நான் என்பதிலிருந்த நீ

0
103



இரும்புப் பிடியில்
சிக்குண்டு சிணுங்கிய
முற்றத்து ஊஞ்சல்

அணில் கொறித்த பழத்தை
நாவின் நீர் கலவ
பங்குண்டதன் தோட்டம்

நான் ஏற்ற ஏற்ற
நீ ஊதி அணைத்த விளையாட்டில்
முகம் திரிந்த
மாடத்து விளக்கு

கருவேப்பிலை தாளிப்புடன்
காதல் வாசம் பிடித்த
சமையல் மேடை

மழைக்கு பிந்தைய இரவுகளில்
வானம் போர்த்தி துயின்ற
மொட்டை மாடி

இங்கு தான் எங்கோ
முன்னாட்களின்
உயிர் இருத்திப் போகும்
நீ
தூரத்தில் தேய்ந்த புள்ளியாவதை
வெறித்தவண்ணம்
நான்
புலம் திரும்பவியலா
சுட்ட மண்கூடு

 
-புவனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here