பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் தானே..!! அது யசோதைக்கும் நடந்தது!
கேசவன் அங்கிளின் புத்தகக் கடையிலிருந்து வெளியேறி திரும்புகையில் கிளைச்சாலையில் வைத்தே அண்ணன் யசோதையை பார்த்துவிட்டிருக்கிறான். அவளுக்கு அது தெரியாது.
ஓட்டமும் நடையுமாக யசோதை வீடு வந்து சேர்ந்த பத்து நிமிடங்களுக்கு பிறகே அண்ணன் உள் நுழைந்தான்.
முன்னறைக்கூடத்தில், சோபாவில் அமர்ந்திருந்த மகளிடம் பருக பானத்தை தந்து, “சூடா இருக்கு பாப்பா, பத்திரமா பிடிச்சுக்க”என்றுவிட்டு காயத்திரி திரும்பியிருக்கக்கூட மாட்டாள்.
யசோதையின் மேல் அந்த சூடான பானம் கொட்டியிருந்தது. அண்ணன் தட்டிவிட்டிருந்தான். டம்ளர் எங்கோ சுவரில் மோதி தரையில் தட்டிச் சுழன்றது.
யசோதையின் கூந்தல் கற்றையை கொத்தாகப்பற்றி இழுத்து அவளை அண்ணன் தரையில் குப்புறத் தள்ளினான்.
“ஏய், உண்மையைச்சொல் அந்த சாலை பக்கம் ஏன் போன, எவனைப்பார்க்கடி போன, ஊர் மேய்கிறாயாடி தருதலை மு…!! வாய்க்கு வந்த வசவுகளோடு யசோதையின் முதுகு பழுக்க அடிக்கத்தொடங்கினான்.
தாய் முயன்று தடுத்து நிறுத்துவதற்குள் இடியென இரு அடிகள் யசோதையின் முதுகில் இறங்கியிருந்தது.
” வயசுக்கு வந்த புள்ள மேல கை நீட்டாதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது, அவளை நான் தான் அங்கிருக்க நூலகத்துக்கு அனுப்பி இதோ இந்த சில புத்தகங்களை வாங்கிட்டு வரச்சொன்னேன். இனி புள்ளமேல கையோங்கின பார்த்துக்க”.
மகன் தன்னை மதிக்கமாட்டான் என்று தெரிந்தும் காயத்திரி இயன்ற அளவு மிரட்டி அவனை விலக்கி நிறுத்தினாள்.
தாய் காயத்திரி அண்ணனிடம் காட்டியவை சில சமையல் குறிப்புகள், வீட்டு பராமரிப்பு குறிப்புகள் மற்றும் கோலப்புத்தகங்கள்.”
அவைகளை கையில் வாங்கிப்பார்த்து, திருப்பி தந்துவிட்டு தன் அறைக்கு மாடியேறிப்போய்விட்டான்.
உடல் மேல் சுடுபானம் விழுந்த, அடி விழுந்த வலியையும் எரிச்சலையும் கூட மறந்து யசோதை தாயை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதாவது தாய் காயத்திரிக்கு மகள் யசோதை புத்தகங்களை எடுத்துவந்து படிப்பது தெரிந்திருக்கிறது. அதுவும் எங்கிருந்து வாங்கிவருகிறாள் முதற்கொண்டு தெரிந்திருக்கிறது. கைசெலவிற்கான பணத்தை கூட நிறுத்தாமல் தந்திருக்கிறாள். என்றேனும் இப்படி கணவனிடமோ, மகனிடமோ மகள் மாட்டிக்கொண்டால் காட்டி சமாளிக்கவென சில புத்தகங்களை வேறு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.
அதாவது தனக்கு கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு, யாருக்கும் தெரிந்துவிடாதபடி கண்டும்காணதபடி தந்திருக்கிருக்கிறாள்!.
யாசோதைக்கு ஓடிப்போய் தாயைக்கட்டிக்கொள்ளவேண்டும் போல இருந்தது.
இந்த எண்ணமே கூட அவளுக்கு ஆச்சர்யம் தான். யசோதைக்கு எவரையுமே தொட்டு பேசிப்பழகுவது பிடித்தம் இல்லை. அம்மாவைக்கூட ரோடு கிராஸ் செய்யும் நேரம் மட்டும் கையை பற்றிக்கொள்வாளே தவிர கட்டியணைத்து அன்பு பாராட்டவெல்லாம் இதுவரை தோன்றியதே இல்லை.
அதனால் இப்போது போய் கட்டிக்கொண்டால் மகளுக்கு என்னாச்சோ எதாச்சோவென அம்மாவே அதிர்ந்து போகக்கூடும்.
மறுமுறை லெண்டிங் லைப்ரரிக்கு அண்ணன் அவள் கூடவே வந்து ஆராய்ந்தான். அதன் உரிமையாளர் நல்ல தன்மையான எழுவதைத்தொட்ட வயதாளி என்பதையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொண்டு அவள் கையிலெடுத்திருந்த சில மகளிர் பத்திரிக்கைகளுக்கு பணத்தை செலுத்திவிட்டு வீட்டிற்கு அழைத்துவந்தான்.
அதன் பிறகான நாட்களில் ஒளிவும் மறைவும் தேவையற்று தையல் வகுப்புகளுக்கு போலவே நூலகம் வரை அவள் சுயமாகப்போய்வர வீடு அனுமதித்தது.
என்னவொன்று வீட்டிற்கு காட்ட சில புத்தகங்கள், காட்டாமல் மறைத்து சில புத்தகங்களென கலந்து கட்டி எடுத்துவருவாள்.
கதைபுத்தகங்கள் வாசிப்பில் யசோதைக்கு தமிழை விட ஆங்கிலப்புத்தகங்களே ஈர்த்தன.
