நெடுநல் அத்தியாயம் -19

0
257

நடப்பதெல்லாம் கனவோ, கற்பனையோ மாய மந்திர ஜாலங்களோ என்றிருந்தது. 

யாசோதைக்கு இஷ்ட தெய்வமான துர்க்கையின்  சன்னிதானத்தில் வைத்து வித்யாதரன் அவள் கழுத்தில் தாலியைக்கட்டி இருந்தான். 

இருவர் நெற்றியிலும் திலகமிட்டு ஆசிர்வதித்தவர் லைப்ரரி அங்கிள். 

யசோதையின் வீட்டினர் அவளை தேடிக் கண்டுபிடித்தால் இழுத்துப்போய் கட்டாய திருமணத்தை தான் செய்துவைப்பார்கள். அந்நேரம் பிடிபட்டாலும் யசோதை ஏற்கனவே மணமானவளாக இருந்தால் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்று இந்த அவசர கல்யணத்தை நடத்தி வைத்தவர் அவரேதான். 

“பாரம்மா, வாழ்க்கையில் எது முக்கியமோ இல்லையோ ஒருவருக்கு ஒருவர் துணைன்னு வாழ்கை துணை ரொம்ப அவசியம்மா. 

இளம்வயசில் அது பெரிசா தெரியல. பணம் காசு சம்பாதிக்கிற ஓட்டம்ன்னு வாழ்க்கை துணையை கண்டுக்காம விட்டுட்டேன். வயசும் தெம்பும் போன பிறகு  ஒரு நாள் தூங்கி எழுந்திருக்கும் போதே கை கால் நரம்பெல்லாம் இழுத்துக்கிட்டு கீழே விழுந்தேன் பாரு. உறுதுணையா தாங்கி பிடிச்சதும், அனுசரணையா கூட நின்னவளும் அவதான். 

நல்லா புரிஞ்சுகிட்ட, அன்பு செய்ற ஒரு ஜீவன் கிடைப்பது ஒவ்வொரு மனுச உசிருக்கும் அவசியம். 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரங்கிற மாதிரி இத நான் என் மனைவியை இழந்து ஒற்றைமரமா நிற்க வேண்டியானப்புறம் தான் உணர்ந்தேன். அவ இருக்கும் போது அருமை தெரியாமபோய்டுச்சு. 

அப்படி வறுமை தீர்ந்து தொழில்ல செயிச்சாதான் தனக்குன்னு குடும்பம் அமைச்சுக்கமுடியும்ன்னு  இந்த தம்பி சொன்னப்பவும் இதத்தான் சொன்னேன்.

ஆத்துல தண்ணி வந்தினாத்தான் அக்கரைக்கு போவேன்,

தண்ணி குறைஞ்சாதான் நீச்சல் கத்துக்குவேன்,

தண்ணி பெருக்கெடுத்தா தான் படகு விடுவேன்னு ஒவ்வொன்னுக்கும் காத்திருந்தா முடியாது. 

கஷ்டமோ நஷ்டமோ இரண்டு பேரா சேர்ந்து சமாளிங்க. சந்தோசமும் நல்லதும் தானா வந்து சேரும். மனசுபோல சேர்ந்து மகிழ்ச்சியா வாழ்ந்திருங்க” என்றார். 

திருமணத்தைதான் அவசரகதியில் முடித்தாயிற்று. ஆனால் அதே அவசரத்தில் உடனடியாக  இருவரும் சேர்ந்து வாழ இயலாது. 

குடும்பம் நடத்த வீடு பிடித்து , பொருட்களை வாங்கி செட் செய்ய, அதற்குரிய வருமானத்தை ஈட்டிக்கொள்ள நேரம் தேவையாயிருந்தது. 

வித்யாதரன் அதற்கு தொழிலை.. வேலையை கவனிக்கப்போகவேண்டும். 

