நெடுநல் அத்தியாயம் – 40

0
379

“டூட் வாட் ஸ் திஸ், மணி ஒன்னு  சொன்னா கேளு போய் தூங்கு  மீதிய நாங்க பார்த்துக்கிறோம்” 

“நோ டா. ஜர்னி டைம்ல மினிமம் ஐந்து மணி நேரமாவது பஸ்ஸில நல்லா தூங்கிக்கலாம் இப்போ வேலைய முடிச்சு வைக்கிறேன். முடிச்சு வச்சு நோட்ஸ் எழுதி வைச்சிட்டு கிளம்பறேன். நீ போய் தூங்கு, குட்நைட்”  செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனத்தை திருப்பாமல் பரத்திற்கு பதில் சொன்னாள் யாத்வி. 

யாத்வி அவளோடு கூடப்படிக்கும் நண்பர்கள் பரத், ஸ்ரவந்தியோடு இணைந்து ஒரு இணையதளம் உருவாக்கி ஆன்லைனில் சின்னச்சின்ன ப்ராஜெக்ட்ஸ் எடுத்து மூவருமாக சேர்ந்து வேலை செய்கிறார்கள். படித்துக்கொண்டே, வேலைகளையும் எடுத்துச்செய்வதில் மூவருக்குமே தனிப்பட்ட நேரமென்பது குறைவு. 

ஸ்ரவந்திக்கு ஆந்திரா, யாத்விக்கு சென்னை, பரத்திற்கு தர்மபுரியென பெங்களூரிலிருந்து சொந்த ஊர்களுக்கு போய்வர இடையே அதிக நேரம் கிடைக்காது. 

மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விசிட் அடித்துவிட்டு வீடியோ காலில் வீட்டினரோடு பேசிக்கொள்வதுமாக இருப்பவர்கள். 

இவளை வரச்சொல்லி அம்மாவிடமிருந்து போன் அடுத்து அப்பாவிடமிருந்தும் அழைப்பு. கூடவே இதோ நெருக்கத்தில் அப்பா அம்மாவுடைய திருமண நாள். வீட்டில் அவர்களோடு சேர்ந்து இருக்கவே யாத்விக்கும் ஆசை. 

சொந்தமா பிஸ்னஸ் எடுத்துச்செய்யும் போது செய்யக்கூடாதது ‘சொன்னால் சொன்ன நேரத்துக்கு வேலையை முடித்துக்கொடுக்காமல் இருப்பது. கிளைண்ட தக்கவச்சுக்க முடியாம போய்டும்.’

மூவரும் ஒரே அப்பார்ட்மெண்ட் எடுத்து தங்கியிருப்பதால் வேலையை நேரம் காலம் பார்க்காமல் சேர்ந்து செய்துமுடிப்பது எளிதாகவும் இருக்கிறது. 

ஒரே வேலையை அவரவர் பகுதிகளென மூவரும் பிரித்துக்கொள்வர். இவளின் பகுதியை முடித்துவைத்தால் தான் அடுத்து அவர்கள் இருவருடையதையும் செய்ய ஏதுவாயிருக்கும். 

இந்த வீக்கெண்ட் நான் ஊருக்கு போறேன். நேரமில்லை. என்னுதையும் சேர்த்து நீங்களே முடியுங்களென பொறுப்பில்லாமல் நண்பர்களில் தலையில் கட்டுகிறவள் யாத்வி இல்லை. 

சொந்தமா பிஸ்னஸ நண்பர்களோடு பார்டனஷிப்ல செய்யும் போது செய்யக்கூடாதது. 

‘நட்பை பயன்படுத்தி ஒருவர் மீது மற்றொருவர் பிஸ்னஸில் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வது. நட்பு வேறு பிஸ்னஸ் வேறு என்கிற தெளிவு இருக்கணும்.’

ஆகவே  அவரவர் பங்கு வேலைகளை அவரவரே செய்யவேண்டுமென  ரூலே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

எனும் போது வேலையை பாதியில் விட்டு இவளெங்கே தூங்கப்போவாள்!. 

ஏலக்காய் மணக்க டீப்போட்டு கொண்டுவந்து தந்துவிட்டு படுக்கப்போனான் பரத். 

