நெடுநல் அத்தியாயம் -35

0
332

வித்யாதரன் காண்ட்ராக்டர் செல்வத்தோடு இணைந்து செய்த முதல் அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட் வெற்றியைத் தொட்டு பின்னும் தொடர்ந்து மூன்று சின்ன அளவு ப்ராஜெக்டில் முதலிரண்டு முடிந்து விற்பனையுமாகி மூன்றாவது கட்டுமானத்திலிருக்கிறது. 

சப்ளை ஆர்டர்களும் மறுபுறம் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்க..

முதலீட்டிற்காக வைத்த யசோதையின் நகைகளை திருப்பிவிட்டான். 

கார் வாங்கி விட்டிருந்தான். நல்ல கண்டிஷனிலிருந்த செகண்ட் ஹேண்ட் கார். 

இவர்கள் குடியிருந்த வீட்டின்  சுவரையொட்டிய அடுத்த ப்ளாட்டே விலைக்கு வந்தது. அதை விலைக்கு வாங்கி இப்போதைக்கு கட்டியிருப்பது  சிறு அளவில்தான் என்றாலும்  அது அவர்களுக்கான சொந்தவீடு. 

இழுத்துக் கூட்டி உயர்த்திக்கட்ட வசதியை சம்பாதித்துக்கொண்டதும் பெரிதாக கட்டிக்கொள்ளலாம். 

வித்யாதரன் இந்த முப்பது வயதில் மனைவி மக்கள் வீடு கார் நல்ல வெற்றிகரமான தொழிலென எல்லாமும் கிடைக்கப்பெற்றவனாகிவிட்டான். 

சினிமாவில் காட்டுகிறமாதிரி இதெல்லாம் அவனுக்கு ஓவர் நைட்டில் ஒரேபாட்டில் நடந்துவிடவில்லை. 

மிகச்சரியாக பத்துவருடங்களுக்கான போராட்டமும் கடும் உழைப்பும் விடமுயற்சியும்  பின்னிருக்க முன்னுக்குவந்தவன். 

வித்யாதரன் பத்து வயதில் தாயை இழந்தவன். 

அடுத்த ஒன்றிரண்டு வருடத்தில் தனக்கு மற்றுமொரு வாழ்கைத்துணையை தேடிக்கொண்டார் இவனின் அப்பா. 

கூடப்பிறந்த தமக்கைக்கும் திருமணம் ஆகி, தந்தையும் இறந்தபின் வித்யாதரனுக்கு வீடென்பதும் குடும்பம் என்பதும் இல்லாமல் போனது. 

தமக்கை வீட்டிற்கு அப்பா இருக்கும்போதே ஒரே தடவை போனதோடு சரி. அதன்பின் மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாமென்று இவன் அங்கே போனதேயில்லை. 

இவனின் சின்னம்மா இவனை குடும்பத்திலொருவன் என்று நினைத்திருக்கவில்லை. 

ஆனாலும் இவனால் அப்படியே விட்டுவிடமுடியாது. 

அப்பா இருந்திருந்து  செய்யவேண்டியதை  அவர் இறந்தபோது வெறும் எட்டு  வயது  சிறுவனாக இருந்த  தம்பிக்கு, அவனுடைய படிப்புக்கு தேவையானதை செய்துகொண்டேதான் இருக்கிறான் என்றாலும் அங்குமே போவதில்லை. 

பணம் அனுப்பிக்கொண்டிருப்பது மட்டுமே. 

அப்படி அனுப்புவது  அவனுக்கு மந்திரத்தில் காய்த்து வரக் கைக்கு கிடைக்கிற பணமில்லை. 

கையில் சொற்ப காசோடு இவன் மெட்ராஸில் வந்திறங்கிய போது,இவனுக்கு இங்கே சிவப்பு கம்பள வரவேற்பொன்றும்  காத்திருக்கவில்லை.  தக்க படிப்பிருக்கவில்லை, உறவில்லை, நட்பில்லை, உறங்க தலைக்குமேல் ஒரு கூரை கூட இருந்திருக்கவில்லை. 

எங்கெங்கோ  உறங்கி எதையோ உண்டு ஏதேதோ கிடைத்த பிடிமானக்கயிறுகளை பற்றி உழைத்து தனக்கான பிழைப்பைத்  தேடி அலைந்துகொண்டிருந்தான். 

