வித்யாதரன் யாரோடும் வீன் வம்பு சண்டை விவாதங்களுக்கு போகிறவன் அல்ல.
யாரும் அவனிடம் வம்படியாக சண்டைக்கு வந்தாலும் முட்டாள்களோடு மோதுவதைவிட விலகிப்போவதே மேல் என்று வீரத்தைக் காட்டுவதை விட விவேகத்தோடு ஒதுங்கிக்கொள்பவன்.
சிறுவயதிலிருந்தே இதனால் அவனை யாரும் கோழை என்றழைத்தால் கூட பொருட்படுவதுமில்லை.
ஆக்கத்தோடு செய்ய எத்தனையோ இருக்க அதைவிட்டு ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என வஞ்சத்தில் இறங்கி கோபத்தில் தொலைந்து தேவையற்ற சிக்கல்களில் மாட்டி வாழ்கையை சிடுக்காக்கிக்கொள்பவன் அவனில்லை.
ஆனால் யசோதை அவன் மனைவி.
உயிருள்ள வரை யசோதையை ஒரு துரும்பளவு துன்பம் கூட இனி நெருங்க விடப்போவதில்லை. அத்துமீறி வந்து வீடு நுழைந்து அவளை அடித்து துன்புறுத்தியவன் அவளுடைய வீட்டினனேயானாலும் போய் தொலைகிறானென விட்டுவிடப்போவதில்லை.
இனியொருதரம் அவன் யசோதையின் மேல் கையோங்க துணிந்திராதபடி, பதிலடி தந்தேயாக வேண்டும்.
மானம் மரியாதை கெளரவம் என்று பேசுகிறவனுக்கு சிறை தண்டனை பெரிய அடியே..
யசோதையை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த கையோடு, மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்து போலிஸில் புகார் அளித்தான் வித்யாதரன்.
ஒரு பெண் காவலரோடு மருத்துவமனைக்கு வந்து யசோதையை பார்த்து படங்களை எடுத்துப்போனார்கள். காவல்துறை. விசாரணைக் கேள்விகளுக்கு பதில் சொல்கிற நிலையில் அவளில்லை.
முற்றிலும் சுயநினைவற்றுப்போகவில்லை. ஆனால் என்ன ஏது எங்கிருக்கிறோமென்றெல்லாம் அறியவொனாத உடல் மன நோவு காய்ச்சலில் கொண்டுவிட்டிருக்கிறது.
உடல் வலியால் ஒரே கிடப்பில் படுத்திருக்க முடியாது தவித்தாள். மருந்தின் தாக்கத்தையும் மீறிக்கொண்டு அனத்தலும் பிதற்றலுமாக படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள்.
பிதற்றலாக அவளை தூற்றியவர்கள், வீண் பழி சுமத்தி பொய் குற்றம் சாட்டியவர்கள், நக்கல் செய்து சிரித்தவர்களுக்கெல்லாம் பதில் மொழிந்து கொண்டிருந்தாள்.
வித்யாதரன் அவளை விட்டு விலகாது அருகேயே அமர்ந்திருந்திருந்தான்.
“பார்மா, போகட்டும் விடு, யார் என்ன பேசினாலும் நமக்கென்ன. அதனால நாம எந்தவகையிலும் குறைந்துவிடமாட்டோம். விடு யசோ, அமைதியா தூங்கு”
தட்டிக்கொடுத்து முதுகில் வருடி உறங்கச்செய்து கொண்டிருந்தான்.
யசோதை அவனுடைய கையை பற்றியபடியே தான் கிடந்தாள்.
நிற்கவோ, எழுந்து அமரவோ அவளுக்கு திராணி இல்லை. திட ஆகாரமும் உட்கொள்ள இயலவில்லை. ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டேதான் இருந்தது.
கேசவப்பெருமாள் திரவ உணவாகத் தயாரித்து கொண்டுவந்து கொடுத்தார்.
“நன்றிங்க சார் எங்களால உங்களுக்கு சிரமம்”
“நான் பெத்த மகள்களுக்கு செய்றதுபோலத்தான்ப்பா. நான் இருக்கேன் நீ கீழ போய் சாப்ட்டு வா”
காய்ச்சல் வேகத்திலும் வித்யாதரனின் கையை அவள் விடவேயில்லை. அவனும் விடுவித்து விலகவில்லை.
