நெடுநல் அத்தியாயம் -11

0
281

யசோதையை மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டுப்போனபின்பு நடந்த வீட்டின்  மாற்றங்கள் எண்ணிலடங்காதவைகளாயின.

பெண் பார்க்கும் வைபவத்தின் போது மாப்பிள்ளையின் அம்மா

” எங்க வீட்டுக்கு  வரப்போற சின்ன மருமகளும் பெரியவ மாதிரி அழகி தான். என்னவொன்னு பெரிய மருமக நல்லா நாகரீகமா ட்ரஸ் பண்ணிக்குவா. அது ஏன் நீங்க எடுத்து அனுப்பின போட்டோல்லாம்  அப்படி இழுத்து போர்த்தி துப்பட்டால பின்ன குத்தி எடுத்தனுப்பிருக்கீங்க. 

வேற நல்ல போட்டோ எடுத்து அனுப்ப சொல்லுங்கம்மான்னு பய சொல்லிவிட்டான்”. 

“போர்வையால மூடினாப்ல இல்லாம நல்லா வேற போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பிவிட்ருங்க. கூட வேலை பார்க்கிறவங்களுக்கெல்லாம் காட்ட வேண்டியிருக்கும்ல.”

“அப்புறம் இடுப்பதாண்டி இவ்வளவு தலைமுடிய எதுக்கும்மா வளர்த்துவச்சிருக்க! சேலைக்கு தான் நல்லாருக்கும். கொஞ்சம் மாடர்னா ட்ரஸ் பண்ண நினைச்சா நல்லார்க்காது. பாதியா வெட்டி குறைச்சுக்க என்ன! இப்படி நேர் வகிடு எடுத்து வாராம இனிமே சைட்ல எடு உன் முகத்துக்கு அதான் நல்லார்க்கும்.”

“பார்லருக்கெல்லாம் போற பழக்கமில்லையா! இந்த காலத்து புள்ளைங்க  சொல்லியா தரனும்ன்னு இருக்குதுங்க.நீ என்னடான்னா..!  

சரி பரவாயில்ல. இனி பார்லருக்கு போய் புருவத்த திருத்திக்க. இவ்வளவு அடர்த்தியா வேணாம் மீடியமா நல்லா வில்லு மாதிரி வளைவா திருத்த சொல்லு. அப்போதான் மீன் மாதிரி இருக்க உன் கண்ணு இன்னும் எடுப்பா அழகா தெரியும். ப்ளீச் பேசியல்லெல்லாம்  இப்பவே பண்ணத்தொடங்கிடு. எப்படியும் கல்யாணத்த  நெருக்கத்தில வச்சிட வேண்டியிருக்கும் என்ன நான் சொல்றது சரிதானே” என்றெல்லாம்  மாப்பிள்ளையின் அம்மா அடுக்கியபோது  யசோதையின் அம்மா வெறுமனே தலையாட்டிவைத்தாள். 

யசோதையின் சின்ன அத்தையோ

“நானும் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன். அம்மாளும் பொண்ணும் கேட்டால் தானே.. இனி மாத்திடலாம். யசோவ முழுசா  மாத்தி காட்டிட்டு தான் நான் இங்கிருந்து கிளம்புவேன்”. என்று அறிவித்தாள். 

“அப்புறம் நகைகளெல்லாம் அந்த காலம் மாதிரி பண்ணாதீங்க. சேலைய கட்றப்ப மட்டும் தான் போட்டுக்க முடியும்ன்னு ஆயிடும்.

போப்பால்ல பய கூட வேலை பார்க்கிறவங்க எல்லாம் வடக்கத்திய ஆட்களாம். அங்க போனப்புறம் எங்கிருந்து உங்க பொண்ணு சேலைய சுத்திட்டு நிக்கப்போது!வேஸ்டா லாக்கர்ல போட்டு பூட்டி வைக்கிறா மாதிரி எதுக்கு!. 

சேலைக்கு தகுந்தமாதிரி பாதி இருந்தா போதும் மீதியெல்லாம் நல்ல மெல்லிசான மேட்சிங் செட் நகையா செய்யசொல்லிவிட்ருங்க. 

பெரிய மருமகளுக்கு அப்படித்தான் செஞ்சாங்க.. “என்று முடித்தாள் மாப்பிள்ளையின் தாய்  

ஆனால் இதெல்லாம் மாப்பிள்ளையின் தந்தை சொன்ன அந்த மூக்கை நுழைக்க மாட்டோம், தலையிட மாட்டோம் கணக்கில் வருமா! வராதா! 

யசோதையை பெண் பார்த்த கையோடு அன்றே மாப்பிள்ளையின் குடும்பமானது 

யசோதையின் அண்ணனையும் அதே குடும்பத்தில் மணம்முடிக்க அஸ்திவார பேச்சை  இட்டுவிட்டனர். அதுமுதல் அண்ணன் தரையில் நில்லாத மிதப்பில் அலைந்தான். 