மூன்று ஐம்பதிற்கு வேலையை முடித்து எழுந்தவள் கழுத்திற்கு இடுப்பிற்கு கால்களுக்கு கைகளுக்கென ஸ்ட்ரெச்சஸ் கொடுத்து, நெட்டி முறித்தபின் அடுத்து மடமடவென கிளம்பி ஐந்து பத்திற்கு நிறுத்தம் வந்தாயிற்று. 

அதிகாலையில் மப்ளரைக்கட்டிக்கொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் கேளாமலே கம்பெனி கொடுத்தாள். 

ஸ்லீப்பர் பஸ் தான். ஏறி கர்ட்டனை இழுத்துவிட்டுக்கொண்டு படுத்தால் பகலென்ன இரவென்ன!  

பஸ்ஸில் உறக்கமென்பது தொட்டிலிலிட்டு தாலாட்டுவதைப்போல வேறு இருக்கும். 

வீடடைந்து கேட்டினைத் திறக்கும் போதே மாறுபட்டுத்தெரிந்தது. 

பறிக்கவேபடாத பூக்கள் பார்க்கவே  பாவமாக செடிகளில் கொடிகளில்  வாடியும் தரையெல்லாம் உதிர்ந்துமாக கிடப்பதெல்லாம்  இந்த வீட்டில் நடவாதது. அம்மா பூக்களின் காதலி. இப்படி வாட விடுபவளில்லை.!? 

உள்ளே நுழைந்தால் மூவரின் முகத்திலிமிருக்கும் தீவிரம்!! 

மனைவி அருகில் அமர்ந்திருக்க மகள்கள் இருவரையும் அமர்த்தி வைத்து பேசத்தொடங்கினான் வித்யாதரன். 

இவர்களின் தொழில் மூழ்கும் கப்பலாகிக்கொண்டிருப்பது யாத்விக்கு தெரியும், பெருகிப்போன கடனும் தான். 

அதனால்தான் அவள் முடிந்தளவு பெற்றோருக்கு சிரமம் கொடுத்துவிடாமல் தன் செலவுகளுக்கானதை தானே ஈட்டிக்கொள்ள முயல்கிறாள். 

மீளவே முடியாதளவு மூழ்கியே விட்டோம் என்றான் வித்யாதரன்.

கூடப்பிறந்த அக்காளுக்கு திருப்பூரில் வாழ்வாதாரம் சரிப்பட்டு வராமல் தம்பி நல்லாத்தானே இருக்கானென குடும்பத்தோடு சென்னைக்கு வந்துவிட அக்காள் கணவருக்கு  கடைவைத்து தந்து, வீடு கட்ட உதவி, அவளது மகனின் படிப்பிற்கு, மகள் திருமணம் வரை செய்துவித்தவன் வித்யாதரன். 

தம்பியை முழுக்க படிக்கவைத்து அவனுக்கும் அவன் தாயாருக்கும்  சென்னையில் வீடமைத்துக்கொடுத்து, திருமணம் செய்துவித்து, கூடவே தொழிலும் சேர்த்துக்கொண்டான். 

அவனோ நன்றி மறந்தவனாக,  இவ்வளவு செய்த அண்ணனை ஈவு இரக்கமில்லாமல் முதுகில் குத்திவிட்டான்.

வித்யாதரனின் தொழிலுக்குள் புகுந்த அவனின் தம்பி கொஞ்சம் கொஞ்சமாக கரையான் அரிப்பாக தொழிலிலிருந்து சுரண்டி, பொய்க்கணக்குகளை உருவாக்கி அண்ணனின் தொழிலை மண்ணுக்கு வீழ்த்தி தனக்கான கோட்டையை எழுப்பிக்கொண்டான். 

செல்வம் வெளி ஆளாக இருந்தும் மிகுந்த நாணயமான பார்டனராக இருந்தவர். 

ஆனால் வித்யாதரனுக்கு சொந்த தம்பியோ நம்பி கூடச்சேர்த்துக்கொண்ட பாவத்திற்கு பெருமளவு சுருட்டிக்கொண்டு நாமக்கணக்கை காட்டி ஏய்த்ததில் தொடங்கிய சறுக்கல். 

 பின்னும் மீள முடியாத, மீள முடியும் என்று நம்பிக்கையில் மேலுக்கு மேல் வாங்கிய பெருங்கடன்களில் அமிழ்த்த, சரிவுகள் கூடிக்கொண்டேயும் கடன்களும் பெருகிக்கொண்டேயும் வந்து பூஜ்ஜியத்தில் கொண்டு விட்டிருக்கிறது.  

