த தாங்கு தாங்குகிறாள்!
ஒரு மரக்கட்டையைப்போல்!
எந்த உணர்வையும் வெளிப்படையாக காட்டிக்ககூட ஏலாமல்.. அம்மா வாழ்கிற வாழ்கை! இப்படியொரு வாழ்கையை ஏன் சுமக்கிறாள் அம்மா!?
அம்மா சொன்னபடி டப்பாக்களில் உணவை அடைத்து கொடுத்துவிட்டு யசோதை முன்னறைகூடாரத்திற்கு வந்தாள்.
அங்கே பாட்டியின் பெரிய படம் பெரிய மாலை இடப்பட்டு வைக்கபட்டிருந்தது.
ஒரு கையறு நிலையோடு படத்திலிருந்த பாட்டியை முறைத்துப்பார்த்தாள் யசோதை.
போனவருடம் பாட்டி உயிரோடு இருந்தவரை அவ்வப்போது இதே கையறு நிலையில், இதே முன்னறைக்கு வந்து சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் பாட்டியை முறைத்துப்பார்ப்பாள். பாட்டிக்கு தெரியாமல் தான். தெரிந்தால் தான் போச்சே. பாட்டி வீட்டை இரண்டு பண்ணி விடுவாள்.
பாட்டி இரவு படுக்கமட்டும் தான் அறைக்கு போவாள். மற்றபடி இந்த முன்னறைக்கூடமும், டிவியும், சாய்வு நாற்காலியும் பாட்டியின் ஏகபோக உரிமைக்கானது. பாட்டி இருந்த வரை அம்மா இந்த முன்னறைக்கு வந்து அமர்ந்ததோ டிவி பார்த்ததோ நடந்ததே இல்லை.
அம்மாவிற்கு இந்த வீட்டிலிருக்கும் எதன் மீதும் உரிமை இல்லை என்பதுபோல் நடத்தினாள் பாட்டி.
“உங்கப்பன் வீட்டிலிருந்தா கொண்டுவந்த!? என் புருசனும் புள்ளையும் சம்பாதிச்சது”
இப்படி சொல்லி சொல்லி பாட்டி அம்மாவை வதைத்தாள்.
வார்த்தைக்கு வார்த்தை
மருமகளின் பிறந்தவீட்டு வறுமையை குத்திக்காட்டி ஏசுவாள்.
அதைக்கேட்டு கேட்டு அம்மாவிற்கே ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் அனுபவிக்க தோணாமல் மந்தித்துவிட்டது போல. ஏனென்றால் பாட்டி இல்லாமல் போன இந்த ஒரு வருடத்தில் கூட அம்மாவிடம் எந்த மாற்றமும் இல்லை. உரிமையோடு எதையும் தொடுவதில்லை என யசோதை கவனித்துகொண்டு தானே இருக்கிறாள்.
தொட்டதெற்கெல்லாம் மருமகளிடம் குற்றம் கண்டுபிடித்து மகன் வந்ததும் போட்டு கொடுத்து அடிவாங்க வைத்து அதை பார்த்து ரசிக்கிற வக்கிரம் பிடித்த பாட்டியை யசோதை வெறுத்தாள். அவள் வேறெந்த உயிரையும் இந்த அளவு வெறுத்ததில்லை.
அதிசயக்குறிஞ்சியாய் என்றாவது அப்பா அம்மாவிடம் சிரித்த முகத்தோடு இரண்டு வார்த்தை பாட்டியின் கண்பட பேசிவிட்டிருந்தால் போச்சு.
சிரித்தே மகனை கைக்குள் போட்டுக்கொள்வாளோ என்று பாட்டிக்கு அச்சம் ஏறிவிடும்.
மகன் வேலைவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததுமே
“ஏன்ப்பா உன் பொண்டாட்டிய என்னன்னு கேளு, இன்னைக்கு மதியானம் சாப்பிட கொண்டாந்து வச்சிட்டு அவபாட்டுக்கு போய்ட்டா.சொம்பில இருந்த தண்ணி வேற தீர்ந்திடுச்சு. சாப்பிட சாப்பிட எனக்கு தொண்டவிக்கி சாகக்கிடக்கிறேன். கூப்பிட்டா கூட வந்து எட்டிப்பார்கல, நான் ஏன் சுமையா கிடக்கிறேன் இங்கன. பேசாம எனக்கு பாடையக்கட்டி அனுப்பிவிட்ரு”.
