யசோதை வித்யாதரன் திருமணம் சட்டப்படியும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதியப்பட்டது.
பெரியவர்களின் நிறைந்த வாழ்த்துகளை மனதில் சுமந்தபடி சின்னவர்கள் இவ்விருவரும் தங்களின் குடித்தனத்திற்காக பார்த்து வைத்திருக்கும் வீட்டில் அடியெடுத்து வைத்துவிட்டார்கள்.
கான்கிரிட் கூரை, சிமெண்ட் தரையோடு சிறியதாக ஒரே அறை,அதே அறையில் ஒருபுறம் சிறிதாக அடுப்பு மேடை ஒன்றும் பாத்திரங்களை அடுக்கி வைத்துக்கொள்ள கடப்பாக்கல் அலமாரியும் அதையொட்டி ஓரத்தில் பாத்திரங்களை கழுவிக்கொள்ள சதுரமாக ஒரு சலதாரைக்கட்டு. இவ்வளவே வீடு.
வித்யாதரன் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வோடு, சின்னதாக ஒரு திரி ஸ்டவ்வையும் புதுவீட்டிற்கு வாங்கியிருந்தான். துணிமணிகளுக்கான பெட்டிகள் இரண்டும், நான்கு தட்டுமுட்டுச் சாமான்களும்,பாய் படுக்கைப் போர்வை இத்யாதிகளும் தான் அவர்களின் மொத்த உடமையும்.
குடிபுக கேட்டுக்குள் நுழையும்போதே அந்த காம்பவ்ண்டிலிருந்த ஆறேழு வீட்டுத்தலைகளும் வந்து இவர்களை வேடிக்கை பார்க்கத்தொடங்கியது யசோதைக்கு விந்தையாக இருந்தது.
“சாமான்செட்டு ஒன்னுமில்லையா! புதுசா கட்டிக்கிட்டவங்களுக்கு வீட்லருந்து ஒன்னுமே தரலையா” என்று வீட்டுக்காரம்மா தாடையில் கைவைத்து ஆச்சர்யவினா எழுப்பியபோது
” இப்போதைக்கு எங்க இரண்டுபேருக்கும் இதுபோதுங்கம்மா” என்றான் வித்யாதரன்.
“அதப்பத்தி எனக்கொன்னுமில்ல, கரண்ட் பில்லுக்கு கணக்கு பார்க்கல்லாம் தனி மீட்டர் கிடையாது. என்னென்ன பொருளிருக்குன்னு பார்த்துதான் பில்லு போட முடியும். இந்த ஒரு லைட்டு, ஒரு ஃபேனு, இஸ்திரிப்பெட்டி, ரேடியோ பெட்டியா!
ம்ம் சரி, காலையில நல்ல தண்ணி மூணு நாலு மணிக்கு வரும். அரை மணி நேரம், முக்கா மணி நேரமோதான். அதுக்குள்ள இந்த பம்பில அடிச்செடுத்துக்கனும்.
வீட்டுக்கு இரண்டு குடம் தான் கணக்கு . ஒரு வரிசைக்கு. ஏழு வீட்டுக்காரங்களும் இரண்டு குடம் பிடிச்சாச்சுன்னா, தண்ணி நிக்கிறதுக்குள்ள அடுத்த வரிசைக்கு எஸ்ட்ரா தண்ணி புடிச்சுக்கலாம்.
அவங்கவங்க வீட்டு வாசல பெருக்கி கோலம்போட்டுக்கலாம் தினமும். ஆனா ஒரு வாரத்துக்கு ஒரு வீடுன்னு கணக்குவச்சு முறைவாசல் கேட்டுக்கு வெளியே தண்ணி தெளிச்சு கோலம் போட்றனும் விடிஞ்சதும் ஐஞ்சு ஆறு மணிக்குள்ள போட்றனும். லேட்டாச்சுன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்.
