நெடுநல் அத்தியாயம் -20

0
305

இரண்டே நாட்களில் திரும்பி வந்து நின்றான் வித்யாதரன். 

இப்பொழுது இருவருக்குமான அழைத்துக்கொள்ளும் வீதம் வித்யா யசோ எனுமளவு சுறுங்கிற்று. 

யசோதை அவளுக்காக அவன் வாங்கி நிறைத்துக்கொண்டு வந்த எதையும் வாங்கமறுத்துவிட்டாள். 

“நமக்குள்ள இதை ஒரு கொள்கையாவே கடைபிடிப்போம் வித்யா. நானாக கேளாமல் எனக்காக எதையும் வாங்கிதரவேண்டாம் ப்ளீஸ். 

அங்கிள் சொன்னமாதிரி நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருப்போம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம சரியா!

புருஷன்ங்கிற கடமையை ஆற்றியே ஆகனும்ன்னெல்லாம் தயவு செய்து மெனக்கெடாதீங்க. அது மேலும் மேலும் என்னை குற்ற உணர்ச்சிக்குள்ளதான் தள்ளுமே ஒழிய சந்தோசப்படுத்தாது. ஏற்கனவே ஒரு இலக்கை நோக்கி போய்க்கிட்டு இருக்க மனுசனப் பிடிச்சு இழுத்து கல்யாண வாழ்கையில தள்ளிட்டேன்னு சங்கடமா இருக்கு”. 

“அது உண்மையில்லைங்க பொண்டாட்டி. நானே விரும்பி குதிச்சேனுங்க  பொண்டாட்டி. 

நீங்க சொல்றமாதிரியே கேக்றேனுங்க பொண்டாட்டி. உங்கள பொண்ட்டாட்டின்னாவது நினைச்சுக்கலாமா கூடாதா சொல்லிடுங்க பொண்டாட்டி”. 

யசோதை சிரித்தாள். அவளின் கண்களில் குறும்பு மின்னிற்று  

“போனாப்போது பர்மிஷன் க்ராண்டட்” 

“ஆனா நினைவிருக்கட்டும் வித்யாஇனி வேலையை போட்டுவிட்டு இப்படி எனக்காக ஓடிவராதீங்க, 

எனக்கு இங்கே நல்லாவே செட் ஆயிடுச்சு. கையில நிறையவே சேமிப்பு பணம் இருக்கு. என் ஒருத்தியோட செலவுக்கு மாதக்கணக்கில் தாராளமாய் போதும். அதனால என்னைப்பத்தி அதிகம் கவலைபட வேண்டாம். 

அதோட எனக்கு நானே சுயமா சம்பாதிச்சு அந்த காசில செலவு பண்ணி பார்கணும்ன்னு ஆசையா இருக்கு. இப்படி செய்யறதுக்கு நீங்க இருக்கீங்கன்னு இருந்துட்டா  அப்புறம் அந்த ஆசையை என்னால நிறைவேத்திக்க முடியாம போய்டும். அது என்னோட  ஏக்கக் கனவு தெரியுமா!” என்றாள்.  

அவனும் அவள் பேச்சை ஏற்றுக்கொண்டு வாழ்த்தினான்.  “நிச்சயம் நீ நினைத்தபடி உன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வாய் யசோ ஆல் த பெஸ்ட்.” 

கட்டுபெட்டிக்குள் அடைக்கப்பட்டு வளர்த்திய  பெண் விட்டு விடுதலையாகி வெளி உலகத்தின் சுதந்திர போக்கிற்கு இனி போகலாம் என்றானபின்  எதை எதையெல்லாம் செய்து பார்த்துவிட வேண்டுமென்று நினைப்பாள்!

யசோதையாக   இல்லாமல் வேறு பெண்ணாக இருந்தால் அந்த லிஸ்டில் என்னென்ன இருந்திருக்கக்கூடுமோ!

ஆனால் யசோதையின் ‘செய்துபார்த்துவிடவேண்டியவை’ லிஸ்ட் இப்படி இருந்தது. 

‘முதலில் சூழலுக்கு பழகுதல்’.

யசோதை  வீட்டிலிருந்த வரை யாரோடும் தங்கும் அறையை, படுக்கையை, டாய்லெட் குளியலறையை பகிர்ந்துகொண்டவள் இல்லையே.. 

அவளுடைய தலையணை போர்வையைக்கூட மற்றவர்களைத் தொட விட்டதில்லை.

அப்படி தன்னைத்தானே ஒரு சதுர சட்டத்தில் அடைத்துக்கொண்டிருந்ததை மகுடியின் அறையில் தங்கவந்த நாளிலிருந்து உடைத்து வெளியேறிக்கொண்டிருந்தாள். 

‘இரண்டாவது கட்டாந்தரைக்கு பழகுதல்’

பஞ்சுப்பொதி  மெத்தையில் அமிழ்ந்து கிடந்து உறங்கிப்பழகியிருந்தவள் அவள். 

