நெடுநல் அத்தியாயம் -30

0
248

வாழ்வில் ‘முதன்முறையாக’ எனும் பதத்திற்கு இருக்கும் கிக்கே தனிதான். அதற்கு ஈடு இணையே கிடையாது. 

அது முதுகுதண்டிலிருந்து உச்சந்தலைக்கு ஊடுருவிப் பரவும் ஜில்லிப்பு. 

யசோதை வீட்டை விட்டு ஓடிவந்ததும், வித்யாதரனோடு வாழ்வை பிணைத்துக்கொண்டதுமான இந்த இரண்டு  வருடங்களில்  அப்படி அனுபவித்துப்பார்த்த ‘முதன் முறை’ அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை!  

வேலைக்கு சேர்ந்து சுயமாக சம்பாதித்து ஈட்டிய அவளின் முதல் ஊதியத்தைக்  கையில் வாங்கியதும் கிடைத்த அந்த பரவச அனுபவத்தை இவள் வாழ்நாள் முழுக்க மறந்திடமாட்டாள். 

சொந்தமாக பணம் ஈட்ட கற்பதென்பது ஒரு நிமிர்வு,பெரும் தன்னம்பிக்கை. அதை அடைவது அவளது இலட்சியக்கனவாக இருந்ததே.. இன்னமும் கூட அந்த முதல் சம்பளப் பணத்திலிருந்து ஒற்றை ரூபாயைக்கூட எடுத்து செலவு செய்யாமல் பத்திரமாக வைத்திருக்கிறாள். 

இன்றோடு இவள் இந்த சுவை அன்னம் கேட்டரிங் நிறுவனத்தில்  பணிக்குச்  சேர்ந்து ஒன்றரை  வருடங்களாகிறது. இந்த மாதத்தோடு வேலையிலிருந்து நின்று கொள்ளவும் போகிறாள். 

இவ்வளவு நாட்களும்  இவள் இங்கே வெறும் ஊதியத்திற்காக வேலை பார்பவளாக மட்டுமே ஒரு நாளும் நடத்தப்பட்டதேயில்லை. 

நிறுவனத்தில் ஒரு அங்கத்தினளாக,அவ்வளவு ஏன்! குடும்பத்தில் ஒருத்தி போலத்தான் நடத்தினார்கள் ரங்கநாதன் துளசி தம்பதியர். 

இவளை மட்டுமல்ல அங்கே வேலைபார்த்த எல்லோரையுமே உரிமைக்கண்டிப்பும் கனிவும் அன்புமாகத்தான் இருவருமே நடத்துவார்கள். எல்லோருமே அண்ணன் அண்ணி என்று உறவிட்டுத்தான் அவர்களை அழைப்பதே.

“பாண்டிமா கீழ போய் கிட்சனுக்கு இன்னைக்கு எடுத்த பொருட்களெல்லாம் என்னென்னங்கிற லிஸ்ட வாங்கிட்டு வாங்க. அதுக்கு அப்புறம் நாம ஸ்டோர் ரூம் ஸ்டாக்க பார்க்கப்போலாம்.”  என்று பணித்துக்கொண்டிருந்தவளிடம் 

“இந்தா இது நெஞ்செலும்பு சூப். முதல்ல உட்கார்ந்து  இதக்குடிச்சு முடி. அப்புறம் ஸ்டோர் ரும் வேலையைப்பார்க்க போய்கலாம்” என்றபடி தந்தாள் துளசி. 

“என்ன அண்ணி இது! இப்படி நான் அடுத்தடுத்து எதையாவது சாப்ட்டு குடிச்சிட்டே இருந்தேன்னு வைங்க.  அப்புறம் கடோத்கஜினி தான். இப்பவே இரண்டு மடங்கு ஊதிட்டேன் பாருங்க. 

இனி  நீங்க என்னை ஆட்டோவில வீட்டுக்கு அனுப்ப முடியாது. நம்ம ட்ரக்கத்தான் அனுப்பவேண்டியிருக்கும்.”

“நீ சாப்பிட்டு கிழிக்கிற இலட்சனம் எங்களுக்கு தெரியாதாக்கும். இது  புள்ளதாய்ச்சி பூரிப்பு.

இரண்டு உயிரா இருக்கும் போது உனக்கு மட்டுமா சாப்பிட்ற!. 

சாப்டக்கூட குடுக்காம என் அம்மாவ  வேலை வாங்கிறியான்னு உன் புள்ள பொறந்து வந்து எங்கிட்ட சண்டப்பிடிக்கவா!?” 

யசோதைக்கு இது எட்டாவது மாதம். கருத்தரித்த நாளில் இருந்து..மசக்கை சோர்வில் கிடந்தப்போது யசோதைக்கு அம்மா பக்கத்தில் இல்லாத  ஏக்கத்தை தீர்த்கிறளவு கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டவள் துளசி அண்ணிதான். 

