சாப்பாட்டு மேஜையில் உண்டு கொண்டிருந்தவனின் தட்டை பார்த்துப் பதறிவிட்டாள் யசோதை.
“என்ன! என்ன வித்யா இது. சட்னி சாம்பார் எதுமே போட்டுக்காம வெறும் இட்லிய சாப்ட்டுக்கிட்டு இருக்கீங்க”
வேகமாய் போய் அவன் தட்டில் கொஞ்சம் சாம்பாரையும் சட்டினியையும் எடுத்துவைத்தாள்.
வித்யாதரன் நெற்றியில் தேய்த்துக்கொண்டான்.
“கவனிக்கல யசோ, இப்போ ஒருத்தர பார்க்க போகணும். அந்த யோசனையில இருந்தேன்.”
யசோதைக்கு செய்வதறியாத ஒரு தவித்த மனநிலை.
வித்யாதரனின் நலம் கெட்டுக்கொண்டிருப்பதை பார்த்து வருத்தமாக இருந்தது.
ஒழுங்காக உண்டு உறங்குவதையெல்லாம் விட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் போதாமையோடு ஓடிக்கொண்டிருக்கிறான்.
நலிந்து சரிந்து விட்ட தொழிலை எப்படியும் நிமிர்த்தி கொண்டுவரமுடியுமென்று படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறான்.
எல்லாவற்றையும் விட்டெரிந்து விட்டு முன்பு ஒற்றையறை குடிசைவீட்டுக்குள் மகிழ்ந்து கிடந்தோமே அந்த வாழ்க்கைக்கே திரும்பபோய்விட்டால் நல்லதென்று இருந்தது அவளுக்கு.
ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல், எவ்வளவு சிக்கல்கள் நம்மை நெருக்குகிறதென்று அவளிடம் சொல்லி கஷ்டபடுத்தவேண்டாமே என்று அவனே தனித்து நின்று சமாளிக்கப்பார்க்கிறான்.
பூஜ்ஜியத்தை தொட்டுக்கொண்டிருக்கிறோமென்பது யசோதைக்கு தெரியுமுன்னரே நிலைமையை சமாளித்து எழுந்துவிடமுடியுமென்று நம்பிக்கொண்டுதான் இருந்தான் வித்யாதரன்.
ஆனால் அது நடக்கிறவழியைத்தான் காணோம்.
மாதம் முதல் தேதி பிறந்தால் பணியாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்கிற அளவிற்கு கூட இருப்பு இல்லை. பாதிக்கப்படப்போவது இவனும் இவனின் குடும்பமும் மட்டுமில்லையே.. இவனை நம்பி அவனிடம் வேலை பார்க்கிற அத்தனை பேருக்கும் அவனே பொறுப்பு.
ஒரு இன்வெஸ்டரை பார்க்கப்போயிருந்தான்.
காலையில் அவர் சொல்லியிருந்த நேரத்திற்கு முன்பாகவே போய் காத்துக்கொண்டுமிருந்தான்.
மதியத்தையே தொடுகிற நேரம் ஆகியும் அவர் இறங்கிவரவே இல்லை. மனம் தளராமல் தண்ணீரைக்குடித்தபடி காத்திருக்கத்தான் செய்தான்.
அவனுக்கு பின்னும் பலபேர் வந்து காத்திருந்தார்கள்.
இறங்கிவந்த அந்த பெரிய மனிதர் இவனோடு காத்திருந்த மற்றவர்களோடு பேசினாரே ஒழிய வித்யாதரனின் பக்கம் திரும்பக்கூட இல்லை. இருந்துமே காத்திருந்தான். பின்னுமே கூட இவனின் மேல் கவனம் வைய்யாது போனைப்பார்த்தபடியே ஒரிரு வார்த்தைகள் அசட்டையாக..
தோற்றுக்கொண்டிருக்கிற குதிரையான உன் தொழில் மேல் பணம் கட்ட விருப்பமில்லை. போ போ என்றது உடல்மொழி.
இதே மனிதர் வித்யாதரனின் தொழில் செழித்திருந்த காலத்தில் அவனை எப்படி நடத்தினார்!. இப்போது காலில் போட்டு மிதிக்காதது தான் குறை. பேசாமல் எழுந்து வந்துவிட்டான்.
இப்போதெல்லாம் அவனுக்கு நெஞ்சு படபடப்பும், கண்ணைக்கட்டி இருள் சூழ்வதும் அதிகரித்து கொண்டிருந்தது. உடல் முழுதும் வேர்த்துவிட்டிருக்கவே காரில் ஏசியை ஆன் செய்து சற்றே சாய்ந்திருந்தான்.
பரமபத ஆட்டத்தில் ஒவ்வொருதரமும் விழுந்து சரிந்தாலும் எழுந்து ஏறிவிடுபவன் தான்.
