நெடுநல் அத்தியாயம் -2

1
406

பிடித்த பாட்டொன்றை தனக்கு மட்டுமாக  கேட்கிற குரலில் பாடிக்கொண்டே,மல்லி, முல்லைப்பூக்களை வாசம் பிடித்தவாறு பறித்துக்கொண்டிருந்தாள் யசோதை. 

பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செதுக்கிச் சேர்த்து கனவின் வண்ணங்களை வாரி இரைத்து கட்டிய வீடு இது.  நல்ல கலைநய வேலைப்பாட்டோடான நீல நிற பெரிய கேட்டும்.. கேட்டிற்கு மேற்புறம் ஆர்ச் போல் அழகானதொரு பெரிய வளைவில்  படரவிட்டிருக்கிற  மல்லி முல்லைக்கொடிகளுமாக அந்த நீல கேட்டும் , பச்சை படர்கொடிகள் முழுக்க தூவலாய் வெண்பூங்களுமாக பார்க்கப் பார்க்க தெவிட்டாத கொள்ளை அழகோடு இருக்கும் வாயில் புறம். அதுவும் கேட்டைப் பார்த்த மாதிரி அழகான பளிங்குக்கல்லில் கட்டப்பட்ட சாய்த்திண்ணை. 

 மழையுதிரும்  பொழுதுகள் எல்லாம் காற்றில் மணக்க மணக்க பூவாசம் நுகர்ந்தவாறே காபியும் புத்தகமுமாக வெளித்திண்ணையில் அமர்ந்தால் சொர்க்கமே தான். 

பெரும்பாலான மாலை நேரங்களை யசோதை இங்கே  தான் செலவிடுவாள்.

நித்தமும் அவளுக்கு வீட்டுப்பூக்களை பறித்துத்தொடுத்து சரம்சரமாகச் சூடிக்கொள்ளப்பிடிக்கும்.

கூடவந்து நின்று பூக்களைக்கொய்து கைநிறைய வைத்து அழகுபார்த்து கொண்டிருந்தாள் யாத்வி. 

“குட்டிக்கண்ணா, நீ இப்பல்லாம் உன்னோட ரித்விக் ரேயனைப்பற்றி அம்மாக்கிட்ட எதுவும் பேசக்காணோமே, ஏனாம்!”

கையிலிருந்த பூக்களை கூடையில் போட்டவாறே

” ம்மா. நீங்க அன்னைக்கு சொன்னது நூறு சதம் கரெக்ட்ம்மா, முன்னெல்லாம் அவன பார்க்கப்  பார்க்க மனசுக்கு பூரிப்பா இருக்கும். 

அப்புறம் பேசிப்பேசி பழகி பார்க்கும்போது தான் அவன் என் டைப் இல்லைன்னு தோணுச்சு. முன்ன இருந்த அந்த ஈர்ப்பு போய்டுச்சு தான். ஆனா இப்பவும் நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ்.”

பதின்பருவத்தின் முதல்  மொட்டவிழ்ப்பு, இந்த வயதில் வரக்கூடிய சிறு மயக்கக் கிறக்கத்திலிருந்து யாத்வி தானே தெளிந்து வெளியே வந்து விட்டிருக்கிறாள். 

யசோதைக்கு சின்னமகள் யாத்வியின்  பக்குவம் வளர வளரக் கூடிக்கொண்டிக்கொண்டும், 

பெரியவள் கயாதிக்கோ கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிக்கொண்டிருப்பதாக பட்டது.

கயாதியை கட்டிப்போடும் ஒரே வார்த்தை அழகு. ப்ரெண்ட்ஸ் மத்தியில் தானொரு பேரழகி என்று எடுத்திருக்கிற பட்டத்தை அவளால் ஒரு போதும் தவறவிடமுடியாது. ரோட்டில் இறங்கி நடந்தால் அத்தனை கண்களும் தன்னையே பார்ப்பதில், தன் மிகுந்த அழகின் மேல் பெருமிதம். தீராத மோகம். 

அவளின்  அழகு கெட்டுவிடக் கூடாதென்பதற்காக மெனக்கெடுகிறவள். 