மாப்பிள்ளையின் தந்தை தான் இந்த பேச்சை தொடங்கியது. 

“பொண்ணுக்கு அண்ணன் என்ன செய்றாப்ல!.”

“என்ன! அசோக் லேலண்ட்ல இஞ்சினியரா! நல்ல கம்பெனியாச்சே, நல்ல சலுகைகள், சம்பள உயர்வெல்லாம் அதிகமிருக்குமே! நல்ல எதிர்காலமிருக்கும்.”

“இதோ என் தம்பியும் அவன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்கான். ஒத்த பொண்ணு. எங்க குடும்பத்துக்கே குட்டி இளவரசி. உங்க பையனும் பார்க்க அம்சமா இருக்காப்டி. ஜாதகத்த கொடுங்களேன். பொருந்தி போச்சுன்னா பொண்ணு எடுத்து பொண்ண கொடுத்துப்போம். என்ன நாஞ்சொல்றது! ” 

“எனக்கு இப்ப என்ன அவசரம் அங்கிள். தங்கைக்கு முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றான் அடக்கத்தின் திருவுருவாய் அண்ணன். 

“அட அந்த கல்யாண வேலை அதுபாட்டுக்கு அது நடந்திட்டு இருக்கும் தம்பி, கூட இதையும் பார்ப்போம். நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி”. 

 “நீங்க சொல்றபடியே ஆகட்டும். ஒரே குடும்பத்திலபொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறது நல்ல விசயம் தான். ஒன்னுக்கு ஒன்னுன்னு உறவு விட்டுப்போகாம இருக்கும். 

எங்க வீட்டு இளவரசி உங்க வீட்டுக்கு வந்து சுகபடட்டும். உங்க வீட்டு இளவரசி எங்க வீட்டுக்கு வந்து சுகப்பட்டு வாழட்டும்… செய்வோம்” என்றார் யசோதையின் அப்பா 

இந்த பேச்சு காதில் விழுந்ததும் யசோதைக்கு திக்கென்று இருந்தது. 

என்ன! ஒரு பெண் இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்து  சுகப்பட்டு வாழ்வதா! எப்படி! அம்மாவை போலவா!!

கூட பிறந்த தங்கையையே இந்த மிதி மிதிக்கிறவன் அண்ணன். 

கைக்கு வாகாய் அடுத்த வீட்டுப்பெண் கிடைத்தால் என்ன செய்யமாட்டான்! 

குரங்கு கைக்கு கிடைத்த பூமாலைதான். பாவம் யார் பெற்ற பெண்ணோ எங்கேயோ நல்லா இருந்துவிட்டு போகட்டும். இந்த வீட்டிற்கு வேண்டாம். 

அண்ணனுக்கு எந்த பெண்ணோட ஜாதகமும் பொருந்த வேண்டாம். என்றைக்குமே கல்யாணம்ன்னு ஒன்னு ஆகிவிடவேண்டாம்.

ஆனால் விதி வேறொன்றை முடிவாக்கியிருக்கிறது போலும். 

அண்ணனுக்கு ஜாதகம் பொருந்தி விட்டது. ஒரே மண்டபத்தில் வேண்டாம். தங்கை கல்யாணம் முடிந்த கையோடு அவனுதை நடத்திவிடலாம் என்று பேச்சு உறுதியானது. 

அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்த யசோதைக்கு உண்மையில் பாவமாக இருந்தது. பூமாலையே தான். 

 போட்டோவில் பார்த்ததிலிருந்தே அண்ணனை கையில் பிடிக்கமுடியவில்லை. அந்த பெண்ணோடு போனில் வேறு பேசத்தொடங்கிவிட்டான்.  

யசோதையின் சின்ன அத்தை சொன்னபடியே அடுத்த பத்து நாட்களும் இங்கேயே தான் தங்கியிருந்தாள். 

யசோதை பியூட்டி பார்லர்க்கு அழைத்துசெல்லப்பட்டாள். 

அவளின் அடர் நீளக்கூந்தல் பாதியாகி முதுகை தொட்டது. கூந்தல் அலையலையாய் வெட்டப்பட்டு சீராக்கப்பட்டது. 

நேர் வாகெடுக்காமல் குறுக்கு வாகெடுத்து, பின்னலிடப்படாமல் கூந்தலில் ஒரு க்ளிப் மட்டும் மாட்டப்பட்டது. 

புருவங்கள் திருத்தபட்டு, ப்ளீச், பேசியல் என்றெல்லாம் முடிந்த பின் அவளை நிறுத்தி வைத்து பார்த்த சின்ன அத்தை. 