தெருவில் வசிக்கும் நாய்கள் கூட தங்கள் பகுதிக்கு ஒரு புது நாய் வந்தாலும் விடாமல் விரட்டியடிக்குமே, 

கோயில் வாசலில் பிச்சையெடுத்துப்பிழைப்பவர்கள் கூட தங்களோடு சேர்ந்து பிச்செயெடுக்க ஒரு புது பிச்சைக்காரன் வந்தால் அவனை சேர்த்துக்கொள்ளாமல் விரட்டியடிப்பார்களே அப்படி 

இவனைப்போன்ற நிலையிலிருந்த  உழைத்து பிழைக்கிற அன்றாடங்காய்சிகள் இவனை விடாமல் துரத்தியடித்தனர். எவனடா இவன் நமக்கு போட்டியா வந்தவனென்று. 

இவர்கள் ஒருபுறமென்றால் மற்றொரு புறம் மேல்நிலை மனிதர்களுமே அதே விரட்டியடிப்பு தான். 

‘உன்னையெப்படி நம்பறது, எதாவது ரெக்கமெண்டேஷன் இருக்கா’

‘ போ போ அப்புறம் பார்க்கலாம்’

 ‘இன்னைக்கு போய்ட்டு அடுத்தவாரம் வா’ 

இழுத்தடிப்புகளும், ஏளனப்பேச்சுகளும், அவமான படுத்தல்களும். 

இழிபட்டு, மிதிபட்டு விழுந்து விழுந்து எழுந்து நின்று தான் ஓட பயின்றவன் அவன். 

பாட்டன் முப்பாட்டன் அப்பன் சம்பாதித்த சொத்தும் சுகமும் சொகுசான பின்புலமும் இருந்திருந்தால் ஒருவேளை இவனுக்கு இந்த போராட்ட குணமும், வென்று பிடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள ஊக்க உரமும் கிடைக்காமலே போயிருந்திருக்குமென்று அடிக்கடி நினைப்பான்.  

அதான் இருக்குதே என்கிற தினவுத்தனம் தான் வந்திருக்கும். 

இவ்வளவு படிகட்டுகளை தன்முனைப்புடன் ஏறியிருப்பானா என்பதும் சந்தேகம்.

சொகுசு மெத்தைக்கு பழகியிருந்தவன் என்றால் ஒரு சில அவமானங்கள், விரட்டியடிப்புகளிலேயே தொலைந்து காணாமல் போயிருப்பான். 

இவன் இங்கேயே நின்று போராடினான்.  இப்போது ஒரு நிலையை அடைந்த பிறகு அன்று விரட்டியடித்தவர்கள் கூட  ‘நாமெல்லாம் ஒரே இனம்பா’ சந்தர்பவாதிகளாக வந்து சேர்ந்தும் கொண்டார்கள். 

வித்யாதரன் அவர்களை விலக்கவில்லை.

தொழில் வட்டத்தில் அவர்கள் தன்னிடம் ஆதாயங்களைத் தேடி வந்தவர்கள், சந்தர்ப்பவாதிகள் தக்க சந்தர்ப்பம் கிடைத்தால் இவனை காலை வாரி கவிழ்த்துவிட தயாராக இருப்பவர்கள் தான் என்பது தெரியும். 

ஆனால் எந்தவித சப்போர்டிவ் பேக்கரவுண்டுமில்லாத இவன் இவர்களை பகைத்துகொண்டு தனித்து தொழில் நடத்திவிடமுடியாது. ஆக இந்த காரியவாதிகளிடம் வெட்டிக்கொண்டு விடாமல் அதேசமயம் கவனமாக காய்நகர்த்தி ஆட்டத்தை தொடர்பவனாக இருக்கிறான். 

இப்போதுதான் வென்று தனக்கொரு இடத்தைப் பிடித்தேவிட்டானே என்கிற வெற்றிமிதப்பிலெல்லாம் இருந்துவிடமுடியாது. 

ஏனென்றால் தனக்கான ஒரு இடத்தைப்பிடிப்பதற்கு எவ்வளவு போராட்டம் தேவைப்பட்டதோ அதைவிட அதிகத்திலுமதிகம் பிடித்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இவன் போரடியாகவேண்டும். 