பாட்டி வடிக்கும் நீலிக்கண்ணீரில் மறுநாள் காலை அடிவாங்கி கண்ணிப்போன வீக்கத்தோடுதான் நடமாடினாள் அம்மா.
அம்மாவை படுத்துகிற பாட்டை காணச்சகிக்காமல் இந்த பாட்டி சீக்கிரம் செத்து போகட்டுமென்றெல்லாம் சாமியிடம் வேண்டியிருக்கிறாள்.
யசோதையின் வேண்டுதல் பலித்து ஒரு நாள் பாட்டி செத்தே போனாள்.
அந்த நாளைப்போல..
அதற்கு முன் எந்நாளும் யசோதை அவ்வளவு அகம் நிறைந்த ஆனந்த களிப்பில் கூத்தாடியதில்லை.
பாட்டியின் உயிரற்ற உடலைச்சுற்றியிருந்து உறவுக்கூட்டங்களெல்லாம் அழுகையும் ஒப்பாரியுமாக இருக்க..
யசோதை மட்டும் கூட்டத்திலிருந்து மெல்ல நழுவி மாடியில் குளியலறை கதவை தாளிட்டுக்கொண்டு, தண்ணீரையும் திறந்துவிட்டுக்கொண்டு சிரித்து, ஆடி மகிழ்ந்தாள்.
இனியாவது இந்த வீட்டில் அம்மா நிம்மதியாக இருப்பாளே..
ஒரு உயிர் போயிருக்கும் போது வீட்டில் மகிழ் முகத்தோடு உலவிக்கொண்டிருப்பது எவ்விதம்!
கூடியிருப்பவர்களுக்காகவாவது சோகத்தை பூசி நடிக்க வேண்டியதாயிற்று.
யசோதை குளியலைறையில் இருந்து மீண்டும் கீழே இறங்கி வந்த போது அப்பா உட்பட ஆண்கள் கூட்டமெல்லாம் காபியை குடித்துக்கொண்டே அரசியல் பேச்சில் மூழ்கியிருந்தார்கள்.
பெற்ற தாயின் இறப்பிற்கு ஏன் அழவில்லை என அப்பாவை எவரும் கேள்விகேட்பாரில்லை.
யசோதையின் மூன்று அத்தைமார்களும் மற்ற உறவுக்கூட்டப்பெண்களும் மாரோடு அடித்து அழுது கரைந்து கொண்டிருந்தார்கள். தாய் காயத்திரியின் கண்களில் கூட கண்ணீர் மழை.
வீட்டு மருமகளானவள் மாமியாரின் இறப்பிற்கு அழாதவளாக இருந்தால் அதற்கும் ஏச்சு விழுமென்று அம்மா அழுகிறாள் போலும்.
அத்தைமார்களில் ஒருத்தி, அடுக்களைக்கு போய்
“இந்தா கொஞ்சம் சர்க்கரைய நிறையா போட்டு சூடா ஒரு டம்ளர் காபிய கொடு, அழுதழுது தலைய வலிக்குது’ என கேட்டு வாங்கி குடித்துவிட்டு வந்து அழகையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.
இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் நினைத்த மாத்திரத்தில் இவ்வளவு கண்ணீர் கொட்டுகிறதோ!? அதிசயித்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள் யசோதை.
யசோதைக்கு கண்ணீர் சுரப்பியே வேலை செய்யாது. அவள் கடைசியாக எந்த வயதில் அழுதிருப்பாளென்று அவளுக்கே தெரியாது. இந்த வீட்டில் அவள் பட்டுக்கொண்டிருக்கும் அடிகள், வலிகள், வேதனைகள், வருத்தங்கள் தான் எத்தனையெத்தனை…
ஆனால் ஒரு நாளும் எதற்காகவும் அழுததில்லை. அவளே வேண்டி விரும்பினால் கூட கண்களில் நீர் வந்தால் தானே அழுவதற்கு!!
அதற்கும் ஒரு காரணம் உண்டு.
அவள் பார்க்க இந்த வீட்டில் பாட்டியின் மரணம் இரண்டாவது தான். முதல் மரணம் யசோதையின் அன்பே வடிவான,உடன்பிறந்த தமக்கை சுமித்தரையுடையது.
சுமி அக்கா இவளுக்கும், அண்ணனுக்குமே மூத்தவள்.
