நெடுநல் அத்தியாயம் -3

1
496

அவளுடைய  ஒரு பொட்டு வாழ்க்கைக்குள் நிறைகடல் இந்த நிமிடங்கள். 

அடித்துக்கொட்டி ஓயாமல் பொழிந்துகொண்டிருந்த அடர்மழையின் சாரல்  அவளை நனைத்துக்கொண்டிருந்தது.  

யன்னல்திட்டில் முழந்தாழிட்டமர்ந்து கம்பிகளின் மீது சாய்ந்து கண்களை மூடி தன் மீது தூவலாய் விழும் சாரல் மழையை ரசித்து  அனுபவித்துக்கொண்டிருந்தாள். 

இந்த வீட்டில் யசோதைக்குப்பிடித்த ஒரே இடமும் அதிசுதந்திரமான இடமும் இதுவே..இவளின் அறையின் இந்த யன்னல்திட்டுப்பகுதி. 

இங்கிருந்து காண்பதற்கு பெரிதாய் காட்சிகள் இருக்காதுதான். நீல ஆகாயமும் எதிரேயொரு காலி மனையில் புதர் மண்டல்களுக்கு நடுவே குழித்தேங்கல் நீரில் விளையாட வரும் சில பறவைகளும் தான் கண்ணில் படுவதெல்லாம். 

யன்னல் திட்டிலமர்ந்து கம்பிகளை பிடித்துக்கொண்டு அவைகளைத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். 

யசோதைக்கு சமயங்களில் ஒரு ஜெயில் கைதியைப்போல  சிறைக்குள்ளிருந்து கம்பிகளின் வழியே வெளியே பார்ப்பதுபோல் தோன்றும். 

உண்மையிலேயே  சிறைதான்.  இந்த வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்ற இவளுக்கு இந்த யன்னலுக்கு வெளியே காணக்கிடைப்பது மட்டுமே வெளி உலகம். 

இதோ இவ்வளவு மழைக்கு வெளிவாசலைத்திறந்து கொண்டு போய் நின்று முழுவதுமாக நனைந்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 

முன்கதவு எப்போதும் சாத்தப்பட்டேதான் இருக்கும். திறந்துவைத்தால் அப்பாவிற்கு பிடிக்காது. திறந்துவைத்துக்கொண்டு வெளியே நிற்பதேது!? 

மொட்டைமாடிக்கு போகிற வழித்தடத்தை ஒட்டியிருப்பது அண்ணனின் அறை.   

இவள் அந்தப்பக்கம் போனாலே அவனுக்குப்பிடிக்காது. “ஏய் என்னடி இங்க வந்து நிக்கிற. உள்ள போ” என்று அண்ணன் வெறும் வாய்வார்த்தையாக மட்டுமா சொல்லுவான்! நறுக்கென்று தலையில் ஒரு கொட்டும் வைப்பான். 

இன்றைக்கு அப்பாவிடம் திட்டுவாங்கிவிடக்கூடாது.. அண்ணனிடம் அடிவாங்கிவிடக்கூடாதென்கிற வேண்டுதலோடுதான் இவளுக்கு ஒவ்வொருநாளும் விடியும். 

யசோதை பள்ளிக்கும் கல்லூரிக்கும் துள்ளிக்கொண்டு போனது இந்த வீட்டை விட்டு  கொஞ்ச நேரம் வெளியே இருக்கவாய்க்கிறதே.. 

ஆனால் அதிலும் விழுந்தது மண்.

“படிச்சு பட்டம் வாங்கியாச்சு அவ்வளவு தான் கொண்டு போய் துணி அலமாரிக்குள் வைத்துவிட்டு அம்மாவோட கூடமாட வேலை செஞ்சு கத்துக்கப் பழகு. 

பொண்ணு மேல படிக்குதாம், வேலைக்கு போய் பார்க்குதாம். கன்னத்தில வச்சு ஒரு அப்பு அப்பினா தெரியும். இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா தான் ஒரு வருசத்துக்குள்ள முடியும். 

வீட்டோட இருந்து வேணுங்கிறத படிச்சுக்க. காலாகாலத்தில ஆகவேண்டியத பார்க்கலாம்” 

எந்நேரமும் புத்தகமும் கையுமாக திரிந்தவள் யசோதை. 

ஆனால் அவளின்  ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதென்றும், கல்யாணச்சந்தையில் அவள் விலை போகும் போது பெருமைக்கு காட்டிக்கொள்ள மட்டுமே பட்டச் சான்றிதழ் என்பதும் அவளின் வீட்டினர் முடிவு. 

அவளுடைய சொந்த வாழ்கையை, எதிர்காலத்தை அவள் விரும்பும்படி  சுயமாக அமைத்துக்கொள்ள அவளுக்கு உரிமை இருக்கவில்லை. 

அதை இருட்டடிப்பு செய்வதோ, அன்றி வெள்ளையடிப்பதோ அடுத்தவர் கையில். 