தோற்றுவிட்டவனைக்கூட விட்டுவிடும் உலகம் வென்றவனை விடாது. 

தொழில் நன்கு நடந்துகொண்டிருக்கும் இந்த வேலையில் இவன் என்னென்ன பிரச்சனைகளையும் அழுத்தங்களையும் சமாளிக்கிறானென்றால் 

கண்ணுக்கு தெரிந்து எதிரித்தனம் காட்டி  சிக்கல் கொடுக்கிற போட்டியாளர்கள்

கண்ணுக்கு தெரியாத கூடவே இருந்து நட்புபாரட்டி பயன்படுத்திக்கொள்கிற காரியவாதிகள். 

சரியான சமயத்தில் கொடுத்த வேலையை முடித்துத்தராமல் இழுத்தடித்து இன்னல் தருகிற பணியாளர்கள்.

டிமாண்ட் இருக்கிறதென்று தெரிந்து வேண்டுமென்றே பதுக்கிவைத்து விலையை கூட்டிவைத்து விற்கிற வியாபாரிகள். 

ஓ உனக்கு இது தேவையா! அப்ப இதை கொஞ்சம் அலைந்து வாங்கிக்க என்று ஒன்றுமேயில்லாத ஒரே ஒரு கையெழுத்துக்கும் நூறுமுறை நடக்கவிடுகிற உபரிகள்

“சரி ஒரு பங்கை இந்த பக்கம் வெட்டு, கேஷா கொடுத்திடு” என  உயிரைவாங்கும் லஞ்சவாதிகள். 

கார்பரேட் ரவ்டிகள், 

அரசியல் பகடைகள் 

இத்யாதி இத்யாதிகள். 

இதுபோக காப்பியடிச்சான் குஞ்சுகளென்று ஒரு இனமுண்டு..  

அதீத உழைப்பைக்கொட்டி தொழிலுக்கு புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்தால் நோகாமல் காப்பியடித்து எடுத்துப்போய் தங்களுடைய தொழிலுக்கு பயன்படுத்தி பெரிய அளவில் செய்து பெத்த இலாபம் பார்த்து விடுவது. கடைசியில் யுக்தியை கண்டுபிடித்தவன் ஓரங்கட்டப்படுவான். எவனோ காப்பியடித்தவன் பெயர் பேசப்படும். 

ஏனென்றால் அந்த கொழுத்த முதலையிடம்  சரியான நெட்வொர்க், ஆள்பலம், பணபலம், பவரென எல்லாமும் இருக்கும். 

வித்யாதரனைப்போல தன்முயற்சியில் மட்டுமாக  சிறுதூண்டில் போட்டுக்கொண்டிருப்பவன் எங்கிருந்து எதிர்க்க..? கையைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம் அல்லது மற்றொரு புதிய யுக்தியை கண்டுபிடிக்கலாம். அதையும்  வந்து மற்றவர்கள் காப்பியடித்து எடுத்துக்கொள்ளும் வரை பிழைத்துக்கொள்ளலாம். 

இப்படியெல்லாம் சொந்தத் தொழிலை நடத்தி அதில் நிலைத்த இடத்தைப்பிடித்து தக்கவைத்து நிற்பதெல்லாம் சும்மா காரியமில்லை. 

அபாயகரமான கம்பி மேல் நடப்பதுபோலத்தான். 

கவனமாக கம்பியில் அடிமேல் அடி வைத்து நடந்தபடி  சற்றே  நிமிர்ந்து பார்த்தால் தலைக்குமேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும். 

சற்றே குனிந்து பார்த்தால் காலைவாரிவிட்டு கவிழ்க்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

அவனுக்கென்னப்பா வீடும் காரும் சொந்தத்  தொழிலுமா மனுசன் வாழ்றான்யா எனபவர்களெல்லாம் அதற்குப்  பின்னால் இருக்கும் இவ்வளவு பிரச்சினைகள் எப்படி சமாளிக்கிறானென்று பார்ப்பதில்லையே! 