இனி முடியுமென்று தோணவில்லை. அந்த தெம்பை அவன் இழந்திருந்தான்.
ப்ளட் பரஷர் அதிகமாக இருந்தது. மாத்திரை மருந்துகள் என்றே தொட்டிறாதவன் சோர்ந்து சரிந்து கிடக்கிறான். செல்லுமிடமிடங்களிலெல்லாம் அவமானங்களைச் சுமந்தபடி.
ஆணுக்கு உடல் நோய் வந்தாலும் அதைத் தாங்குகிற தன்மை குறைவு.
மன அழுத்தம் வந்தாலுமே தாங்கு சக்தி மிகமிகக் குறைவு தான்.
ஏனெனில் ஆண் என்றால் எதையும் தாங்கித்தான் ஆகவேண்டுமென்பதை ஆண் தனக்குள் நிர்பந்தமாக திணித்துக்கொள்கிறான்.
அவன் அப்படி திணித்துக்கொள்ளாத வரை சமூகம் அவனை விடாது.
அவனை துரத்தித் துரத்தி வற்புறுத்தும்.
“ஒழுங்குமரியாதையாய் ஆணுக்கு உரிய இலட்சனங்களாக நாங்கள் எதையெல்லாம் சொல்லி வைத்திருக்கிறோமோ அதன்படியானவனாக இரு. இல்லையெனில் உன் மீது நாங்கள் முத்திரை குத்துவோம்” என்று எச்சரிக்கும்.
நம்ம ஊரைப்பொருத்தவரையில் ஆணாப் பிறந்தவன் பிறப்பிலிருந்து ஒரு பத்து வயதுவரைக்கும் வேண்டுமானால் அவனுடைய வாழ்கை அவனது மட்டுமேயாக இருக்க வாய்ப்புண்டு.
அதுவரை வேண்டுமானால் அவனுக்கு அழுகிற உரிமையெல்லாம் கொடுத்து வைத்திருக்கும். என்பதால் மனபாரம் மன அழுத்தம் இல்லாத சிறுவனாக திரிவான்.
1 – பத்தை நெருங்கியதும் ஆணின் தனிப்பட்ட வாழ்கையென்பது சமூகத்தின் பார்வைக்கு, கண்காணிப்புக்குரிய ஒன்றாக மாறிவிடும்.
அதன் பிறகு அவன் தன்னை சமூகத்திற்கு எந்நேரமும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டியவன் ஆகிறான்.
சக பிள்ளைகளோடு விளையாடும் போது கூட விளையாட்டுத்தனத்தில் கூட அவன் தன்னை நிரூபிக்க வேண்டும்.
விழுந்துவிடவோ, தோற்றுவிடவோ, தோற்றால் அழுதுவிடவோ முடியாதவன் ஆகிறான்.
தவறினால் “ஏய் இவன் சரியான தோத்தாங்கோலிடா” என்ற எள்ளிநகைப்பிற்கு ஆளாகிறான் அவன்.
அங்கே தொடங்குகிறது முதல் மன அழுத்தம்.
2 – பதினைந்து வயதென்பது ஆணை அதீதமான மன அழுத்ததில் அமிழ்த்திவிட வாய்புகளை அதிகம் கொண்டது.
ஏனெனில் அவன் அந்த வயதில் ஒரே நேரத்தில் நாலாப்புறங்களிலிருந்தும் நெருக்கடிகளை சந்திக்கிறான்.
முதல் நெருக்கடி.
பத்தாம் வகுப்புத் தேர்வு.
வாங்கப்போகிற மதிபெண்களை வைத்து தான் அவன் தகுதியுள்ளவனாக பார்க்கப்படுவான் என்பதால் வரும் பதபதைப்பு.
பத்தை தாண்டினா தான் அடுத்தது எதுன்னாலும் செய்யமுடியுமென்ற, ‘ஃபெயில்’ என்கிற வார்த்தை தரும் தாக்கத்தை தாங்கமுடியாமையின் நெருக்கடி.
இரண்டாவது நெருக்கடி.
பத்தாம் வகுப்பை முடித்ததும் அடுத்து தேர்ந்தெடுக்கப்போகிற படிப்பு. அந்த தேர்ந்தெடுப்பில்தான்அவனின் மொத்த வாழ்நாளுக்குமான பொருளீட்டக்கூடிய எதிர்காலத்தை அமைக்க போகிறதென்பதால் அங்கே பிசகினால் போச்சே என்கிற பதபதைப்பு.
மூன்றாவது நெருக்கடி.
உடம்பில் ஏற்படும் பருவ வளர்ச்சி மாற்றங்கள். குரல் உடைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பால் உள்ளும் புறமும் மாற்றாங்களுக்குள்ளாவதன் நெருக்கடி
நான்காவது நெருக்கடி.