அதற்காக  தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கச்சொன்னாலும் செய்யத்தயாராய் இருப்பாள். 

இருவரையும் ஒன்றுபோலத்தான் வளர்ப்பது, வாங்கித்துவது, வசதிகளை செய்துதருவது எல்லாமே..

ஒரே பெற்றோருக்கு பிறந்து, ஒன்னுபோல ஒரே சூழலில் வளர்க்கப்பட்டாலுமே பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் எதிரெதிர் துருவங்களாக வளர்வதன் புதிர் அவிழவே மாட்டேன்னென்கிறது யசோதைக்கு. 

யசோதைக்காவது அவள் பிறந்து வளர்ந்த சூழலில் 

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்புமென்று வளர்ப்பில் பாகுபாடிருந்தது. 

இங்கே அப்படியா!!

பெற்றோரே வாங்கிக்கொடுக்க நினைத்தாலும் தனக்கு தேவையற்றவைகளென்று நினைக்கிற எதையும்  வேண்டாமென்று மறுத்துவிடுவாள் சின்னவள் யாத்வி.  

பெரியவள் கயாதியோ அவளுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ “என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருக்கு, எனக்கு இப்ப வேணுமே வேணும்” என்று ஒன்றுக்கும் இலாயக்கில்லாத பொருட்களை ஊர்பட்ட விலை கொடுத்து அடமாகப்பிடித்து  வாங்கிக்கொள்வாள். நாலே நாட்கள் தான் பிறகு அது எந்த மூலையிலோ கிடக்கும். பத்திரமாக பக்குவப்படுத்தி வைக்கமாட்டாள். 

 ஆங்காங்கே கிடத்தி எறிந்துவிட்டு காணோம் தேடித்தாருங்கள் என்று அழுதோ இல்லை உடனே புதிது வாங்கித்தாருங்கள் என்று அடம்பிடித்துக்கொண்டோ வந்து நிற்கிறவள். 

பணமதிப்பு புரியாமல் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் அவள் கைக்கு கிடைக்கும்படி செய்துவிடவேண்டியது பெற்றோரின் கடமை என்று நினைப்பவள் கயாதி. 

 பிடிவாதம் பிடித்து காரியத்தை சாதித்துக்கொள்ள பட்டினிகூட கிடக்கத்தொடங்கியாயிற்று. 

வீட்டில் கொடுக்கப்படும் சுதந்திரம் என்பது  நல்லது கெட்டதை தானே பகுத்தறிந்து தன்னிச்சையாக தனக்கான பாதையை தானே கட்டமைத்துக்கொள்வதென்பதை சின்னவள் யாத்வி சரிவர பிடித்துக்கொண்டாள். 

கயாதியோ வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் என்பது கட்டவிழ்ப்பு, அவிழ்த்துவிட்ட மாட்டின் கதை என்பதாக எடுத்துக்கொண்டு தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறாள். 

பட்டினிகிடந்தாவது தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்லலாம் என்கிற யுக்தியை கயாதி கையிலெடுத்ததுமே 

“சரி இனி எங்களுக்கு அளவா மட்டும்  சாப்பாடு செஞ்சா போதும்ல. சாப்பிடாமலே இருந்தா குச்சி மாதிரி ஆகி, கண்ணெல்லாம் உள்ள போய், அதோ போகிற பொண்ணு யாரு!? கயாதியா என்ன இப்படி ஆகிட்டான்னு பேசப்போறாங்க, அவ்வளவேதான். பட்டினி கிடப்பது உன் இஷ்டம்” என்று விட்டாள் யசோதை  

விட்டுப்பிடிக்கிற டெக்னிக். 

அதன்பிறகு பட்டினியாவது ஒன்னாவது என்று வழிக்குவந்துவிட்டாள் மகள். 

தன்னுடுடையது எதையாவதும் எங்காவதும் போட்டுவிட்டு அனுமதி கூட கேட்காமல்  தங்கையின்  பொருட்களை உபயோகிக்க எடுப்பாள் காயதி.