இந்த பக்கத்து மூணு வீட்டுக்காரங்களுக்கு மொத பாத்ரூமூம் லெட்ரீனும். அந்த பக்கத்து மூனு வீட்டுக்கும் இரண்டாவது. இந்தப் பக்கத்துக்காரங்க அதில போகக் கூடாது. மூனு வீட்டுக்காரங்களும் முறை வச்சு கழுவி விட்டுக்கங்க. சண்ட சச்சரவு பஞ்சாயத்துன்னு காம்பவ்ண்ட்க்குள்ள எதுவும் வரக்கூடாது இப்பவே சொல்லிட்டேன்.
அப்புறம் ராத்திரி பத்துமணிக்கு முன்னாடி உள்ள வந்திடனும். அப்புறம் கேட்ட பூட்டிடுவோம் என்ன புரிஞ்சுதா! “
உண்மையில் யசோதைக்கு ஒன்றுமே புரியவில்லைதான். எதோ விடைகள் தெரியாத வினாத்தாளை கைகளில் வைத்துக்கொண்டு எக்ஸாம் ஹாலில் முழித்துக்கொண்டிருப்பது போலிருந்தது அவளுக்கு.
இந்தம்மாவின் பேச்சுத்தொனியைப்பார்த்தால் வீட்டுக்கு மட்டும் சொந்தகாரரைப்போல் தெரியவில்லை. குடியிருப்பிலிருக்கும் இந்த ஆறு குடித்தனக்காரர்களுக்குமான சகல சர்வாதிகாரத்தொனி.
“சரி, முத பாலைக்காய்ச்சி எல்லா வீட்டுக்காரங்களுக்கும் கொண்டுபோய் கொடுத்திட்டு, அப்புறம் மத்ததைபார்த்துக்க” என்றவிட்டுப்போனாள் வீட்டுக்காரம்மா.
வித்யாதரன் போய் பால்காய்ச்ச தேவையான பொருட்களை வாங்கிவந்தான்.
யசோதைக்கு அந்த இரு மண்ணெண்ணெய் ஸ்டவ்களில் திரி ஸ்டவ்வை பற்றவைப்பது சுலபமாக தெரிந்தது.
பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி பொங்கவிட்டு இறக்கி கற்கண்டுகளும் ஏலக்காயுமிட்ட பாலை சின்ன சின்ன டம்ப்ளர்களில் நிரப்புவதுவரை இருவருமே சேர்ந்தேதான் செய்தார்கள்.
ஒரு தட்டில் டம்ளர்களை அடுக்கி கொஞ்சம் சாக்லெட்டுகளோடு இருவருமே தான் காம்பவ்ண்டிற்குள்ளிருந்த ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு தந்தார்கள்.
கதவை தட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லோரும் வீடுகளை திறந்தே வேறு வைத்திருந்தனர்.
யசோதைக்கு தட்டு நிறைய சூடான பானத்தை எடுத்துக்கொண்டு போய் புதியவர்களை சந்தித்து தருவதில் எந்த கைநடுக்கமும், தடுமாற்றமும் உண்டாகவில்லை.
யசோதைக்கு கூந்தல் நிறைக்க சூடிக்கொள்ள மல்லிகை சரம் வாங்கிதந்திருந்தான் வித்யாதரன்.
கை நிறைக்க சிவக்க மருதாணி இட்டு விட்டிருந்தாள் மகுடி.
கைகள் நிறைக்க கலர்கலராய் கண்ணாடிவளைவிகளை வாங்கி அடுக்கியிருந்தாள் யசோதை.
பொன்னொளிர் அழகோடு யசோதையும், அவளருகே கம்பீரமும் மிடுக்குமாக வித்யாதரனையும் அந்த அண்டைவீட்டினர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
புதுக்குடித்தன வீட்டில் இது இவர்களின் முதல் இரவு. இதுநாள் வரை வெளியே வைத்து பத்திருபதடி தள்ளி நின்றே பேசிப்பழகிய இருவரும் தாளடைத்த அறைக்குள் தனித்து அதுவும் அருகருகே கிடந்துறங்கப்போகிற இரவு.
அருகருகே தான் படுத்தாக வேண்டும்.
வேண்டுமானால் இருவர் படுக்கைகளுக்கும் இடையே ஒரு இரண்டடி இடம் விட்டு விரிக்கலாம் என்கிற அளவு தான் அந்த அறை.