ஏதுமில்லாத ஒருவனாக வந்தவன் ஸிரோவிலிருந்து தொடங்கி வளர்ந்து  இத்தனை சிக்கல்களையும்  தாண்டி ஒரு இடத்தை பிடித்து நிற்கின்றான். தொழிலை நிமிர்த்தியிருக்கிறான். இவனுக்கென்று அன்பில் நிறைந்த ஒரு உலகத்தை மனைவி குழந்தைகளோடு உருவாக்கி கொண்டிருக்கிறான். 

அலுவல் முடிந்து வித்யாதரன் வந்துவிட்டதன் ஒலிப்பாக அவனின் கார்  சத்தம் கேட்டால் போதும் 

அவன் வீட்டுற்குள் வர ஆகும் நிமிட நேரத்தைக்கூட பொறுத்துக்கொள்ளாமல் இருவரும் சேர்ந்து ஆர்ப்பரிப்பதில் வீடே அதிரும். 

“ஹைய்ய்ய்யா அப்பா கார் வந்தாச்சு. ம்மா ஓடிவாங்க இதோ அப்பா”

மகள்கள் இருவரிடமும் மழலைப்பேச்சென்பதே இருக்கவில்லை.  எடுத்த எடுப்பில் அட்சரசுத்தமாய் பேசக்கற்றிருக்கிறார்கள் எப்படியோ!

எப்படியோ என்ன..! யசோதை தினமும் கதைகள் சொல்வதும் கதைகள் வாசித்துகாட்டுவதிலும் அவள் உச்சரிக்கும் வார்த்தைகளை வாயைப்பார்த்துக்கொண்டே உள்வாங்கி கற்றுக்கொண்டார்கள் போலும். 

அவனும் வந்த கையோடு ஹேய்ய்ய் என்றபடி மகள்களை ஆளுக்கொரு கையென இருவரையும் இரு கைகளிலும் அள்ளித்தூக்கி வட்டமாக ஒருதரம் சுற்றிவிட்டு..இறக்கிவிடாமல் கைகளில் வைத்து, இருவரும் அவன் கன்னத்தை மாறி மாறி  திருப்பிவைத்து சொல்லுகிற கதைகளையெல்லாம் ஆவலோடு கேட்டு சிரித்தென  உற்சாக கூக்குரல்களும் சந்தோச சிரிப்புமாக வீடு நிறையும். 

இந்த நிமிடங்களின்  மூவரின் சிரிப்பொலி பேச்சுகளையும் புன்னகையோடு பார்த்து ரசித்திருப்பாள் யசோதை. 

இந்த நிமிடங்களுக்காக மகள்கள் இருவரும் அவன் அலுவல் கிளம்பிப்போன நொடியிலிருந்து காத்திருப்பார்கள். 

அவனுமேதான் வெளியே எத்தனை அலைச்சல் உளைச்சல் இருந்தபோதினும் வீடு நுழைவதுஎன்பது  அவனுக்கு உயிரை மயீற் பீலியில் தடவிக்கொடுக்கிற ஆத்ம திருப்தியைத்தரும். அவனுக்கே அவனுக்காகவென அவன் உருவாக்கிக்கொண்ட உலகத்தில் அவன் மீது அன்பை கொட்டுகிற, சந்தோசமாக எதிர்பார்க்கிற மூன்று உயிர்கள். இந்த மூன்று மகிழ் முகங்களை பார்த்துவிட்டால் எப்படியான துன்பியல் அனுபவங்களையும் அவன் மறந்தே விடுவான். இதை விட வேறென்ன வேண்டும். 

தங்கை பிறப்பதற்குமுன் தந்தையிடமிருந்து ஒதுங்கியே இருந்த கயாதிகுட்டியும் சின்னவளின் ஒட்டுதலைப்பார்த்து பார்த்து தானும் அப்பாவுடன்  ஒட்டிக்கொண்டாள்.

யாத்விகுட்டி அப்பா தூக்கிவைத்துக்கொண்டதும்  தன் பிஞ்சுகரங்களை அவனின் தோல்மீது சுற்றிப்போட்டுக்கொண்டு பெருமிதமாக ஒரு பார்வை பார்ப்பாள்.  உலகத்தின் உயர்ந்த இடத்தில் தானிருக்கிறோமென்கிற பெருமிதம். 