நேரமும் தகுந்தார்ப்போல் மீள, எழமுடியாது செய்துவிடிருக்கிறது. 

மார்கெட் வீழ்ச்சி, உலக நாடுகள் தோறும் பல்கிப்பெருகிய பெருந்தொற்று நோய் லாக்டவுன்..போதுமான உற்பத்தியளவு இல்லாத விலையளவு ஏற்றம், 

ஏற்றுமதி ஆர்டர்கள் தடைபட்டு சுணங்கி முடங்கியது, போட்டதை திரும்ப எடுக்கமுடியாத பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட கடன்வாங்கும் நிலை அது இதுவென எதேதோ வித்யாதரனை ஒன்றுமில்லாமல் அழித்துவிட்டது. 

ஒட்டுமொத்தமாய் சரிந்து கீழே வந்து விட்ட நிலையிலிருந்து இனி முதற்கட்டதில் தொடங்கி எதைசெய்வதற்கும் தகுந்த மார்கெட் இருக்குமா என்றால்! 

இன்னமும் வாங்குபவர்களும் விற்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மார்கெட்டும் இருக்கிறது. ஆனால் டைம் டு டைம் திங்ஸ் சேஞ்ச் என்பதுதான் விஷயம். 

வாங்குபவர்கள் அதே அடிப்படை மக்கள், விற்பவர்கள் கார்பரேட் முதலைகள் என மாற்றத்திற்குள்ளாகிவிட்டது. 

யாவும் கார்பரேட் மயமாகுதல் என்பதோடு சிறு முதலீட்டு தொழில்கள் போட்டியிட்டு பயணிக்கவியலாதவைகளாகி திணறலில் வித்யாதரன் போன்ற சிறுவியாபாரிகள் கார்பரேட் முதலைகளோடு போட்டியிட முடியாமல் சரிந்தவர்களாயினர். 

ஒரு போலியான மார்கெட் வீழ்ச்சி, போலியாக தேவைகளை உருவாக்குவது, கையில் காசே இல்லாதபோதும் பொருட்களை வாங்கிவிட முடியுமென்ற போலியான வாய்ப்புகளை மக்களுக்கு காட்டி மார்கெட்டை வளைத்துப்பிடித்துக்கொண்டது கார்பரேட் நிறுவனங்கள். 

முப்பது வருடங்களுக்கு முன் வித்யாதரன் மெட்ராஸ் வந்திறங்கிய புதிதில் இங்கே சிறுமீன்களுக்கான சந்தை விரிந்திருந்தது. ஒரு சின்ன தூண்டில் அளவு முதலீட்டைக் கொண்டே நூல் பிடித்து தொழிலை வளர்த்திக்கொள்ள வாய்ப்புகள் அவனுக்கு கிட்டின.

இப்போதைய மார்க்கெட் பெரும் முதலைகளின் கையில் பெருமளவு முதலீட்டு தேவைகளோடு விரிந்து நிற்கிறது.

இருப்பத்தி ஐந்து வருடங்களுக்குமுன் வித்யாதரனும் யசோதையும் மணவாழ்கையை தொடங்கியபோது அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு இருந்த சிறு சிறு கடைகளெல்லாம் இப்போது எங்கே! அரிசி பருப்பு எண்ணெய் என்ற அத்தனை அத்தியவசிய பொருட்களும் 

முன்னைப்போல் உற்பத்தியாளரளிடமிருந்து,  விநியோகஸ்தர்- மொத்தவியாபாரிகளிடமிருந்து  சில்லரைவியாபாரிகள் அங்கிருந்து மக்களுக்கு என்கிற சிஸ்டமே மாறி 

ஊடே புகுந்த கார்பரேட் முதலைகள் காய்கறி பால் முதற்கொண்டு அத்தனையையும் பாக்கெட்டில் அடைத்து நேரடி விற்பனையில் இறங்கிவிட 

சிறுவியாபாரிகள் தலையில் துண்டுதான். 