அத்தோடு யசோதையின் வீட்டினர்.. சரி இவள் தான் தேட வேண்டாமென்றுவிட்டாளேயென்று சும்மா இருப்பவர்கள் இல்லை. துளைத்து தேடிக்கொண்டிருப்பார்கள். மாட்டினால் யசோதை அத்தோடு தொலைந்தாள். எனவே அவள் பாதுகாப்பாய் தங்குவதற்கு இப்பொழுது ஒரு இடம் வேண்டும். 

அதற்கும் வழிவகை செய்தவர் லைப்ரரி அங்கிள் தான். இராணிப்பேட்டையில் இருக்கிற அவருடைய தங்கை கோதையின் வீட்டில் யசோதை தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வித்தார். 

கேசவ பெருமாளின் தங்கை கோதையும் ஒரு தனிமனுஷி. திருமணம் செய்துகொள்ளவில்லை. 

வேண்டி விரும்பி செய்துகொள்ளாமல் எல்லாம் இல்லை. கோதை பூப்பெய்தவே இல்லை. அதனால் எவரும் திருமணம் செய்துகொள்ள முனவரவுமில்லை. 

கோதை அரசு கல்லூரியில்  பேராசிரியராக  பணியிலிருந்து  ஓய்வும் பெற்றுவிட்டவள். 

பணி காலத்தில் படித்துப்படித்து பட்டங்களை அடுக்கிக்கொண்டே போவதில் முனைப்பாக இருந்த கோதை ஓய்வு காலத்தில் முழுமையான பக்திக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். 

கோதைக்கு  சொந்த வீடிருக்கிறது. 

ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுவிட்டு மற்றொன்றில் தனித்து வசிக்கிறாள். இளமையிலும் சரி, இப்போது  முதுமையில் சரி  தனிமை கோதைக்கு வரம். 

அவள் அதை விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பவள். 

நல்ல வேளையாக தனக்கு குடும்பம் குழந்தை குட்டியென சாதாரண வாழ்கைக்குள் அர்பணித்துவிடும்படியாக தன்னை கடவுள் படைக்கவில்லை என்கிறவள். 

” உன் வீடாக நினைத்துக்கொள்ளம்மா எத்தனை காலம் வேண்டுமானலும் இங்கே தங்கிக்கொள்.” என யசோதையை இன்முகத்தோடு வரவேற்றாள் கோதை.

கோதைக்கு சமையல், வீட்டு வேலைகளை செய்து கொடுக்க ஒரு பெண் வீட்டோடு தங்கியிருந்தாள். 

வீட்டோடு என்றால் கோதையின் வீட்டு மொட்டைமாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்த ஒற்றை அறையில் அந்த பெண் மகுடி தங்கியிருந்தாள். 

கோதையின் அன்றாடம் என்பது மிகக்குறுகிய அட்டவணை கொண்டது. கழுத்து நிறைய துளசி காந்தி மாலை அணிந்த, அது தவிர உடம்பில் வேறெந்த நகைகளும் அணியாத, வெளிர் நிற பருத்தி சேலைகளையே உடுத்துக்கிற அவள் ஒரு அதி தீவிர கிருஷ்ண பக்தை.

பூஜையறை, பஜனை, கீர்த்தனைகள், பகவத் கீதை வாசிப்பு, உண்ணா விரதம், உண்டாலும் பூண்டு வெங்காயம் மசாலா சேர்க்காத பத்திய சாப்பாடு, பேசினால் அளவோடு ஓரிருவார்த்தைகள், இல்லையென்றால் முழுமையான மெளன விரதம். இதுவே கோதை. 

கோதையின் வீட்டு இருபடுக்கையறைகளுக்குள் ஒன்றை எடுத்துக்கொள்ளச்சொல்லிதான் அவள் சொன்னாள். 

ஆனால்  யசோதைக்கு கோதை ஆண்டியின் தனிமை தவத்திற்குள் ஊடே புகுந்து தொல்லை செய்ய விருப்பமில்லை. 

நடந்தால் இவளின் கொலுசு சத்தம் கூட ஆண்டிக்கு தொந்திரவாகிவிடும்.  அதனால் மேலே மொட்டைமாடியில்  மகுடியின் அறையை பகிர்ந்து தங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டாள். 

