நெடுநல் அத்தியாயம் -1

1
617

“உன் நல்லதுக்கு சொன்னா கொஞ்சம் காது
கொடுத்து தான் கேளேன் கயா..”

மா.. முடியாதுன்னா முடியாது.. விட்ருங்களேன் எனக்கு எண்ணெய் குளியல் வேணவே வேணாம்”
கயாதி தாயிடம் பிடிவாதம் பிடித்து நின்றாள்.

“சொல்லிக்கிறது மட்டும் பெருசா சுதந்திரம்
கொடுத்து சுயமா முடிவெடுத்துக்கிறமாதிரி
புள்ளைங்கள வளர்க்கிறேன்னு பெருமையடிச்சுக்க வேண்டியது.
ஆனா நான் சாப்பிட்றது தூங்கிறதிலருந்து
எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிட்டு
இருக்கீங்கம்மா நீங்க.

எனக்குன்னு ஒரு ரூம கொடுத்திட்டு அத
என்னிக்காவது
என்ன லாக் பண்ணிக்க விட்ருக்கீங்களா!
ஹாஸ்டல் வார்டன் மாதிரி நான் என்ன
செய்யறேன்னு
நடுராத்திரில்லாம் வந்து பார்க்கீறீங்க.
சீக்கிரம் தூங்கு, இத சாப்பிடாத அத சாப்பிடுன்னு வச்சு
திணிக்கிறீங்க. டாகி மாதிரி என்னை பிடிச்சு கட்டிவச்சு
நடத்தாததொன்னுதான் இந்த வீட்ல குறை.

எண்ணெய் வச்சு குளிக்கணுமா! வேணாமான்னு
முடிவெடுத்துக்கிற உரிமை கூட எனக்கு
விட்டுவைக்கல.
ஏந்தான் இந்த வீட்லவந்து பிறந்தேனோ!!
எண்ணெய வச்சுக்க வெண்ணெய வச்சுக்கன்னு
போட்டு படுத்திறீங்க இப்படி.. இந்த பிசுபிசுப்பு
எண்ணெய தலைல இருந்து எத்தனை தரம் ஷாம்பூ
தேய்த்தாலும் போகாது. நான் எண்ணெய்
வடிஞ்சுக்கிட்டு வெளியே போனா என் ப்ரெண்ட்ஸ்
எல்லாம் என்னை கிண்டல் பண்றதுக்கா!”

வீடே அதிரும்படி ஆர்பாட்டம்
செய்துகொண்டிருந்தாள்
கயாதி.
ப்ப்பா.. இந்த பெண்ணோடு போரடுவது இருக்கே!
யசோதையின் மொத்த சக்தியையும் வடியச்செய்து நாளுக்கு நாள் தலைவலியை
கூட்டிக்கொண்டிருக்கிறாள்.

லேப்டாப் ஸ்கீரனையும், நடுராத்திரி இரண்டு மணி
வரை போனையும் நோண்டி, தலைச்சூடு பிடித்து
கண் எரிச்சலோடு கிடப்பவளுக்கு எண்ணெய்
தேய்த்துவிடுகிறேன். கொஞ்சம் ஊறவைத்து
குளித்தால் சரியாகுமென்று யசோதை வற்புறுத்தி
அழைத்ததற்கே இந்த ஆர்ப்பாட்டம்.

“ஆரம்பிச்சிட்டாடா இவ..”

படம் வரைவதில் முழ்கி இருந்த யாத்வி அதை மூடி வைத்து விட்டு அம்மாவின் அருகே வந்தாள்.
“ம்மா போகட்டும்மா விடுங்க,. எண்ணெய் குளியல்
எடுத்துக்கிட்டா தலைமுடி மட்டுமல்ல கண்களும் குளிர்ந்து,
பளிச்சுன்னு தோல் பளபளப்பாகி இன்னமும் அழகா இருப்போம்ன்னு புரியாட்டி அவளுக்குதான் நஷ்டம்.
உங்களுக்கு ஏற்கனவே அடிக்கடி தலைவலி வருது,
புரியாதவளோட போராடி டென்ஷ்னாகி
ஸ்ட்ரெஸ்ஸ ஏத்திக்கவேணாம்மா”

“என்னால ஒன்னும் அம்மாக்கு தலைவலி வரவேணாம் நான் எண்ணையை தேய்ச்சுக்கிறேன்” என்றபடி விறைப்போடு யசோதையின் காலடியில் வந்தமர்ந்தாள் கயாதி.
ரகசியமாய் அம்மாவிடம் கண்சிமிட்டிவிட்டு மீண்டும் படம் வரையப்போனாள் யாத்வி 

சன்னப்புன்னகை அரும்பியது யசோதையின் முகத்தில்.