ஆடம்பரம் என்றிருந்ததையெல்லாம் அத்தியாவசியம் என்றாக்கி, இந்தா பிடி கடன் அட்டைகள் இதில் தேய்த்து வாங்கிக்கொள் என்கிற திணிப்பில் மயங்கி மிடில்கிளாஸ் வாசிகள் மட்டுமல்ல அன்றாடக் கூலிக்காரனும் ஈ எம் ஐ கட்டித்தீர்க்கவே வாழ்ந்து முடிக்கிறான். 

பெட்டிக்கடைகள், அண்ணாச்சி மளிகைக்கடைகளெல்லாம் இருந்த இடங்களை அதே பெட்டிக்கடைகளைப்போல ஷ்வர்மா, பரோட்டா, பிரியாணிக்கடைகளும். 

அங்கே காசு கொடுத்து விருந்துண்டதற்கு மேலும் மொய்வைக்க  க்ளீனிக்குகளுமாக  நிரம்பிக்கிடக்கின்றன. 

சரி சாப்பாட்டுக்கடைகளாவது நல்லதனமாக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தரம் என்றால் என்னவென்று கேட்கிற அளவிற்கு போய்விட்டது. 

பிரியாணிக்கடைகளெல்லாம் உருவான புதிதில் உண்மையான தக்காளி வெங்காயம் தயிரோடு, கைப்பட தயாரித்த மசாலா பொருட்கள் சேர்த்து தரமான சுவையில் தயாரிக்கப்பட்ட கடை உணவாக கிடைக்கப்பட்டது மாறி 

அதே தக்காளி வெங்காய இத்யாதிகளை பலநாள் கெட்டுப்போகாத பொடிவடிவில் மாற்றி பாக்கெட்டுகளில் அடைத்து ஊருக்கு ஊர் ஸ்டாக்கிஸ்டுகளை உருவாக்கி அந்த பொடிகளை ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து பிரியாணியில்லை..

பிரியாணியைப்போலச்செய்தலுக்குபழக்கிவிட்டிருக்கிறது கார்பரேட் நிறுவனங்கள். உணவு கலாச்சாரம் இப்படியாக பலபல பரிணாம வளர்ச்சிகளோடு வேற்றுவடிவிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. 

முன்னே வீதிக்கு வீதி டெய்லர்கடைகள் இருக்கும், செருப்பு தைக்கிற கடையை கூட விரித்திருப்பார்கள். இப்போது எங்கே! அதையெல்லாம் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. 

இப்போது ஒன்லி ப்ராண்டட் ரெடிமேட் ஷோரூம்களுக்கான காலம். 

அல்லாமல் வீதிக்கு வீதி ஜிம்களும், ப்ரோடீன் ப்ராடக்ஸும், பியூட்டி பார்லர்களும் காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸும் கூட அத்தியாவசிய தேவைகளென்ற லிஸ்டில் கொண்டுவந்து மக்களை நிறுத்தி வியாபரத்தை விருத்தியாக்கிக்கொண்டிருக்கிறது கார்பரேட் நிறுவனங்கள். 

முன்னே அத்தியாவசிய செலவுகள், ஆடம்பரச்செலவுகள், அனாவசிய செலவுகள்  என்று பிரித்து செலவிட்ட மக்களெல்லாம் காணாமல் போய் அனாவசியங்களுக்கெல்லாம் அத்தியாவசிய நிறம் பூசப்பட்ட மாயைக்குள் தானாகவே சிக்கிக்கொண்டார்கள். 

 பிராண்டட் என்றால் நல்லவை

ஆர்கானிக் என்றால் ஆரோக்கியமானவை, 

டிஸ்கவ்ண்ட் அல்லது இலவசம் இணைக்கப்பட்டது என்றால் அதுவே சிக்கனப்பிடிப்பு என்கிற கண்துடைப்புகளுக்கு பழகி சிறு அளவு  வியாபரத்தை கண்டுகொள்ளாமல் விட்டு, ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

அத்தோடு மலிந்து கிடைக்கப்பெறும் எதற்கும் நீடித்த சந்தைபடுத்துதல் இருக்கமுடியாதே. 

இருபது இருபத்தி ஐந்து  வருடங்களுக்கு முன் கால் செண்டர்கள், ஐ டி நிறுவனங்கள், எம் என் சி எல்லாமே மெட்ராஸுக்கு புதிது. 

இப்போழுது அயல்நாட்டு வணிக நிறுவனங்கள் பெருகிவிட்ட சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் முதற்கொண்டு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அது ஏன்!  கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் வரை சகலமும் கார்பரேட் கைவசம். 

