யசோதை எப்போதும் போல் அவளறையின் பெரிய யன்னல் திட்டில் கால்களை கட்டி அமர்ந்திருந்தாள்.
கம்பிகளுக்கூடே தெரியும் வானத்தை வெறித்தபடி.
எப்படியும் அவளுக்கு துளியும் விருப்பமே இல்லாத பந்தந்திற்குள் கைகளை கால்களை கட்டி இந்த வீடு தள்ளத்தான் போகிறது.
வாயில் துணி திணிக்கப்பட்ட வன்முறையை அவள் வாழ்நாள் முழுவதும் சகித்துதான் ஆகவேண்டும்.
ஆனால் அவள் ஏன் சகித்துக்கொள்ளவேண்டும்! அதைவிட சாவதே மேல்.
ஆனால் அவள் ஏன் சாகவேண்டும்!. செத்துவிட்டால் தீர்த்துவிடக்கூடிய பிரச்சனையை உயிரை வைத்துக்கொண்டு ஏன் தீர்க்க முயல கூடாது!? இதை இவள் பலமுறை சுமி அக்காவை கற்பனைக் கண்ணில் கொண்டுவந்து அவளிடம் கேட்ட கேள்வி.
முன்னே அங்கிளின் லைப்ரரியிலிருந்து எடுத்து வந்து வாசித்த புதினம் ஒன்று ‘கப்பல் பறவை’
தமிழ் பெண் எழுத்தாளர் சிவசங்கரியுடையது. அதில் வாசித்தக் கதை என்னவோ யசோதைக்கு பிடித்திருக்கவில்லை தான்.
ஆனால் அந்த தலைப்பும் எழுத்தாளர் சொல்லியிருந்த அந்த தலைப்பிற்கான காரணக் கதையும் மனதில் பதிந்துவிட்டிருந்தது
ஏனென்றால் அவளும் ஒரு கப்பல் பறவையின் நிலையிலிருப்பவள்.
கப்பல் துறைமுகத்தைச் சுற்றியே சில பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்குமாம். ஏனெனில் சரக்கு கப்பல்களுக்கு ஏற்றப்படும் தானியங்கள் துறைமுகத்தின் தரையெல்லாம் நிறைய சிந்திக்கிடக்கும்.
அதனால் நித்தமும் பஞ்சமே இல்லாமல் கீழே கொட்டிக்கிடக்கிற தானியங்களை உண்டபடியே சுகமாய் உழைப்பில்லாமல் வாழ்ந்துவிட நினைக்குமாம் அந்த பறவைகள்.
மற்ற பறவைகளைப்போல வெகுதூரம் பறந்து அலைந்து தேடி இரை சம்பாதித்துக்கொள்ளவேண்டிய அவசியம் அவைகளுக்கு இல்லாததால் பறப்பதென்ற ஒன்றை அவைகள் கற்றுக்கூட வைக்கவில்லை.
சிறகுகள் இருப்பது சும்மா உடலில் ஒரு கூடுதல் ஒட்டு என்று அந்த பெரிய பறவைகள் நினைத்திருப்பது பத்தாதென்று புதிதாக பிறக்கிற குஞ்சுகளுக்கும் பறத்தலை அப்பறவைகள் கற்றுக்கொடுத்திருக்காது.
அதனால் பொடிக்குஞ்சுகளும் தாய் பறவைகளைத் தொடர்ந்தே தரை தானியங்களை மட்டுமே கொத்தித் தின்றே பழகும்.
தானியங்கள் சிந்திக்கிடக்கிற வழியெல்லாம் தின்று கொண்டே தன்னையுமறியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து கப்பலுக்குள் ஏறியிருக்கும்.
பொடிக்குஞ்சுக்கு எது தரை, எது கப்பல் என்று வித்தியாசம் எப்படி தெரிந்திருக்கமுடியும்!
அந்த கப்பல்.. துறைமுகத்தை விட்டு நகர்ந்து வெகுதூரம் சென்றுவிட்டதைக்கூட உணராது.
நாட்கள் கழியும்போது கப்பலுக்குள் சிந்தியிருந்த தானியங்களும் காலியாகிவிட.
உண்பதற்கு வழியில்லாமல் வெளியேற நினைத்தால் கப்பல் அப்போது நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும். நாலாபக்கமும் சூழ்ந்திருக்கும் நீர். நீரும் ஆகாயமும் மட்டுமே கண்ணுக்கு தெரிய திக்கு திசை புரிபடாமல், பறக்கவும் தெரியாமல், இரை கிட்டாத பட்டினியில் தவித்து அதே கப்பலில் செத்து மடியும்.
இதுவே கப்பல் பறவையின் கதை
அப்படியே யசோதையின் கதையும் கூட.
ஆனால் அவள் ஏன் கப்பல் பறவையாக இருந்திருந்து மாண்டு போகணும்!?
அவள் ஏன் அவளுடைய சிறகுகளை விரிக்க முயன்று பார்க்கக்கூடாது!?
அவள் ஏன் பறத்தலை கற்றுக்கொள்ளக்கூடாது!?