யசோதை  பெற்ற இருமகள்களுமே இருவேறு விதம். பெரியவள் கயாதியை நல்லவைகளாக எதைச்செய்ய வைக்கவும் நெம்புகோல் தேவையாயிருக்கிறது. கெட்டவைகளாக எதையும் அவள் செய்துவிடாமல் தடுப்பதற்கு கடிவாளம் தேவையாயிருக்கிறது.

அவ்வளவு அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தவள். அழகு கூடும், முகம் மிளிரும் என்கிற நெம்புகோலுக்கு பொட்டிப்பாம்பாக அடங்கி வந்தமர்ந்து எண்ணெய் தேய்த்துக்கொண்டாள்.

அம்மா கையால் எடுத்துத்தந்தால் தான் உண்பேன் உடுத்துவேனென்று இருந்தவள் தான். சில வருடங்களாகவே அம்மாவிடமிருந்து மெல்ல மெல்ல விலகி தொட்டதற்கெல்லாம் விதண்டாவாதங்களோடும் வீன் பிடிவாதங்களோடும் பதின்பருவ பிணக்குகளோடு முரண்டி நிற்கின்றாள்.

இப்போது அவளுக்கு எல்லாமே ப்ரெண்ட்ஸ், ப்ரெண்ட்ஸ் ப்ரெண்ட்ஸ் தான்.பிரெண்ட்ஸ் எதை செய்தாலும் தானும் அதை செய்தே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கின்ற பெண்ணை என்னதான் செய்து எப்படி சொல்லி மாற்றுவதென்ற நூல்பிடிப்பு கிடைகாமல் தவிக்கிறது தாய்மனம்.

சின்னவள் யாத்வி தன்னையே சுற்றிச்சுற்றி வருவதை ஏற்கக்கூட அச்சப்பட்டு “இப்பசரி யதுக்குட்டி டீனேஜ் வந்ததும் அம்மாவை மறந்து நீயும் ப்ரெண்ட்ஸ் தான் முக்கியம்ன்னு போய்டப்போற. இப்ப நீ ஒட்டிக்கொண்டிருப்பதை நினைத்து சந்தோசப்படுறத விட கயா மாதிரி நீயும் தள்ளிப்போய்ட்டா தாங்கமுடியனுமேன்னு  இருக்கு” என்ற தாயிடம்

 “ம்மா நோ மா நோ.. எனக்கு எப்பவும் நீங்க தான் பெஸ்ட் ஃப்ரெண்ட், நான் எதுக்கு  உங்கள விட்டு போகனும், மாட்டவே மாட்டேன்.” மூக்கு சிவக்க, கண்கள் ததும்ப சொன்னவள் ஒன்பது வயது யாத்வி.

“ம்மா எங்க க்ளாஸ்ல ஜீனத் இருக்காள்ல! ரொம்ப அழுதுட்டே  இருந்தா. என்னனு கேட்டாலும் சொல்லவேமாட்டேன்டா அப்புறம் தனியா கூட்டிட்டு போய் பேசி பேசி கன்வீன்ஸ் பண்ணி கேட்டப்பதான் சொன்னா”

அவித்த இட்லிகளை அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரம் மாற்றிக்கொண்டிருந்த யசோதை கைவேலையை நிறுத்திவிட்டு மகள் சொல்வதை கூர்ந்தாள். 