இப்போது மலிந்து அவரவர் கைக்கே அனைத்தும் கிடைக்கப்படுகிற சூழலில் 

தொழிலுக்கு புதுப்புது யுக்திகள் மட்டுமில்லை. தொழிலையே நிலைப்பான ஒன்றாக நடத்தமுடியாமல்  மாற்றிக்கொண்டேயிருக்கவேண்டியிருக்கிறது.. அப்படி மாற்றி மாற்றி சந்தைப்படுத்துதலில் இறங்கும் போது ஒன்றில் க்ளிக்காகலாம். மற்றொன்று காலைவாரிவிடலாம். 

வித்யாதரனுக்கு நடந்தது இரண்டாவது. 

நாளுக்கு நாள் அப்க்ரேட் வெர்சனுக்கு மாறுகின்ற பொருட் தேவைகளுக்கு வேண்டிய பெருமளவு முதலீட்டிற்கு இயலவில்லை வித்யாதரனால். 

இனியும் நம்பிக்கையோடு நலிந்து போன தொழிலை நிமிர்த்திவிட முடியுமென்று தோணவில்லை. 

வேறு வழியே இல்லாமல் கைவிட்டுவிடப்போகிறான். 

நட்டத்திலிருக்கும் தொழிலை கைவிட்டுவிடுகிற இவனின் முடிவால் இவனது குடும்பம் மட்டுமல்லாது, இவனை நம்பி வேலையிலிருப்பவர்கள் பலரது குடும்பங்கள் பாதிக்கபடும். 

அவர்களுக்கு உரிய நட்ட ஈடு தருவதற்கும், பெருங்கடன்களை, கடனுக்கான வட்டித்தொகைகளை அடைப்பதற்கும் இந்த வீடு முதற்கொண்டு ஈட்டி வைத்திருக்கிற  அத்தனையையும் இழக்கவேண்டியிருக்கும். 

அசையும், அசையாத சொத்துக்கள் அத்தனையையும் விற்றாலும் முழுக்கடனும் அடைந்திறாது. 

ஏற்கனவே லால்கரில் இருக்கும் நகைகள் எல்லாவற்றையும் எடுத்துவிட்டான். 

சொல்லிக்கொண்டேயிருக்கும் போது அதுவரை அசட்டையாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த கயாதி இடைபுகுந்தாள். 

“வாட் அதெப்படி! அதில் என்னோட நகைகளும் இருந்துச்சு. என்னைக்கேக்காமல் எப்படி நீங்க விக்கலாம்!?” 

“உன்னோடதுன்னா, நீயே சம்பாதிச்சு வாங்கினதா!? அப்பா வாங்கினதுதானே! சொத்தில் உன்னோடதுன்னு உரிமை கொண்டாட்றல்ல. வந்து கடனிலும் பொறுப்பேத்துக்க” என்று பதில் தந்தாள் யாத்வி 

“யூ ஷட்டப் டம்மாஸ். நான் உன்கிட்ட பேசலை” என்று எகிறினாள் கயாதி.

“நீங்க இரண்டுபேரும் அமைதியா இருந்தா நான் சொல்லவேண்டியதை சொல்லி முடிப்பேன்”  என்ற தந்தையிடம்  

“சாரிப்பா சொல்லுங்க” என்றாள் யாத்வி.  

மகள்களோட இந்த வருட படிப்பிற்கான தொகை முன்பே செலுத்தப்பட்டுவிட்டதால் ஃபீஸ் பிரச்சனையில்லை. மற்றபடி வேறெந்த வகையிலும் இயலாத நிலைக்கு இறங்கியிருக்கிறோம். 

இப்போதுவரை அனுபவித்த வசதிகள்,  லைஃப் ஸ்டைலிலிருந்து முற்றிலும் மாற்றுச்சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். 

ஒரு சின்னவீட்டைப்பார்த்து வாடகைக்கு போகவேண்டியதுதான்.

எல்லாம் விற்று செலுத்தியது போக எஞ்சிய கடன்களை  இனி சம்பாதித்து தான் கொடுக்கவேண்டியிருக்கும். 

இந்த வயதிற்கு மேல் எங்காவது போய் வேலையில் சேர்ந்து பொருள் ஈட்டுவது வித்யாதரனின் வயதிற்கு இயலாத காரியம். 