அவன் அதற்குள் கம்பீரமாக நடப்பதற்கு பேசுவதற்கு கற்றிருக்கவேண்டியவன் ஆகிறான்.
குரலைக்கூட விட்டுவைக்காமல் கவனிக்கும் சமூகம்.
“அவன பாரேன் பேச்சும் நடையும் தினுசா இருக்கில்ல. குரல் கூட ஆம்பிளை மாதிரி இல்லயே” போன்ற ஏளனங்களை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி.
3. உருவக்கேலிகளுக்கு ஆளாகக்கூடுமோ என்பதன் பதட்டம் தாழ்வு மனப்பான்மையை தட்டித்தூக்கி விட்டு ஆணை ஒருவழியாக்ககூடியது.
பருவ வளர்ச்சி மாற்றங்களின்போது ஆணுக்குள் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பால்,
ஒருவேளை ஈஸ்ட்ரோஜின் அதிகம் சுரந்து கின்கோமாஸ்டியா – மார்பகம் வளர்ந்தாலோ, மீசை முளைக்காமல் போனாலோ, ஆள் வளர்ச்சியடையாமல் குட்டையாக இருந்தாலோ, சின்ன வயதிலேயே தலை முடி கொட்டினாலோ, வழுக்கை விழுந்தாலோ, அல்லது தலைமுடி நரைத்துவிட்டாலோ நம்ம சமூகம் சும்மா விடுமா என்ன! தெருவில் இழுத்துவிட்டு உருவக்கேலிகளை செய்து தள்ளுமே..
4. பொருளீட்டலில் தகுதியை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி.கூடவே ‘சமூக அந்தஸ்து’ என்ற ஒன்றை பெற்றாக வேண்டியதன் கட்டாயத்திற்கு உந்தப்படுவான்.
தவறினால்
‘கால்காசுக்கு பெறாதவன்’
‘பிச்சைக்காரன்’
‘பத்து காசு சம்பாதிக்க துப்பில்லாதவன்’
‘வக்கில்லாதவன்’ பட்டங்கள்
5. ஆண் என்றவன் அச்சமற்றவனாக, துடிப்பு மிகுந்தவனாக, வேகமானவனாக தன்னை காட்டிக்கொள்ளவேண்டியவனாகிறான்.
தவறினால்
‘என்னடா இவ்வளவு ஸ்லோவா இருக்க. அவ்வளவு தானா நீயி’
‘ ரோட்ல வண்டிய ஓட்டக்கூட பயப்படுவியா,என்ன ஆம்பளைடா நீயி’
மாதிரியான வார்த்தைகள் வண்டிவண்டியாக வந்து விழும்.
6. அடுத்தது வயதுக்குள் குடும்பம் அமைத்தாகவேண்டியது.
கல்யாணம் ஆகுமா பதட்டம்.
ஆனபின் படுக்கையில் எழுச்சியுறுவதில் பதட்டம்.
தந்தை ஆகி காட்டவேண்டுமே என்பதன் பதட்டம்.
தவறினால் ‘ஆண்மையற்றவன்’ பட்டம் சுமப்பதன் அழுத்தம்.
7. ஒருவழியாக குடும்பத்தை உருவாக்கி பிள்ளை குட்டிகளை பெற்றபின்பு அவர்களை வளர்த்து ஆளாக்கி நல்லதொரு எதிர்காலத்தை தந்தாகவேண்டுமே என்கிற கடமைப்பாட்டில் காலில் சக்கரத்தைக்கட்டி நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதன் மிட்லைஃப் நெருக்கடி.
8. வாழ்வின் கடைசிக் கட்டம்.
இதற்குமுன்னான அத்தனை பதட்டங்களையும் மன அழுத்தங்களையும் கூட தாண்டிவிடக்கூடிய ஆண் இந்த கடைசிக் கட்டத்தில் சரிந்து விட வாய்ப்புகள் அதிகம்.
இந்த வயதில் வருமானம் என்ற ஒன்று நின்று போயிருக்கும், செலவுகள் மட்டும் வரிசைகட்டி நிற்கும்,
உழைப்பதற்கான தெம்பை இழந்துவிட்டிருப்பான்.
ஆரோக்கியம் குன்றிப்போய்
உடலைப்படுத்தும் நோய்மை,
தள்ளாமை
பெண்களின் மெனோபாஸ் போல ஆண்களின் ‘ஆண்ட்ரோபாஸ்’
ஹார்மோன் மாற்றங்களின் அழுத்தம்.
இந்த கடைசிக்கட்ட உள நெருக்கடி அழுத்தத்தை கொண்டவனாகியிருந்தான் வித்யாதரன். வென்று பற்றிப்பிடித்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது தவறவிட்டு, மீட்டெடுக்கவும் முடியாத உளைவு அவனை சாய்த்துவிட்டது.