முழங்காலை கட்டி அமர்ந்திருந்தவள் எழுந்தே விட்டாள்.
எத்தனையோ முறைகள் கைவிட்டிருந்த ‘வீட்டை விட்டு ஓடுவது’ எண்ணத்தை அவள் இந்த முறை விடுவாதாயில்லை.
இந்த வீடோடு அவளுக்கு எந்த பந்தமும் பற்றும் என்றுமே இருந்ததே இல்லை.
வீட்டை விட்டுப்போவதென்றால் அம்மாவை மட்டுமே அவள் நிரந்தரமாக இழக்கக்கூடும்.
ஆனால் இந்த சூழலை விட்டு பறந்துவிட வேண்டியது யசோதைக்கு அவசியம்.
கொஞ்சம் தாமதித்தாலும் அவளின் கால்கள் கட்டபட்டுவிடும்.
யசோதை அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றபடி அடுத்து செய்யவேண்டியதை யோசிக்கலானாள்.
“எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முந்தி அதற்கான செயல்திட்டங்களை சரிவர வகுத்துக்கொள்ளவேண்டும். சாதக பாதங்ககங்களை ஆராய்ந்து,அத்தோடு பின்விளைவுகளையும் யோசித்தபின்தான் செயலில் இறங்கனும்”. இது முன்னே வித்யாதரன் சொல்லியிருந்தது.
“சதுரங்க காய்களை நகர்த்துகிற கவனத்தோடுதான் எடுத்துவைக்கிற ஒவ்வொரு மூவும். எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதிலும் இறங்கிவிடமாட்டேன்” என அவன் தொழில் விருத்திக்கான காய் நகர்த்தும் யுக்திகளை பற்றின பேச்சின் நடுவே சொன்னது.
வித்யாதரனிடமிருந்து கற்றதன்படிநோட்டு புத்தகத்தை எடுத்து தோன்றுகிற யோசனைகளையெல்லாம் வரிசையாக எழுதத்தொடங்கினாள்.
அவளுக்கு யாரையெல்லாம் தெரியும்
எந்தெந்த பாதைகளில் எல்லாம் அவள் இதுவரை பயணித்திருக்கிறாள்.
என்னென்ன தேவைப்படும்.
திட்டத்தை அவள் எந்தெந்த விதத்தில் செயல்படுத்த போகிறாள் என்பதை எல்லாம் எழுதி
சாதகங்கள் பாதகங்கள் பின்விளைவுகளை வரிசைப்படுத்தி பார்த்தபின் நோட்டு புத்தகத்தை யார்கண்ணிலும் பட்டுவிடாதபடி பத்திரப்படுத்திவிட்டு கீழே வந்தாள்.
வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய நேரம் இது.
யசோதை அவள் திட்டத்தை நாளை செயல்படுத்த முடிவாக்கியிருக்கிறாள்.
அம்மா அடுக்களையில் தரையில் அமர்ந்து அரிவாள்மணையில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்க, அருகே அமர்ந்து
அம்மாவோடு பேசிக்கொண்டே கோதுமையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சந்திராவிற்கு பதில் வேலைக்கு வரும் வேறொரு பெண்.
முன்னறையில் டிவி ஓடிக்கொண்டிருந்தது.
சின்ன அத்தை கால்களை நீட்டியமர்ந்து தட்டில் வைத்து எதையோ கொறித்தபடி
ஹிந்தியிலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்துவித்த சீரியல் ஒன்றில் மும்முரமாக மூழ்கிப்போயிருந்தாள்.
இந்த சின்ன அத்தை ஏன் தான் அவளுடைய வீட்டிற்கு போகாமல் இங்கேயே இருக்கிறாளோ!
இவள் எந்நேரமும் இப்படி முன்னறையில் இருந்தால் எப்படி தப்பி வெளியேறுவது!
ஆனால் ஒருவகையில் இவளிருப்பது நல்லதே இல்லாமல்ப்போனால் யசோதை போன பின் “மகளை போகிறவரை விட்டு அந்நேரத்தில் நீ என்னத்த கிழிச்சிட்டு இருந்தே” என்று அப்பா அம்மாவை நொறுக்கி எடுத்துவிடுவார்.
அம்மாவும் யசோதையும் மட்டுமல்ல இந்த சின்ன அத்தையும் ஒரு கப்பல் பறவைதான். இவளிடம் பறப்பதற்கான முழுச்சுதந்திரமும் இருக்கிறது. ஆனால் இவள் சுதந்திரத்தை கையில் எடுப்பவளில்லை. யார் என்ன பேசுவார்களோ என்கிற ஊர்வாய்க்கு பயந்து தன்னின் எதைத் தொலைக்கவும் தயாராக இருப்பவள்.
சின்ன அத்தையின் மகன்கள் இருவரும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். கணவரோ விற்பனைப்பிரிவு அதிகாரியாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பவர். மாதத்தில் நாலைந்து நாட்கள் அவர் உள்ளூரில் இருக்கும் போது மட்டும்
சின்ன அத்தை அவள் வீட்டிலிருப்பாள். மற்றபடி பூட்டிப்போட்டுவிட்டு இந்த வீட்டில் தான் கூடாரம் அடித்திருப்பாள்.