காய்ச்சல் தணிந்து, எங்கிருக்கிறோமென்ற தெளிவு வந்ததுமே யசோதை அடம்பிடித்துக்கொண்டிருந்தாள்.
“ஹாஸ்பிடல் வேணாம் வித்யா. ஊசி மட்டும் போட்டுட்டு இங்கிருந்து போலாம் ப்ளீஸ்”
“போலாம் யசோ நாளைக்கு இல்லைனா மறுநாள் போய்டலாம். உனக்கு உடம்பு கொஞ்சம் திடமாகட்டும். நான் தான் கூடவே இருக்கேன்ல. அமைதியா இரும்மா. சரியானதும் போய்டலாம்”
பெருமளவு தேற்றிச் சமாதானம் செய்து நலமாகும்மட்டும் மருத்துவமனையில் தங்கியிருக்க வைத்தான்.
அந்த சில நாட்கள் மருத்துவமனை வாசத்தில் யசோதை ஓரளவு தேறிவிட்டாள்.
உடல் பலகீனப்பட்டு இருந்தாலும் எழுந்து நிற்க நடக்க முடிந்தது. மருத்துவமையிலிருந்து வித்யாதரன் யசோதையை வீட்டிற்கு அழைத்துவரவில்லை. தங்கிக்கொள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தான். கெட்டதில் ஒரு நல்லதாக ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தது.
அது வித்யாதரனின் நெருக்கத்தை, அருகாமையை, தொடுகையை யசோதை பெரிதும் விரும்பினாள். அவனை ஒட்டி, அணைப்பில் உறங்குவது அவளுக்கு இதமாக இருந்தது.
அடுத்த நான்கே நாட்களுக்குள் வேறு வீடு பார்த்துவிட்டான் வித்யாதரன். யசோதையை ஹோட்டல் ரூமில் இருக்கச் செய்துவிட்டு வீட்டைக் காலி செய்து பொருட்களை எடுப்பது இடம் மாற்றுவது உட்பட எல்லாவற்றையும் முடித்தபின் புதிதாக வாடகைக்கு எடுத்த வீட்டிற்கே நேராக அவளை அழைத்துவந்தான்.
மேல் தளத்தில் ஓலைக்கூரை வேய்த வீடு.
இதுவும் ஒரே அறைதான் என்றாலும் அளவில் மும்மடங்கு பெரிது, தவிர அட்டாச்ட் பாத்ரூம் வசதியோடு. தனி அடுக்களையோடு. மேலே இந்த ஒரு வீடு மட்டும் தான். ஆனால் தண்ணீர் குடிக்க புழங்க கீழே போய்தான் எடுத்துவர வேண்டும்.
வாடகையும் முன்பிருந்த வீட்டினதை விட இருமடங்கு அதிகமே.
யசோதைக்கு தான் மனம் கேட்கவில்லை.
கையிருப்பு, பேங்க் பேலன்ஸ் மொத்தமும் துடைத்தெடுத்தாயிற்று.
இன்றைக்கு பால் காய்ச்சவும் நாளைக்கு கஞ்சி காய்ச்சவும் அளவே தான் கையிலிருக்கும் நிலையில் தான் அவர்கள் புதுவீடு நுழைந்திருப்பது.
” என்ன வித்யா இது. எற்கனவே ஹாஸ்பிடல் ஓட்டல்ன்னு நமக்கு ஏகப்பட்ட செலவு. இவ்வளவு வாடகையில் இந்த வீடு நமக்கு அதிகபடி சுமைதானே.”
மனசங்கடமும் வருத்தமுமாக நின்றவளை சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“உன்னைவிட உன் நலத்தை விட பெரிது எதுவுமில்லை யசோ. காசில்லாமல் போவதும் அதை சமாளிப்பதும் புதிதில்லை.
பரம பதத்தில் இப்போது சறுக்கல் நேரம் அவ்வளவே தான். ஒரு டீலிங் கிட்டதட்ட முடிகிற நிலையில் இருக்கு, ஒரு கட்டுமானத்திற்கு சப்ளை ஆர்டரும் இருக்கு. அப்புறமென்ன! கவலைப்பட ஒன்னுமே இல்லை. இதோ இப்படிங்கிறதுக்குள்ள சறுக்கலிலிருந்து மேலே ஏறி விடுவோம். வாடகையை சமாளிச்சிடலாம் சரிதானா! “
யசோதை சமாதானமாகவில்லை.
