கொஞ்சம் அதிகப்படிதான். ஆனாலும் அவளால் அதை செய்யாமல் இருக்கமுடியவில்லை.
மறுநாளே லைப்ரரிக்கு ஓடோடிப்போய் நின்றாள் யசோதை.
அவளைக்கண்டதும் அதே கைகுவிப்புடன் கூடவே புன்னகையுடன் “வணக்கங்க யசோதா” என்றான் அவன். அந்த வித்யாதரன்.
அவன் இன்றுமே அதே வெண்மைநிற முழுக்கை சட்டை தான் அணிந்திருந்தான்
“ரிஜிஸ்டர் நோட்டில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கு அழகான பெயர்ங்க”என்றான் விரிந்த புன்னகையுடன்.
“நீங்க எப்படி! உங்க சட்டைக்கும் பற்களுக்கும் ஒரே மாதிரி உஜாலா போடுவீங்களா! இரண்டும் ஒன்னும்போல வெளுத்திருக்கு” அவன் மேலும் சிரித்தான்.
“நான் கருமை நிறக்கண்ணனுங்க, அதான் என்மேல் சட்டையும் பல்லும் பளிச்சின்னு தெரியுது.”
“நீங்க ஒன்னும் அப்படி கருப்பில்லை, ஒருவேளை வெயிலில் அதிகம் அலையறதனால கொஞ்சம் நிறம் மங்கி தெரியறீங்க போல.”
“ம்ம். வேணும்னா அப்படியும் சொல்லிக்கலாம்!
ஆமா நீங்க என்ன இந்த குட்டி தலகானி சைஸ்ல கொண்டுபோன புக்க ஒரே நாள்ல படிச்சிட்டீங்களா! இல்ல அதிலிருக்க படங்களை மட்டும் சும்மா பார்த்திட்டு திருப்பி கொண்டுவந்தீட்டிங்களா! நான் கூட படிக்கத்தான் எடுத்திட்டு போறீங்கன்னு நினைச்சிட்டேன்.”
“எனக்கு வேகமாக வாசிக்க வரும், அதோட ஏற்கனவே வாசிச்ச புக்க திருப்பி வாசிக்க எத்தனை நாள் தேவைப்படுமாம்” என்றாள் யசோதை விரைப்பாக.
“என்ன!! ஏற்கனவே படிச்ச கதைபுத்தகத்த திரும்பவும் கூட படிப்பீங்களா! அதில என்ன எழுதியிருக்குன்னு தான் முன்னமே தெரியுமே. அப்புறம் திரும்ப படிக்கிறது எப்படி சுவாரஸ்யமா இருக்கும்! பரிட்சைக்கு கூட முன்னமே படிச்ச பாடபுத்தகத்திலிருக்கிறத திரும்ப படிச்சதில்லை நான் அதான் கேக்கிறேன்.நான் தற்பெருமை பேசறேன்னு தயவு செஞ்சு நினைக்க வேண்டாங்க யசோதா.”
“நினைக்கமாட்டேங்க அறிவாளி அவர்களே,
கதைபுத்தகங்கள் வாசிக்க வாசிக்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோணத்தில விரியும். ஏன்னா அதை எழுதினவங்க எதாவது ஒரு கோணத்தில யோசிச்சுதான் எழுதியிருப்பாங்க. ஆனா வாசிக்கிற நாம ஒரே விஷயத்த பல கோணங்களிலிருந்து அதுவும் நம்மோடும்,நம்மை கடந்துபோற ஒவ்வொன்றோடும் பொருத்திவச்சு பார்ப்போம். அதனால அடுத்தடுத்த தடவைகள் வாசிக்கும் போது கூட சுவாரஸ்யம் குறையாது” என்று யசோதை தன் தரப்பு வாசிப்பு பழக்கத்தைச்சொல்ல..
வித்யாதரனும் அவனின் தொழில் நிமித்தமாக அடுத்த கட்டத்திற்கு நகர என்னென்னமாதிரி படிக்கிறான் என்பதை யசோதைக்கு சொன்னான்.