யசோதை ஒன்றாம் வகுப்பில் இருந்த போது சுமி அக்கா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
யசோதையை சுமி அக்கா பட்டு தங்கமென்றே அழைப்பாள். எந்நேரமும் கைகளில் தூக்கிக்கொண்டு திரிந்தவள். தனியே படியேறக்கூட விட்டதில்லை.
“விழுந்திடாத பட்டு அக்கா கையை பிடிச்சுக்கோ”என நடைபழக்கியவள்.
கையைப்பிடித்து எழுதப்படிக்க கற்றுத்தந்தவள். அள்ளி சோறூட்டியவள்.
யசோதை எப்பொழுதும் சுமி அக்காவின் மேல் கையை போட்டு அருகே படுத்து தான் உறங்குவாள் ஒரே அறையில்.
அன்றும் அப்படித்தான் உறங்கியிருந்த யசோதை.. காலையில் விழித்த போது கண்டதோ!!
கண்ணுக்கு நேர் முன்னே கண்கள் பிதுங்கி, நாக்கு வெளித்தள்ளி மின்விசிறியில்தொங்கிக்கொண்டிருந்தாள் சுமி அக்கா.
கண்ணால் பார்த்த யசோதையின் பிஞ்சுமனம் எவ்வளவு அதிர்ந்திருக்கும். அந்த அதிர்ச்சியில் திகைத்து தான் கண்கள் கண்ணீர் சுரக்காமல் மரத்துப்போயின போல.
சுமி அக்காவையும் இப்படி கூடத்தில் கிடத்தி மாலையெல்லாம் இட்டார்களா! அழுது புலம்பினார்களா என்பதையெல்லாம் எவ்வளவு யோசித்தும் யசோதைக்கு நினைவில் இல்லை. ஒன்று மட்டும் நினைவிலிருந்தது.
அது இவளின் சுமி அக்கா இறந்ததும் அவள் பயன்படுத்தின உடைமைகள், புகைப்படங்கள், நோட்டுபுத்தகங்கள் உட்பட எல்லாவற்றையும் கொண்டுபோய் கொள்ளைப்புறத்தில் கொட்டி அப்பா நெருப்பிலிட்டு அழித்தார். அந்த வீட்டில் சுமி அக்கா வாழ்ந்தாள் என்பதற்கு அடையாளமாய் ஒரு துணுக்கு கூட மிஞ்சியிருக்கவில்லை.
சுமி அக்கா ஏன் செத்தாள் என்பதன் உண்மையான காரணம் இன்னவரை யசோதைக்கு தெரியாது. மற்றவர்களிடமெல்லாம் அவள் வயிற்றுவலி தாங்காமல் இறந்துபோனாள் என்றது வீடு. ஆனால் அப்படி இருக்க முடியாதென்றது யசோதையின் உள்மனம்.
யசோதையிடம் இந்த வீடு இவ்வளவு கட்டுத்திட்ட விதிமுறைகளோடும், கண்டிப்பும் கடுமையும் காட்டி நடந்துகொள்வதற்கு சுமி அக்காவும் அவள் மரணமும் ஏதோ விதத்தில் காரணமென்ங்கிற வரை கணித்திருந்தாள் யசோதை.
சுமி அக்கா இறந்துபோனபின் இன்றுவரை யசோதை தனித்தே வளர்ந்தாள். எத்தனையெத்தனை இரவுகள் பாதி உறக்கத்தில் கண்விழித்து மின்விசிறியை பார்த்து ‘அய்யோ சுமி அக்கா’ என அலறி துடித்திருக்கிறாள் யசோதை. அதன் பிறகு இவள் படுக்கையை நனைக்காத நாளில்லை எனலாம்.
இவள் பயந்து அலறுகிறாள் என்பதைக்கண்டதும் பாட்டிக்கு தொக்காகிப்போயிற்று.
அந்த வயதிலிருந்து யசோதையை ஆட்டிப்படைக்க, தன்னுடைய சொல்பேச்சை கேட்கவைக்க பயமுறுத்தலை ஆயுதமாக எடுத்துக்கொண்டாள் பாட்டி.
“சின்ன வயசில ஒரு ஆசையும் நிறைவேத்திக்காம அவகாலமா செத்தவங்கெல்லாம் அவங்களோட உண்மையா சாகிற காலம் வரும்வரை பேயாவும் பிசாசாவும் தான் சுத்துவாங்க. இந்த வீட்டில் செத்த உன் சுமி அக்கா இங்க தான் அலையறா! அதான் இராத்திரி மட்டும் உன் கண்ணுக்கு தெரியறா..”
