புதை நிலத்தை கீய்ச்சும்
கழுகின் நகல்தோற்றத்தில்
சூழ ஒரு கூட்டம்
அவதானிப்புகளை ஏற்ற
இலகுவாய் இருந்தது போலும்
பாதி வரைவில்
நின்று போனதொரு
ஓவியத்தின்
ஒளிவிளங்கா கண்களில்
எவரோ இருந்ததன் அடையாளமாய்
மூலையில் சாத்திய
நாற்காலியின் நிறைப்பு
கடந்து போவோரின்
பாவனைகளில்
உவர் நிலத்தில்
ஒன்றாத வேரின்
உயிர்க்களைப்பில் உறவிலி
இருந்தும்
காய்ச்சல் வற்ற விழுங்கிய
அரை மாத்திரைக்கும்
கூடுதலே
தனித்தவளின்
உலகத்தில் தங்கியிருப்போரின் எடை
-புவனம்