“ம்ம்  உங்கம்மா உன்னை மண்ணு மாதிரி வளர்ந்து வச்சிருந்தா, இப்ப பாரு கண்ணுக்கு என்ன லட்சனமா பளிச்சுன்னு இருக்கு பொண்ணுன்னு”. கிடைத்த வாய்ப்பில் அம்மாவை ஏசினாள். 

யசோதையின் வீடு முன்பு தெரியாதனமாக சேலைகளாக எடுத்து அடுக்கியிருந்தது. 

இப்பொழுது மாப்பிள்ளையின் விருப்பத்தை தெரிந்தபின் மார்க்கெட்டில் கிடைக்கிற லினன், செமி டஸ்ஸர், காட்டன், மஸ்லின், நெட்டட், க்ரீப், சில்க், ஜார்ஜெட், சிந்தடிக் என எல்லாவைகையிலும் துணிகள் எடுக்கப்பட்டு டெய்லரிடம் கொடுத்து 

விதவிதமான பேட்டர்ன்களில், நெக் டிசைன்களை வைத்து உடல் வடிவு தெரிகிறார்போல சுரிதார், சல்வாரென  தைக்கபட்டுவந்தது. 

நகைகளும் சிலது வாங்கியும் பலது செய்யக்கொடுத்துமென்று நாகரீக மாற்றத்திற்கேற்ப மாற்று உருவிலானது. 

முன்பெல்லாம் இரவில் உறங்குவதற்கு மட்டுமே உடலிலிருந்து துப்பாட்டாவை நீக்க அனுமதித்த வீடோ இப்பொழுது 

புதிதாக தைத்து வந்த ஆடைகளுக்குள்  யசோதையை புகுத்தி துப்பாட்டாவும்  போடாமல்.. நிற்கின்ற, அமர்ந்திருக்கின்ற, சற்றே சாய்ந்து திரும்பிப்பார்க்கின்ற, பாதியளவு, முழு அளவு புகைப்படங்களாக எடுத்துத்தள்ளின. 

இருந்தும் இந்த படங்களில் க்ளாரிட்டி இல்லை. இன்னும் தெளிவாக க்ளோஸப் படங்களை எடுத்து அனுப்புமாறு மாப்பிள்ளையிடமிருந்து உத்தரவு வந்தது. 

மீண்டும் மார்பளவே இருக்கிற பல படங்கள் எடுக்கப்பட்டது. 

யசோதைக்கு உண்மையில் கேமரா முன்னால் நின்று அப்படி படங்களை பிடிப்பதில், அதை அவளுக்கு வரப்போற மாப்பிள்ளை என்கிற  உரிமையையெடுத்த எவனோ எங்கோ இருந்து எப்படியெல்லாமோ உரித்து பார்த்து கற்பனை செய்வதையும், அப்படி செய்வதாக அவனே போனில் சொன்னதையும்  நினைக்கையில் உடல்கூசி அருவெறுத்தது. 

பிடிக்கவில்லை என்ற வார்த்தையை கூட அவளுக்கு சொல்ல அனுமதியிருக்கவில்லை. அதிலும் அண்ணனின் திருமணம் அவளுடைய திருமணத்தோடு தொடர்புடைய ஒன்றாகி விட்ட பிறகு!

“ஏய் டார்லிங் என்ன பண்ற, நேத்து அனுப்பின உன் போட்டோவைப்பார்த்து  ராத்திரியெல்லாம் தூங்க முடியாம போச்சு” என்கிற ரீதியிலிருக்கும் மாப்பிள்ளையானவனின் போன் பேச்சு யசோதையின் காதில் நாரசமாக ஒலித்தது.

 அவனோடு பேச, அவனது பச்சையான சரசப்பேச்சை காதுகொடுத்துக்  கேட்க அவளுக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை. 

முதல் தடவை அவன் அவளோடு தொலைபேசியில் பேச முனைந்த போதே போன் ஹாலில் மட்டும் தான் இருக்கு. சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என சொல்லி சமாளித்தாள் தான். 

ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு கனெக்ஷன் மாடிக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது. 

“ஹலோ ஹல்லோ சொல்லுங்க. லைன்ல இருக்கீங்களா..!” என்றோ தொடர்பு லைன் கரகரப்பா இருக்கு ஒன்றுமே கேட்கவில்லை என்றோ எதாவது ஒரு பொய் காரணத்தை சொல்லி அவனோடு பேச்சை முற்றிலும் தவிர்த்தாள். 

தவறில்லை. பொய்மையும் வாய்மையிடத்து என்று வள்ளுவமே சொல்லியிருக்கிறது. 

யசோதை, அவளுக்கு பிடித்த விசயங்களை செய்வதில் எப்படியொரு நிறைவு உணர்வு கிடைக்கிறதோ அதே போன்று அவளுக்கு பிடிக்காத விசயங்களை செய்யாமல் இருப்பதிலும் அதே நிறைவு உணர்வு கிடைப்பதை கண்டுகொண்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here