அவளுடைய வசதிக்காகவே தான் அவன் இப்படி ஒரு வீட்டை பார்த்துவைத்திருக்கிறான். இருமடங்கு செலவை மாதாமாதம் சமாளிப்பதென்பது அவனின் தொழில்வளர்ச்சி மூதலீட்டிற்காக சேமித்துக்கொண்டிருப்பதில் துண்டுவிழச்செய்யும்.
ஏற்கனவே அதிகப்படி செலவுகளை இழுத்து வைத்திருக்கிறாள். இப்பொழுது இதுவும் என்பது மனதிற்கு நெருட்டலாக இருந்தது.
தகுதிச்சான்றிதழ்களை பெருவதற்கான மேல்படிப்புகளை அப்புறம் பார்த்துக்கொள்வோம். இப்பொழுது அதிமுக்கியமானது வித்யாதரனின் பொருளாதாரச்சுமையை தன்னளவிற்கு பகிர்ந்து குறைப்பது.
எதாவது ஒரு வேலையை தேடியே ஆகவேண்டுமென முழுமுனைப்புடன் இருந்தாள் அவள்.
வித்யாதரன் விடவில்லை.
“இல்லை யசோ இப்போதைக்கு உனக்கு தேவை நல்ல சத்தான உணவும், உறக்கமும் ஓய்வும் தான். மற்றது எதுனாலும் அப்புறம் பார்த்துக்கலாம். நம்பு யசோ நம்மால் முடியும். “
புதுவீட்டுச்சூழல் சீக்கிரமே செட்டாகி விட்டது. கீழே ஹவ்ஸ் ஓனர் வீடு மட்டும்தான். பத்து வயது பெண் குழந்தையோடான மத்திய வயது தம்பதி. தானுண்டு தன் வேலைகளுண்டென இருப்பவர்கள்.
தமிழ் பேச அதிகம் வராததனால் தேவையானவற்றை தெரிந்தளவு தமிழோடு தெலுங்கு கலந்து உடைந்த ஆங்கிலத்தோடும் அளவாகத்தான் பேசுவார்கள்.
ரொம்பவும் நல்லவர்களென பார்த்த மாத்திரத்திலேயே யாசோதைக்கு தோன்றிவிட்டிருந்தது.
நல்ல தண்ணீர் வழக்கம் போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடித்தெடுத்துக்கொள்வதும் புழக்கத்திற்கான நீர் மோட்டர் போட்டு கீழே பைப்பில் பிடித்துக்கொள்ளலாம்.
முன்பிருந்த குடித்தனக்காரர்கள் நீரை மேலே சுமந்து எடுத்துப்போய் கொடுக்க ஆள் வைத்திருந்தார்களாம்.
வித்யாதரன் அதற்கொரு சுலப வழி செய்தான். பெரிய ஹோஸ் பைப்பும், பெரிய ப்ளாஸ்டிக் பேரல் ட்ரம்மும் வாங்கிவந்து மேலே வீட்டிற்கு முன் இருக்கும் வராண்டாவில் ட்ரம்மை வைத்து கீழிருந்தே தேவையான நீரை நிரப்பிக்கொள்வது.
வழக்கம் போல பால் பூத்திற்கு போய் டோக்கன் போட்டு பால் வாங்குவது முதற்கொண்டு வீட்டு வேலைகளை சேர்ந்தே செய்து மணி எட்டுக்குள் முடித்து வித்யாதரன் கிளம்பும்போதே யசோதையையும் கூடவே அழைத்துக்கொண்டு போய் அலுவலகத்தில், கேசவன் சாரின் நூலகத்தில் விட்டுவிட்டு வெளி வேலைகளை பார்க்கப்போவான்.
முன்பு போல அவளை தனியே வீட்டில் விட மனமில்லை அவனுக்கு.
புது வீட்டில் அவ்வளவு இடமிருந்தாலும் ஒரே படுக்கையாக விரித்து ஒன்றாக நெருங்கி படுத்திருப்பது நன்றாக இருந்தது.