யாத்வியோ தானும் அடுத்தவர் பொருளை தொட மாட்டாள். தன்னுடையதை யாரும் எடுத்தால் பொறுக்கவும் மாட்டாள் 

பிறகென்ன சண்டைதான்… 

மகள்கள் இருவரும் சின்னஞ்சிறு குட்டிகளாக இருந்தபொழுதிலிருந்தே  ஒருவரையொருவர் சண்டையிட்டு அடித்துக்கொண்டாலும்  யசோதை கண்டுகொள்ளவே மாட்டாள். 

தலையிட்டால்.. தானே சமாளிக்கிற தைரியம் எங்கிருந்து வரும்.! 

வீட்டிலேயே சமாளிக்க கற்கா விட்டால் வெளியுலகில் இதனினும் அதிகமாக சமாளிக்க வேண்டிய சூழலை எதிர்கொள்ள பழகுவது எப்படியென்றுதான்.

ஒன்று முட்டிமோதி அடித்துக்கொண்டு தானாகவே ஓய்ந்து சமாதானம் ஆகிவிடுவார்கள் அக்காளும் தங்கையும். 

இல்லையென்றாலும் ஒருவரை ஒருவர் அட்டாக் பண்ணுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள பழகுவார்களென்று தான் விடுவது. 

ஆனால் ஒருதரம் வாக்குவாதத்தின் நடுவே தங்கையைப்பார்த்து “ஃபக் ஆஃப் யூ  பிட்ச்” என்றுவிட்டாள் கயாதி. 

“உனக்கு  இவ்வளவு ஃபீஸ கட்டி படிக்க அனுப்பிறது சப்ஜெக்ட படிச்சு சர்டிபிகேட் வாங்கிறதுக்கு மட்டுமில்ல. முதல்ல டிசிப்ளின் கத்துக்க. நான் பேசினது தப்பு. சாரி இனி இப்படி பேசமாட்டேன். இந்த மாதிரி வார்த்தைகளை இனி எப்போதும் பயன்படுத்தவே மாட்டேன்னு நூறு முறை எழுதிட்டு வந்து அவகிட்ட கொடு. நம்பர் போட்டு எழுது. நூறில் ஒன்று குறைஞ்சாலும் திரும்ப நூறு எழுதவைப்பேன். எழுதிகாட்டினா தான் இன்னைக்கு நைட் டின்னர் கிடைக்கும். இல்லைனா இந்த மாதம் பாக்கெட் மணியும் சேர்த்து கட்.”

தரையில் காலால் ஓங்கி உதைத்துவிட்டு எழுதப்போனாள் கயாதி.

அவளால்  உணவையும் பாக்கெட் மணியையும் எப்படி இழந்துவிட முடியும்! 

‘ச்சே இந்த அம்மா சரியான ஹிட்லர்,

யாராவது பெத்த மகளை இவ்வளவு டார்ச்சர் பண்ணுவாங்களா! அதுவும் என்னை மட்டும். 

ப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் நல்ல நல்ல பேரண்ட்ஸ் கிடைச்சிருக்கும் போது எனக்கு மட்டும் ஏந்தான்  இப்படியோ!! ‘ மனதிற்குள் புலம்பிக்கொண்டேதான் எழுதினாள் கயாதி 

எழுதிக்கொண்டுபோய் தங்கையிடம் கொடுத்து “இந்தா கவுண்ட் பண்ணிக்கோ” என்றதோடு ஹேட் யூ என்று வாய்க்குள் முனுமுனுத்தாள். ச்சே வெறுப்பை வெளிப்படையா காட்ட கூட இந்த வீட்டில் உரிமையில்லை. அதும் எனக்கு மட்டும். 

மூக்கணாங்கயிறு போட்டு இறுக்கிப்பிடிப்பதில்லை.அனால் கண்டிப்பு காட்டவேண்டிய இடத்தில காட்டித்தான ஆகணும்!..என்ன சொல்லி என்ன, மாறமாட்டேன்னென்கிறவளை என்னதான் செய்வது!! என்றிருந்தது யசோதைக்கு. 

