யசோதைக்கு மாப்பிள்ளை வீட்டினர் வந்திருந்து பூச்சூடி, நகை அணிவித்து நிச்சயத்திற்கான நாள் குறிப்பதற்கான வைபவம் நடந்தது.
யசோதை இன்று பச்சை பட்டு உடுத்தியிருந்தாள். போன முறை செய்தது போலவே சேலை நகைகளுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் செய்துவித்தாள் யசோதை.
மற்றபடி காபி தட்டத்தையெல்லாம் கையிலேந்தி அவளை யாருக்கும் கொடுக்கவிடவில்லை.சபையில் கை தடுமாறி கீழே போட்டுவிடுவாளோ என அம்மாவுக்கு அச்சம்.
மாப்பிள்ளை உட்பட அவர்கள் பக்கம் வந்திருந்த கூட்டம் அதிகம். யசோதை வீட்டு உறவு கூட்டமும் கூடியிருந்தது.
இவளையே கண்நோக்கின வண்ணம் அமர்ந்திருந்தான் மாப்பிள்ளையானவன்.
வெளியே இருந்து விருந்து சமைக்க ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.கொல்லைப்புறத்தில் சுடச்சுட அந்த வேலை நடந்துகொண்டிருந்தது.
இம்முறை மாப்பிள்ளையின் அண்ணன் மனைவியும் வந்திருந்தாள். என் பெரிய மருமகள் அப்படி, இப்படியென வார்த்தைக்கு வார்த்தை மாமியாராகப் போகிறவள் வாய்மொழிந்திருந்த வண்ணமே இருந்தாள் அண்ணிப்பெண்.
அவள் நிற்கிற நடக்கிற அமர்ந்திருக்கிற பேசுகிற காஃபியை கையிலெடுத்து பருகுகிற என்று ஒவ்வொன்றிலும் ஸ்டைல் இருந்தது. நேர்த்தியாக உடுத்திக்கொள்பவளாக இருந்தாள். நன்கு அலங்கரிக்கப்பட்ட பதுமையைப்போல் நல்ல அழகு.
“என் தம்பிக்கு கொஞ்சம் பொறுமை குறைவு. கொஞ்சம் அதிகம் கோபப்படுவான். அதை மட்டும் கொஞ்சம் அனுசரிச்சு அவனுக்கு தகுத்தமாதிரி நடந்துக்கங்க” என்று போனமுறை வந்தபோது எதுவும் பேசிடாத மாப்பிள்ளையின் அண்ணன் இம்முறை திருவாய் மொழிந்தான்.
அவன் சொன்னதை ஆமோதிக்கவோ ஆட்சேபிக்கவோசெய்யாத ஒரு பாவனையுடன் இருந்தது மாப்பிள்ளையின் தோரணை. ஒருவேளை சொல்லிக்கொடுத்து கூட்டிவந்திருப்பானோ!
இவளைப்பார்க்கிற அவன் பார்வையில் காதல் ரசம் பொங்கி வழிந்தது.
எல்லா முன் சடங்குகளும் முடிந்து விருந்துண்ண ஆயத்தமானார்கள்.
யசோதை படியேறி அவளின் அறைக்கு வந்துவிட்டாள்.
கூட்டத்திற்கு நடுவே அவர்களுக்கு ஏற்றமாதிரி எப்படி நடந்துகொள்ள வேண்டும் பேச வேண்டிமென்பதெல்லாம் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட யசோதைக்கு புரிபடாதைவைகளே.. இதற்கே இவ்வளவு திணருகிறதேஇன்னும் நிச்சய விழா, திருமண விழா, இன்னுமின்னும் அதற்குப் பின்னானவைகளையெல்லாம் அவள் எப்படி சமாளிக்கப்போகிறாள்.
“உள்ளே வரலாமா! நான் உன்னை டிஸ்டர்ப் பண்றேனா!”
என்றபடியே அறையினுள் நுழைந்தாள் மாப்பிள்ளையின் அண்ணி
யசோதையைப்பார்த்து
“உன் சேலை அழகாயிருக்கு, நீயும் அழகா இருக்க. நீன்னு சொல்லலாம்ல. எப்படியும் நீ என்னை விட சின்னவள் தானே”
என்றபடியே சேலையை நீவிவிட்டவாறே அமர்ந்தாள்.
“எனக்கு ஒன்றரை வயதில் மகனிருக்கான். என் அம்மாக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். அவன தூக்கிட்டு வரவேண்டியிருந்திருந்தா இப்படி சேலையெல்லாம் கட்டிக்க முடியாது. கல்யாணத்துக்கு பிறகு, பிள்ளை பெத்துக்கிட்ட பிறகு எல்லாமே போச்சு. பார் முன்னாடில்லாம் நகங்கள ஷேப்பா வளர்த்துவிட்டு ட்ரஸ்க்கு மேட்சா நெயில் பாலிஸ்லாம் போடுவேன். அப்புறம் எங்கே, பிள்ளையை தூக்கும் போது குத்திகிழிச்சுருமேன்னு நகங்கள வளர்க்கிறது கூட விட்டுப்போச்சு.
சேலையில் லோ ஹிப் ஸ்டைல்லாம் அப்புறம் நினைச்சுக்கூட பார்க்கமுடியலை. கீரீம்லாம் போட்டு எவ்வளவு கேர்ஃபுல்லா பார்த்துக்கிட்டும் கூட அவ்வளவு ஸ்ட்ரெச் மார்க் வந்திருக்கு.
வாட் டு சே! புல்ஷிட் மேரேஜ்.
நான் மொத்தமா என்னை தொலைச்சிட்டேன். சரி இதெல்லாம் சொல்லி உன்னை பயமுறுத்த விரும்பல. நான் உங்கிட்ட சொல்ல வந்த விசயமே வேற.”
