அனேக கண்கள் சிகப்பேறியும்
மதத்தலின் கண்கள் பசலை பேசியும்
மற்றதன் கண்களில்
நீலம் பாய்ந்துமாய்
நுறைத்திருந்தது கறுத்த இரவு
பார்வையற்றவளின்
நிரண்டிய கனவில்
தரையிறங்கிய மொத்த
ஆகாயமும்
முத்தத்தின் நீளத்துக்கு
துயிலத் தெரிந்த
நத்தைக்குள் சுருண்டது
வெட்டிவேரின் வாசத்துக்கு
முகஞ்சிடுக்கும்
எருக்கலஞ்செடியையும்
நனைத்தே ஊர்கிற காற்று
மேலும் சற்று சிலுப்பியது
உதிர்மணலடுக்கின் கீழ்
ஊற்றுத் துளிகளின்
கர்வத்தோடே
கன்னிமை நெகிழ்த்த தந்தது
அவ்விரவு
-புவனம்