அதுவும் அந்த ஐப்பசி அடைமழை நேரத்திற்கு. வெளியே அடர்ந்து பெய்கிற மழைக்கு இதமாக வித்யாதரனின் தழுவல் அவளுக்கு கணப்பிட்டது.
நாட்களின் நகர்வில் மெல்ல மெல்ல நெருக்கத்தின் அடர்வு கூடி முத்தங்களை தொட்டிருந்தன.
மலரிதழ்களைத்தொடுவது போன்று மென்மையாகத்தான் கையாண்டான் என்றாலும் யசோதை இயலாமல் விலகிவிட்டாள். அவளுக்கு மூச்சு திணறத்தொடங்கியது. உடல் நடுக்கமும்.
“வேண்டாம் யசோ பிறகு பார்த்துக்கொள்வோம்”
நீரைப் பருகச்செய்து தட்டிக்கொடுத்து அமைதிபடுத்தி உறங்கச்செய்தான்.
யசோதைக்கு வேலை கிடைத்துவிட்டது. ஒரு தனியார் கேட்டரிங் சர்வீஸில் அலுவலக மேலாண்மை பணி. வடபழனி ஏரியாவிற்கான லோக்கல் நியூஸ் பேப்பரில் பார்த்து தேடிக்கொண்ட வேலை.
ஊதியமும் கட்டி வரும் தொகையாக இருக்க, தூரமும் வீட்டிலிருந்து நான்கைந்து கிலோமீட்டர் அளவு தான்.
காலையில் வித்யாதரனோடு வந்து இறங்கிக்கொள்வாள்.
மாலை வீட்டிற்கு போகும் வழியில் மறுநாளைக்கு தேவையானவைகளை வாங்கி சேர்த்தபடியே நடராஜா சர்வீஸில் வீடடைந்துவிடுவாள்.
மாலைக்காற்றில் அம்மாதிரி பொறுமையாக வேடிக்கைபார்த்துக்கொண்டே நடப்பது நன்றாகவும் இருக்கும்.
யசோதையின் இந்நாட்கள் வெகு அழகானவை.
சாதரணமாக நிற்க பயம், நடக்க பயம், பேச பயம்,இன்னும் பயம் பயமென அத்தனை பயங்களை விட்டு வெளியேறி
அவளும் மற்ற மனித உயிர்களைப்போல இயல்பான மனித வாழ்கை வாழ்கிறாள். அதிலும் அவ்வளவு காதலை கொட்டிக்கொடுக்கும் வாழ்கைதுணையோடு.
மணவாழ்க்கையில் தீராத ஒரேயொரு வருத்தம் செக்ஸ் உறவில் ஈடுபடமுடியாமை..
விருப்பம் இருந்தும் எவ்வளவோ முயன்றும் அவளால் அதுமட்டும் முடியாததாகவே இருக்கிறது.
அவளுடைய ‘டென் டைம்ஸ் டெக்னிக்’ கூட இந்த விஷயத்தில் தொடர் தோல்வியில்தான் போய் முடிந்துகொண்டிருக்கிறது. பாவம் வித்யாதரன். அவனையும் சேர்த்து இந்த விசயத்தில் அவள் வறுத்தெடுக்கிறாள்.
அச்சங்களை வெல்லும் மற்ற முயற்சிகளில் அவள் தனியாகத்தான் ஈடுபட்டாள் என்பதால் அதன் தோல்விகள் சறுக்கல்கள் அவளை மட்டுமே பாதிப்பதாக இருந்தன. ஆனால் இது துணையோடு முயன்று பார்க்கும் விசயம்.
இதன் தோல்விகள்.. நன்கு உணர்ச்சிகளைத்தூண்டிவிட்ட நிலையில் வித்யாதரனை எந்த அளவிற்கு துன்புறுத்துமென்று யசோதைக்கு புரியாமலில்லை.
இது இவள் தெரிந்தே அவனுக்கு செய்கிற அநியாயம் என்கிற மனக்குத்தல் வேறு வாட்டியெடுக்கிறது.
அவனோ வெளியே எதையுமே காட்டிக்கொண்டதில்லை. ஒரு சின்ன முகச்சிடுக்கத்தை கூட அவளிடம் அவன் காட்டியதில்லை. அவளைத்தான் சமாதானம் செய்கிறான். என்றாலும் இது தொடர்கதையாக நீண்டுகொண்டே இருப்பது மட்டும் யசோதைக்கு பெரும் வருத்தம்.