உதாரணத்திற்கு ஒரு காரை விற்றுக்கொடுக்க போகிறான் என்றால் அந்த காரைப்பற்றின மேலோட்டமான விசயங்களை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதன் மெக்கானிசம், மேனுவல் புக்கிலிருந்து ஒரு பக்கத்தைக்கூட விடாமல் படித்து அக்குவேர் ஆணிவேராய் தெரிந்துவைத்துக்கொள்ள முயல்வானாம்.
என்பதால் தான் விற்றுக்கொடுக்கும் முன்னால் அந்த பொருளின் தரத்தை இவனால் சுயமாக இறங்கி சோதித்து, வாங்க போகிறவர் திருப்தியுறும் வகையில் விளக்கி காட்ட முடிகிறதாம்.
தொழில் யுக்தியில் இதை முதல் பாடமாக கடைபிடித்து வருவதாக அவன் சொன்னபோது
யசோதை கைகளைத்தட்டி அவனை பாராட்டினாள்.
“‘செய்வன திருந்தச்செய்’ன்னு ஒன்னு இருக்கில்ல அதை நீங்க ரொம்ப சரியா உங்க தொழிலில் செய்வது தெரியுது வித்யாதரன். நிச்சயம் நீங்க பெரிய சாதனையாளரா வருவீங்க. அப்போ என்னோட இந்த பாரட்ட ஞாபகம் வச்சுக்கங்க.”
வித்யாதரன் புன்னகையுடன் நன்றி சொன்னான். அதுவும் கைகளைக்குவித்து.
அவள் புத்தகங்கள் இரண்டினை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது கேட்டான்.
“இந்த இரண்டும் கூட ஏற்கனவே படிச்சதுதானா! நாளையும் இந்நேரத்திற்கு வருவீங்களா!?”
லைப்ரரி அங்கிள் ஊரிலிருந்தால் அவருடைய மேஜையின் கீழ் இருக்கும் அலமாரிக்குள் பூட்டி வைத்திருக்கும் சில நல்ல அரிய புத்தகங்களையும், மார்கெட்டிலிருந்து வாங்கி வரும் புத்தம்புது புத்தகங்களையும் அவளுக்கு வாசிக்கத்தருவார்.
புத்தக அருமை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தருவதற்கு அவைகளை பூட்டி வைத்திருப்பார். பொது அலமாரிகளில் வைக்காமல்.
“அங்கிள் ஊரிலிருந்து வந்த பிறகு தான் புது புத்தகங்கள் வாசிக்க கிடைக்கும். அதுவரை ஏற்கனவே வாசிச்சவைகள் தான். ஆனால் நாளைக்கு வரமாட்டேன். இரண்டு நாளாகும்” என்று அவன் கேட்டதற்கான பதிலைச்சொன்னாள்.
“நான் நாளை பாரீஸ் கார்னர் போவேன், உங்களுக்கு புது புக்ஸ் என்னென்ன வேணும்ன்னு சொல்லுங்க, வாங்கிட்டு வந்து தரேன்.”
“இல்லைங்க, நான் பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கிறதில்ல, இங்கே அங்கிளிடம் எடுத்து படிக்கிறது மட்டும் தான் வழக்கம்.”
“நீங்க பணம் கொடுத்து வாங்க வேணாம். எனக்கு உங்களுக்கு வாங்கிதரணும்ன்னு தோணுதுங்க யசோதா. சொல்லுங்க என்ன புக்ஸ் வாங்கட்டும்.”
யசோதை அவனை முறைத்துப்பார்த்தாள்.
“வேணாம் நான் யார் வாங்கிதருவதையும் ஏற்பதில்லை”
இரண்டு நாட்கள் கழித்து வந்த யசோதையிடம் அவன் வெகுவாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டான்.
“சாரிங்க, தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க யசோதா, உங்களுக்கு புக்ஸ் படிக்க பிடிக்கிறதே, வாங்கி தரலாமேங்கிற எண்ணத்தில் யோசிக்காமல் சொல்லிட்டேன்.