வித்யாதரன் நல்ல உயரமும் படர்ந்த தோள்களையும்  கொண்டவன். அவன் தூக்கிவைத்திருக்கும் போது அந்த சின்னகுட்டிக்கு தரையிலிருப்பவர்களெல்லாம் எறும்பளவிற்கு தெரிவார்கள் போல. பெருமிதம் தானாகவே கண்களில் வந்துவிடும். ஒரு குட்டி இளவரசியைப்போல அவள் தன்னை உணர்வாள். 

துளசி அண்ணி  தன் அடங்காத மகன்களை கண்ட்ரோல் செய்ய, ஒழுங்கிற்கு கொண்டுவர எதாவது செய்தால் 

‘விடு விடு பிள்ளைங்கன்னா அப்படித்தானென்று’ தந்தையாக  ரங்கநாதன் பரிந்துகொண்டுவருவார்.

 மகன்கள் கேட்பதையெல்லாம், கேட்காதவைகளையும் சேர்தே வாங்கி வாங்கி குவிப்பார். அந்த மிதமிஞ்சலிலும், அப்பா சூப்பர் அம்மா வேஸ்ட் மனோபாவத்தையும் வளர்த்து துளசி அண்ணியின் மகன்கள் அம்மாவை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. 

‘விளையும் பயிர் முளையிலே’  சீர்மை படுத்தப்பட்டால் தான் ஆச்சு. 

பிள்ளைகள்   டீனேஜ் பருவத்தை தொட்டுவிட்டால் தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாகத்தான் ஆகும். 

யசோதையின் பிறந்தவீட்டிலும் இதே கதைதானே நடந்தது. 

அண்ணன் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும்  அவனை அம்மா கண்டிப்பதைஅப்பாவோ பாட்டியோ விட்டதே இல்லை.  

பிள்ளை வளர்ப்பில் கடைபிடிக்கவேண்டியவைகளை பட்டியலிட்டு வித்யாதரனும் யசோதையும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். 

துளசி அண்ணி வீட்டிலும் கீழே ஹவ்ஸ் ஓனர் வீட்டிலும்  நடப்பதை கண்கூடாக பார்த்த அறிவில் எடுத்த முடிவுகள். 

பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கவேண்டிய இடத்தில் செல்லமும் கண்டிக்க வேண்டிய தருணங்களில் கண்டிப்பையும் காட்டுதல் அவசியம். 

எக்காரணம் கொண்டும் கணவன் மனைவி இருவரில் ஒருவர் பிள்ளைகளை கண்டித்துக்கொண்டிருக்கும்போது மற்றொருவர் குறுக்கே புகுந்து தாங்கிப்பிடித்து சப்போர்ட் செய்யப்போவதில்லை. 

எந்த காரணம் கொண்டும் நமக்கு சின்னவயதில்  கிடைத்திருக்க வாய்பில்லாத சகலமும் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என் அள்ளிக்கொட்டி எதையும் வாங்கிக்கொடுக்கப்போவதில்லை. 

பிளைகளுக்கு எது வாங்குவதாக இருந்தாலும் அது வாங்க தேவையானாதா, எப்போது வாங்கவேண்டுமென்பதெல்லாம் இருவரும் பேசி ஆலோசித்து இருவரும் சேர்ந்தே வாங்கித்தரவேண்டும்.

தந்தைக்கு மறைத்து தாயோ தாய்க்கு மறைந்து தந்தையோபிள்ளைகளுக்கு எதையும் செய்யலாகாது. 

ஒருவர் சூப்பர் ஒருவர் வேஸ்ட் என்கிற எண்ணமே பிள்ளைகளுக்கு எழுந்துவிடக்கூடாது. இருவருமே குடும்பத்தின் இயக்கத்திற்கு அச்சாணிகளென்பதை உணரச்செய்யவேண்டும். 

பிள்ளைகளின் முன் ஒருவரையொருவர் மதிப்புக்குறைவாக நடத்திக்கொள்ளக்கூடாது. 

பிள்ளைகளின் முன் நோ சண்டை சச்சரவு அடிதடி ஆர்க்யூமெண்ட்ஸ். 

வித்யாதரன் யசோதைக்குள் இதெல்லாம் எங்கிருந்து வரப்போகிறது !! இருந்தாலும் அதையும் ஒரு ரூலாக சேர்த்துக்கொண்டார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here