அவனுக்குமே இது புதிதுதான் என்பதால் நிறைய தடுமாற்றங்களும் கூடவே இணுக்களவும் யசோதையை துன்புறுத்தி விடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வுமாக சேர்ந்து
படுக்கையில் கூடிக்கலவுவதென்பது படிக்காமல் தேர்வுக்கு போகிற பதட்டத்தை தரத்தான் செய்தது.
அத்தோடு அவனால் யசோதையை அவளின் மனக்கலவரங்களை இந்த விசயத்தில் அதிகம் புரிந்து கொள்ளமுடியாமலும் இருந்தது.
அன்றொருநாள் அவன் குளித்துவிட்டு வெளியே அறைக்கு வந்து ஆடை உடுத்த இடுப்பில் சுற்றியிருந்த டவலை உருவியிருந்தான்.
வெளி வரண்டாவிலிருக்கும் பேரலில் இருந்து தண்ணீர் முகர்வதற்காக கிட்சனிலிருந்து பாத்திரத்தோடு வெளியே வந்த யசோதை அவனை அந்த கோலத்தில் கண்டதுமே அலறலோடு பாத்திரத்தை கீழே போட்டுவிட்டு இரு காதுகளையும் கைகளால் பொத்தி கண்களையும் இறுக்கமூடியபடி அதே இடத்தில் அமர்ந்துவிட்டாள். அவள் உடலில் நீண்ட நேரம் நடுக்கம் நிற்கவேயில்லை.
வித்யாதரன் செய்வதறியாது பதறித்தான் போனான். இவ்வளவு நெருங்கிவிட்டபின்பும் அவனை ஆடைகளற்ற கோலத்தில் பார்ப்பது யசோதையை அதிரச்செய்யுமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
கிளம்பிப்போகிறவரை அவன் அதற்காக அவளிடம் திரும்பத்திரும்ப மன்னிப்பு கேடுக்கொண்டான்.
“இந்தமாதிரி என் முன்னே நிற்காதீங்க வித்யா ப்ளீஸ்” கெஞ்சலாக கேட்டுக்கொண்டாள்.
அன்றைக்கு பிறகு யசோதை மீண்டும் அவனருகில் நெருங்கிப்படுக்கவே வெகு நாட்கள் பிடித்தன.
யசோதை இராணிப்பேட்டையில் கோதை வீட்டு மாடியில் மகுடியோடு தங்கியிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அன்று பகல் பதினோரு மணியிருக்கும். மகுடி கீழே வேலையாக இருந்தாள். மாடி அறையை ஒட்டிய வேப்பமரக்கிளைகள் அடர்ந்திருந்த நிழலடியில் தரையிலமர்ந்து யசோதை கால் நகங்களை வெட்டி சீராக்கிக்கொண்டிருந்தாள்.
கோதை வீட்டையொட்டிய பக்கத்து வீட்டின் சிட்டவ்ட்டிலிருந்து ஒருவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் இருந்தான்.
ஒருதரம் நிமிர்ந்து பார்த்த யசோதை அதன் பிறகு அவனை கண்டுகொள்ளவேயில்லை. தன்பாட்டிற்கு நகங்களில் கவனமாக இருந்தாள்.
அவன் விடுவதாயில்லை. விசிலடிப்பை நிறுத்திவிட்டு “ஹல்லோ என்ன வெக்கமா, பார்க்க மாட்டியா..” இன்னும் எதேதோ பேசிக்கொண்டே போனான்.
பயந்து அவள் எழுந்து போய்விட்டால் இவனுக்கு அது தொக்காகிவிடும்.
யசோதை அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்தாள். அவனோ அவனின் உறுப்பை வெளியே எடுத்து ஆட்டிக்காட்டினான்.
சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சியும் அருவருப்பும் மேலிட யசோதை எழுந்தோடிப்போய் குமட்டி குமட்டி வாந்தியெடுத்தாள். பின்னும் குமட்டல் உணர்வு நிற்கவேயில்லை. அயர்ந்து போய் அரை மயக்கத்தோடு சுவரில் சாய்ந்து கிடந்தாள்.