எந்த தப்பான நோக்கத்திலும் இல்லைங்க. நீங்க என்னை தப்பா எடுத்துக்கீட்டீங்க, இனி எங்கிட்ட சகஜமா பேச மாட்டீங்கன்னு நினைத்து இரண்டு நாளா மனசே சரியில்லைங்க. திரும்ப உங்களை பார்க்கிறவரை எனக்கு எதுவுமே ஓடவில்லை. சாரிங்க யசோதா என் தப்பை மன்னிச்சிடுங்க”.
வித்யாதரனின் மெய்யாக வருந்திய முகம் யசோதையை என்னவோ செய்தது.
” நான் உங்கள தப்பா நினைக்கவில்லை வித்யாதரன். ஆனா நான் யாரிடமும் எதுவும் வாங்கிக்கவும் மாட்டேன். அவ்வளவுதான். சரி அந்த பேச்சை விடுங்க, எனக்கு இதை சொல்லுங்க! இந்த வெள்ளை முழுக்கை சட்டை என்ன உங்க யூனிஃபார்மா!! எப்படி எப்பபார்த்தாலும் இப்படி வெளுப்பா உடுத்திக்கமுடியுது உங்களால!?”
அவளின் சகஜமான பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
அவனும் இயல்புக்கு மாறி பதில் சொல்லத்தொடங்கினான்.
“என்னுடையது மூலதனமே இல்லாத தொழில்ங்க யசோதா! வாங்கிறவங்களும் விக்கிறவங்களும் என் மேல் முழு நம்பிக்கை வைப்பதை வைத்தே என் பிழைப்பு நகரும்.
அப்படி க்ளைய்ண்ட்ஸ்க்கு நம்பிக்கை வருவது எதைவைத்து எல்லாம்ன்னு பார்த்தோம்ன்னா வெறும் வாய்வார்த்தையால் நான் என்னைப்பற்றி சொல்லிக்கொள்வதைவிட நிரந்தரமான ஒரு இடத்தில் அதற்கென ஒரு போர்டு வைத்து ஆபீஸாக வைத்திருப்பது ஒரு நம்பிக்கையை தரும்.
எதையோ விற்றுக்கொடுத்துவிட்டு எங்கேயோ ஓடிவிட மாட்டேங்கிற நம்பிக்கையை இது தரும்.
தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண், அலுவலக விலாசம், ப்ராண்ட் நேம்ன்னு நம்பிக்கைக்கு பாத்திரமாஇதெல்லாம் இருக்கிற மாதிரி நம்ம மக்கள் வெண்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க யசோதா. வெண்மை நிறத்தை உண்மைதன்மைக்கு பக்கத்தில வச்சு பார்ப்பங்க. அதனால தான்வெள்ளை சட்டை போட்டுக்கறேன். ஆனால் இந்த வெள்ளை சட்டைகளை வெள்ளையாகவே வைத்திருக்க படுகிற கஷ்டமிருக்கே…!”
“ஆமாம் நானும்கூட நினைத்தேன். சிரமம்தான். அதுவும் உங்களைப்போல வெயில் வெளி அலைச்சலில் இருக்கவங்களுக்கு.. எப்படி சமாளிக்கிறீங்க!”
“வெளியே சலவைக்கு கொடுத்து வாங்கி போட்டுக்கிற அளவுக்கு நான் இன்னும் பொருளாதார வசதியை சம்பாதிச்சுக்கலைங்க.
வீட்டில் தான் ஊறவைத்து, துவைப்பது, நீலம் போட்டு, கஞ்சி போட்டு, காய வைத்து எடுத்து அயர்ன் பண்ணின்னு எல்லாம் பெண்டு நிமிருகிற வேலைகள்.
“ஓஹ்!! பாவம் தான் உங்கம்மா” என்றாள் யசோதை.
“நான் ஐந்தாவது ஆறாவது படிக்கிற காலத்திலிருந்தே என் துணிகளை நான் தான் துவைச்சுக்குவேங்க. ஏன்னா அப்போதே எனக்கு அம்மா இல்லை.