யசோதைக்கு கோபமும் ஆற்றாமையுமாக வெதும்பியது மனம். 

இதோ இன்னும் நாலே வருஷங்கள் ஊர் உலகமே இரண்டாயிரமாம் வருஷத்தை தொட்டுவிடும். ஆனால் இந்த வீடு மட்டும் கற்காலத்தை தாண்டவே போவதில்லை. 

முன்னெல்லாம் இந்த காலண்டரில் எல்லா நாட்களும் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் அதை செய்யணும் இதை செய்யணுமென  நாளுக்கொன்றை அடைப்புக்க்குறி போட்டு  எழுதி நிறைத்திருப்பாள். 

“இவ நல்லா படிக்கிற பொண்ணு” பாராட்டுதலோடும் பட்டத்தோடும் உயரத்தில் வைத்து பார்க்கப்படுவதை அவ்வளவு விரும்பியவள்..  

பரிட்சை நேரத்திற்கெல்லாம் அன்னந்தண்ணி உறக்கமெல்லாம் பார்க்காமல் விழுந்து விழுந்து படித்துக்கொண்டே மட்டுமிருந்தவளை…

இப்பல்லாம் யார்சார் பத்து பன்னிரண்டு படிச்ச பொண்ணுங்கள வேணும்ன்னு கேக்கிறாங்க. டிகிரி படிச்ச பொண்ணுக்கு தான் மவுஸென எதோ அப்பாவிற்கு தெரிந்த கல்யாண ப்ரோக்கர் சொன்னதன் புண்ணியத்தில் தான் அவள் கல்லூரி வாசலையே எட்டியிருக்கிறாளாம். 

“இந்த மட்டுமாவது உங்களையெல்லாம் படிக்க வெளியே அனுப்பினாரே.. உங்கப்பா. கூட பிறந்த மூனு தங்கச்சிகளும் இன்னைக்கும் புலம்புவாங்க. வயசுக்கு வந்த கையோட படிப்பெல்லாம் மூட்டகட்டி வைக்க சொல்லி, பதினெட்டு முடியறதுக்குள்ளேயே கல்யாணமும் கட்டி கொடுத்து அனுப்பிருக்காங்க உன் பாட்டியும் தாத்தனும். இப்படி முகத்தை தூக்கி மோட்டுவளைக்கு வச்சுக்காம சிரிச்சமாதிரி இரு பாப்பா” என்றாள் அம்மா.

வெத்துக்கு மோட்டு வளையை வெறித்துக்கொண்டு, குட்டிபோட்ட பூனையாட்டம் எத்தனை நாள் தான் வீட்டுக்குள் சுற்றிவந்து அடைந்து கிடப்பது. 

நண்பர்கள் வீட்டுக்கு போவது, ஊர் சுற்றுவதெல்லாம் அவளுக்கு ஏது! பள்ளியிலும் சரி, கல்லூரிக்கும் சரி கொண்டு விடுவதும், வந்து அழைத்து போவதும் அண்ணனோ அப்பாவோதான். மற்றபடி வீட்டு சிறைப்பறவை தான். 

அடைத்து அடைத்து வைத்தால் ஒரு நாள் வெடித்துக்கொண்டு சிதறுமென்று இந்த வீட்டு மனிதர்களுக்கு தெரியமாட்டேனென்கிறது. 

சமயத்தில் பேசாமல் இந்த வீட்டை விட்டு ஓடிவிடுவோமா என்றெல்லாம் தோணும். அந்தளவு தைரியமின்மையால் அந்த யோசனையை அடிக்கடி கைவிடுவாள். 

வெள்ளிக்கிழமை மாலைகளில் அவளின் அம்மா காயத்ரி கோவிலுக்கு போவாள். அவளோடு கூடவே தொற்றிக்கொண்டு போவது தான் இப்போது  யசோதைக்கு வாய்க்கும் வெளிக்காற்று உலா. 

அப்படிபோகும் போதுதான் மூன்று தெருக்களுக்கு  அப்பால் ஒரு தையல்கலை பயிற்சி வகுப்பு மையமிருப்பது யசோதாவிற்கு கண்ணில் பட்டது. 

“துணிமணிக்கு ஒட்டுத்தையல் போடவோ, ஓரம் அடிக்க, பிடிச்சு தைக்கன்னு, வெளிய கொடுத்திட்டு நிக்கவேணாம். தையல கத்துக்கிட்டா வீட்லயே வச்சு செஞ்சுக்கலாம். இதுவும் வீட்டு வேலைகள கத்துக்கிறதுல சேர்த்தி தான்”

அம்மாவிடம் நைச்சியம் பண்ணி அப்பாவிடம் இதை சொல்ல வைத்து அனுமதி வாங்கி அந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தாள். 

பயிற்சி வகுப்பையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்த பின் அவளை அங்கே கொண்டு சேர்த்தவன் அண்ணன். 