எஸ்ஹிபிஷனிசம் எனும் மனநோய் பிடித்தவர்களே இப்படி இவனைப்போல் கூசாமல் சம்பந்தமேயில்லாத அடுத்த பெண்களிடம் வலுக்கட்டாயமாக உடல் உறுப்பை திறந்து காட்டுபவர்கள் என்பது அறிந்தே இருந்தும் யசோதையால் எளிதில் அதை கடந்து மறந்து வேறு வேலைகளை பார்க்கவே முடியவில்லை. அருவருப்பு உணர்வு அவளை வீட்டு நீங்காமல், குமட்டலும் நிற்காமல், ஒரு கவளம் உணவைக்கூட வாயிலெடுத்து வைத்து உண்ண முடியாமல் அடுத்த சில நாட்கள் வெகுபாடு பட்டுவிட்டாள்.
மனதிற்கொவ்வாத இந்த உணர்வு அடுத்த அந்நிய ஆண்களிடம் தான் உண்டாகிறதென்றால், அவளின் அன்புக்குரிய வித்யாதரனிடமும் ஏன்!!
ஒருவரை ஒருவர் பார்த்திடமுடியாத இரவின் இருளுக்குள் தான் யசோதைக்கு தொடு உறவை இயைந்து ஏற்பதை முயற்சிக்கக்கூட முடிந்தது.
முத்தங்களிலிருந்து முன்னேறி மெல்ல முன்விளையாட்டுகளைத்தொட்டு அங்கிருந்து நகர முடியாமல் இன்றுவரை தொக்கி நிற்கிறது.
இப்படி விஷயங்களையெல்லாம் வெளிப்படையாக பேசி கலந்தாலோசிக்க நெருங்கிய நட்பு வட்டம் யசோதைக்கும் இல்லை. வித்யாதரனுக்குமே இல்லை.
மார்கெட்டிலிருந்து சில செக்ஸ் சம்பந்தப்பட்ட, கிளர்ச்சியூட்டும் புத்தகங்கள் சிலது வாங்கிவந்தான். என்னதான் தியரிட்டிக்கலாக படித்து தெரித்துகொண்டாலும் அதை ப்ராக்டிக்கலாக நடத்திப்பார்ப்பது போர்கள போராட்டமாகவே இருந்தது. அதுவும் அந்த குவிந்த இருளில்.
தேங்காயெண்ணெய் உபயோகித்து முதற்கொண்டு பல பதற்றமான பரிசோதைனை முயற்சிகளும் அவளுக்கு வலியும் அவனுக்கு எழுச்சி மட்டுப்படுதலுமாகவே தொடர..
பெரும் முயற்சிகளையும் அதனை விட பெரும் தோல்விகளையும் கண்டுகொண்டிருந்த இரவுகள்.
அன்றின் மாலை அலுவல் இடத்திற்கு வந்து தானே அழைத்துக்கொள்வதாக யசோதைக்கு போனில் சொலியிருந்தபடி வந்து அழைத்துக்கொண்டான் வித்யாதரன்.
பைக் பயணத்தில் அவனை குடைந்து கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
“எங்க போறோம் வித்யா!”
“எதுக்காக நாம பெசண்ட் நகர் போறோம்!”
“வா சொல்றேன்”
அவன் அழைத்துப்போனதோ ரோட்டோரமிருக்கும் ஒரு குட்டிச்சுவர். ‘இங்க உட்கார்ந்திரு யசோ, இதோ வரேன்’ என்றவன் அருகிலிருந்த
ஐஸ்கீரீம் பார்லருக்குள் போய் ஆளுக்கொரு கோன் ஐஸ்கிரீம் வாங்கிவந்து அவளிடம் ஒன்றை கொடுத்தபடி அந்த குட்டிச்சுவரில் தானும் ஏறி அமர்ந்தான்.
“எதுக்காம்! நாம இங்க வந்து உட்கார்ந்திருக்கோம்”.
“சும்மாதான் போறவரவங்கள வேடிக்கை பார்க்கிறதுக்கு.”
“ஹ்ம்ம், காலேஜ் டேஸ்ல ரோட் ரோமியோஸ் குட்டிச்சுவத்தில உட்கார்ந்து போற வர பொண்ணுங்கள சைட் அடிச்சிட்ருப்பானுங்க.