அப்படியே அம்மா இருந்தாலும் துவைச்சுத் தர சொல்லி நிச்சயம் தர மாட்டேன். வெள்ளையை வெள்ளையா பராமரிக்க சமயத்தில எனக்கே கைகள் வலிக்கும். அப்போ அம்மாவிற்கு எப்படியிருக்கும்”
வித்யாதரன் கண்கள் குளிர பார்க்கக்கூடிய நல்ல தோற்றத்தோடான, வடிவுடைய ஆடவன்.
ஆனால் அதை விட அவனின் பண்புகளும், தன்மைகளும், பழகும் விதமும் யசோதையின் மனதைத்தொட்டன.
‘மனம் தான் என்ன மாதிரியானதொரு ‘மாயச்சரடு’!
அவிழ்க்க வொன்னாத முடிச்சுகளை போட்டுக்கொள்ளும் சரடு..
யசோதை கல்லூரியில், படிப்பின்போது படிப்பே பிரதானமென்று இருந்து தனக்கென ஒரு நட்பு வட்டத்தை கூட உருவாக்கிக்கொள்ளாதவள். அதற்கு முக்கியகாரணமாய் இருந்தது.. சக மாணவிகளில் பலர் காதல், பாய்ஃப்ரெண்ட், கட் அடித்துவிட்டு சுற்றப்போவது இத்யாதிகளில் லயித்துக்கிடந்தது.
இதெல்லாம் தன் வீட்டு கட்டுப்பெட்டி சூழலுக்கு ஒத்துவராது என்பதால் இதிலெல்லாம் விழுந்துவிடக்கூடாதென்று இருந்த கவனமும் தான்.
வீடோ அவளுக்கு கலந்து பேசி அளவளாவ யாருமற்றிருந்த இடம்.
தையல் பயிற்சி மையத்தில் கூடப் பயின்ற பெண்களோடு கூட யசோதைக்கு ஒட்டமுடியவில்லை.
தையல் பயிற்சி தவிர ஏனைய நேரங்களில் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் குடும்பக்கதைகளை பேசுவதிலும் புரணி பேசுவதிலும் விருப்பமுடையவர்களாயிருந்ததே காரணம்.
லைப்பரரிக்கு போகும்போது அங்கே அங்கிளிடம் வளவளவளத்துப்பேசுவாள்.
அவையாவும் புத்தகங்களைப்பற்றியும் புத்தகங்களில் வாசித்தவைகள் பற்றியுமானதாக இருக்கும் என்பதால் லைப்ரரி அங்கிளிடம் பேச வாய்க்கிற அந்த ஐந்து பத்து நிமிடங்கள் யசோதைக்கு மிகப்பிடித்தமானது.
அந்த இடத்தை, சொல்லப்போனால் அதை விடவும் அணுக்கமான இடத்தை, மிக குறுகிய நாட்களின் பழக்கத்தில் வித்யாதரன் பிடித்துவிட்டிருந்தான்.
எப்படி, ஏன் என்றே விளங்கிக்கொள்ளமுடியாததொரு உள்ளப்பிணைப்பு அவனோடு யசோதைக்கு உருவாகியிருந்தது.
கற்பனையுலகில் மட்டுமே சஞ்சரிப்பவளான யசோதைக்கு வெளியுலகம் தெரியாது. அவள் வெளியுலக வாழ்கையை தெரிந்து வைத்திருப்பதன் அளவு முழுவதுமாக ஒரு சதவீதத்தைக்கூட எட்டாது.
அப்படியிருக்க விதயாதரனோ..
யதார்த்த உலகிற்கு ஏற்ப, நடைமுறை வாழ்க்கைக்கு பழகி, வெளியுலக வாழ்வியல் அனுபவங்களை இந்த இருபத்தியைந்து வயதிற்குள் தன்னந்தனியே நின்று பார்த்து, முயன்று பார்த்து, கற்றுக்கொண்டிருப்பவன்.
வித்யாதரன் திருப்பூரை ஒட்டியதொரு சின்னஞ்சிறு கிராமப்பின்னனியில் பிறந்து வளர்ந்தவன்.
சிறுவயதிலேயே தாயை இழந்தவன்.
தனியார் மில் தொழிலாளியாக தந்தையும் வித்யாதரனின் பத்தொன்பதாவது வயதிலேயே இறந்துபோனார்.