இருவருக்குள்ளும் எதேதோ உணர்வுக்கலவைகள் முட்டிமோதி கரைபுரண்டாலுமே கூட இருவருமே வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
சாதாரணம் போல் பாவித்து பின் பாவனையே உண்மையாக உறங்கிப்போயிருந்தார்கள்.
அதிகாலை மூன்று மணிக்கு அலாரம் அடித்த உடன் முதலில் எழுந்தவன் வித்யாதரன் தான். பின்னோடு அவளும் அடித்துப்பிடித்து எழவும்
” நீ படுத்திரு யசோ. எனக்கு இந்த தண்ணீர் பிடிப்பதெல்லாம் பழக்கம்தான். நான் பார்த்துக்கிறேன். நீ படு”
அவள் கேட்டாளில்லை.
“நானும் இனி பழகிக்கிறேன்” என கூடவே எழுந்து அவனைப்போலவே படுக்கைகளை மடித்தெடுத்து வைத்து வெளியே வந்தாள்.
அவ்வளவு அதிகாலையில் வித்யாதரனைத்தவிர அத்தனை வீட்டு ஆண்களும் நன்கு குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருக்க, வீட்டுப்பெண்கள் மட்டும் தான் நல்ல தண்ணீர் பிடிக்க அவரவர் வீட்டுவாசலையொட்டி போடப்படிருந்த கடப்பா திட்டுகளில் அமர்ந்து காலங்காலையில் அரட்டை கச்சேரியோடு அவரவர் வீட்டு முறை வரும்போது அடிபம்பில் அடித்து நீரை பிடித்திருக்க…
இவர்களின் வீட்டில் அப்படியல்லாமல் மனைவியை வேடிக்கைப்பார்க்கவிட்டுவிட்டு கணவன் தண்ணீரை அடித்து வீட்டினுள் தூக்கிகொண்டு வைப்பதை காம்பவ்ண்ட் அதிசயத்துடன் பார்த்தது.
அந்த காம்பவ்ண்டிற்குள் அன்றைக்கு மட்டுமல்ல அதன்பின்னான எல்லா நாட்களிளும் இவர்களிருவரும் தான் பேசுபொருள்.
கிணற்றில் நீர் சேந்தி, அங்கேயே பதிக்கப்பட்டிருக்கிற துணி துவைக்கும் கல்லில் துவைத்து அலசி பிழிந்து காயப்போடுவதுவரை இருவரும் சேர்ந்தே செய்வதையும்,
வித்யாதரன் வீட்டிற்குள் பாத்திரங்கள் கழுவ தேவையான தண்ணீரை சேந்தி எடுத்துப்போவதும் மனைவிக்கு குளிக்க குளியலறையில் நீர் விளாவி வைப்பதையும் கடைகண்ணிக்கோ அது ஏன்! பால் வாங்கக்கூட இருவரும் சேர்ந்தே நடந்து போய்வருவதும், வெளி கடப்பாக்கல் திட்டில் சேர்ந்தமர்ந்தே காஃபி குடித்தப்படி பேப்பர் செய்திகளை வாசிப்பதுமாக கணவனும் மனைவியும் இப்படி எல்லாவற்றையும் சேர்ந்தே செய்வதையெல்லாம் அந்த குடியிருப்பு வாசிகள் எவருமே இதுவரை கண்டிராத அதிசயக்காட்சிகள் தான்.
பொதுவான, தங்களுக்கு கிடைக்காதது அடுத்த பெண்ணுக்கு கிடைப்பதைப்பார்த்தெழும் பொறாமை புகைச்சல்கள் காம்பவ்ண்டிற்குள் உண்டாயிற்று.
“ஏன் அந்த வீட்டு ஆம்பளையும்தான் சம்பாதிக்க வெளியே போறான். ஆனா போறதுக்குள்ள பொணாட்டாட்டிக்கு என்னென்ன செஞ்சுகொடுத்துட்டு போறான்.