” எங்க வீட்ல நாங்க இரண்டு பெண்கள்,அப்படியிருந்துமே என் பங்குக்கு எங்கப்பா எனக்கு இதுவரை இருநூற்றி ஐம்பது சவரன் நகை போட்ருக்கார். என் பெயரில் ஒரு கிரவ்ண்ட் லேண்ட், என் ஹஸ்பண்ட்க்கு பைக், எங்க வைஸாக் வீட்டிற்கு குடித்தனம் வைக்க கட்டில்,டிவி, சோபா முதற்கொண்டு எல்லாம் வாங்கிக்கொடுத்தது எங்கப்பா தான்”
“உங்க வீட்ல நீயோ ஒரே பொண்ணு இதை விட குறைவா செஞ்சிடப்போறாங்க பார்த்துக்க. அப்புறம் நம்ம மாமியார் சொல்லிக்காட்டியே கொலையா கொன்றும்.
ஆனா நான் சொன்னதையெல்லாம் விட அதிகமா உங்க வீட்ல செய்வாங்கன்னா என்கிட்ட சொல்லிடு, நான் எங்கப்பாக்கிட்ட கேட்டு வாங்கனும். இதெல்லாம் பிரஸ்டிஜ் இஷ்யூ உனக்கு புரியுதில்ல” என்றாள்.
யசோதை என்ன பதில் சொல்லுவாள். அவளால் மட்டும் முடியுமென்றால், அவளைச் சுற்றி நடக்கிற இந்த நாடகங்கள் அத்தனையையும் நிறுத்திவிட்டு, மொத்த கூட்டத்தையும் வெளியே துரத்திவிட்டு, இந்த சேலை நகைகளையெல்லாம் கழற்றி எறிந்து விட்டு நிம்மதியாக மூச்சு விட வேண்டும்போல் இருந்தது.
உண்மையில் மூச்சுமுட்டச் செய்கிறது இவளை இந்த சடங்குகள்.
விரும்பாததெதையோ தலைக்குமேல் தூக்கி சுமக்கிறார்போலான பாரம்.
யசோதையின் அம்மா அறைக்குள் நுழைந்ததும் அண்ணிப்பெண் கொஞ்ச நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு கீழே இறங்கிப்போய்விட்டாள்.
அவள் போனதும் குரலைத்தணித்து அம்மா சொன்னாள்.
“இந்த பொண்ணை பார்த்ததும் முதல்ல கொஞ்சம் அலட்டல் குணமிருக்குமோன்னு நினைச்சிட்டேன் பாப்பா, ஆனா அப்படியெல்லாம் இல்ல. நல்லா பேசி பழகிற பொண்ணா இருக்கில்ல!”
யசோதை ஆமாம் என்று தலையாட்டினாள்.
“இவள் மட்டுமில்ல, மாப்பிள்ளை வீட்டில் எல்லோருமே நல்ல மாதிரியாதான் இருக்காங்க. அதும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல. எனக்கு எவ்வளவு நிம்மதி தெரியுமா! என்னைப்போல மாமியார் நாத்தனார்கள் கூட்டுக்குடும்பம்ன்னு லோல்பட்ட அல்லல்பாடு இல்லாம எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் நீ உன் புருசனோட நிம்மதியா குடும்பம் நடத்தலாம்.
என் புள்ளைக்கு இப்படியொரு வாழ்க்கையை அமைச்சுக்குடு தெய்வமேன்னு நான் வேண்டாத நாளில்லை. எல்லாம் அது போலவே அமைஞ்சு கூடிடுச்சு. இனி உனக்கு எல்லாம் நல்லதுதான் பாப்பா. எனக்கு வேறென்ன வேணும். நீ சந்தோசமா இருக்கிறத பார்த்தாலே போதும்.”
காயத்திரி மகளுக்கான முதல் விசேசத்தை கண்ணால் பார்த்த ஆனந்தத்தில், உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்.
மூத்தவளை இழந்து துக்கப்படக்கூட நேரமில்லாமல் சின்னவளையாவது காப்பத்திக்குடு கடவுளே என்று நித்தமும் வேண்டிக்கொண்டிருந்தவளாயிற்றே.
“சரி பாப்பா, நீ கீழ வந்து சாப்பிடலையா! வா அத்தைகளோடு சேர்ந்து சாப்பிடு”
“எனக்கு எதும் வேணாம்மா. அவங்கலெல்லாம் போனதும் கீழ வரவா? நான் இங்கேயே இருக்கேனே ப்ளீஸ்.”
“அவங்க கிளம்ப நேரமெடுக்கும்ன்னு நினைக்கிறேன்ம்மா. அதுவரைக்கும் பசியோட எப்படி இருப்ப…சரி குடிக்கவாவதும் எதும் கொண்டுவந்து தரட்டுமா?”
யசோதை வேண்டாமென்று மறுத்தாள்.
“நான் இந்த சேலை நகையெல்லாம் கழட்டிடவா. என்னவோ கஷ்டமாயிருக்குமா..”
“அச்சோ இப்ப வேணாம் பாப்பா. நல்லாருக்காது. நான் சொல்றேன் அதுவரை பொறுத்துக்க. வேணும்னா அப்படியே கொஞ்ச நேரம் சாய்ந்து ஓய்வா படுத்திரு. உன்னை யாரும் வந்து தொந்தரவு செய்யாம நான் பார்த்துக்கறேன் சரியா!” என்றுவிட்டுப்போனவள்
ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
“பாப்பா மாப்பிள்ளைத்தம்பி இப்ப இங்க வருவார். உங்கிட்ட தனியா கொஞ்சம் பேசனுமாம். அதுக்குமுன்ன இந்தா இந்த ஜீஸாவதும் குடிச்சுக்க..”