கூடப்பிறந்தவர்களில் மூத்த சகோதரியை தந்தை இருக்கும்போதே மனம் முடித்துக்கொடுத்திருந்தார்.
தவிர வித்யாதரனுக்கு இளையவன் ஒருவன் உண்டு.
தாய்வழி சொத்தாக கிட்டியதொரு சிறிய ஓட்டுவீடு தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி சொத்துபத்துகள் எதுவுமிருக்கவில்லை.
தந்தை இல்லாமல் ஆகிவிட்டிருந்த பத்தொன்பது வயதிற்குப்பிறகுதான் என்றில்லை பள்ளி காலத்திலேயே வித்யாதரன் படிப்போடு சேர்த்தி சுய சம்பாத்தியத்தை ஈட்டிக்கொள்வதிலும் கெட்டிக்காரனாக இருந்தான்.
அவனுடைய பள்ளிகாலத்து உற்ற நண்பனின் தந்தை மொத்த வியாபார பலசரக்கு கடை வைத்திருந்தார். படிப்பு நேரம் போக, லீவு நாட்களில் அங்கே நண்பனோடு போய் கூடமாட வேலைகள் செய்து பழகத்தொடங்கி, நிர்வாகம், மேலான்மை, சுயதொழிலின் நெளிவு சுழிவுகள், பணவரவு செலவுகளை கணக்காக கட்டுக்குள் வைப்பது, கொள்முதல் செய்வது, விறபனை செய்வதன் யுக்திகளெல்லாவற்றையும் விருப்பத்தோடு கற்றுக்கொண்டவன்.
அப்போதிருந்தே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி நடத்தி தனக்குத்தானே முதலாளியாக ஆவதே வித்யாதரனின் வாழ்நாள் இலட்சியம்.
தந்தையைப்போல எங்கோ யாருக்கோ உழைப்பைக்கொட்டி கொடுத்து வேலை செய்து, வாழ்நாளுக்கும் தீராத வறுமைப்பிடிப்பில் உழன்று, கைக்கும் வாய்க்குமே கட்டிவரும் வாழ்கையை வாழ்ந்து அப்படியே மடிந்து போவதில் விருப்பமில்லாதவன்.
தன்னைப்போல எந்த பின்புலனும் இல்லாத ஒருவன்,
வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குபவனாயிருந்து,
வறுமையை ஜெயித்து,
சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிடுவது சுலபமில்லை என்று தெரிந்துமே இறங்கி விடாமுயற்சியோடு எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவன்.
இந்த பதினைந்து நாட்களுக்குள் பலமுறை நூலகத்தில் சந்தித்திக்கொண்ட நிமிடங்களில் யசோதை வித்யாதரனிடமிருந்து தெரிந்து கொண்டவைகள் ஏராளம்.
யசோதையும் அவள் படித்து தெரிந்துகொண்டவைகளிருந்து சில ஐடியாக்களை வித்யாதரனுக்கு சொல்லியிருந்தாள்.
அவள் கொடுத்த யோசனைகளின் படி தன் அலுவல் அறையில் சில மாற்றங்களை செய்திருப்பதை உள்ளே வந்து பார்க்கும்படி வித்யாதரன் யசோதையிடம் கேட்டான்.
“சார் நாளைக்கு வந்திவிடுவாருங்க யசோதா. அப்புறம் நான் உங்களை இப்படி பார்த்து பேச முடிவது இனி நடக்காது, கடைசியாய் ஒருதரம் இன்னைக்குதாங்கிறதால, உங்களுக்கு தயக்கமில்லைன்னா உள்ள வந்து பாருங்க, இல்லைன்னா பரவாயில்லை. எனக்காக செய்யவேண்டாம்”..
யசோதை அதுவரை அவனின் ஆஃபீஸ் ரூமை நூலக அறையிலிருந்து மட்டுமே பார்த்திருக்கிறாள்.
இதுவே முதல்முறை உள்ளேவந்து பார்ப்பது.
அவள் சொல்லியிருந்தபடி அந்த அறையில் நிறைய மாற்றங்களை அவன் செய்திருந்தான்.