“ஒரு சைட் ப்ரெஸ்ட் மட்டும் பெரிசாகுது. தொட்டா வலிக்குது. இன்னொரு பக்கம் அப்படியே இருக்கு. அவளுக்கு மட்டும் எதோ பிரச்சனைன்னும், எல்லோரும் அவள பார்த்து சிரிக்கபோறாங்கன்னும் பயந்திருக்காம்மா.. ஒன்னும்  பயப்பட வேணாம். வளர வளர தானாவே சரியாயிடும்ன்னு சொன்னேன். நீங்க வாங்கிக்கொடுத்த ‘The What’s Happening to my Body’ கேர்ள்ஸ் புக்க கொண்டுவந்து தரேன் நீயே படி. உனக்கே புரியும்ன்னு சொல்லிட்டேன். பட் அவ சொல்றா.. அந்த மாதிரி புக்ஸ்லாம் படிச்சா அவங்கம்மா திட்டுவாங்களாம்…இதெல்லாம் ‘மஸ்ட் நோ’ தானம்மா திட்டினா எப்படிமா தெரிஞ்சுக்க முடியும்!!” என்றவள் பதினொரு வயது யாத்வி. 

“ம்மா ஸ்கூல்ல ரெஸ்ட் ரூம் சுத்தமாவே இல்லம்மா. எனக்கு யூஸ் பண்ணவே பிடிக்கல. ஆனா யூரின் கன்ட்றோல் பண்ணா யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன் வரும்ன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு தான் போறேன். கேர்ள்ஸ்க்கு  நாப்கின் சேஞ்ச் பண்ணப்புறம் அத ப்ராப்பரா டிஸ்போஸ் பண்ண ரெஸ்ட்ரூம்ல ஒரு பாஸ்கட் வைக்கவே மாட்டீங்கறாங்கம்மா. 

ஆயாம்மாக்கிட்ட சொல்லியாச்சு, க்ளாஸ் டீச்சர்க்கிட்ட சொல்லியாச்சு. ஆனாலும் வைக்கல. இன்னைக்கு எதோ ஒரு கேர்ள் சேஞ்ச் பண்ண நாப்கின சரியா பேப்பர்லகூட சுத்தமா அப்படியே போட்டு போயிருக்கா. நான் இன்னைக்கு பிரின்சிபல் ரூம்கே போய் சொல்லிட்டேன்.உடனே வைக்க சொல்றேன்மான்னு சொன்னார்மா. ஆனா எங்க க்ளாஸ் டீச்சர்ல..

நீ ஏன் பிரின்சிபல் சார்கிட்ட போய் சொன்னே..! இந்த மாதிரி விஷயங்களல்லாம் ஆண்கள்கிட்ட பேசக்கூடாதுங்கிறாங்க. ம்மா நான் சொன்னதுனால தானம்மா அவருக்கு புரிஞ்சுது! இத சொல்லக்கூடாது அத சொல்லக்கூடாதுன்னு எல்லாத்தையும் ஹைட் பண்ணிட்டே இருந்தா அப்புறம் எப்படி ஆண்களுக்கு புரியும்” என்றவள் பதினான்கு வயது யாத்வி.  

” ம்மா யூ நோம்மா எங்க ஸ்கூல்ல நியூ அட்மிசன் ஒருத்தன். செம செம ஹாண்ட்ஸம்மா. எல்லா கேர்ள்ஸும் அவனையேதான் பார்த்திட்டே இருக்காங்க.அவன் இன்னைக்கு எங்கிட்ட பேசினான்ம்மா. வாய்ஸ் கூட ரொம்ப ரொம்ப நல்லார்க்கு தெரியுமா!” 

“அவன் பேரு ரித்விக் ரேயன். எல்லாரும் அவன ரேன்னு ஷார்டா கூப்பிட்றாங்க. நான் மட்டும் ரித்வின்னு கூப்பிட்றேன். ரித்வி யாத்வி ஒரே மாதிரி இருக்கில்ல.” என்றவளும், மின்னும் கண்களோடு எந்நேரமும் அவனைப்பற்றியே ஓயாமல் பேசித்திரிந்தவளும் பதினைந்து வயது யாத்வி. 