இங்கென்றால் அவளுக்கு எந்த வேலைகளையும் செய்யவேண்டியிருக்காது.
வேளை தவறாமல் சுடச்சுட செய்து போட அம்மா இருக்கிறாள்.
காலை நீட்டியமர்ந்து சுகவாசியாக டிவி பார்க்கலாமே.
இப்படி டிவியில் பார்ப்பதில் எதெல்லாம் பிடித்துபோகிறதோ உடனே வாங்கிவிடுபவள் சின்ன அத்தை.
உள்ளூரில் கிடைக்காமல் போனால் கூட கணவர் வெளியூர்களுக்கு போகும்போது முடிந்தளவு கூடவே போயிருந்து வாங்கிவந்து விடுவாள்.
அப்படி வாங்குவதையெல்லாம் போட்டு அழகு பார்ப்பாளா என்றால் அதுதான் இல்லை.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைங்கள வச்சுக்கிட்டு இதையெல்லாம் போட்டுக்கிட்டா ஊர் வாய்க்கு அவல் ஆகனுமென்பாள்.
பின் ஏன் தேடித்தேடி வாங்குகிறாள் என்றால் இதெல்லாம் தன்னிடம் இருக்கிறதென்று பெருமைபட்டுக்கொள்ள திருப்திபட்டுக்கொள்ள என்பாள்.
யசோதை முடிவெடுத்துவிட்டாள்
தன் ‘விட்டு விடுதலையாகி’ திட்டத்திற்கு சின்ன அத்தையின் ஷாப்பிங் மோகத்தை பயன்படுத்திக்கொள்வதென்று.
சின்ன அத்தையின் அருகே சென்று அட்டணக்கால் இட்டு அமர்ந்தபடிஇரகசியக்குரலில்
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும் சின்னத்த”.
கொறிப்பது டிவி பார்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு காதை நெருக்கத்திற்கு கொண்டுவந்து கேட்க தாயாரானாள் சின்ன அத்தை. அவளுக்கு இரகசியங்களை கேட்பதென்றால் அல்வா சாப்பிடுகிறமாதிரி.
யசோதை வெக்கப்படுகிறவளாக முகத்தை வைத்து பார்வையை தரைக்கு புதைத்து விரலால் கோலமிட்டபடியே
“இந்த சீரியலில் கட்றாங்கல்ல சின்னத்த! அதுபோல தீரைச்சீலை மாதிரி மெல்லிய இழையில் கட்டினால்.. உடம்பு தெரிகிற மாதிரி சேலையை வாங்கி கட்டிக்காட்டச் சொல்கிறார் சின்னத்த. அதும் இரண்டு மூனு நாள்ல.அப்படியே அன்னைக்கு நீ கடையில காட்டினியே லேஸ் வைத்த உள்ளாடை. அதுவும் வாங்கணும்.” என்றாள்.
சின்ன அத்தை சிரித்தாள்.
“பய உன்னை பார்க்கிற பார்வையிருக்கே, விட்டா இப்பவே கூடவே கூட்டிட்டு போகச் சொன்னாலும் ரெடிதான் போல. சரி வாங்கிடுவோம். நல்ல கருநீல கலர் ஆர்கன்ஸா சேலைல பார்டர் பகுதி பூராவும் வெள்ளைக்கல் வேலைப்பாட்டோட ஒரு சேலை பார்த்தேன். அத கட்னா நீ ஜொலிப்ப”.
“சரி அப்பாக்கிட்ட சொல்லி நீதான் கூட்டிட்டு போணும்.”
ஆயிற்று. பாதிக்கிணறு தாண்டியாயிற்று. மீதி!
சாமி அப்பாவ சரியென சொல்லவைத்துவிடு.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
அப்பாவே அனுமதி கொடுத்து அத்தையோடு போகும் போது தொலைந்துபோனால் அம்மாவின் மேல் பழி ஏறாது. அடி வாங்காமல் தப்புவாள்.
அதன்பின் சின்ன அத்தையோடு சேர்ந்தமர்ந்து டிவி பார்க்கலானாள் யசோதை.
சீரியலில் வசனங்களை தலைகீழாய் தொங்கிக்கொண்டே மொழிபெயர்த்திருப்பார்கள் போல
“நீ ஏன் அங்க போற!! சொல்லமாட்டியா” வசனத்தை அதில்
“சொல்லமாட்டியா அங்க போற நீ ஏன்னு பேசற டயலாக்கைக் கேட்டு சிரித்துச் சிரித்து அதே போல பேசிக்காட்டி சின்ன அத்தையையும் சேர்த்து சிரிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.
வீடு முழுக்க சதங்கை ஒலியாய் சிரிப்பொலி பரவ அடுக்களையிலிருந்து ஒரு வேக நடையுடன் முன்னறைக்கு வந்த காயத்திரிக்கு மனமெல்லாம் பூரித்துவிட்டது.
முகம் மலர்ந்து விகசித்த மகளின் சிரிப்பை கண் கொள்ளா அளவு அள்ளிக்கொண்டாள்.