தாய் தந்தை கொடுக்கிற இந்த கட்டுகளற்ற சுதந்திரம் கண்களை மறைத்து தறி கெட்டுவிடக்கூடாதென்றும் கேட்கிறதெல்லாம் கிடைக்கிறதென்ற மிதப்பு வந்துவிடக்கூடாதென்றும்கவனத்தோடே கணவனும் தானும் கடந்துவந்த அனுபவப்பாடங்களை மகள்களுக்கு கதை கதையாய் சொல்வாள் யசோதை. 

யாத்விக்கு தாயிடம் கதை கேட்பதென்றால் கொள்ளைப்பிரியம். சொன்னக்கதைகளையே ஒரு நூறு தடவைகள் திரும்பத்திரும்ப சொன்னாலும் அலுக்காத ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பாள். 

“ம்மா இந்த புக்க இதோட ஆறாவது தடவையா வாசிக்கிறீங்க. அதை மூடிவச்சிட்டு எனக்கு கதை சொல்லுங்க” சோபாவில் அமர்ந்திருந்த யசோதையின் மடியில் வந்து தலைவைத்து படுத்தாள் யாத்வி. 

புத்தகத்தை மூடி அப்பால் வைத்து, மகளின் தலைக்கூந்தலை வருடியபடியே நாளைக்கு எக்ஸாம வச்சுக்கிட்டு படுத்துத்தூங்காம என்ன கதைவேண்டியிருக்கு உனக்கு!.”

“ம்மா. என் எக்ஸாம் பேப்பர்லாம் அது பாட்டுக்கு அதையே எழுதிக்கிட்டு  நிரம்பிடும். நிஜம்மா. என்கிட்ட மேஜிக் இருக்கு. என் க்ளாஸ் முதல் ரேங்க் வாங்கிற பையனை விட நான் தான் அதிகம் எழுதுவேன். 

நான் டீச்சர்க்கிட்ட அடிஷ்னல் பேப்பர் கேட்டுக்கிட்டே இருப்பேனா!, அவங்களும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்களா!

நானும் எழுதிக்கிட்டே இருப்பேன். அபிகூட கேட்ப்பா எப்பட்றீ படிக்காம வந்து இவ்வளவு எழுதறேன்னு. அங்க தான் என்னோட மேஜிக் இருக்கும்மா!

ஜென்ரல் கேள்வியா இருந்தா பதிலை சும்மா அடிச்சுவிடுவேன். சப்ஜெக்ட்ல இருந்து வந்த கேள்வியா இருந்தாலும் அடிச்சுவிடுவேன். ஸோ என் பேப்பர் வெய்ட் பார்த்து மதிமயங்கி எனக்கு மார்க்கை அள்ளி கொட்டீடுவாங்க. எப்படி என் டெக்னிக்.” யாத்வி கண்ணடித்து சிரித்தாள். 

தாயும் நகைப்போடு “கள்ளியாச்சே நீ தான். சரி என்ன கதை வேணும். சீக்கிரம் கேட்டு போய் தூங்கிடனும்”

“ம்ம். உங்களோடதும் அப்பாவோடதும் லைஃப் ஸ்டோரி சொல்லுங்க”.

“இதை மட்டும் நீ எத்தனாவது முறையா கேக்கிறியாம்!! 

இதோட ஆயிரம் தடவைகளாவதும் சொல்லியிருப்பேன்”. 

இப்ப ஆயிரத்தி ஒன்னாவது தடவையா  சொல்லுங்கம்மா, ப்ளீஸ்மா கொஞ்சம் மட்டும் சொல்லுவீங்களாம். நான் கேட்டுட்டு ஓடிப்போய் தூங்கிடுவேனாம். மீதிய நாளைக்கு கேட்டுக்குவேனாம். ப்ளீஸ்மா ப்ளீஸ்” தாயின் கன்னத்தை தொட்டு எடுத்து முத்தமிட்டு செல்லம் கொஞ்சினாள் யாத்வி. 

மணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் பெண்களுக்கு பிறந்த வீட்டை  நினைத்தாலே  இனிக்குமாம்..! யசோதைக்குமா!?

1 COMMENT

  1. பெண்கள் ! மனிதர்களே ஆச்சர்யம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். கயாதி யாத்வி சுவாரசியங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here