முன்பு இவர்கள் பிறப்பதற்கு முன் செய்த தொழிலான, முதலீடே இல்லாது தொடங்கிச்செய்த  தரகு தொழிலுக்கே வித்யாதரன் திரும்பப்போகிறான். 

ஆனால் அந்த தொழிலும் இந்த காலச்சூழலில் முன்பு போல கைக்கொடுக்குமா என்பது சந்தேகமே. அதுவும் பொய் புரட்டு ஏமாற்று வேலைகள் பிடிக்காத, யாரையும் கடிந்தோ கடுமையாகவோ பேசத்தெரியாத வித்யாதரனைப்போன்றவனுக்கு முரட்டு வேகத்திற்கு மாறிவிட்ட தரகு மார்கெட்டில் இடமிருக்குமா தெரியாது! ஆனால் இதுதான் நிலவரம். இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். 

மீண்டும் எகிறினாள் கயாதி. 

“இப்படி ஒன்னுமே இல்லாம நடுத்தெருவில நிறுத்தப்போறேன்னு சொல்றதுக்குதான் கூப்டீங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். ஒன்னுமே இல்லையாம்! இனி யார் முகத்திலயும் நான் எப்படி முழிப்பேன். அய்யோ என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு கேவலமா பேசப்போறாங்க! எந்த வீட்லயாவது பெத்த பிள்ளைங்கள இப்படி கைவிடுவாங்களா! நீங்க இப்படி செய்யறது கொஞ்சம்கூட நியாயமே இல்லை.”

ஆத்திரத்தில் தொடங்கி அழுகையில் முடித்தாள் கயாதி.

 “கையாலாகாத அப்பா ஆகிவிட்டேன் மன்னிச்சிடும்மா” என்றவனை 

“என்ன பேச்சு இது வித்யா! உங்கள் அளவிற்கு எந்த தகப்பனும் பிள்ளைங்களுக்கு செய்திருக்கவே முடியாது!”

“இதோ பார் கயா, உங்க இரண்டு பேருக்கும் பறக்க கத்துக்கொடுத்துட்டோம் அவ்வளவுதான். இனி உங்கள் பிழைப்பை நீங்களா பார்த்துக்கங்க. அப்பாவும் அம்மாவும் உங்கள தொந்திரவு செய்ய வரமாட்டோம். இனி எங்களிடமும் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை.இது கடைசி வார்த்தை.”  என்றாள் யசோதை. 

கண்கள் ததும்ப விரைத்துக்கொண்டு எழுந்துபோனாள் கயாதி. 

“அப்பா நீங்க விற்கவேண்டியதெல்லாம் விற்று கடனை தீருங்கள். இதோ இன்னும் சில மாதங்கள் என்னோட படிப்பும் முடியப்போகுது. எனக்கும் எப்பவும் உங்களைப்போல சொந்தத்தொழிலில் தான் விருப்பம். நானும் வந்து சேர்ந்துக்குவேன். 

ஜீரோவிலிருந்து புதுசா தொடங்க வேண்டியிருந்தா என்ன! என் அப்பாவிற்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. எத்தனைதரம் அப்படி தொடங்கி மேல வந்திருப்பீங்க.  இதோ பாருங்க  உங்களுக்கு இருக்கிறது இரண்டு கைகளில்லை. ஆறு கைகள் இருக்கே. விட்ட இடத்தை கட்டாயம் பிடிப்பீங்கப்பா நீங்க.” 

ஆசிர்வதிப்பதைப்போல மகளின் தலையை வருடினான் வித்யாதரன். 

அவனுடைய தோலில் சாய்ந்துகொண்டாள் யசோதை.  

❤ நெடுநல் தொடரும்..❤

BHUVANAM‘s Note – நெடுநல் கடைசி அத்தியாயம் இது. இனி இவர்களை நறுநகை நாவலில் சந்திக்கலாம் வாங்க..

புவனத்தின் நறுநகை
கானல் பதிப்பக வெளியீடு
பக்கங்கள் – 430
விலை – 400
புத்தகம் தமிழ் அலை பதிப்பகத்தில் கிடைக்கும்.
+91 7708597419 பதிப்பகத்தாரின் இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பெறலாம்.

Happy Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here