இவளுக்கு வாய்க்குருசியாக நல்ல புளிப்புசுவையுடனும், காரசாரமாகவும், இனிப்பு பண்டங்களென்றும்  எதையாவது மாற்றி மாற்றி  செய்து உண்ணக்கொடுத்துக்கொண்டேயிருப்பாள். 

மாதங்கள் கூடக்கூட யசோதைக்கு அமர்ந்து வேலை செய்ய முடியாதபடி  முதுகு வலி, கால்கள் மரத்துப்போவது மாதிரி உபாதைகளும் கூடிப்போயின… 

இலகுவாக சாய்ந்து அமர்ந்துகொள்ள குஷன் வைத்த சாய்வு இருக்கை வாங்கி வைத்தார்கள். யார் செய்வார்கள் இவ்வளவெல்லாம்..!

யசோதையை அலுங்காமல் தினமும் வீட்டில் கொண்டுவிடுவதற்கு கூட நிறுவன ஆட்டோவை அனுப்புகிறார்கள். 

வித்யாதரனுக்கும் யசோதைக்கும் எதையும் எடுத்துச்செய்ய உறவுகளற்றவர்கள்ளென்பது தெரிந்து ஏழாம்  மாதத்தில் யசோதைக்கு பட்டுச்சேலை வாங்கிக்கொடுத்து உடுத்தவைத்து எல்லோரையும் கூட்டி வைத்து, சபையிலமர்த்தி சந்தனம் பூசி, திலகமிட்டு கை நிறைய வளையல்களை அடுக்கி, ஏழு வகை வளைக்காப்புச் சோறு செய்து  தந்து, அவளை அந்த கோலத்தில் நிறைய போட்டோக்கள் எடுத்துத்தந்து..

 யசோதைக்கு மனம் நெகிழ்ந்த ஆனந்த பெருக்கில் கண்கள் கூட நிரம்பிவிட்டன. 

ஒட்டா! உறவா! இரத்த பந்தம் கூட இல்லாத இந்த மனிதர்களின் அன்பையெல்லாம் கிடைக்கபெற்ற யசோதை தான் என்னமாதிரியானதொரு அதிர்ஷ்டசாலி.  

வீட்டிலும் தான் அம்மாதிரி ஹவ்ஸ் ஓனர் வாய்ப்பதெல்லாம் வரம். பேரலில் இருந்து தண்ணீரை குனிந்து  நிமிர்ந்து தூக்கிச் சுமந்தெல்லாம் இவள் சிரமப்படவேண்டியிறாமல் பைப் போட்டு தந்தார்கள். 

ஆவக்காய், மாங்காய், கோங்கிராத் தொக்கு என அவங்க பக்கத்து ஸ்பெசல் ஐட்டங்கள்  எதையாவது கிட்டதட்ட தினமுமே உண்ணக்கொண்டுவந்து தருவார்கள். 

குடி வந்து ஒரு வருடம் ஆகிறதென்றால் எல்லா வாடகை வீடுகளுக்கும் வாடகைத்தொகையை ஏற்றுவதுதான் நடப்பு. இவர்களோ குடிவந்த ஒரு சில மாதங்களிலேயே வாடகையை குறைத்துக்கொண்டார்கள். 

அவர்களுக்கு ஒரு துணையாக இருக்கட்டுமென்றுதான் மேலே இந்த குடிலை எழுப்பி வாடகைக்கு தந்தார்களாம். வித்யாதரன் யசோதையை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்தும் இருக்கிறது. 

எங்களுக்கு நீங்க துணை உங்களுக்கு நாங்க துணை இங்கேயே இருங்கள் என்றார் ஹவ்ஸ் ஓனர். 

வித்யாதரனோ  யசோதையை சும்மாவே தாங்கு தாங்கென்று தாங்குபவன். 

அவள் ஈறுயிற் ஆனபின் கேட்கவே வேணாம். 

இவளை துணிகள் துவைக்க அவன் விடுவதே இல்லை. எவ்வளவு சொன்னாலும் பிடிவாதமாக கேட்காமல் காலையில் குளிக்கும் முன்னரே இருவர் துணிகளையும் துவைத்து விடுவான். 

இவளை அதிக நேரம் அடுக்களையில் நின்று வேலை செய்ய விடுவதில்லை. 

மாலையில் சீக்கிரமே வீட்டிற்கு வர பெருமளவு முயல்வான். 

 சாதம் மிஞ்சியிருந்தால் நீர் விட்டு மறுநாள் காலையில் அவன் உண்பானேயொழிய ஆறிப்போன உணவை இவளை உண்ணவிடவே மாட்டான். 

சப்பாத்தியோ இல்லை முறுகலாக தோசையோ போட்டுத்தந்து தான் உண்ணவைப்பான். 

வெளி வேலைகளுக்கும் அலைந்துவிட்டு வந்து வீட்டிலும் இவ்வளவு வேலைகளை நீங்க மட்டும் செய்வதை பார்க்க எனக்கு சங்கடமா இருக்கு வித்யா என்றாலும் கேட்டால்தானே..