“இந்த ஜன்னல் வழியா வந்து சுமி உன்ன பிடிக்கப்போறா பாரு..”
என்றெல்லாம் சுமி அக்காவை பேய் பிசாசாக உருவகித்து கூறி மென்மேலும் அச்சத்தை உருவேற்றி வைத்திருந்தாள் பாட்டி.
யசோதை பதிமூன்று பதினான்கு வயதுப்பெண்ணாகி, பூப்பெய்துவிட்டவளான பின்பும் கூட இரவின் பய அலறல்களும், படுக்கையை நனைப்பதும் நின்றபாடில்லை.
வீட்டிற்கு வருவோர் போவோரிடமெல்லாம் இவளைக்காட்டி இதை சொல்லி எள்ளி நகைப்பாள் பாட்டி.
” இவ வேற இன்னும் பாப்பா பாப்பான்னு கொஞ்சிகிட்டு, இடுப்பில தூக்கி வச்சுக்காததொன்னு மட்டும் தான் குறை. ஏழு கழுத வயசாச்சு. இன்னும் படுக்கையில ஒன்னுக்கு போய்ட்டு இருக்கு புள்ள. நாளைக்கு கட்டிக்கொடுத்தனுப்பினா போற இடத்திலும் இப்படியே செஞ்சான்னா புருசன்ங்காரன் ரெண்டே நாள்ல திருப்பி ஓட்டிவிடப்போறான் பார்த்துக்க.”
பயத்தையும் தானே வளர்த்துவிட்டு அதை வைத்து பகடியும் செய்கிறவாளாயிருந்தாள் பாட்டி.
ஒருநாள் யசோதையை அம்மா கோயிலுக்கு அழைத்துச்சென்றிருந்த பொழுது அங்குள்ள கல்மண்டபத்தில் அமர்த்தி கையில் பிரசாதத்தை தந்தபடி கேட்டாள்
“பாப்பா உனக்கு சாமிய பார்த்தா பயமா இருக்குதா!?”
“இல்லையேம்மா, ஏம்மா கேக்கிறீங்க”
“யாருக்கும் ஒரு பொட்டுத் தீங்கும் நினைச்சிடாத பச்ச மண்ணு நம்ம சுமி… உன் மேல அவ்வளவு பாசம் வச்சிருந்தா, உனக்கு நினைவு இருக்குதா பாப்பா”
இருக்கிறதென்பதைப்போல் யசோதா தலையசைத்தாள்.
“அப்படிப்பட்டவ, செத்து சாமியாயிட்டவம்மா. உனக்கு கெடுதல் செய்வாளா சொல்லு. சாமியா எங்கயோ இருந்து உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டு நல்லது மட்டுமே பண்ணுவா உன்னோட அக்கா. நம்பு கண்ணு, சாமியா நினைச்சுக்க”
அம்மா சொல்வது சரியேதான். அவளுடைய அக்கா சாமியாகிவிட்டவள்தான்.
அவள் செத்துப்போய் மின்விசிறியில் தொங்கிகொண்டிருந்த போது கூட காளியின் வடிவத்தில் தானே இருந்தாள்!!.
கண்களில் உக்கிரத்துடன் நாவினை வெளி நீட்டி அச்சம் கொள்ளவைக்கிற தோற்றத்தோடு இருந்தாலுமே கூட யசோதைக்கு இஷ்ட தெய்வம் காளி துர்க்கை. அந்த கம்பீரமும், துணிவும் எதிரிகளை மிதித்து வதம் செய்கிற வீரமும். இதையெல்லாம் எனக்கும் கொடு சாமி என்று காளியை நினைத்து தான் அவள் மனம் வேண்டிக்கொள்ளும்.
அதன் பின்னான நாட்களில் நடுநிசியில் அதிர்வோடு கண்விழித்தாலும் மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருப்பதாக யசோதையின் கண்களுக்கு தெரியும் சுமி அக்காவின் காளி வடிவம் அவளை மருட்டவில்லை. யசோதை மிரண்டு அலறுவதுமில்லை. படுக்கையை நனைப்பதுமில்லை.
மனம்தான் என்ன மாதிரியானதொரு மாயக்கோல்!
பேயென்றும் சாமியென்றும் உருவாக்கிக்கொள்வதும்,
பயத்தையும் திடத்தையும் உருமாற்றிக்காட்டுவதுமான மாயக்கோல்.
அருமையான விவரிப்பு.