” ம்மா இதோ பாருங்க, ரித்விக்கு இன்னைக்கு பெர்த்டேம்மா, நானே அவன் முகத்தை  வரைஞ்சு  விஷ்கார்ட் தயாரித்திருக்கேன். நல்லார்க்கா! இது அவனுக்கு பிடிக்கும்ல்லம்மா!  இது கூடவே நம்ம வீட்ல பூத்திருக்க ஆரஞ்ச் ரோஜா பூ ஒன்னு ரித்விக்கு கொடுக்க எடுத்திட்டு போறேன்.”

“ம்மா ரித்வி இருக்கான்ல அவன பார்க்க பார்க என்னவோ ஆகுதும்மா, மைண்ட் ஃபுல்லா அவந்தான் இருக்கான். பார்காம இருக்கவே முடில. ஏன்னே தெர்ல ரொம்ப டிஸ்டர்ப் ஆகிறேன்ம்மா. நீங்க அப்பாவ பார்க்கும் போது உங்களுக்கும் அப்படித்தான் இருந்துச்சா..!?” என்ற மகளிடம் 

” அப்பாவையா..! பதினைந்து வயதில் நான் எங்கிருந்து உன் அப்பாவை பார்திருக்கமுடியும் யதும்மா! அப்போ எனக்கு பக்கத்து வீட்டுப்பையனை தான் பார்க்க பார்க்க பிடிச்சுது. பார்காமல் டிஸ்டர்ப் ஆகிற ஃபீல் எல்லாம் வந்தது” என்றாள் யசோதை.

பக்கத்துவீட்டு பையனா..!! ஆனால் அப்பாவைத்தானே நீங்க ..”  

என்று மகள் குறுக்கே புகுவதை கண்டுகொள்ளாமல் 

“அந்த பையன் குடும்பம்  அந்த  வீட்ட காலி செஞ்சிட்டு வேற இடம் போய்ட்டாங்களா! பத்தே நாள் தான் வருத்தம்லாம். அப்புறம் அவன் முகமே மறந்துபோச்சு. அப்புறம் இன்னும் கொஞ்சம் வளர்ந்து காலேஜ் போனப்ப அங்க ஒருத்தன் மேல் ஈர்ப்பு வந்ததா! அப்புறம் கொஞ்ச நாளில் அதுவும் காணாம போய்டுச்சு. 

அப்படி பதினைந்து இருபது வயது வரைக்கும் என்னதுனே புரியாம ஏன் வந்துச்சுன்னே தெரியாமல், எதுக்கு பிடிக்குதுனே யோசிக்க விடாமல் நமக்குள்ள  ஹார்மோன்ஸ் இப்படியா அப்படியான்னு ட்ராக் மாறி மாறி தட்டுத்தடுமாறி இரயில் ஓட்டிட்டு கிடக்கும். ஓட்ற இரயில்ல இப்படி அப்படின்னு நாமும் சேர்ந்து ஷேக் ஆவோம்ல. அப்படித்தான் இதுவும். ஆனா இந்த ஹார்மோன்ஸ் தடுமாற்றம்லாம் நாம முழுசா வளரும் வரைக்குதான்.

இருபத்தொன்னு இருபதிரண்டு வயசில நாமும் நல்லா வளர்ந்திருப்போமா, ஹார்மோன்ஸும் தடுமாறாம ஒரு ட்ராக்க பிடிச்சிருக்கும். அப்போ ஒருத்தன பார்த்து, அவன நமக்கு பிடிச்சிருந்தா! அந்த பிடிப்பு எந்த நாளும் நம்மள  விட்டுப்போகாதுன்னு நம்ம உள்மனசுக்கு ஆழமா தோண்றினா, இவன் தான் நமக்கான துணைன்னு நமக்கு அழுத்தமா, உறுதியா தெரிஞ்சிடும். அப்படி வருவது தான் காதல். 

உன் அப்பாவை அப்படிதான் நான் கண்டதும், கல்யாணம் பண்ணிக்கிட்டதும், பிள்ளைக்குட்டிகள பெற்றுக்கிட்டதும், இதோ இப்படி நீ வளர்ந்து நின்னு கேள்வி கேட்பதும்” என்றபடி மகளின் மூக்கு நுனியை செல்லமாய் பிடித்து ஆட்டினாள் யசோதை. 

1 COMMENT

  1. எதிர்பார்ப்பைத் தூண்டும் முதல் அத்தியாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here