அவளுக்கு அமர்ந்து குளிக்க ஒரு ஸ்டூலும், அமர்ந்துகொள்ள இரு ப்ளாஸ்டிக் நாற்காலிகளும், 

தரையில் உறங்கலாகாதென மெத்தையோடு ஒரு இரும்பு கட்டிலையும் வாங்கிவிட்டிருந்தான். 

வைத்து உண்ண ஒரு மர பெஞ்சும் கூட தட்டிக்கொட்டிச்  செய்து பெயிண்ட் அடித்து கொண்டுவந்து வைத்தான். 

தினமும் காலையில் பால் வாங்குகிற நேரத்திற்கு ஒரு தரமும், இரவுணவிற்கு பின் ஒரு தரமும் வாக்கிங் அழைத்துப்போனான். 

மறக்காமல் அவள் உண்ணவேண்டிய மாத்திரைகளை எடுத்துக்கொடுத்து, பழமும் பாலும் தந்து,இரவு படுக்கப்போகும் முன் அவளுடைய மரத்துப்போகிற, வீக்கம் காணுகிற கால்களை சுடுதண்ணீர் ஊற்றிய பேசினுக்குள் அமிழ்த்திவைத்து, பின் பாதங்களுக்கு தேங்காயெண்ணெய் தேய்த்துவிடுவதெல்லாம்…

அப்படியிருந்தும் சில இரவுகளில் பாதி உறக்கத்தில் இவள் புரண்டு படுக்கும்போது கால் நரம்புகள் சுண்டி இழுப்பதுபோல் பிடித்துக்கொள்ளும்.  

அம்மா என்று இவள் அலற வித்யாதரன் எழுந்து கால்களை விரல்களை பாதங்களை பிடித்துவிட்டு நீவித்தருவான். 

அம்மாவிற்கு ஏங்கிவிடக்கூடதென்று இத்தோடு  நான்கு முறை திருச்சிக்கு அழைத்துப்போயிருந்தான் வித்யாதரன். கோயிலில் வைத்து பார்த்து பாசம் கொஞ்சி சீராடிவிட்டுவருவாள். ஒவ்வொருமுறையும் நான்கு கைகளும் சுமக்க நிறைக்க எதாவது செய்துகொடுத்தனுப்புவாள் அம்மா. 

ஆறு மாதங்களாகும் போது “ இனி இவ்வளவு தூரமெல்லாம் அலைச்சல்  வேண்டாம் பாப்பா. அங்கேயே இருங்கள். பத்ரம். அம்மாதான் போனில் பேசுகிறேனே” என்றுவிட்டாள். 

யசோதையை சுற்றி இத்தனை கரங்கள் அவளை ஆதுரத்துடன் தழுவி அன்பைச் சொரிய, 

 அவளின் வயிற்றிலிருக்கும் பொடிக்குட்டியோ அடங்காத சேட்டைக்குட்டியாக எந்நேரமும் துள்ளிக்கொண்டும் உதைத்துக்கொண்டும் வயிறு வளர வளர இவளை நிற்க நடக்க உட்கார படுத்துறங்கவென எதற்குமே விடுவதேயில்லை. 

நடக்க நடக்க விலுக்கென்று அல்லையில் வந்து தலை முட்டி நிற்கும்.அடுத்த அடி எடுத்துவைக்க முடியாமல் அப்படியே நின்றுவிடுவாள். 

உயிர் துடிப்போடு தனக்குள் ஒரு ஜீவனை வைத்து சுமந்துகொண்டிருக்கிறோம் என்கிற உணர்வின் சிலிர்ப்பில் பூரிப்பில் 

அகம் மகிழ்ந்த, மலர்ந்த புன்னகை முகத்தோடு தான் சுற்றிக்கொண்டிருப்பாள் யசோதை. 

“பாருங்க வித்யா இந்த பொடிக்குட்டி என்னை உதைச்சிட்டே இருப்பதை” என்று சிணுங்கி புகார் செய்வாள். 

 வித்யாதரன்  கையை அவள் வயிற்றில் வைத்து பிள்ளையின் துள்ளலை ரசித்து சிரிப்பான்.  

தன் உப்பிப்பெருகிய வயிற்றை கண்ணாடியை இப்படி அப்படி வைத்து வைத்து அழகுபார்ப்பதை யசோதை நித்தமும் செய்வாள். 

வித்யாதரன் நல்ல சட்டமிட்ட  பெரிய கண்ணாடியாக வாங்கிவந்து மாட்டினான். 

அந்த கண்ணாடி முன் நிற்கவைத்து யசோதையின் கூந்தல் நிறைக்க மல்லிகை சரத்தை சூடி, அணைத்து அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து கைகளை அவள் வயிற்றில் வைத்து ” நாம மூனு பேரும் இருக்க இதே போஸில் ஒரு போட்டோ எடுத்து இந்த சுவரில் மாட்டணும் யசோ.”

 பேரானந்த கணம் எதுவென்று கேட்டால் இதையன்றி யசோதை எதைச்சொல்லுவாள்..!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here