லைப்ப்ரரி அங்கிளின் முன் முன்பு எடுத்துப்போன புத்தகத்தையும் மெம்பர்ஷிப் கார்டையும் வைத்தாள் யசோதை.
“இனி வரமாட்டேன் அங்கிள், இதுதான் கடைசி. அதனால் இனி இந்த கார்ட் எனக்கு தேவைப்படாது”
“என்னம்மா எதும் பிரச்சனையா, என்னாச்சு!”
யசோதை தலையாட்டினாள். வீட்ல மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணிட்டாங்க அங்கிள். மாப்பிள்ளை வெளியூர். நான் இங்கிருக்கிற நாள் வரை கூட வெளியே இனி தான் வீட்டில் விடமாட்டார்களே”
கேசவ பெருமாள் ஒருமுறை சாத்தியிருக்கிற பக்கக்கதவையும் அவளையும் சேர்ந்தார்ப்போல் பார்த்தார். பிறகு
“உன் நல்ல மனதிற்கு நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்மா, நல்லாரு” வாழ்த்தியவர்ஒரு கைப்பு புன்னகையோடு போகிற அவளை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
யசோதைக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஆளாளுக்கு வாழ்க்கை கிடைக்கும், வாழ்க்கை அமையுமென்று வாழ்த்துகிறார்கள்!
திருமணம் முடிந்தால் தான் வாழ்கையே தொடங்குமா!!
அப்போ இவ்வளவு நாள் பிறந்து வளர்ந்து வாழ்ந்ததெல்லாம் வாழ்வென்று ஆகாதா!
சொல்லப்போனால் அப்படித்தான் போல.
இவள் என்ன மாதிரி வாழ்க்கையை வாழ்கிறாள்! ஏன் இப்படி இறுக்கிப்பிடித்தமாதிரி இவளின் வீடு இவளை வாழச்செய்கிறதென்பதே புரிந்திடாத வாழ்வியல் புதிர்தான்.
அது இனி மணவாழ்கையில் மாறிவிடப்போகின்றது என்பது சீட்டுக்கட்டு கோட்டைதான்.
இவளுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருக்கிறது. இங்கிருந்து பெயர்த்து வேறொருவனின் கையில் கொடுக்கப்படப்போகிற உதைபந்து இவளின் வாழ்க்கை என்பது.
வீட்டினர் தேர்ந்தெடுத்த ..அது பொருந்தாத உடையென்றாலும் அந்த உடுப்புக்குள் யசோதையின் உடல் திணிக்கப்படத்தான் போகிறது.
அங்காடித்தெருக்களில் கண்ணாடி ஷோகேஸில் உடுப்பில் திணித்து நிற்கவைக்கப்பட்டிருக்கும் உயிர்ப்பும் உணர்வுமற்ற பொம்மையுடையதைப்போலத்தான்
இவளுக்கு திருமணமென்பது இருக்கப்போகிறது.
திருமணமே வேண்டாமென்று மறுத்து தன் பாட்டை தானே பார்த்துக்கொண்டு வாழ இந்த வீடு அனுமதிக்கவா போகிறது. நிச்சயம் இல்லை. பேசாமல் நானும் வித்யாதரனைப்போல யாருமற்ற அனாதரவான நிலையில் இருந்திருக்கலாமோ!
அப்படியிருந்திருந்தால் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, நாலு காசு சம்பாதிக்க கற்று சுயமரியாதையோடு நிற்க கற்றிருக்கலாம்.
நல்லவேளை குடும்பம் என்ற சந்தகைச் சிக்கலுக்குள் நான் மாட்டிக்கொண்டு தொலைந்துபோனதைப்போல வித்யாதரனும் மாட்டிக்கொள்ள நினைக்கவில்லை. வேண்டாமென்று விட்டான்.
இனி இந்த கற்பனை உலகில் மிதந்து நேரத்தை வீன்போக்குவதையெல்லாம் விட்டுவிட்டு வித்யாதரனைப்போல எதார்த்த உலகில் உருப்படியாக எதையும் செய்வதற்கு கற்கவேண்டும்.
யசோதை இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போது அவளுடைய வீடு அவளுக்கு பூட்டி அனுப்புவதற்கு வகைவகையாக நகைகளை வாங்கிக்கொண்டிருந்தது.
வெளியாட்கள் சிலரை வரவழைத்து வீடு துப்புறவாக்கப்பட்டது.
அம்மா எப்போதும் போல் அல்லது முன்னைவிட அதிகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
யசோதைக்கு புதுச்சேலைகள், உள்ளாடைகள் தைத்து வாங்கிய ரவிக்கைகள் என்று அல்லோகலப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக சொல்லியிருந்த நாளுக்கு முந்தின இரவெல்லாம் அம்மா தூங்கியதாகக்கூட தெரியவில்லை.
தீபாவளியோ பொங்கலோ எந்த விசேச நாட்களையும் அம்மா நிதானமாக அனுபவித்து பண்டிகை கொண்டாடியதில்லை. விருந்தோம்புதல் செய்வதில் உழைத்து கொட்டிக்கொண்டிருப்பாள். இப்போதும் அதையேதான் செய்கிறாள்.