மையம் வெறும் நடை தூரத்தில் என்பதாலும் வகுப்பு தொடங்குவது மாலை நான்கு மணிக்கு..அந்த நேரத்தில் அண்ணனோ அப்பாவோ வீட்டில் இருக்க வாய்ப்பில்லை என்பதால் நல்லவேளையாக அவள் தனியே போய் வர அனுமதிக்கப்பட்டாள். 

அந்நேரம் பெரும்பாலும் வீதி காலியாகத்தான் கிடக்கும். முழு வீதியையும் சொந்தம் கொண்டாடி ஒரு துள்ளல் நடையோடு வாரத்தின் மூன்று நாட்களும்  தையல் வகுப்புக்கு போய் வருவாள். வீதியில் இப்படி தன்னந்தனியே நடக்க வாய்த்திருக்கிறதே..! குறைந்தபட்சம் வெளி உலக வாசிகளை பார்க்கவும் பேசவும் பழகவும் அந்த ஒரு மணி நேர அவகாசமாவது  கிட்டுகிறதே…!  

அன்று அவள் வாரத்தின் முதல் தையல் வகுப்புக்கு போன போது வெள்ளி வரை விடுமுறை என்று அறிவிப்புடன் கதவு பூட்டப்பட்டிருந்தது. இந்த வாரத்தின் மூன்று வகுப்புகளும் இல்லை. சுத்த போர். வேறு வழி! அடைந்துகிடந்து காத்திருக்கவேண்டியதுதான்.

 திரும்பவும் படி இறங்கி கீழே வந்தவள் ஒரு கணம் நிதானித்தாள். 

 இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது வீட்டுக்கு போவதா! இல்லை இந்த தெருக்களில் ஒரு சுற்றுச்சுற்றி வந்து பார்ப்போமா! 

இரண்டாவதை செய்து பார்த்துவிட முடிவெடுத்தவள் மெல்ல நடந்து ஒவ்வொரு வீடுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு வீதிக்குள்ளும் புகுந்து வெளிவந்தாள். ஐந்தாறு வீதிகளைத்தாண்டியதும் முக்கியச்சாலைக்கு திரும்புகிற கிளைச்சாலை வந்துவிட்டிருந்தது. யசோதைக்கு அதுவரை இல்லாததொரு பதட்டம் வந்து தொற்றிக்கொண்டது.  ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும் வீதிகளைப்போல்  அல்லாமல் இந்த கிளைச்சாலையானது கடைகளையும் ஆட்களின்  நடமாட்டத்தை  அதிகமும் கொண்டிருந்தது.

அதற்கு மேல் போக துணிவில்லை. திரும்பி வந்தவழியே போய்விட நினைத்தபோதுதான் அவள் பார்வையில் பட்டது ஒரு லெண்டிங் லைப்ரரி. 

யசோதைக்கு மனம் துள்ளி விட்டது. புத்தகங்கள் வாசிக்கிற வாய்ப்பு தான் கல்லூரியோடு அவளுக்கு முடிந்துவிட்டிருந்ததே..!

 வீட்டில் செய்தித்தாள்கள் வாங்கப்படும். மற்றபடி வார மாதப் பத்திரிக்கைகள் வாசிக்கக்கூட வழி கிடையாது. 

“உள்ளேவந்து பார்க்கலாமா!” 

“தாராளமாய். அதற்குதானேம்மா கடைவிரித்து வைத்திருக்கேன். வேண்டிய புத்தகங்களை பார்த்து எடுக்கலாம்” என்றார் பெரியவர். 

“இல்லை,வந்து.. நான் புத்தகங்கள் எதுவும் வாடகைக்கு எடுத்து போகமாட்டேன். ஆனாலும் பார்க்கமுடியுமா!?”

“பாரும்மா, பிரச்சனையில்லை வா வந்து பார்..”

நகைமுகத்தோடு பெரியவருக்கு நன்றி சொல்லி உள்ளே வந்த யசோதைக்கு கண்களும் கைகளும் போதவில்லை. அவ்வளவு புத்தகங்கள்!! 

மூன்று பக்கச் சுவர்களிலும். 

ஆசையாசையாக ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்தெடுத்து, அந்த பழைய புத்தக வாசனையை நாசி நிறைய நுகர்ந்து,  இரண்டொரு பக்கங்கள் வாசித்தென.. 

பசித்தவனுக்கு முன்னால் பரிமாறப்பட்ட விருந்தில் எதை முதலில் உண்பதென்ற  திணறலோடு புத்தக அடுக்குகளுக்கு நடுவே சுற்றி வந்தாள். 

அன்றிரவு உறக்கத்தில், கனவில்  கூட குவியல் குவியலாய் புத்தகங்களே…

நெடுநல் தொடரும்..

1 COMMENT

  1. கைப்பிடித்து அழைத்துப் போகும் மொழி. உணர்வுகளின் துல்லிய விவரிப்பு. தொடர்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here