மகுடி அறையில் முதல் நாள் அதீத களைப்பில்  தரையில் படுத்ததும் உறங்கியவள் அதன் பின்னான நாட்களில் கிடந்து உறங்க முடியாமல் சிரமப்பட்ட போது முடிவெடுத்து, சோர்ந்து போய், துயில் கண்களைத்தொடும் வரை மொட்டைமாடியில் மணிக்கணக்காய் நடையாய் நடந்து, உடலை களைப்படையச்செய்துவிட்டால் தரை எது! மெத்தை எது! 

உடல் தன் பாட்டிற்கு சொன்னப்பேச்சை கேட்கும். தன்னால் உறக்கம் வந்துவிடுமென்று கண்டுகொண்டாள். 

‘மூன்றாவது புதிய பாதைகளை பழக்குதல்.’

இதற்கு யசோதை வீட்டிலிருந்து கையில் நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு தனியே கிளம்பினாள். 

எந்த பாதையில் எதுவரை போகிறாளோ ஆங்காங்கே அடையாளங்களை குறித்துவைத்து அதே பாதையில் திரும்ப வீட்டிற்கு வந்து, மறுநாள் மீண்டும் அதே பாதை. 

பாதை நன்கு பழகியதும் அடுத்த நாளிலிருந்து மற்றுமொரு பாதை. 

இதைப்போல் இன்று போய்வந்த தூரத்தை காட்டிலும் நாளை கூடுதல் தூரமென்று அளவுகளை அதிகரித்துக்கொண்டே போனாள். 

இதையெல்லாம் செய்யும் பொழுது அவள் எப்படி உணர்ந்தாள்!. 

அச்சம், பதட்டம், நடுக்கம், ஒவ்வாமை உணர்வுகள் எழுந்ததா இல்லையா என்பதையெல்லாம் கூட தேதிவாரியாக செயல்வாரியாக எழுதி வைத்தாள். யாருக்கும் காட்டுவதற்காக அல்ல.

இது அவளுக்கே அவளுக்கான பாடப்படிப்பினைகள். 

கல்லூரிக்கு போய் மேல்படிப்பை தொடர்வதை விட யசோதைக்கு அதிமுக்கியமானது வெளி உலக வாழ்வினை முறைமைகளை படித்துக்கொள்வது. 

தனித்து எதையும் செய்யமுடியுமென்கிற அளவிற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது. 

ஒவ்வொரு வாரம் வித்யாதரன் வரும்பொழுதெல்லாம் அவள் என்னென்ன செய்துபார்த்தாள் என்பதை அவனிடம் பகிர்ந்துகொள்வாள். அவனைச்சுற்றி என்னென்ன நடந்ததென அவனும் யசோதைக்கு  சொல்லுவான். 

இரண்டு நாள் என்பதை நான்கு நாட்களாக்கி அவன் வந்து கொண்டிருந்ததை யசோதை வாரத்திற்கு ஒருதரம் என்று பிடிவாதமாகச் சொல்லி மாற்றிவிட்டாள். 

வேலையை போட்டுவிட்டு இப்படி வர நூறு போக நாறு மைல் தூரம் அவன் அலைந்து கொண்டிருப்பதில் அவளுக்கு ஒப்புமை இல்லை. அதுவும் வித்யாதரன் கோதை வீட்டு கேட்டைத்தாண்டி உள்ளேகூட வரமாட்டான். வீதியில் நின்று பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிச்செல்வதற்கு இத்தனை தூரம் அலைவது அடிக்கடி கூடாதென்றுவிட்டாள். 

“அங்க நீ இருக்கும் போது தினமும் ஒருதடவையாவது உன்னை கண்ணாலாவது பார்க்கமுடிஞ்சுது. இப்போ ஒருவாரம் காத்திருக்கிறதெல்லாம் கொடுமையா இருக்கு யசோ” என்றான். 

யசோதை கண்களை விரித்தாள். 

“தினமுமா எப்படி வித்யா!”

எப்படி அவன் அந்த புதிய கட்டுமானத்திலிருந்த கட்டிடத்திலிருந்து அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான் என்று தெரிந்ததும் யசோதைக்கு உள்ளே சிலிர்த்தது. 

அவனும் அவளைப்போல அவளையே நினைத்து தவித்து  விரும்பியே இருக்கிறான் என்பது தெரிந்தபின் அவள் பேச்சில் சிரிப்பில் கண்களில்கூட ஆனந்தம் மிளிர்ந்தது. 

மகுடி கூட கேட்டாள்.

 “அண்ணன் இன்னைக்கு வந்து போனதில இருந்து உன்னை கையில் பிடிக்கமுடியலையேக்கா.” 

அப்படியொரு ஆனந்தமயக்கத்தில் மிதந்து கொண்டிருந்தாள் யசோதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here