இப்படி பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து பக்கத்தில உட்காரவச்சுக்கிட்டு சைட் அடிக்கிற ஆள நான் இப்பத்தான்யா பார்க்கிறேன்.”
வித்யாதரன் சிரித்தான்.
இப்படி இந்த சிரித்த முகக்கோலத்துடன் மகளையும் மருமகனையும் பார்த்த கண்கள் பூரித்து வந்து நின்றவள் யசோதையின் தாய் காயத்திரி.
அம்மாவைக்கண்டதும் யசோதைக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. துள்ளி இறங்கி கட்டிக்கொண்டாள்.
இது தான் முதல் முறை தாயை அவள் இப்படி கட்டிக்கொள்வது. காயத்திரிக்கும் பேச்சே எழவில்லை.
கண்ணீரும் சிரிப்புமாய் மகளை தலையில் கன்னத்தில் வருடிக்கொண்டிருந்தாள்.
இருவரையும் ஐஸ்கிரீம் பார்லருக்குள் அழைத்துச்சென்று பேசிக்கொண்டிருக்கச்சொல்லி வெளியே நின்றான் வித்யாதரன்.
யசோதைக்கு அம்மாவிடம் பேசிப்பேசி செல்லம் கொஞ்சி தீரவில்லை.
“இதெல்லாம் உன் தாத்தன். என் அப்பா என் கல்யாணத்தப்ப போட்டது கண்ணு. உனக்கு தரனும்ன்னு தான் வச்சிருந்தேன்.
இனி எனக்கு பேத்தி பிறந்ததும் நீ தந்துக்க”
காயத்திரி மகளின் கழுத்தில் ஒரு நெல்லிக்காய் மாலையையும் கைகளில் வளைவிகளையும் போட்டுவிட்டாள்.
“உனக்கு பிடிச்சு நீ தைச்சுக்கிட்ட இந்த நாலு ட்ரஸ்ஸ மட்டும் தனியா எடுத்து வச்சிருந்தேன்” என்றொரு பையையும் மகளிடம் தந்தாள்.
“ஏம்மா, அப்பா சுமி அக்காவோடதெல்லாம் எரிச்சமாதிரி என்னோடதெல்லாத்தையும் தீயில போட்டுட்டாரா!?”
காயத்திரி இல்லையென்று தலையாட்டினாள். உன் அண்ணன் உன் எல்லா துணிமணியும் கொண்டுபோய் எதோ ஆசிரமத்துக்கு தந்துட்டான்.”
“எனக்கு தெரிஞ்சு அண்ணன் அவன் வாழ்நாள்ல இதைத்தான் உருப்படியான காரியமா செஞ்சிருக்கான். யாரோ போட்டுக்க உபயோகபடுதே. ”
“நம்ம வீட்ட விற்க ஏற்பாடாயிடுச்சு பாப்பா. சாமான்களையெல்லாம் கட்டி திருச்சி வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனி நானும் உன் அப்பாவும் அங்க தான். உன் அண்ணன் டெல்லிக்கு மாற்றல் வாங்கிட்டு போய்ட்டான்.
வீட்ட ஒழிச்சுக்கொடுக்கிறவரை இந்த ஒருவாரத்துக்கு இங்கே உன் சின்ன அத்தை வீட்டில் தங்கியிருக்கோம் கண்ணு. இனி உன்னை இதுக்கப்புறம் பார்க்க முடியுமான்னு தெரியலைநீங்க பார்த்துக்கங்க மாப்பிள்ளை.” என்றாள் மருமகனிடம்
யசோதை மீண்டும் தாயைக்கட்டிக்கொண்டாள்.
“இதோ இங்கிருக்க திருச்சிதானே அத்தை. அடிக்கடி பார்க்கலாம். அங்கவந்து எங்காவதும் ஒளிஞ்சு நின்று பார்த்தாவதும் யசோ உங்கள் கண்ணில் பட்டுக்கிட்டே இருப்பா அத்தை. யசோவை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். உங்களையும் நீங்க பார்த்துக்கங்க. உங்க ஆசிர்வாதத்தோட நாங்க இரண்டுபேரும் நல்லா இருப்போம்..”