நானொருத்தி கைகுழைந்தைய வச்சுக்கிட்டு ராப்பகலா அல்லல்பட்டுக்கிட்டு கிடக்கிறேன். போதாக்குறைக்கு உனக்கும் சேர்த்து வேலைய செஞ்சுக்கிட்டு, வக்கணையா திங்கறதுக்கு வேணுன்ன்னு உசிர வாங்கிற. உன்னை கட்டிக்கிட்டு என்ன சுகத்த கண்டேன்”
இவர்களை வைத்து அடுத்த வீட்டு கணவன் மனைவிக்குள் சண்டைகள் தலைதூக்கின.
ஆண்களுக்குமே வித்யாதரனைக்கண்டால் எரிச்சலும் கடுப்பும்தான்.
இவனொருத்தன் ஆம்பிளையா இலட்சனமா இல்லாம புது பொண்டாட்டி மோகத்தில் தலைகால் புரியாம ஆட்றான். அதைப்பார்த்து நம்ம வீட்டுப்பெண்கள் நமக்கு குடைச்சலை கொடுக்கிறார்களெனும் காழ்ப்புணர்ச்சி.
அவர்களில் சிலர் வித்யாதரனை தனியே காணும்போது அட்வைஸ் கொடுத்து தள்ளினர்.
“ரொம்ப இடம்கொடுக்காதீங்க ப்ரதர், ஆரம்பத்தில செஞ்சுபழகீட்டீங்கன்னா அப்புறம் அத மாத்த முடியாது. இப்ப புதுசில அப்படித்தான் நல்லாருக்க மாதிரி இருக்கும். போகப்போகத்தான் தெரியும். சொன்னாப்புரிஞ்சுக்கங்க”
பெண்களோ யசோதையை நெருங்கிப்பழகி அவளின் வீட்டு அந்தரங்க விசயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
வீட்டுக்கு வெளியேயே இப்படி விழுந்து விழுந்து பொண்டாட்டியை பார்த்துக்கொள்ளும் ஒருவன் வீட்டிற்குள் எப்படி நடந்துகொள்வான் என்று தெரிந்துகொள்ள ஆவல் அவர்களுக்கு.
யசோதையோ பிடிகொடுக்காமல் பட்டும்படாமல் அளந்து பேசுகிறவளாக எந்நேரமும் கதவை சாத்தி வைத்து இவர்களோடு கலந்து பழகாத ஒருத்தியாக இருந்தது அவர்களுக்கு எரிச்சலைத்தந்தது.
ஒருவேளை இந்த பெண்களின் தினப்படி கடப்பாகல்திட்டு அமர்வு
கூட்டத்தோடு சேர்ந்து அரட்டை கச்சேரியில் கலக்கிறவளாக இருந்திருந்தால் யசோதை இவர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கக்கூடும்.
ஆனால் அவள்தான் மாறுபட்டு இருந்தாளே!
“அழகா மினுக்கிட்டு திரியுதேயொழிய அந்த பொண்ணு சரியான மண்ணு மண்ணாந்தை. ஒரு இழவும் தெரிய மாட்டேங்குது.
ஒரு இளிச்சவாயி புருஷன்காரனா கிடைச்சிருக்கான்.
நல்லா வேலை வாங்கி தின்னுக்கிட்டு மேலாமினுக்கியா திரியுது. தினமும் பூ என்ன! மேக்கப் என்ன! அயர்ன் பண்ணாம போட்றதே இல்ல. சமையலக்கூட அவந்தான் செஞ்சுவச்சிட்டு போறான்போல. எந்த பொம்பளையாவதும் வீட்டு ஆம்பளைய தெரு வாசல்ல கோலம்போட விடுவாளா! அத சிரிச்சுக்கிட்டே வேற நின்னு பார்க்கிறா,
இந்த கூத்த கேளு. நல்ல குடும்பத்து பொம்பளையாட்டம் தெரில. தினமும் அவன அந்த பக்கம் அனுப்பிட்டு இந்த பக்கம் ஹேண்ட்பேக்க மாட்டிக்கிட்டு கிளம்பிட்றா! வேலைக்கு போறாளான்னா அதுவும் இல்லையாம்!…
அப்ப என்னவா இருக்கும்!?”