என் வட்டங்களைச் சுருட்டி
சதுரச் சுவர்களில் அறைந்தவனவன்
ஆதாமுக்குரிய ஆப்பிளில்
ஒரு துளி விஷமாய் இருந்திருக்கலாம்
உடைத்தெறிந்த நிலாத் துண்டங்களோடு
உப்பு நீரில் மிதக்கத் தொடங்கியது
எனக்கான நிறம்
கடைசி அலை
கால்களைக் கடத்துவதாய்
கண்களைக் கவ்வும் உறக்கத்தில்
அமிழ்ந்து போகும் முன்
கிளிமீனின் ஒப்பனை நிறத்தில்
ஒளிந்தவளானேன்
சதையறுந்து
செதில்கள் சிதற
தொண்டையில் முள் சிக்கியவனின்
கண்களில் நீந்துகிறது அம்மீன்
-புவனம்