கண்ணாடிக்கதவுகளோடான வாயிற்புறம்
இரண்டு சிறிய க்ரோட்டன்ஸ் செடிகளும்,
அவனின் சுழல் இருக்கைக்கு பின்புற வெற்றுச்சுவரில் இப்பொழுது அலகுற மாட்டப்பட்டிருந்த முப்பரிமாண வண்ண ஓவியமும்,
மேஜையின் மீது வெறும் காகிதங்களும் நோட்டுகளும் மட்டுமே முன்பு வைத்திருந்தது மாறிஇப்பொழுது அந்த மேஜை பார்க்கவே அழகியலோடு தெரிந்தது.
நித்தமும் மலர்ந்த பூக்களை மாற்றி கொள்கிறமாதிரியானதொரு வண்ண மலர்களை கொண்ட பூச்சாடியும்,
சின்னதாக ஒரு வீடு, கார், பைக் போன்ற பார்வையை ஈர்க்கும் மினியேட்சர் பொருட்கள் அதே சமயம் அவனின் தொழிலுக்கும் தொடர்புடையவைகளாக இருக்கும் வகையில் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான்.
பக்கத்தில் ஒரு சின்ன நிற்கும் ஸ்டாண்ட் வைத்து அதில் தொழில் தொடர்ப்பு புத்தகங்கள், ஏடுகள், நாளிதழ்களை நேர்த்தியுற அடுக்கிவைத்திருந்தான்.
பருக சுத்தமான நீர் கண்ணாடி க்ளாஸில் மூடி வைக்கபட்டு மேஜை மீதிருந்தது.
அடுத்திருந்த சுவரில் வெள்ளை போர்ட் மாட்டபட்டு அதில் அழகிய கையெழுத்தில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஊக்கும் பொன்மொழிகள் எழுதப்பட்டிருந்தது.
மனதின் கண்ணாடியாக யசோதையின் கண்களும் மிளிர அவனை பாரட்டினாள் அவள். “உண்மையிலயே பிரமாதம் வித்யாதரன். அசத்தியிருக்கீங்க”
‘உங்களால்தான் யசோதா, இல்லைன்னா தான்தோன்றிப்பயலாக வளர்ந்த எனக்கு அழகுணர்ச்சி எங்கிருந்தது!.
அறையை இப்படி மாற்றவேண்டிய முக்கியத்துவம் நீங்க சொன்ன பிறகுதான் புரிந்தது. அதற்கு நல்ல பலனும் தெரிகிறது.
முன்னே வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் போது வெற்றுப்பகுதியா இருந்தமாதிரி இல்லாமல் இப்படியிருப்பது
அவர்களின் கண்கள் இதிலெல்லாம் பாய்வது கூடுதல் நன்மதிப்பை ஈட்டி தருகிறதுங்க யாசோதா. நான் சும்மா பேச்சுக்கும் மட்டும் சொல்லவில்லை. உள்ளத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.
நன்றி சொல்லும் விதமாக உங்களுக்கு எதும் அன்பளிப்பு தரணும்னு எனக்கு ஆசைதான். ஆனால் நீங்க வாங்கிக்கமாட்டீங்கன்னு ஒரு அச்சம், தயக்கம் அதையும் மீறி இதை வாங்கியிருக்கேன்.
வாங்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன நினைப்பீங்களோன்னு ஆயிரம் முறை யோசிச்சேங்க. ஆனா இன்றைக்குபிறகு உங்களுக்கு நன்றி சொல்லி கொடுக்க வாய்பே இருக்காதுங்கிறதால துணிந்து வாங்கிட்டேன். ஆனால் உங்களுக்கு பிடிக்கலைனா வாங்கிக்க வேண்டாங்க யசோதா”.
அவன் அவளிடம் நீட்டியது முழம் மல்லிகைப்பூ..
மனம் தான் என்னமாதிரியானதொரு
‘மாயமலர்’.
யாருக்காக பூக்கிறோம் என்று அறிந்தே மொட்டவிழ்கிற மலர்.
யசோதை கையை நீட்டி மலர்சரத்தை வாங்கிக்கொண்டாள்.
தொடரும்..