சிறுவயதுமுதல் கேட்டு வளர்ந்த.. பல தமிழ் கதைகளும் மனதிற்கு ஒப்பாத, பிடித்தமில்லாத கதைகள் தான்.
மாதவியிடம் மயங்கி, தொலைந்து திரும்பி வந்த கணவனுக்காக ஊரை எரித்தாள் ஒருத்தி கதை.
‘அவ்வளவு நியாயம் நீதிமுறை பார்க்கிறவள் கணவனையல்லவா எரித்திருக்கவேண்டும்!. மணிமேகலையோடு, மாதவியோடு சேர்த்து மூன்று பெண்களின் நிலை யோசியாது சுயநலத்தோடு திரிந்தவன் அவன்.’
மற்றொருவன் மனைவியை சந்தேகித்தானாம்! நெருப்பில் குளித்து நிரூபிக்கச்சொன்னானாம்!
‘அவன் தான் சொல்கிறானென்றால் அவளும் அதை ஏன் செய்தாள்’! என்று உள்ளுக்குள் முரண்டும் யசோதைக்கு.
கணவனின் உருவத்தோடு வந்து ஏமாற்றிக்கூடியவன் எவனோ!. ஆனால் கல்லாய்ப்போகும் தண்டனையை மட்டும் மனைவிக்கு தருவானாம் ஒருவன்.
மட்டத்திலும் மட்டமான கதைகள் இன்னும் தான் எத்தனை எத்தனை!.
ஆண்கள் எக்கேடு கெட்டவர்களாயினும் அவர்களை சகித்து, அடங்கிப்போய் ஒழுக்கமாக நடப்பது பெண்களின் கடமையென்று ஒரு பெண்ணாக இருந்து கொண்டே கூசாமல் சொல்வாள் பாட்டி. தகப்பனைப்பெற்றவள்.
நடக்கமுடியாத கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்து, பரத்தையின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு காத்திருந்தாள் ஒருத்தியென்ற கதையை பாட்டி சொல்லக்கேட்டபோது
‘நடக்கவே தெம்பில்லாதவன் அங்கே போய் என்ன கிழிப்பானாம்’ என்று கேட்டுவிட உள்ளே துறுதுறுக்கும்.
தப்பித்தவறி கேட்டால் வாய் மேலயே ஒன்று விழும். அத்தோடு விடுவாளா பாட்டி! கிழித்து கூறுபோட்டுவிடுவாள். இவளை மட்டுமில்லாது இவளை அதிகபிரசங்கியாய் வளர்த்தது குற்றமென்று தாய் காயத்திரிக்கும் மாத்துகிடைக்கும்.
பாட்டி உயிரோடு இருந்த வரை இப்படித்தான். உப்பு பெறாத, ஒன்றுமில்லா விசயங்களை ஊதிப்பெருக்கி, தந்தையின் கோபத்தை தூண்டிவிட்டு, தாய்க்கு அடிவாங்கிக் கொடுப்பாள் பாட்டி.
இதற்கெல்லாம் அஞ்சியே திருப்பி வாய்பேசாமல், பாட்டி என்ன சொன்னாலும் ஒரு மரம் போல இருந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறாள் யசோதை.
கணவனே கண்கண்ட தெய்வமென்று, தேவையறிந்து சேவை செய்து ஒழுக்கத்தின் உருவாக இருந்தவளாம் வாசுகி அப்படியொரு பத்தினி அவள் என்பதால் தான் கணவன் கூப்பிட்ட குரலுக்கு
கிணற்று நீரை சேந்திக்கொண்டிருந்ததைக்கூட பாதியில் விட்டுப்போனவள் திரும்பி வந்து பார்த்தபோதும் விட்ட இடத்திலேயே நின்றதாம் கயிறு!.
என்னவோ வள்ளுவன் வாசுகிக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்து, தானே கண்ணால் அந்த காட்சியைக் கண்டதுபோல் கதையளந்து விடுவாள் பாட்டி.
பெண் இனத்தை தட்டிவைக்க, மட்டுப்படுத்த, நம் ஊரில் காலாகாலத்திற்குமாக சொல்லி வைத்த கட்டுக்கதைகளையே
அவள் எடுத்துவந்து வாசிக்கும் இப்போதைய கதைகளிலும் வெவ்வேறு வரி வடிவங்களில் மீண்டும் மீண்டும் தமிழ் கதைப்புத்தகங்களில் எழுதப்படுவது போலிருந்தது யசோதைக்கு.
கதைகளை எழுதுகிற எழுத்தாளர்களில் ஆண்கள் தான் என்றில்லை! பெண்களின் எழுத்தில் கூட.. நாயகன் நாயகியை எவ்வளவு கீழ்த்தரத்திற்கு நடத்துபவனாக இருந்தாலும், சக மனித உயிர் அவளென்று மயிறளவுகூட மதியாத ஒருவனாக இருந்தாலும் கூட சரி கடைசியில் நாயகனோடே நாயகி சேர்ந்து வாழ்வாள் என்றே முடிப்பது எரிச்சலைத்தருகிறது.
‘நிஜ வாழ்க்கையில் தான் நிமிரவிடுவதில்லை. கற்பனையில் உருவாக்குக்கிற எழுத்திலாவது சுயமும் நிமிர்வுமுள்ள.. தன்னம்பிக்கையும் தைரியமுமான.. பெண்களை உலவவிட்டுத்தொலையுங்களேன்’ என்றிருக்கிறது யசோதைக்கு…
உண்மை வேறு என்று புரிந்து கொள்வாளா யசோதை.. அந்தக் கட்டுக் கதைகளில். வசதிக்காகத் திரிக்கப்பட்ட கதைகள் அவை