மகுடிக்கும் அது மகிழ்ச்சியே. “தனியா போர் அடிச்சு கிடக்கிறேன். நீங்க பேச்சு துணைக்கு வருவது எனக்கு எப்படிக்கா பிடிக்காம போகும்” என்று உடனே ஒட்டிக்கொள்பவளாய் வெள்ளந்திப்பெண்ணாய் இருந்தாள். 

யசோதையை இராணிப்பேட்டையில் விட்டுவிட்டு வித்யாதரன் தொழிலை பார்க்க கிளம்பிவிட்டான். 

மகுடி தங்கியிருந்த அறை அளவில் சிறிதுதான் என்றாலும் ஒரு பக்கம் சமைக்க தடுப்பு, அட்டாச் பாத் ரூம் என பாங்காய் இருந்தது. 

சுற்றிலும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்  உள் கூட வெக்கை தெரியவில்லை. 

கோதை ஆண்டி வெளியூர் போயிருக்கும் சமயங்களில் மட்டும் மேல் அறையிலிருக்கிற சமையல் தடுப்பில் சமைத்து உண்பாளாம் மகுடி. மற்றபடி கீழே கோதை ஆண்டிக்கு தனி பத்திய சமையல், 

கூடவே வீதியில் வாழ்கிற நாய்கள் பூனைகளுக்கும் கோதையின் வீட்டில் உணவு சமைக்கப்படும். 

 கோதை மகுடியிடம் “எனக்காக பார்க்காமல்  உனக்கு பிடித்ததை   சமைத்து சாப்பிடு. வயதுப்பெண் நன்றாக உண்ண வேண்டுமென்று”

மகுடிக்கு பிடித்ததை சமைத்து உண்ண சொல்லுவாள். அப்படி சமைத்து தனக்குறிய உணவை மேலே எடுத்துவந்து விடுவாள் மகுடி. 

இப்போது மகுடி யசோதைக்கும் சேர்த்து செய்து மாடிக்கு கொண்டுவந்தாள். 

நிலா வெளிச்சத்தில் காற்றாட மொட்டை மாடியிலமர்ந்து உண்டது யசோதைக்கு ஒரு புது அனுபவமாகவும் மிகுந்த ருசியோடு கூடியதாகவும் இருந்தது. 

அடுத்து படுக்கையில் கூட மகுடி தன் ஒற்றை இரும்பு கட்டிலை யசோதைக்கு விட்டுக்கொடுத்து படுத்துக்கொள்ளச் சொன்னாள். 

யசோதை மறுத்துவிட்டாள். அவளின் அறையை பங்கிட திடுமென வந்து நின்றது போதாதென படுக்கையையும் பிடிங்கிக்கொள்வதா! அதுவும் நாள் பூராவும் உடல் உழைப்பில் செலவிடுகிற ஒருத்திக்கு இரவு நல்ல துயிலுக்கான படுக்கை அவசியம். 

தரையில் படுத்துக்கொள்ளப்போவதாக பிடிவாதமாக சொல்லிவிட்டாள். 

யசோதைக்கு படுத்ததுதான் தெரியும். உடலும் மனமும் அப்படியொரு அலைகழிப்பில் கிடந்து உழன்றதன் களைப்பு. 

புதுச்சூழல், புது இடம், தரையில் படுப்பது என்று எதுவுமே உறுத்தாத நல்ல உறக்கம். 

விடிந்து, கிழக்கே உதயனை கண் பார்த்து நின்றவளுக்கு மனதில் அப்படியொரு நிம்மதி. 

அவள் மேல் பட்டுத் தழுவிய காற்று கூட சொன்னது 

“இனி நீ சுதந்திரமானவள் ” என்று. 

இது இனி இவளே இவளுக்காக அமைத்துக்கொள்ளப்போகிற வாழ்வின் அடுத்த பாகம். 

இதில் செய்யநினைத்ததை எல்லாம் செய்துபார்த்துவிட வேண்டும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here