பண்டிகையாவது! திருநாளாவதுமற்ற சாதாரண நாட்களே தேவலாம் என்பதை போல வேலைகள் அம்மாவை வாட்டியெடுக்கும்.
இனி யசோதையும் அப்படி ஒருத்தியாக மாறிவிடப்போகிறாள். வீட்டிற்காக ஓடி ஓடி உழைத்து தேய்கிற ஒருத்தியாக.. அவ்வளவு உழைத்தாலும் சும்மா தண்டத்துக்கு தானே இருக்க என்று ஏச்சு வாங்கும் ஒருத்தியாக..
மாப்பிள்ளையின் தாய் தந்தை அண்ணன் மற்றும் அவர்களின் உறவில் யாரோ நால்வர் என பெண்பார்க்கும் படலத்திற்கு வந்திருந்தனர். அண்ணனின் மனைவி வரமுடியவில்லையாம்.
ஒன்றரை வயதில் பையன் இருக்கிறான். இம்மென்றால் சளியும் காய்ச்சலும் என்பதில் மருமகளால் பயணப்பட முடியவில்லை என்றவர் மாப்பிள்ளையின் தந்தை கூடவே மாப்பிள்ளையும் வரவில்லை.
“மகனுக்கு லீவு கிடைக்கலையாம். அதான் முடிவாகிடுச்சே. சம்பிரதாய சந்திப்பு தானே, பூ முடிக்க நேரே வரேன்னு சொல்லிட்டான்.”
“ஆமாமா இரயில்வே இலாக்காவில் நினைத்த நேரத்திற்கு லீவு எடுத்துக்கிட்டு அதும் மத்தியப்பிரதேசத்தில இருந்து அடிக்கொருதரம் வந்து போறதுனா நடக்கிற காரியமா! மாப்பிள்ளை நேத்தே எனக்கு போன் செஞ்சு பேசினார். அதான் அவருக்கு எங்க பொண்ணை போட்டோல பார்த்தே பிடிச்சிருச்சே. நேரில் வரனும்ன்னு என்ன!
பூ முடிப்பில் பார்த்துக்கலாம். ” என்றவர் யசோதையின் அப்பா.
யசோதை தன் நீளக்கூந்தல் நெடுக சரம் சரமாய் மல்லிகை சூடியிருந்தாள். கத்திரிப்பூ நிற பட்டு உடுத்தி கழுத்தும் கைகளும் சுமக்க நகைகள் பூட்டி அவளை கிளப்புவதற்கு சின்ன அத்தை உடனிருந்தாள்.
மேலே வந்த அம்மா அவளை ஒரு இமைப்பொழுது பார்த்து
“என் தங்கம்” என்று அவசரவரமாய் நெட்டி முறித்து திருஷ்டி கழித்து கீழே அழைத்துப்போனாள்.
யசோதைக்கு சங்கடமாக இருந்தது.
சேலை விளம்பரத்திற்கோ நகைகள் விளம்பரத்திற்கோ போஸ் கொடுப்பது போல..
கூடியிருந்த அத்தனைபேர் முன்னிலையிலையிலும் வணக்கம் வைத்து நின்றாள்.
அப்படி நின்றவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தது அந்த கூட்டம்.
மாப்பிளையின் தந்தையானவர் பேசத்தொடங்கினார்.
அவளிடம் தான்.
“பாரும்மா, எங்களுக்கு இரண்டும் பிள்ளைங்க. பெரியவன் பொண்டாட்டி குழந்தையோட விசாகபட்டினத்தில இருக்கான், சின்னவனோ போப்பால்ல.. உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா அப்புறம் அங்க நீங்க இரண்டு பேர்தான்.
நான் ரிட்டயர்ட் ஆயாச்சு. இங்க கும்மிடிப்பூண்டி பக்கமா நிலம் வாங்கி பண்ணையும் வீடுமா கட்டிக்கிட்டு உட்கார்த்துமாச்சு.
நானும் இவளும் அங்கிருந்து நகர்றதா இல்ல. தோட்டம் துரவ பார்த்துக்கிட்டு எங்க காலத்த நாங்க பார்த்துக்குவோம்.
புருசனும் பொண்டாட்டியுமா நீங்களே ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கனும். நாங்க வந்து நின்னு எதிலையும் தலையிடமாட்டோம். மூக்கை நுழைக்கமாட்டோம். சரிதானா!!
எங்க காலமிருக்குமட்டும் புள்ளைங்க மருமகளுங்க பேரக்குழந்தைகளோட நாங்க எங்க இருக்கமோ அங்க வந்து எங்கள பார்த்துட்டு போய்கங்க. எங்க காலம்போச்சுன்னா தூக்கிப்போட்டு போங்க. அவ்வளவுதான்”. என்றார்.
யசோதை இதற்கு நிமிர்ந்து பார்த்து சரியென சொல்லவேண்டுமா இல்லை நிமிராமல் நிலம் பார்த்து நிற்க வேண்டுமா! புரியாத குழப்பத்தில் இருந்தாள்…