எங்கோ எதற்கோ போடப்பட்ட முடிச்சுகளில்
அவிழ மாட்டாமல் அடம்பிடிக்கும் சிக்கல்கள்…
கல்விழுந்த சலனங்களையும்
தாங்கி பிடிக்கும் நீர்நிலை
முடிவிலி பாதைகளில்
முந்தியடித்த ஓட்டம்
கூட்டாளி தேடியே
அச்சாணி இழக்கும் வண்டிகள்
தேடல்களில் தேய்ந்து
கிடங்குகளில் முடங்கி
செலவழிந்த கணங்கள்
ஆதாரங்களுக்கு கடவுச்சொல்
அரிதாரங்ககளுக்கு பெயர்ச்சொல்
சேதாரம் உண்டெனில் வினைச்சொல்
தீர்ந்தே போனால் திரிபுச்சொல்
வெள்ளைத்தாள் முழுக்க
வினை கலந்த வினவுகள்
விடை தெளிந்து நிரப்பும் முன்னே
முடிந்து போகும் தேர்வு நேரம்
தொடக்க நிலையில் பயிற்சி
தொடரும் நிலையில் பரிசோதனை
முடிவு நிலையில்… தனக்கான
அடையாள அர்த்தத்தை
அகராதியில் தேடும் — வாழ்க்கை —